Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்னும் அழிவுகரமான சிந்தனைப் போக்கை நிராகரிக்க வேண்டும்!:தோழர் சி.கா. செந்திவேல்

( இனியொருவில் செம்ரெம்பர் 4ல் வெளிவந்த புதிய ஜனநாயகக் கட்சியின் பொது செயலாளர் தோழர் சி.கா. செந்திவேலின் நேர்காணலையைத் தொடர்ந்து வாசகர்களின் பின்னூட்டக் கேள்விகள் பல வந்தன. அவற்றுக்கு தோழர் சி.கா. செந்திவேல் வழங்கிய பதில்கள் இங்கே தரப்படுகின்றன.)

பின்னூட்டக் கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று சொல்லப்படுகிறதே இது தேவையா? இதன் ஆபத்துக்கள் யாவை? இதில் புலம் பெயர்ந்த மக்கள் செய்ய வேண்டியவை எவை?

தோழர் சி.கா. செந்திவேல் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். 5 /19இன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் பின்பே மேற்படி எண்ணக்கரு புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து வரும் புலிகள் சார்பு சில மேட்டுக்குடி உயர் வர்க்கத் தமிழரிடையே உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்கள் மத்தியிலான முப்பது வருட தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டமும் அதன் உச்ச நிலை அனுபவங்களும், தோல்விகளும், மக்களின் அழிவுகளும், தரும் பாடம் யாதெனில் அத்தகைய நாடு கடந்த அரசாங்கம் தேவையற்றது மட்டுமன்றி மேன்மேலும் நமது மக்களுக்கு அபாயங்களை தோற்றுவிக்கக் கூடியதுமாகும்.

இன்றுள்ள நிலையைவிட தமிழ் சிங்கள மக்களிடையே மேலும் இனஉறவுகளை விரிவடையச் செய்யவும் மோதலும் இரத்த ஆறு மீண்டும் ஓடவுமே மேற்படி தீர்மானம் வழி வகுக்கும். அவை மட்டுமன்றி ஒரு நியாயமான அரசியல் தீர்வுக்குரிய கோரிக்கைகளை முன்வைத்து பரந்துபட்ட தமிழ் மக்களை ஐக்கியப்படுத்தி முன்னெடுக்கவுள்ள எதிர்கால வெகுஜனப் போராட்டத்தை திசைதிருப்பவும், சிங்கள மக்கள் அதனை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பதுடன் தொடர்புபடுத்தி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து தனிமைப்படுத்தவும் பௌத்த சிங்கள ஆளும் வர்க்க சக்திகளுக்கே மேற்படி முடிவும் செயற்பாடுகளும் உதவக் கூடியதாகும்.

இத்தகைய ஒரு சூழல், முப்பது வருடகால யுத்தம் – போராட்டம் என்பனவற்றால் சகல நிலை அழிவுகளையும் பெற்று அதனின்று மீள முடியாது உள்ள தமிழ் மக்களுக்கு இது தேவையா என்று ஆழச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். அவ்வாறு பார்ப்போமேயானால் அது நமது மக்களுக்குத்தேவை இல்லை என்ற ஏகோபித்த முடிவிற்கே வரமுடியும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் அழிவுகரமான சிந்தனைப் போக்கையும் முடிவையும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் உறுதியாக எதிர்த்து நிராகரிக்க வேண்டும்.

அதே வேளை இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த முப்பத்து மூன்று வருடகாலப் பட்டறிவின் ஊடாகப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தமது தலைவிதியைத் தாமே தீர்மானிப்பதற்கான சூழலை உருவாக்க புலம் பெயர்ந்த மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும். நியாயமான அரசியல் தீர்வுக்கான ஒரு பொது வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் வெறுமனே பாராளுமன்ற பாதைக்கான கொள்கைக்குப் பதிலாக ஐக்கியம், ஜனநாயகம், சமத்துவம் சமூக நீதி என்பனவற்றை உள்ளடக்கிய வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை அபிலாஷைகளை வெளிப்படுத்தக் கூடிய அரசியல் பொதுவேலைத் திட்டம் உருவாக்கப்படல் வேண்டும்.

