“பயங்கரவாத செயல்கள் தொடர்வது வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே இல்லை” என்று தேர்தல் மேடைகளில் சவடால் அடித்து வந்த மோடி தனது பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை அழைத்தற்கான காரணம் அமைதி இல்லை, அதானி என்பதை அம்பலப்படுத்துகிறது truthofgujarat இணைய தளத்தில் வெளியான கட்டுரை.
“மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, செய்வது எல்லாம் கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க வழி செய்து கொடுப்பது” என்பதை அதானியின் உதாரணத்துடன் அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.
பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு மோடி அரசின் ஒப்புதலை நாடுகிறது அதானி. குஜராத்தின் கட்ச் பகுதியில் 10,000 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றை அமைக்க அதானி பவர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. $8.7 பில்லியன் மதிப்புடைய அதானி குழுமத்தின் ஒரு பகுதியான அதானி பவர் நிறுவனம் 8,520 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டுள்ளது; நாட்டின் முன்னணி தனியார் மின் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. துறைமுகங்களிலிருந்து மின்உற்பத்தி வரை பல துறைகளில் கால் பதித்துள்ள இந்த குழுமம், இந்த நிதியாண்டில் 10,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் அதிகரிப்புக்கு திட்டமிட்டுள்ளது.
NEW DELHI, INDIA – MAY 27: Indian Prime Minister Narendra Modi (L) shakes hand with his Pakistani counterpart Nawaz Sharif before the start of their bilateral meeting at Hyderabad House on May 27, 2014 in New Delhi, India. New Indian Prime Minister Narendra Modi met with the leaders of rival Pakistan and other neighboring nations a day after being sworn in. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)சென்ற செப்டம்பர் மாதம் இந்திய பிரதமரை (மன்மோகன் சிங்) “தேஹாத்தி அவுரத் (பட்டிக்காட்டு பொம்பிளை)” என்று நவாஸ் ஷெரிஃப் குறிப்பிட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவர் “இந்திய நாட்டுக்கே மாபெரும் அவமானம் இழைத்து விட்டார்” என்றும், “நமது நாடு இதை சகித்துக் கொள்ளக் கூடாது” என்றும் அப்போது பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மோடி, பாகிஸ்தான் மீது வெறுப்பை உமிழ்ந்தார்; இதற்கு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் பக்க வாத்தியம் வாசித்தன.
“நவாஸ் ஷெரிஃப் நமது பிரதமரை கொச்சையாக பேசி அவமதிக்கும் போது இந்திய பத்திரிகையாளர்கள் அவர் கொடுக்கும் இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அந்த இனிப்புகளை உதைத்துத் தள்ளி விட வேண்டும் என்று தேசம் எதிர்பார்க்கிறது. சுயமரியாதையும், கௌரவமும் உடைய நம் தேச மக்களுக்கு அவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்” என்று முழங்கினார் மோடி.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை நேர்முகம் கண்ட டைம்ஸ்-நவ் தொலைக்காட்சியின் அர்ணாப் கோஸ்வாமி பாகிஸ்தான் குறித்த நரேந்திர மோடியின் நிலைப்பாடு குறித்து இப்படி சொன்னார்.
“பாகிஸ்தானைப் பொறுத்தவரை நரேந்திர மோடி மிகத் தெளிவாக உள்ளார். பயங்கரவாத செயல்கள் தொடர்வது வரை பேச்சுவார்த்தையே இல்லை என்பதை உறுதியாக கூறிய அவர், அதை ஒளிபரப்பும்படி சொன்னார். மோடி, நடுநிலையான வழியில் தனது நிலைப்பாட்டை மிதப்படுத்திக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள் ஆனால் இந்த நேர்முகத்தில் அவர் தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக முன் வைத்தார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைப்பாட்டிலிருந்து பெருமளவு விலகிச் செல்வது”. (அதாவது ‘பயங்கரவாதி’களை கைது செய்து அனுப்புவது வரை நவாஸ் ஷெரிஃபின் முகத்திலேயே முழிக்கப் போவதில்லை என்று மோடி சார்பாக அர்ணாப் அம்பி சூளுரைத்தார்).
