Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் சண்-உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இறுதிப்பாகம்-

தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா நேற்று 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக முத்து, தோழர் விக்கும் , மாசிலாபாலன், நாவலன், ராமமூர்த்தி, ராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்”என்னும் நூல் அறிமுக கூட்டத்தில் தோழர் முத்து (சிறீ) அவர்களால் படிக்கப்பட்ட தோழர் கைமண் அவர்களின் முழு அறிக்கை.

இங்கு இனியொருவின் பொதுவான அரசியல் கருத்துக்களோடு உடன்படும் முரண்படும் கருத்துக்கள் காணப்படினும், விவாத நோக்கில் முழுமையான கருத்தும் பதியப்படுகின்றது. இணைய வாசகர்களுக்காக கட்டுரை பகுதிகளாகப் பதியப்படுகிறது. அதன் இறுதிப்பாகம் கீழே:

Introduction-Interrogating an Obscured Legacy எனும் தலைப்பிலான கட்டுரையின் சில பகுதிகள்.

“சண்ணின் கட்சியில் இருந்து தொடர்சியான பல வெளியேற்றங்கள் நடைபெற்றன. சில பிரதான பிளவுகளை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். மாஓயிஸ்ட் கட்சியில் இருந்து வெளிவந்த ஜே.வி.பி மாஓவின் மக்கள் யுத்தப்பாதையை மட்டும் நிராகரிக்கவில்லை, கட்சியின் மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்- மாஓயிஸ மார்க்கத்தையும் நிராகரித்த்து. அவநம்பிக்கையற்றிருந்த சிங்கள இளைஞர்களை அணிதிரட்டுவதற்காக ஜனரஞ்சகத் தன்மையுள்ள மார்க்கம் ஒன்றைக் கடைப்பிடித்து, 1971 ஏப்ரல் எழுச்சியை ஏற்படுத்தியது. அது தோல்விகண்டது. காமினி யாப்பா கட்சியைவிட்டு ஒரு அணியினருடன் வெளியேறி பெரதிக சுலங்க/கீழைக்காற்று எனும் அமைப்பை உருவாக்கினார். அது மாஓவின் அடிப்படைக் கொள்கையான நீடித்த மக்கள் யுத்தப் பாதியில் செயல்படுவதற்காக புரட்சிகர தளப்பிரதேசங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கறவிட்ட மற்றும் வாட்சன் பெர்னாண்டோ தலைமையிலான மற்றோர் அணி தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது.” பின்னர் செந்தில்வேல் அவர்களின் தலைமையிலான மற்றோர் குழு பிரிந்துசென்று புதிய ஜனநாயகக் கட்சி இன்றோர் அமைப்பை உருவாக்கியது. புதிய ஜனநாயகக் கட்சி தமிழ்ப் பிரச்சனை தொடர்பாக 1983-க்கு முன்னர் சண் எடுத்த நிலைப்பாட்டையே எடுத்தனர். வைத்தீசஸ்பரா தனது முலாவது கட்டுரையில் புதிய ஜனநாயக் கட்சி பற்றி விவாதிக்கிறார். சண்ணின் கட்சியில் இருந்து வேறு பல சிறு குழுக்களும் வெளியேறினர்.”

உள்நாட்டில் கட்சி கட்டும் விடயத்தில் தோழர் சண்ணின் செயற்பாடுகள் பற்றிப் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியந்தான். அதைவிட அவசியமானது, தோழர் சண்ணை தமது கட்சியினதும், இலங்கைப் புரட்சியினதும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள இலங்கைக் காம்யூனிஸ்ட் கட்சி (மாஓ) என்ன சொல்கிறது என்பதைக் கவனிப்போம்.