இத்தகைய ஒரு பொது வேலைத்திட்டத்திற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் நேர்மையாகவும் உறுதியாகவும் வழங்க வேண்டும். இதற்கு ஒத்துழைக்காதவர்கள் இருப்பின் நன்மை செய்யாது விட்டால் தீமையாவது செய்யாது இருப்பார்களேயானால் அதுவே இலங்கைத் தமிழர்களுக்குச் அவர்கள் செய்யும் உதவியாக இருக்க முடியும்.

பின்னூட்டக் கேள்வி: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தான் தமிழ் மக்களுக்குத் தீர்வு என்று தமிழ்த் தேசியவாதிகள் அடம் பிடிக்கிறார்களே இது சாத்தியமா?

தோழர் சி.கா. செந்திவேல் : இவ்வாறு தொடர்ந்து அடம் பிடிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் இருப்பார்களேயானால் அத்தகையோர் ஒன்றில் முட்டாள்களாக அல்லது அறிவீலிகளாகவே இருப்பர். இவர்கள் வரலாறோ இன்றைய அரசியல் யதார்த்தமோ அல்லது சர்வதேச ஏகாதிபத்திய சக்திகளின் சதி நோக்கங்கள் பற்றியோ அறியாத அப்பாவிகளாகவே இருப்பர். இவர்களது மூளையில் பதிந்து கெட்டியாகி இருப்பது தமிழர் பழைமைவாத ஆண்டபரம்பரை ஆதிக்கக் கருத்தியலும் சிந்தனை நடைமுறைகளுமேயாகும். இவற்றை ஏற்கனவே ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்கள் அனுபவித்த பின்பும் அல்லது அவலங்களுக்குள் உழலும் இன்றைய நிலையிலும் தமிழ்த்தேசிய வாதிகளின் அடம் பிடித்தலுக்கு எவ்வித அர்த்தமும் இருக்க முடியாது.

பின்னூட்டக் கேள்வி: இன்று எமக்குத் தேவை ஒரு அடிப்படை வேலைத்திட்டம். அதை எப்படி உருவாக்குவது. இலங்கையில் இருக்கும் நீங்கள் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? அவை பற்றியும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்.

தோழர் சி.கா. செந்திவேல் : இன்று தமிழ்த் தேசிய இனத்திற்கும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் தேவைப்படுவது அடிப்படையான அரசியல் பொது வேலைத்திட்டமாகும். இத்தகைய பொது வேலைத்திட்டம். இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். ஒன்று உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளைக் கொண்ட வேலைத்திட்டமாகும். இரண்டாவது. அரசியல் தீர்வுக்கான வேலைத்திட்டமாகும். இவை இரண்டும் சமகாலத்தில் வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லீம் மக்கள் மத்தியிலும் முன்வைக்கப்படுவது அவசியமாகும். இதில் காலதாமதம் காட்டக் கூடாது.

எமது கட்சியைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் ஏற்கனவே அதற்கான முன் முயற்சிகளை எடுத்திருந்தது. உடனடிவேலைத் திட்டம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் கடந்த 13.6.2009ல் பத்து அம்சக் கோரிக்கையினைத் தயாரித்து சகல தமிழர் தரப்பு முஸ்லீம் கட்சிகளுக்கும் ஜனநாயக முற்போக்கு கட்சிகள் அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்து அதனை ஊடகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்தியிருந்தோம். சில கட்சித் தலைமைகளோடு இது பற்றிக் கலந்துரையாடி பொது இணக்கப்பாட்டிற்கு வர முயற்சிகள் எடுத்தோம். அதனடிப்படையில் சில கட்சிகளுடன் சந்தித்துப் பேசவும் செய்தோம்.