அர்ணாப் கோஸ்வாமியுடனான அந்த நேர்முகத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டிச் செல்பவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் அரசாங்கத்தை விமர்சித்த மோடி, “வெடிகுண்டு, துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கியின் சத்தத்தில், பேச்சுவார்த்தை நடத்த முடியுமா, என்ன” என்று கேட்டிருந்தார். இப்போது தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற்று விட்ட பிறகு அவரது நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கிறது. அதற்கான உண்மையான காரணங்களை ஊடகங்கள் பேசுவதில்லை; தொலைக்காட்சிகள் பழைய சவடால் பேட்டிகளை போட்டுக் காண்பிப்பதில்லை. மாறாக, ‘புதிய இந்தியப் பிரதமரின் அழைப்பு அண்டை நாடுகளுடன் உறவை புதுப்பித்துக் கொள்வதற்கான தைரியமான நடவடிக்கை’ என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது, மோடி பரிமாறும் இனிப்புகளை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்)
அதானி பவர் கட்ச் மின் உற்பத்தி திட்டம் பற்றிய விபரங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் விவாதித்து வந்தாலும் பெரிதாக பலன் எதுவும் இருக்கவில்லை. இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது இந்தத் திட்டத்தை பல கட்டங்களாக செயல்படுத்த முனைகிறது அந்நிறுவனம். நிலக்கரியிலிருந்து மின் உற்பத்தி திறனை முதல் கட்டத்தில் 3,300 மெகாவாட், அடுத்தடுத்த கட்டங்களில் 10,000 மெகாவாட் வரை உயர்த்துவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு ஆரம்ப கட்ட முதலீடு ரூ 13,000 கோடியாகவும் உற்பத்தித் திறனை 10,000 மெகாவாட் வரை அதிகரிப்பதற்கு சுமார் ரூ 40,000 கோடியும் தேவைப்படும். இந்த திட்டம் கட்ச் மின் உற்பத்தி நிறுவனம் (KPGCL) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கட்ச் பகுதியில் உள்ள பத்ரேஸ்வரில் இந்நிறுவனம் நிலம் கையகப்படுத்தியிருக்கிறது.
மார்ச் 31, 2014-ல் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதானி பவர் ரூ 2,529 நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதியாண்டில் இதே கால கட்டத்தில் ரூ 585.52 கோடி இழப்பை சந்தித்திருந்தது. 2013-14 நிதியாண்டில் நிறுவனத்தின் தொகுக்கப்பட்ட மொத்த லாபம் 322 சதவீதம் அதிகரித்து ரூ 4,859 கோடியை எட்டியிருக்கிறது.
மூலதன பொருட்கள் இறக்குமதியில் மதிப்பை செயற்கையாக கூட்டி காட்டியதற்கு விளக்கம் கேட்டு ரூ 5,500 கோடிக்கான நோட்டிசை வருவாய்த் துறை இயக்குனரகம் அதானி குழுமத்துக்கு சென்ற வாரம் அனுப்பியிருக்கிறது; அதானி குழுமமோ ஒரிசாவில் தம்ரா துறைமுகத்தை வாங்குவதாக அறிவித்தது.
எனவே, மோடி பேசுவது எல்லாம் அவரது வாக்கு வங்கிக்கு இரை போடுவதற்காக, மோடி செய்வது எல்லாம் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் நமது நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்காக.
(அதனால்தான்) நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 13, 2013-க்குப் பிறகு முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் $6 பில்லியன் அதிகரித்திருக்கின்றன. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு $1.9 பில்லியனிலிருந்து நான்கு மடங்கு அதிகரித்து $7.6 பில்லியன் ஆக உயர்ந்தது. 80 கோடி மக்கள் ஒரு நாளைக்கு $2-க்கும் குறைவான செலவில் வாழும் நாட்டில் ஒரு நாளைக்கு $2.5 கோடி சம்பாதித்திருக்கிறார் அதானி. உண்மைதான், சிலருக்கு நல்ல நாட்கள் வந்து விட்டன.
(மோடி, சங்க பரிவாரம் மற்றும் ஊடக அம்பிக்களால்) பெருமளவு கொட்டி முழக்கப்பட்ட தேசத்தின் ‘இழந்த சுயமரியாதை’ அடுத்த தேர்தல்கள் வரை கிடப்பில் போடப்படும்.
நன்றி – This is why Modi has sent an invitation to Nawaz Sharif
-நன்றி வினவு
மோடி மகிந்தவை அழைத்து கௌரவிப்பதன் பின்புலம்…