” 1969-இல் நடைபெற்ற கட்சியின் 9வது காங்கிரஸ் மாக்ஸிஸம்-லெனினிஸம்-மா சே துங் சிந்தனையை உயர்த்திப் பிடித்தது. புரட்சியின் கட்டம் புதியஜனநாயகப் புரட்சிக் கட்டமென்றும், புரட்சியின் பாதை நீடித்த மக்கள் யுத்தப்பாதை என்றும் முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் கட்சியானது புனரமைக்கப்படவும், சரிசெய்யப்படவும், புரட்சிகரமாக்கப்படவும் வேண்டும் என மாநாடு வலியுறுத்தியது. ஆனால் புனரமைக்கப்படலுக்கும், சரிசெய்யப்படலுக்கும், புரட்சிகரமாக்கப்படலுக்கும் பதிலாக, கட்சியானது தொடர் நெருக்கடிகளிலும் வீழ்ச்சிகளிலும் சிக்கி கீழ்நோக்கிய சுழற்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது. தோழர் சண்தான இந்நிகழ்வுப் போக்குக்கு நேரடியான காரணியாக இருந்தாலும், இந்நெருக்கடிகளை உருவாக்கிய வேறு பல காரணிகளும் இருந்தன. அனைத்துலக கம்யூனிஸ இயக்கம் சோவியத் யூனியனையும் அதனைத் தொடர்ந்து சீனாவையும் இழந்ததனால் ஏற்பட்ட அனைத்துலக அளவிலான பின்னடைவுகள், 1971-இல் ஏற்பட்ட குட்டி பூர்ஷ்வா ஆயுத எழுச்சியும் அதன் விளைவாக அரசால் ஏவிவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறை, சீனத் தூதுவராலயத்தின் துணையுடன் திரிபுவாத முகாமின் முன்முயற்சியில் கட்சிக்குள் ஏற்படுத்தப்பட்ட உடைவுகள் வெளியேற்றங்கள் ஆகிய இவை அனைத்தும் கட்சியைப் பலவீனப்படுத்தக் காரணமாயின. இருந்தும் தோழர் சண் தனது சுயவிமர்சனத்தில் புறநிலையில் குற்றம் சுமத்தாமல், நெருக்கடிகளுக்கும் சீரழிவுகளுக்குமான பிரதான காரணிகளாக பின்வருவனவற்றை சுட்டிக்காட்டினார்: கட்சி திரிபுவாதத்தில் இருந்து முற்றாக விடுபடாமை. சரியான புரட்சிகர மார்க்கத்தை வகுக்கத் தவறியமை. கூட்டுத் தலைமையையும் புரட்சிகர அமைப்புக் கோட்பாட்டையும் வகுக்கத் தவறியமை. புரட்சிகர நடைமுறையைப் பின்பற்றத் தவறியமை. மேலும் சொல்வதானால் கட்சி பொருளாதாரவாதத்துள் அமிழ்ந்து கிடக்கின்றது. கட்சி புறநிலை யதார்த்தத்தில் இருந்தும், புரட்சிகர மக்களிடம் இருந்தும், புரட்சிகர நடைமுறையில் இருந்தும் விலகிநிற்கின்றது. கட்சி உண்மையிலேயே ஓரங்கட்டப்பட்டு விட்டது. ஜனநாயக மத்தியத்துவம் இருக்க வேண்டிய இடத்தில் அதிகாரமத்தியத்துவம் ஆட்சி புரிகிறது. அனைத்துலகளவிலான தத்துவார்த்த வர்க்கப் போராட்டத்தில் கட்சி முன்னணிப்போராளி எனற பங்கை வகித்தாலும், உள்நாட்டளவில் உண்மையிலேயே அது ஒரு பகிரங்கமான, சட்டரீதியான, தொழிற்சங்கமையம் எனும் பங்கையே வகித்தது. நீடித்த மக்கள் யுத்தத்தின் ஊடாக புதிய ஜனநாயகப் புரட்சியைத் தொடக்கிவைப்பதற்கான எந்தத் திட்டமும், மார்க்கமும், மூலோபாயமும் கட்சியிடம் இருக்கவில்லை. தன்மட்டில் தானே கட்சி ஒரு திரிபுவாதக் கட்சியாக மாறியிருந்தது.”