வேறு சில கட்சிகள் அவ்வாறு சந்தித்துப் பேசுவதை விரும்பவில்லை. காரணம் தமிழர் தரப்புக் கட்சிகளாயினும் மற்றையவர்களும் அடுத்துவர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துச் செயல்படுபவர்களாகவே காணப்படுகின்றனர். ஏதாவது பொய்யை புழுகைக் கூறி அல்லது பழிமுழுவதையும் புலிகள் இயக்கத்தின் மீது சுமத்திவிட்டுதத் தமது பழைய பாதையில் செல்வதையே அவர்கள் அடிப்படை நோக்காகக் கொண்டே செயல்படுகின்றனர். நாம் எவ்வளவிற்கு இதயசுத்தியோடு ஒரு பொது வேலைத்திட்டத்திற்கு முயன்றாலும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அத்தகைய நிலைக்கு வரத்தயாராக இல்லாத நிலைதான் காணப்படுகிறது.

இங்கே பழைமைவாத ஆதிக்க அரசியலைப் பாராளுமன்றப் பாதையில் தொடர்வதையே அவர்கள் முன்நிறுத்தி வருகிறார்கள் இருப்பினும் எங்கள் கட்சி தமிழ் மக்கள் மத்தியிலும் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடையேயும் வெகுஜன மட்டங்களில் அணுகி இத்தகையதொரு பொது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக இருந்து செய்ற்பட்டு வருகிறது. அதற்கான முன்முயற்சிகளை நடைமுறை வேலைகளாக முன்னெடுக்கவும் செய்கிறது.

இத்தனை அழிவுகள் அவலங்களுக்குப் பின்பும் தம்மை எவ்வகையிலும் சுயவிமர்சனத்திற்கும் மறு மதிப்பீட்டிற்கும் உள்ளாக்காது பழைமைவாதத் தமிழ்த் தேசியவாதப் பாதையில் மக்களை அழைத்துச் செல்ல ஒரு பிரிவினரும், பேரினவாத அரசாங்கத்துடன் இணங்கிப் போய் சலுகைகள் பெற்று அரசியல் நடாத்த மறுபிரிவினரும் முயன்று வருகின்றனர். எமது கட்சி இவற்றுக்கு அப்பாலான மூன்றாவது சக்தியாகவும் மாற்று அரசியல் மார்க்கத்திலும் பயணிக்கவே முன் நிற்கிறது. இதில் பரந்துபட்ட ஐக்கியத்தையே நாம் கோரி நிற்கின்றோம். இதற்கு சொந்த மண்ணிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அனைத்து மக்களினதும் அறிவு பூர்வமானதும் ஆக்கபூர்வமானதுமான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். அத்துடன் சிங்கள முஸ்லீம் மலையகத் தேசிய இனங்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு இடதுசாரி அரசியல் சக்திகளையும் அணுகி கலந்துரையாடி வருகின்றோம்.

பின்னூட்டக் கேள்வி: நீங்கள் சார்ந்து இருக்கும் புதிய ஜனநாயக கட்சி பற்றி இப்போது தான் நாம் கேள்விப்படுகிறோம். எனவே உங்கள் கட்சி பற்றியும் உங்களது சாதனைகள் வேலைத்திட்டங்கள் பற்றியும் சொல்லுங்கள்.

தோழர் சி.கா. செந்திவேல் : எமது புதிய-ஜனநாயக கட்சி 1978ம் ஆண்டு யூலை மாதம் 3ந் திகதி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட மாக்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சியாகும். இது தோழர் நா.சண்முகதாசன் தலைமையில் 1964இல் உருவாகிய மாக்சிச லெனினிசக் கட்சியின் தொடர் ச்சியில் உருவாகிய கட்சியாகும். இலங்கையின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் (மணியம்) இதன் முதலாவது பொதுச் செயலாளராகவும் அதன் பின் தோழர். சி.கா. செந்திவேல் பொதுச் செயலாளராகவும், தோழர் இ.தம்பையா தேசிய அமைப்பாளராகவும் இருந்து வருகின்றனர். 1991இல் நடைபெற்ற கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிரஸ் கட்சியின் பெயரை புதிய ஜனநாயகக் கட்சி எனப் பெயர் மாற்றம் செய்து கொண்டது.

