தோழர் பாலா தம்புவை 2003 மார்கழி மாதம் 19ம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள 22 ம் ஒழுங்கையில் அமைந்துள்ள இலங்கை வர்த்தக ஊழியர் சங்க (CMU) தலைமை அலுவலகத்தில் கடைசியாக சந்திக்க முடிந்தது.
எனது நண்பன் கிரிஷாந்தா இந்த சந்திப்பை ஏற்படுத்தி தந்தார். இந்த கட்டிடம் கட்டுவதற்கு முன்னர் CMU அலுவலகம் சதம் வீதியில் (Chatham Street) இருந்தது.எவ்வித வங்கி கடனும் இன்றி இக்காரியாலயம் கட்டப்பட்டது. கடலுக்கருகே கட்டும்போது பல நுணுக்கமான தொழில்நுட்பங்களைக் கருத்திற் கொண்டு வடிவமைத்து குளிரூட்டும் சாதனங்கள் எதுவும் இல்லாமல் கட்டப்பட்டது.
நான் அங்கு சென்றபோது CMU அங்கத்தவர்களால், தோழருக்கு கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் அன்பளிப்பாக வழங்கப்பட்ட வோல்க்ஸ்வகன் (Volkswagon) கார் இன்னுமே இருந்தது. அதன் பக்கத்தில் CMUவின் பதில் செயலாளராக விருந்த காலஞ்சென்ற தோழியர் மே விக்கரமசிங்கவினதும் தோழர் வேர்ணன் விஜயசிங்காவினதும் ஞாபகார்த்த கற்கள் இருந்தன.மே விக்கரமசிங்க, மிகவும் சாமர்த்தியமான உழைப்பாளி.அத்துடன் பிரச்சனைகளை யதார்த்தபூர்வமாக ஆராயக்கூடியவர். இவரின் சேவை அளப்பரியது.
வேர்ணன் விஜயசிங்க தொழிலாளர்களின் உடனடிபிரச்சனைகளை கவனித்துக்கொள்வார்.இவர் உப செயலாளராக செயற்பட்டார்.
மத்தியகுழுவில் (Central comittee) காலத்த்துக்கு காலம் உறுப்பினர் மாறிக்கொண்டிருந்தாலும் நான் பொது மன்றத்தில் (Genaral council) இருந்த காலங்களில், தற்பொழுது பதில் செயலாளராக இருக்கும் சில்வெஸ்டர் ஜெயக்கொடி,பீரிஸ்,உபாலி கூறே ,தயானந்த, பரா குமாரசாமி,செனிவரட்ன ஆகியோர் குறிப்பிடத்தக்க அர்பணிப்புடன் செயலாற்றியவர்கள்.
நான் அங்கு அறையினுள் நுழைந்தபோது,ஒரு பக்க அறையில் பாலா, அங்கு வேலை செய்யும் ஒருவருடன் இருந்தார்.என்னை அறிமுகபடுத்த கொஞ்ச நேரம் சென்றது.அவரின் பேச்சில் சற்றேனும் எனக்கு தளர்ச்சி தெரியவில்ல.முன்பு உச்சியின் நடுவில் நரைமயிர் கொஞ்சம் இருக்கும் ஆனால் இப்போது முழு மயிருமே நரைத்துவிட்டது.இதனை தவிர வயதின் சில தளர்சிகள் காணப்பட்டாலும் குறிப்பிடக்கூடிய தாக ஒன்றும் தென்படவில்லை.
இருபத்துமூன்று வருடங்களுக்குப்பின் சந்தித்ததில் உற்சாகத்துடன் காணப்பட்டார் .காலஞ்சென்ற வேர்ணன் விஜயசிங்க வின் பங்களிப்பை பற்றியும் தோழியர் மே பற்றியும் உரையாடினார்.இவர்கள் இழப்பினை உணர்ந்து காணப்பட்டார்.
தோழருக்கு இப்போது 92 வயதாகிவிட்டது.
GCSU வேலைநிறுத்தத்தின் போது கண்டியில் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தார். கந்தசாமி துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகியபோது வேலைநிறுத்தம் முறிந்தது. அப்போது தாவரவியியல் விரிவுரையாளராக இருந்த தோழர் பாலா தம்பு வேலைநிறுத்தத்திற்கு உதவினார் என்பதற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஆயினும் T.B.இலங்கரட்னவின் சிபாரிசுடன் CMU வின் செயலாளரானார். அன்று முதல் அவரது மரணம்வரைக்கும் அவரே செயலாளராகவிருந்தார்.