கம்யூனிஸ்ட் கட்சி மேலும் தொடர்கிறது. அது என்ன சொல்லவருவதை அவதானிக்கும் முன் இதுவரை சொன்னவை பற்றிய ஒரு குறிப்பு. இதுவரை சொன்னவை நல்லதோர் விமர்சனமாகப் படலாம், அனால் அவை புத்திபூர்வமன விமர்சனங்களல்ல. அவை உணர்ச்சி பூர்வமான தன்நிலை விளக்கங்ளே. நேர்மையான ஒழிவுமறைவற்ற, பூச்சுமெழுக்கற்ற தன்நிலை விளக்கம். சுய விமர்சனத்தின் முதற்படி தன்நிலை விளக்கந்தான். இரண்டாவது படி அத்தவறுகளுக்கான காரணங்கள் பற்றிய ஆய்வு. மூன்றாவது படி தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான வழிவகைகள் பற்றிய முன்வைப்பு. இந்த மூன்றும் இணைந்தால்தான் ஒரு விமர்சனம் முழுமைஅடையும். அப்போதுதான் அது சுய-விமர்சனம் செய்பவர்களுக்கும், அதில் ஆர்வமும் தொடர்பும் உள்ள பிறருக்கும் நன்மைபயப்பதாக அமையும். பிறரைப் பற்றிய விமர்சனமும் அவ்விதந்தான். பிறர் நிலை விளக்கம் விமர்சனம் ஆகிவிடாது. அது சிலவேளைகளில் அம்பலப்படுத்தல்களாக இருக்கலாம். ஆனால் விமர்சனம், சுய- விமர்சனம் என்பது நண்பர்களுக்கிடையேயான உறவைக் கையாழ்வதற்கானதோர் வழிமுறையே தவிர பகைவர்களுக்கிடையெயான உறவைக் கையாழ்வதற்கானதோர் வழிமுறையல்ல. விமர்சனம் பற்றி மாஓ கூறுவது நட்புக்கான அவாவில் இருந்து அரம்பித்து நட்பில் முடியவேண்டும் என்பதேயாகும். ஆகவே விமர்சனமும் இந்த மூன்று கட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(மாஓ)-வைத் தொடர்வோம். “RIM இன் தோற்றம்(1984-இல் தோற்றுவிக்கப்படுகிறது) கட்சிக்குள் நிலவிய இரு மார்க்கங்களுக்கிடையேயான போராட்டத்தை மேலும் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்ல உதவியது. ஆனாலும் கூர்மையான, சிற்சில நேரங்களில் கசப்பான இரு மார்க்கப் போராட்டம் மற்றோர் பிரதான பிளவில போய்முடிந்தது. மற்றோர் புறத்தில் இப்போராட்டம் கட்சியை மீண்டும் ஒன்றுபடுத்த உதவியது. மேலெழுந்த பல மோதல்களையும், பிளவுகளையும் தீர்த்துவைப்பதில் Co RIM தலையீடும் துணைபுரிந்தது. 1991 இல் நடநத ஒரு விசேட மாநாட்டில் மா.லெ.மாஓ அறிவியலைப் பிரயோகித்து, கீழ்வரும் சித்தாந்த, அரசியல் மற்றும் அமைப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்சியைத் திருத்தி அமைத்து மீள் உருவாக்கம் செயவதற்கான வழிகாட்டலை தோழர் சண் வழங்கினார். அவையாவன:

£ மக்கள் இராணுவத்தை கட்சியின் பிரதான வெகுஜன அமைப்பாகக் கொள்ளல்.

£ இ.க.க(மாஓ)-வை ஒரு இரகசிய, தலைமறைவான, புரட்சியை முழுநேரக் கடமையாகக் கொண்ட கட்சியாக மறுநிர்மாணம் செய்தல்.

£ புதிய ஜனநாயகப் புரட்சியை நீடித்த மக்கள் யுத்த வடிவில் தொடக்கிவைப்பதற்காக கிராமப் புறங்களிலான வேலைகளில் கட்சியின் கவனத்தைத் திருப்புதல்.”