கம்யூனிஸ்ட் கட்சி என்னும் பெயரில் இழைக்கப்பட்ட தவறுகள், பாராளுமன்ற சந்தர்ப்பவாத திரிபுவாத நிலைகள், தமிழ் மக்கள் மத்தியில் தேடப்பட்ட அவப்பெயர்கள் எல்லாம் அதே பேரில் நாம் சுமப்பதை விரும்பவில்லை. பெயரில் மட்டும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதேயன்றி அதன் அடிப்படைத் தத்துவார்த்த கொள்கை நடைமுறை வேளைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எமது இப் புதிய ஜனநாயக கட்சி கடந்த முப்பத்தியொரு வருடங்களாக வடக்கு கிழக்கில் மலையகத்தில் கொழும்புப் பிரதேசங்களில் தனது வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளது. 1966-71 காலப்பகுதியில் இடம்பெற்ற வெகுஜனப் போராட்டங்களிலும், தொழிற்சங்கப் போராட்டங்களிலும் பங்கு பற்றிய கிராமங்களும் மக்களும் தொழிலாளர்களும் நகரப்புறத்து புத்திஜீவிகளும் எமது கட்சியின் வாழ்வோடும் வேலைமுறைகளோடும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதில் முக்கியத்துவம் யாதெனில் கடந்த முப்பது வருட வடக்கு கிழக்கின் ஜனநாயக மறுப்பு அராஜக சூழலிலும் எமது கட்சியின் வேலையானது மேற் கூறிய மக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதாகவே இருந்து வந்துள்ளது.

சில கிராமங்கள் முற்று முழுதாகவே எந்தவொரு தமிழ்த் தேசியவாத இயக்க மிரட்டலுக்கும் அடிபணியாது செயல்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதனால் சங்கானையில் ஒரு கட்சித் தோழரை இழக்கவும் ஏனைய பல தோழர்கள் அச்சுறுத்தல் கொலைகளில் இருந்து தவறவும் தலைமறைவு வாழ்க்கை வாழவும் வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன. 1987ல் இந்திய ராணுவம் வடக்கு கிழக்கில் அமைதிப்படை என்னும் பெயரில் நிலைகொண்டிருந்த காலச் சூழலில் எமது கட்சி இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என வற்புறுத்தி வந்தது.

1989ம் ஆண்டு மேதினத்தையும் யாழ் நகரில் வெற்றிகரமாக நடாத்தியது. அந்நிகழ்வின் மறுநாள் அம் மேதினக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தை கொல்வதற்கான ஒரு உத்தரவு வன்னிக்காட்டின் புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டதென ஒரு தகவலை எமது கட்சித் தலைமை பெற முடிந்தது. உடனடி செயற்பாட்டின் காரணமாக தோழர் மணியம் பாதுகாக்கப்பட்டு மலையகத்தின் பெரு நகரான கண்டியில் தலைமறைவு வாழ்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கிருந்தே அவர் செயல்படவேண்டியதாயிற்று. அங்கு அவர் ஏழு மாதங்கள் சுகவீனத்தோடு தலைமறைவாக இருந்த போதே மரணமடைந்தார். இவை போன்ற பல்வேறு சோதனைகள் வேதனைகள் மத்தியில் கட்சி தனது சொந்த நிலைப்பாட்டை இழக்கவோ எந்தவொரு தமிழ்த் தேசியவாத ஆயுத இயக்கங்களுக்கும் பின்னால் செல்லவே இல்லை என்பது தான் எமது கட்சிக்குரிய புரட்சிகர நிலைப்பாடாகும்.