CMU மட்டுமன்றி பல தொழிற்சங்கங்களுக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்தார். சர்வதேச தொழிற்சங்கங்களுடன் தொடர்புகொண்டு ஒருவலையத்தையே உருவாக்கி உலக தொழிலாளர் வர்க்கத்துக்கே சேவை செய்தார்.
டட்லி சேனநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் இலங்கையில், வேலை நீக்கம்பற்றிய (Termination of Employment Act) சட்டவரைவு (Draft) ஒன்றினை தோழர் பாலா தம்பு முன்மொழிந்தார். இச் சட்டத்தின்படி 20 பேருக்கு மேல் வேலை செய்யும் ஒரு தொழிலகத்தில், ஒழுக்க குற்ற நடவடிக்கைகாகவன்றி பிற காரணங்களுக்கு எவரையும்,தொழில் அதிபரின் (Comissioner of Labour) முன்னனுமதி இன்றி வேலைநீக்கம் செய்யமுடியாது.ஆயினும் தோழர் பலா தம்புவின் இம் முன்மொழிவினை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்கவில்லை.பின்னர் சந்திரிகா பிரதமராயிருந்காலத்தில், அன்றைய தொழில் அமைச்சராக இருந்த மகிந்த ராஜபக்சவினால் சட்டமாக்கப்பட்டது. 1995ல் தொழிலாளர் உரிமை ஆவணம் (The National Workers Rights Charter of Sri Lanka) ஒன்றை, உருவாக்கவும் தோழர் பாலா தம்பு உதவி செய்தார். வர்த்தக சம்மேளனம் இதனையும் ஏற்கவில்லை. இது இன்னும் சட்டமாகவில்லை.
இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU) 50 வருடசேவையை பாராட்டும் போது பேசிய ஜனாதிபதி, அரசு இவருக்கு விருது ஒன்றும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது என கூறினார். ஆயினும் இதனை தோழர் பாலா ஏற்கவில்லை.
இலங்கையில் முதன் முதலாக வாழ்கை செலவு புள்ளியை மையமாக வைத்து இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஒரு ஒப்பந்ததை தோழர் பாலா ஏற்படுத்திக்கொண்டார்.வேர்ணன் (Vernan) இதைபற்றி அடிக்கடி கூறுவார். 6 சத்தத்திற்காக அடிபடுவதில் பிரயோசனம் இல்லை என்று அதிக சிரத்தை இன்றி சம்மேளனம் இக்கோரிக்கையை ஏற்றுகொண்டதாம்.ஆனால் பின்னர் மற்றைய தொழிற்சங்கங்களும் இதனை மாதிரியாக பின்பற்றின.இதனால் அங்கத்தவர்களுக்கு பல நன்மைகள் உண்டாயின.முதலாவது ஒப்பந்தம் 1961ல் செய்யப்பட்டது.
கொழும்பை மையமாகக்கொண்டு ஆரம்பமான CMU, பின்னர் லிகிதர் மட்டுமன்றி ஏனைய தொழிலாளர்களும் அடங்கலாக இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாழர் சங்கம் (Ceylon Mercantile,industrial and General Workers Union) (CMU) என பெயர் மாற்றப்பட்டு பல மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.இதற்காக யாழ்பாணத்தில் பரா குமாரசாமி பிரதிநித்துவ படுத்தினார். பரந்தன் கெமிக்கல்ஸ்,சினோர் ஆகியவை இவையினுள் சிலவாகும் பின்னைய காலங்களில் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி கிராமப்புற மக்களுக்கும் இலங்கை வர்த்தகசங்கதின் சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன.
தோழர் பாலா தம்பு ஒரு மாக்சிய, ரொட்ஸ்கிய சிந்தனையாளர் என்பதற்கப்பால் அடிப்படையில் மனித நேயம் படைத்தவர். மனேம்பெரி விவகாரம்,ஜேவிபி விவகாரம் எப்பாவளை பிரச்சனை,MIRJE (Movement for Inter-Racial Justice and equality) ஒரு சில உதாரணங்கள். தொழிலாளர்கள் என்பது மட்டுமன்றி சகலரையும் மனித நேயத்தோடு அணுகவேண்டியதை முக்கியமாக கருதினார்.
கொள்கையளவில் ஒருமைப்பாடு இல்லாதபோதும்,1971ல் ஜேவிபி (JVP) கிளர்ச்சியில் சிறையில் இருந்தோருக்கு பாலா தம்பு சட்ட ஆலோசகராக இருந்தார்.