தோழர் சண் தனது வைத்தியச் சிகிச்சைக்காக லண்டன் செல்லவுள்ளதால் இவ்வேலையை முன்னெடுத்துச் செல்ல ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நடந்த நிலைபற்றி கட்சியின் தலைமை கூறுவதாவது:

“கட்சிக்குள்ளான இரு மார்க்கப் போராட்டம் மேலும் கசப்பானதாகவும், தீர்க்ககரமானதாகவும் மாறியது. இறுதியில் முக்கியத்துவம் மிக்க புதியதோர் பிளவில் முடிவடைந்தது. இதன் விளைவாக கட்சி இன்று வினைத்திறன் மிக்க கரு எதுவும் இன்றி மடிந்துவிடும் நிலையிலேயே உள்ளது. உண்மையிலேயே பழைய கட்சி தற்போது மடிந்துவிட்டது. புதிய அறிவியல் அடித்தளத்தில் புதிய கட்சியொன்றை உருவாக்க வேண்டியுள்ளது. மீதமாக இருப்பது மாஓயிசப் புரட்சியாளர்களின் சிறு கரு மாத்திரமேயாகும்.” தனது முயற்சியின் பலாபலங்களை அறுவடை செய்யமுன்னரேயே சண் மரணமடைந்தது பெரும் இழப்பேயாகும்.

முன் கூறியதுபோல் இலங்கையில் புரட்சிகரக் கட்சியைக் கட்டும் முயற்சியில் இன்னமும் வெற்றிபெறாமைக்கான காரணமென்ன? இ.க.க(மாஓ) இது பற்றிக் கூறும் கருத்தையும் அதற்கான எமது தெறிப்பையும் வெவ்வேறு அரங்கங்களில் தொடர்வோம்.

அத்தெறிப்புகளின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் எனபது தொடபான சிறு குறிப்பு,

இலங்கைப் புரட்சிகர இயக்கத்தின் இன்றைய நிலையில் அமைப்புக் கட்டுமானத்தை உருவாக்குவதில் ஏற்பட்டுவரும் தொடர் தோல்விகளுக்கான காரணத்தை கடைப்பிடிக்கப்பட்ட அல்லது கடைப்பிடிக்கப்பட்டுவரும் அமைப்புக் கோட்பாடுகளிலோ, செயற்பாடுகளிலோ அல்லது முன்னணி வகிக்கும் தோழர்களின் தவறான போக்குகளிலோ மட்டும் காணமுடியாது. அவற்றில் தவறுகள் உள்ளனதான், ஆனால் அவை துணைக்காரணங்களாகவே காணப்படுகின்றன. பிரதான காரணத்தை அல்லது காரணங்களை வேறு எங்கோதான் தேடவேண்டியுள்ளது. எங்கு?