நாம் பேரினநாத ஒடுக்குமுறையை எதிர்த்து நின்ற போது புலிமுத்திரை குத்த சிலர் முயன்றனர் அதே வேளை பிரிவினையையும் ஜனாநயக விரேதங்களையும் எதிர்த்த சந்தர்ப்பங்களில் அரசாங்க சார்ப்பு எனக் கூறி துரோக முத்திரை குத்த சில முயன்றனர். ஆனால் நமது கட்சி நிதானத்துடன் மாக்சிஸ் லெனினச அடிப்படையிலான நிலைப்பாட்டையே கொண்டுருந்தது. இதனை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள நேர்மையான அரசியல் அக்கறையாளர்கள் அறிவர் அறிவர். எமது கட்சியோடு நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் மத்தியில் உறுதியாக நின்ற மக்களும் தொழிலாளர்களும் புத்திஜீவிகளும் கிராமங்களும் வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவோண்டியவர்கள். மலையகத்தில் எமது கட்சி தனது வேலைகளை முன்னெடுத்து வெகுஜன ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வந்துள்ளது. எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் இ.தம்பையா மலையகத்தைச் சேர்ந்த தோழராவார். அங்கு மக்களின் வற்புறுத்தலால் சிங்கள உறுப்பினர்களை அதிகமாகக் கொண்ட வலப்பனை பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட எமது கட்சியின் மலையகப் பிரதேசச் செயலாளர் தோழர் ச.பன்னீர்செல்வம் உறுப்பினராக இருந்து மக்களுக்கு முடிந்த சேவையை வழங்கி வருகிறார்.

மலையகத்தில் அரசியல் விழிப்படைந்து வரும் தொழிலாளர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என்போர் கட்சியின் வேலைகளை அர்ப்பணிப்போடு முன்னெடுத்து வருகின்றனர். அந்தவேலை முறையினைத் தாங்க முடியாது ஐந்து கட்சித் தோழர்கள் கடந்த இரண்டரை வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டனர். அதில் மூவர் இரண்டு வருடங்கள் கழித்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இரு தோழர்கள் தொடர்ந்தும் சிறையில் இருந்து வருவதுடன் கடந்த எட்டு மாதங்களாக வவுனியாவிலிருந்தும் எமது கட்சித் தோழர் ஒருவரை சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.

எமது புதிய ஜனநாயக கட்சி எப்போதும் சரியான இலக்குகளைத் தேர்ந்தெடுத்த வேலைத் திட்டங்களுடனேயே செயல்பட்டு வந்துள்ளது. அதில் குறுகிய கால – நீண்டகால வேலைத்திட்டங்கள் என வகுத்தே முன்னெடுத்து வந்துள்ளது. கருத்தியல் சிந்தனை நடைமுறைகளில் தமிழ் மக்கள் பழைமைவாத ஆதிக்க போக்குகளையிட்டு கேள்விகளை எழுப்புதல் வேண்டும். அதன் மூலமே மாற்று அரசியலை முன்னெடுத்து புதிய சூழலை தோற்றுவிக்க முடியும்

எமது வேலைத்திட்டங்கள் சமகால சமூக முரண்பாடுகளை ஆழ ஆராய்ந்து அதன் வழியில் மாக்சிச உலக நோக்கின் ஊடான அறிவு பூர்வமான கொள்கைகளைத் தூரநோக்கில் முன்னெடுக்கும் அடிப்படைகளைக் கொண்டதாகும். வெறும் இன உணர்வேற்றி இனப்பகை மூட்டி எல்லாம் நாமே வென்று தருவோம் என்னும் தமிழ்த்தேசிய வாதப் பாதை நமது கட்சியின் கொள்கைக்கும் நடைமுறைகளுக்கும் எவ்வகையிலும் ஒத்துவராத விடயங்களாகும்.