அருட்தந்தை போல் கஸ்பெர்ஸ் அவர்களால் மேர்ஜ் (MIRJE) அமைப்பு 1979 ல் நிறுவப்பட்டது.இவ்வமைப்பு இனங்களுக்கு இடையேயான நீதி மற்றும் சமத்துவம் பேணல் அடிப்படியாககொண்டு உருவானது.இதில் பாலா தம்பு,பரா குமாரசாமி,உபாலி குறே மற்றும் பலஅங்கத்தவர்களும் பிறரும் சேர்ந்து அளப்பரிய சேவை புரிந்தனர்.
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என பொதுவான சகலருக்கும் மத்தியில் ஒரு ஐக்கியத்தை பேண முற்பட்டார், எப்பாவளை (Eppawala) பொஸ்பெட் (phosphate) பிரச்சனையும் அதற்கெதிரான பாரிய போராட்டங்களும் இன்னுமொரு ஒரு முன்உதாரணம். 1997-1998 காலகட்டத்தில் எப்பாவலையில் உள்ள 60,000,000 தொன் பொஸ்பேட் கனிமங்களை சுரண்டும் அமெரிக்க பல்தேசிய நிறுவனத்திற்கெதிராக அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.பல எதிர்ப்பு போராட்டங்களும்,சத்தியாகிரகங்களும்,அறவ்ழிபொராட்டங்க்களும் நடத்தப்பட்ட போதும் திட்டம் கைவிடப்படாத நிலையில் இப்போராட்டங்களில் முன்னணி வகித்த பியரத்ன தேரர் (Piyarathana) தோழர் பாலா தம்புவை அணுகி இலங்கை வர்த்தக சங்கத்தின் ஆதரவை வேண்டினார் .ஒரு பெரிய ஆர்ப்பாட்டமும் , அரை நாள் பொது வேலை நிறுத்தமும் நடைபெற்றது.அதனால் அரசு திட்டத்தினை கைவிடநேர்ந்தது.
வெள்ளவத்தை நெசவாலையில் 1977ல் நடந்த வேலை நிறுத்தத்தின்போது CMU பங்குகொள்ளவில்லை ஆனாலும் மற்றைய தொழிலாளர்களின் வேலைகளை செய்யவில்லை.கமிட்டி அங்கத்தவர்கள் எல்லோரும் தலைமை காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு, பாலாவால் இது வலியுறுத்தப்பட்டது.அக்காலத்தில் நானும் கமிட்டியில் இருந்தேன்.சிலர் சூட்டும் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது.
1964ல்.LSSP ல் இருந்து பிரிந்து சக தோழர்களுடன் சேர்ந்து புரட்சிகர மார்க்சிய கட்சி RMP (Revolutionary Marxist Party) உருவாக்கப்பட்டது.
1977ம் ஆண்டு RMP கட்சியிலிருந்து உபாலி கூறேயும், T .N.பெரேராவும், CMU விலிருந்து வேர்ணன் விஜேசிங்கவும், H.A.செனிவிரத்னாவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர் .இதன் முக்கிய நோக்கம் தேர்தலில் வெற்றி பெறுவதல்ல.மாறாக எல்லோரும் ஒன்றாகசேர்ந்துமுதலாளி தத்துவதற்கு எதிரான ஒரு முன்னணியை அமைக்கும் ஒரு அறைகூவல் தளமே.
லங்கா சமசமாஜ கட்சியின் (LSSP) யின் ஆரம்பகாலத்தில், இரண்டாவது மகாயுத்த காலத்தில் கொல்வின் போகம்பர சிறையில் இருந்தபோது பாலா ஒரு வெள்ளையின பெண்மணியின் உதவியுடன் மறியல் சாலைக்குள் சென்று அவருக்கு தப்பிக்கும் முயற்சித்திட்டம் பற்றி அறிவித்தார்.பின்னர் அவர்கள் வல்வெட்டித்துறை ஊடாக இந்தியாவிற்கு தப்பி சென்றனர்.
தோழரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும்,அரசியல் பற்றியும் விரிவஞ்சி நான் இங்கு தொடரவில்லை.
சில காலமாக சில்வெஸ்டர் ஜெயக்கொடி இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU) பதில் காரியதரிசியாக கடமையாற்றுகிறார்.நான் அங்கு இருந்தகாலங்களிலேயே மத்திய குழுவில் அங்கத்தவராக கடமையாற்றியவர்.அவருக்கு சகல உதவிகளையும் அங்கத்தவர்கள் நல்கி மீண்டும் CMU வை இன்னும் முன்னேற்றமடையசெய்யவேண்டும்.