அடிக்கட்டுமான மேற்கட்டுமான விதிகளைப் பிரயோகித்தால் தேடப்படவேண்டிய இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். வேலைத்திட்டம் கட்சி என்ற இவ்விரு அங்கமும் ஒன்றிலொன்று தங்கியுள்ள சுய செயற்பாடுடைய இரு வெவ்வேறு சமூக நிறுவனங்களாகும். இதில் இயல்பாகவே ஆகிவருவது எது, சில மனிதர்களால் ஆக்கப்படுவது எது? வேலைத்திட்டம் சுதந்திரமானது. எவரின் விருப்பு வெறுப்பும் இன்றி சமூகத்தில் நிலவும் பல்வேறு குழுக்களின் சிநேக, பகை முரண்பாடுகளின் செயற்பாடுகளினால் தீர்மானிக்கப்படுவது. கட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால் கட்சி சுதந்திரமான தொன்றல்ல. தனக்கென்றோர் வேலைத்திட்டம் இருந்தால்தான் கட்சி செயல்படும். கட்சியின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாய் இருப்பது கட்சியின் வேலைத்திட்டந்தான். இங்கு எம்முன்னால் உள்ள பிரச்சனை கட்சியின் வேலைத்திட்டத்திற்கும் சமூகத்தின் இயல்பான வேலைத்திட்டத்திற்கும் இடையேயான பொருத்தப்பாடு எவ்விதம் இருக்கிறது என்பதுதான். பொருத்தப்பாடு சரியானதாக இருந்தால் கட்சி செழித்து வளரும், பொருத்தப்பாடு சரியாகச் சரியாக கட்சி மேலும் மேலும் வளரும். பொருத்தப்பாடு இல்லையானால் அல்லது பொருத்தப்பாடின்மைதான் மேலோங்கி நின்றால், கட்சி சாண் ஏறமுழம் சறுக்கும். அவ்விதமானால் இங்கு அடிக்கட்டுமானம் எது? சமுகத்தில் இயல்பாக இருக்கும் வேலைத்திட்டமே அடிக்கட்டுமானமாகும். கைவிட்டெண்ணக் கூடிய மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சியும் அம்மனிதர்களின் மூளைகளில் இருந்து தோன்றிய கட்சி வேலைத்திட்டமும் மேற்கட்டுமானங்களே. கட்சியின் மூளையால் சமூகத்துக்கான அல்லது கம்யூனிஸ்ட் புரட்சிக்கான வேலைத்திட்டத்தை வரைந்து கொள்ளமுடியாது. கட்சியின் மூளையின் வேலை சமூகம்(ஒடுக்கப்படும் பிரிவினர்) தனது அக புற நிலைகளினால் வேண்டிநிற்கும் வேலைத்திட்டத்தை, மக்கள் அரைகுறையாகவும், தெழிவின்றியும் கடைப்பிடித்துவரும் வேலைத்திட்டங்களையும், தமக்கான ஒரு வேலைத்திட்டத்திற்காக மக்களால் வெளிப்படுத்தப்படும் விருப்புவெறுப்புகளையும் இனங்கண்டு, வாசித்தறிந்து, அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றில் உள்ள எதிர்மறை அம்சங்களைக் களைந்து, நேர்மறை அம்சங்களை வளர்த்தெடுத்து தமது வேலைத்திட்டமாக ஆக்கிக் கொள்வதேயாகும். மாக்ஸிஸம்-லெனினிஸம-மாஓயிஸம் எனும் அனைத்தும் தழுவிய அறிவியல் அணுகுமுறையை தனது நாட்டின் சூழலுக்கு ஏற்ப பிரயோகிப்ப்து என்பதன் அர்த்தம் இதுதான். ஆகவே இயல்பாக இருக்கும் வேலைத்திட்டம் எனும் அடிக்கட்டுமானத்தை சரியாக பற்றிக் கொண்டால் கட்சி கட்டுதல் என்பது பகீரதப் பிராயத்தனமாக இருக்காது. தோழர்கள் மீது கறையான் புத்தெடுக்கும் நிலை இனியும் வேண்டாம். மலையைக் குடைந்து எலியைப் பிடிக்கும் பரிதாப நிலையும் தொடரவேண்டாம்.

ஆ.5) யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.