நமது நிலைப்பாடு அறிவுபூர்வமானதும் தூர நோக்குடையதும் மக்களை விடுதலைப் பாதையில் மக்கள் போராட்டங்களால் அழைத்துச் சென்று வெற்றி பெறும் மார்க்கமுடையதாகும். இங்கே அழிவுகரமான அரசியலுக்கும் தனிநபர்களின் வீரதீரத்திற்கும் இடமிருக்க முடியாது. மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி என்ற வரலாற்று உணர்வுடன் மக்களுக்கு அரசியல் அறிவுட்டி அனிதிரட்டி முன்செல்வதே நமது அரசியல் வேலையின் இலக்காகும். இது சமூகமாற்றத்திற்கான போராட்ட பாதை ஆகும்.

இலங்கையின் தற்போதைய சமூக அமைப்பானது நிலவுடைமை வழிவந்த கருத்தியல் சிந்தனை நடைமுறைகளின் நீடிப்புடன் கூடிய நவகொலனித்துவ அமைப்பாகவே இருந்து வருகிறது. இங்கு வர்க்க, இன, சாதிய, பால் ஆகிய நான்கு அடிப்படைகளில் சமூக முரண்பாடுகள் வேர் கொண்டுள்ளன. இவற்றின் அடியாகவே ஒடுக்குமுறைகளும் தீவிரமடைந்து வந்துள்ளன. வர்க்க முரண்பாடும் அதன் ஒடுக்கு முறையும் அடிப்படையானதாக உள்ள அதேவேளை அதனையும் மேவிய நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களில் இன முரண்பாடும் ஒடுக்கு முறையும் பிரதானமான தொன்றாகி முன்னேழுந்து கொண்டன. அதனைத் தாழ் நிலைக்கு கொண்டு வருவதன் மூலமே அடிப்படை வர்க்க முரண்பாடு மேற்கிளம்பவும் துலக்கமடையவும் முடியும் என்பதே கட்சியின் நிலைப்பாடாகும். அதேவேளை சாதிய பால் நிலை முரண்பாடுகள் ஒடுக்கு முறைகளை அவை நிலைத்துள்ள தளங்களில் நின்று போராட வேண்டியதன் அவசியத்தையும் கட்சி வற்புறுத்தி வந்துள்ளது.

மேற்கூறியவற்றுடன் ஒருபுறம் அமெரிக்க மேற்குலக ஏகாதிபத்திய சக்திகளும் மறுபுறம் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் தத்தமது செல்வாக்கின் கீழ் இலங்கையை வைத்து பொருளாதார ராணுவ அரசியல் ஆதிக்கப் பிடிகளைக் கொண்டிருக்க முனைந்து நிற்கின்றனர். இதில் அவர்கள் ஏற்கனவே தமது பிடிகளை வலுப்படுத்தியும் வந்துள்ளனர். இதில் தேசிய இனப் பிரச்சினை அவர்களுக்கு வசதியான களமாக இருந்து வந்துள்ளது. இவற்றையெல்லாம் கவனத்திலும் அக்கறையிலும் எடுத்துக் கொள்ளாது எவரும் செயல்பட முடியாது. மேற்கூறிய இவ்விரு சக்திகளை நம்பியோ அல்லது அவர்களை எதிர் பார்த்து தங்கியிருந்தோ தமிழர்கள் தமது கோரிக்கைகள் எதையும் வென்றெடுக்க முடியாது. இதற்கான போதிய வரலாற்று அனுபவமும் பட்டறிவும் தமிழ் மக்கள் முன்னே விரிந்து கிடக்கின்றன.

பின்னூட்டக் கேள்வி: அண்மையில் தமிழ் நெற் இணையத்தளம் எழுதிய ஆசிரிய தலையங்கத்தில் உங்கள் கட்சியை இலக்கு வைத்து எழுதியிருப்பது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

தோழர் சி.கா. செந்திவேல் : தமிழ் நெற் இணைய தளத்தின் அடிப்படை நோக்கமும் அதன் பரப்புரைகளும் யார் பக்கம் இருந்து வந்தன என்பது எல்லோரும் அறிவார்கள். அவர்களது நம்பிக்கைகளும் எதிர் பார்ப்புகளும் தகர்ந்து போன நிலையில், மாக்சிச லெனினிய வாதிகள் கூறிவந்த உண்மைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி வருவதைப் பொறுக்க முடியாத நிலையிலேயே லெனினிச வாதிகள் “உள்ளக சுயநிர்ணயத்தை” ஆதரிப்பதாகவும் நல்ல இடதுசாரிகள் பிரிவினையை ஆதரிப்பதாகவும் பம்மாத்துப் பரப்புரை செய்துள்ளது. உள்ளக சுயநிர்ணயத்தை மாக்சிச லெனினிச வாதிகள் ஆதரிக்கிறார்கள் எனத் தமிழ் நெற்றுக்கு யார் அறிக்கை செய்தார்கள்? அடுத்து பிரிவினையை ஆதரிக்கும் அந்த நல்ல இடதுசாரிகள் யார்?

சுயநிர்ணய உரிமை பற்றிய எண்ணக் கருவை தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதில் தோழர் லெனின் சர்வதேசப் பங்களிப்பை வழங்கினார். மாக்சிச உலக நோக்கினதும் தேசிய இனங்களின் வரலாற்று வளர்ச்சியினையும் கொண்டே லெனின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை வரையறை செய்தார். அது சோஷலிசத்தை நோக்கிய ஒரு ஜனநாயகக் கோட்பாடாகும். சுயநிர்ணய உரிமை என்பதற்கு உரிய பிரதான விளக்கம் தேசிய இனங்களிடையே சமத்துவத்தை வற்புறுத்துவதாகும். அதனை வற்புறுத்தும் வகையிலேயே பிரிந்து செல்லும் உரிமையையும் இணைக்கப்பட்டது. அதற்கான ஒரு உதாரணமாகவே திருமணச்சட்டம் காட்டப்பட்டது.

பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது இருவருக்கும் பொதுவானதும் சமத்துவத்தை வற்புறுத்துவதுமாகும். பிரிந்து செல்லும் உரிமையானது சமத்துவத்தையும் ஐக்கியத்தையும் உத்தரவாப்படுத்துவதே அன்றி பிரிந்து செல்வதை மட்டும் கோருவதல்ல என்பது சுயநிர்ணய உரிமையில் காண வேண்டிய பிரதான அம்சமாகும். அத்தகைய பிரிந்து செல்லும் உரிமையினை எந்த வர்க்கம் எத்தகைய நோக்கங்களுக்காக செயற்படுத்த நிற்கிறது என்பது அடிப்படையில் நோக்கப்பட வேண்டியதாகும். எனவே சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை என்பது வாய்ப்பாடாகாது.

மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது மாக்சிச லெனினிசவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். அது லெனின் கோட்பாட்டை மறுப்பதற்காக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களால் தமக்கு அளவானதாகக் கண்டு பிடிக்கப்பட்ட போலித்தனம் நிறைந்த ஒன்றாகும். எனவே சுயநிர்ணய உரிமையை வற்புறுத்துவதில் உள்ளகம் வெளியகம் என எதுவும் இல்லை. தமிழ் நெற்றும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் யாருடைய நலன்களுக்காக செயற்படுகிறார்கள்.

ஏகாதிபத்தியத்தினதும் அவர்கள் மீது என்றென்றும் அடிமை விசுவாசத்துடன் இருந்து வரும் தமிழ்ர் மேட்டுக் கூடி உர்வர்க்கத்தினர்காகவா அல்லது பரந்து பட்ட தமிழர்களான தொழிளார் விவசாயிகள் மீனவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் பெண்கள் மற்றும் கீழ் மத்தியதர வர்க்க அரசாங்க தனியார் துறைகளை செர்ந்த மக்களுக்காகவா இதுவே இன்று தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள உள்ள பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டின் மையக் கேள் வியாகும். இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் புரிந்து கொள்வது அவசியமானதாகும்.

Exit mobile version