யாழ் குடாநாட்டில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தோழர் சண்ணின் பங்களிப்பு தீர்மானகரமானதாகும். 1970-கள் வரை கட்சியால் நடத்தப்பட்ட புரட்சிப் போராட்டங்கள் எனக் கருதப்பட்டவற்றுள் பாராளுமன்ற ஜனநாயக்கத்துக்கு உட்படாமல் முன்கொண்டு செல்லப்பட்ட போராட்டம் இது ஒன்றுதான். வாக்குத் தேடல் அபிலாசைகள் எதுவும் இப்போராட்டத்திற்கு இருக்கவில்லை. பெரும் தோட்டத்தொழிலாளர் மத்தியில் நடத்தப்பட்ட போராட்டமும் இது போன்றதுதான ஆனால் அங்கு தொழிற்சங்கவாதம் ஆதிக்கநிலை வகித்தது. இருந்தும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் காட்டாறு போல் பெருக்கெடுத்து காட்டாறு போலவே தொலைந்து விட்டது. நிலபிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டமாக இது முன்னெடுத்துச் செல்லப்படாமையே இதன் மறைவுக்கான காரணமாகும். தொழிற்சங்கப் போராட்டங்கள் எவ்விதம் விவகார மையப் (Issue oriented) போராட்டங்களாக இருந்தனவோ அது போலவே தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும் ஆலயப் பிரவேசம், தேநீர் கடைப் பிரவேசம் எனும் விவகார மையப் போராட்டங்களாகவே இருந்தன. பிரச்சனை மையப் போராட்டங்களாக (Problem oriented) இருக்கவில்லை. இங்கு பிரச்சனை சாதியம், விவகாரம் ஆலய, தேநீர் கடைப் பிரவேசம். கோரிக்கைகள் வெற்றி பெற்றதும் போராட்டங்கள் முடிவடைகின்றன. முன்வைக்கப்பட்ட கோரிக்கை கூட முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைதான். போராட்டம் தொலைந்து போனமைக்கான காரணங்கள் இரண்டாகும்.

முதலாவது தொழிற்சங்கவாதம்,

திரிபுவாதக் கட்சியில் இருந்து(மாஸ்கோ சார்பு) புரட்சிகரக் கட்சி(சீனசார்பு) எனப் பிரிந்தபோது, அனைத்துலக் அரங்கில் இப்பிரிவு சோவியத் வழிமுறைசார்பு, சீன வழிமுறைசார்புப் போராட்டமாகவே இருந்தது. இப்போராட்டம் ஆரோக்கியகரமானதகவும் இருந்தது. முரண்பாடு மிகவும் கூர்மையானதாகவும் இருந்தது. ஆனால் உள் நாட்டரங்கில் பீட்டர் கனமன் தலைமையிலான பாராளுமன்ற ஜனநாயக திரிபுவாத அணியும், தோழர் சண் தலைமையிலான தொழிற்சங்க திரிபுவாத அணியும் தமக்குள் மோதிக்கொண்டார்கள். கட்சியில் இருந்துவெளியேறின மூன்றாவதும் நான்கவதும் அணிகளான ஜே.வி.பி யும், கீழைக்காற்றும் தொழிற்சங்கவாதத்தை எதிர்த்தே வெளியேறின. தோழர் சண்ணிற்கும் கீழைக்காற்றுக்கும் நடந்த கருத்துப் போராட்டத்தில் தொழிற்சங்க திரிபுவாதம் பிரதான பாத்திரம் வகித்தது. தோழர் சண்ணை கீழைக்காற்று இயக்கம் இலங்கையின் ஐடிற் எனவே அழைத்தது.

மற்றைய காரணம் யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை நிலபிரபுத்துவம் பற்றிய விழிப்போ, நிலபிரபுத்துவ எதிர்ப்பு உணர்வோ கட்சியிடம் இல்லாதிருந்தது. இதன் வெளிப்பாடுதான் ‘மிச்சசொச்சம்’ என்ற கோட்பாடாகும். இக்கோட்பாடு பற்றியே இங்கு அலசுகிறோம்.

“சாதி அமைப்பு என்பது நிலபிரபுத்துவத்தின் ஒரு மிச்சசொச்சமாகும். எமது நாட்டில் முதலாளித்துவம் ஒழுங்காக அல்லாமல் ஏற்ற இறக்கமாக வளர்ந்துள்ள படியால்தான் சாதி அமைப்பு இங்கே நின்று பிடிக்கின்றது. ஆளும் வர்க்கத்தின் அரசு இயந்திரம் அதை அழியாமல் இருப்பதற்குத் துணைபுரிகின்றது. எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனை முற்போக்கு இயக்கத்தின் பிறபகுதிகள் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மறுத்தன. வேறு எந்த அரசியல் கட்சியும் எமக்கு ஆதரவு தரவில்லை.” ஜேவிபி பற்றிய சண்ணின் ஆய்வு. பக்கம் 184

‘எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்’ மிகச் சரியான நிலைப்பாடு. ஆனால் இம்முடிவுக்கு வருவதற்கான காரணங்கள் என்ன என்பதே கேள்வி. “ பார்க்கவோ புரிந்துகொள்ளவோ மறுத்த இந்த முற்போக்கு இயக்கத்தின் பிறபகுதிகள்” எவை? எஸ்.டி, றொனில் டி மெல் ஆகியோர் கூட்டிவரப்பட்டமை. ஊர்வலங்களுக்கு அவர்கள் தலைமை தாங்கியமை, ஆகியவை எதைக் காட்டுகின்றன? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை அல்லது அக்கட்சியினுள் உள்ள ஒரு பகுதியினரைத்தான் முற்போக்கு இயக்கத்தின் ஒரு பகுதியினர் என்று குறிப்பிடுகிறார்.

அவரின் சுயசரிதையில் காணப்படும் கீழ்வரும் பகுதிகள் அதை நிரூபிக்கின்றன. “(1980-ற்கும் 1983-ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்) யூ.என்.பி. எதிர்ப்புச் சக்திகளின் ஐக்கியத்திற்கான புதியதோர் நடவடிக்கை நனவாகியது. லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, மஹாஜன எக்ஸத் பெறமுனை, எமது இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகள் தற்காலிகமாக யூ.என்.பி எதிர்ப்பு முன்னணி ஒன்றை உருவாக்க உடன்பட்டன. ……..இந்த முன்னணியின் காலம் குறுகியதாக இருந்தபோதிலும் சிறப்பான யூ.என்.பி எதிர்ப்புப் பிரச்சாரத்தை அது மேற்கொண்டது.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இடங்களில் மூன்று முக்கியமான கூட்டங்களை இம்முன்னணி நடத்தியது. யாழ்ப்பாணக் கூட்டம் மிகவும் பெரிதாக நடைபெற்றது………ஆகியோரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நானும் கலந்துகொண்டோம்……..எனது அரசியல் வாழ்வில் மிகச்சிறந்த சொற்பொழிவை நான் அதில் நிகழ்த்தினேன் என நினைக்கிறேன்.”பக்கம் 271

பாரளுமன்ற அரசியலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் அவருக்கு இருந்த நம்பிக்கையை கீழ்வரும் வாக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

“திரிகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றிக்கு அங்கு வாழும் கணிசமான தொகை சிங்கள மக்களும் துணைபுரிந்தார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாட்டின் இதர பாகங்களில் தேர்தல்களைப் பகிஸ்கரித்த போதும் இப் பிரதேசங்களில் யூ.என்.பிக்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணி அபேட்சகர்களை ஆதரித்தது. வரலாற்றில் முதல் தடவையாக இத்தகைய விஷயம் நடைபெற்றது. எதிர்கால சிங்களவர் – தமிழர் உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது………அரசியல் அறிவு இருந்திருந்தால் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த வாய்ப்பை இறுகப் பற்றி யூ.என்.பி எதிர்ப்பு சக்திகளின் புதிய ஐக்கியத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்.” பக்கம் 273

“எமது போராட்டம் பிற்போக்கு ஏகாதிபத்திய சார்பு சக்திகளுக்கு எதிரான தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.” இவ்வாக்கியத்தில் ஒரு குழப்பம் காணப்படுகின்றது. தேசியளவிலான போராட்டத்தின் ஒரு பகுதியே என்பது தான் தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூ.என்.பி-க்கு எதிரான போராட்டம் என்பதே இதன் அர்த்தம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இதைப் புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கப்படுகிறார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு தேசியக் கட்சி என்ற அர்த்தத்திலும் இதைக் கூறியிருக்கலாம். திரிபுவாதக் கட்சியில் இருந்து பிரிந்து தனியான கட்சி அமைத்ததன் பின்னர் வெளியான முதலாவது கம்கறுவ இதழ் பண்டாரநாயக்காவின் படத்தை தனது முதற் பக்கத்தில் தாங்கியே வெளிவந்தது. பண்டாரநாயக்கா தலைமையிலான எழுச்சி ஒரு தேசிய எழுச்சி என்பதே கட்சியின் அன்றைய நிலைப்பாடாக இருந்தது. யாழ் குடாநாட்டின் ஒடுக்கப்பட்ட சாதிமக்களுக்கும் பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. 80-களில் கூட சண் இந்தக் கருத்தில் இருந்து விடுபடவில்லை. இரு அர்த்ததில் பார்த்தாலும் தீண்டாமை எதிர்ப்பின் போராட்டத்தின் உள்நோக்கம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனான ஐக்கிய முன்னணிக்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவதாகவே இருந்துள்ளது. ஆலய தேநீர் கடைப் பிரவேசத்துடன் இப்போராட்டம் ஓய்ந்து போனமைக்கான காரணத்தை ஆராயும் போதும் இந்த முடிவுக்கு வரமுடியும்.

ஆனால் இது தேசியப் போராட்டத்தின் ஒரு பகுதியே என்பது மிகச்சரியானது. அது தோசை-வடை எதிர்ப்பாளர்களினது தேசியப் போராட்டமல்ல. தோசைவடையினரது தேசியப்போராட்டமாகும். இப்போராட்டம் மட்டுமல்ல, கட்சியின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீரமிகு தொழிற்சங்கப் போராட்டமும் தோசைவடைகளின் தேசியப் போராட்டத்தின் ஒரு அங்கந்தான். தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் செயற்படுகள மக்களையும், அரசுக்கும் பெருந்தோட்டத்துறை அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான போராட்ட செயற்படுகள மக்களையும் தமிழ் தேசிய போராட்டத்தின் செயற்படுகள மக்களாக மாற வழிகாட்டியிருந்தால் இன்று இலங்கைவராலாறே வேறு விதமாக இருந்திருக்கும். இச் சந்தர்ப்பத்தைக் கட்சி தவறவிட்டுவிட்டது. சந்தர்ப்பந்தான் தவறவிடப்பட்டதே தவிர இச்சாத்தியப்பாடு இன்னமும் உள்ளது. இது பற்றிய கருத்துப் பரிமாற்றத்தை ‘1983-ற்குப் பின்னர், இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாக நேர்மறைக் கொள்கையின் படி செயற்பட ஆரம்பித்தது.’ என்ற தலைப்பின் கீழ் வேறோர் அரங்கில் அலசுவோம், சந்தர்ப்பம் கிடைத்தால்.

தற்போது “சாதி அமைப்பு என்பது நிலபிரபுத்துவத்தின் ஒரு மிச்சசொச்சமாகும்.” என்ற கூற்றிற்குச் செல்வோம். இது புதிய கூற்றுமல்ல, புதிய மறுப்புமல்ல. கீழைக்காற்று இயக்கத்தின் யாழ் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட மறுப்பாகும். பதில் இல்லை. வழமையான கிண்டலும் கேலியும், முத்திரைகுத்தலுந்தான். அந்த மறுப்புச் சொல்லாடல் இம்மேடையில் தொடர்கிறது, கலந்துரையாடல் வடிவில்.

ஜே.வி.பி பற்றிய தோழர் சண்ணின் மதிப்பீட்டில் இருந்து சிங்களவர்களிடையேயான சாதியத்தின் இறுக்கத்தைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

“……..ஆனால், மறைந்த திரு.S.W.R.D.பண்டாரநாயக்கா, 1956 தேர்தலில் மதம், இனம், மொழி அகியவை தொடர்பான நியாயமான அறைகூவலுடன், அவருக்கு முன்னால் இடது இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட தீவிர முழக்கங்களையும் இணைத்துப் பிரச்சாரம்செய்தார். மாக்ஸிஸ்ட்-லெனினிஸ்டுகளின் பிரச்சாரங்களினதும் பண்டாரநாயக்காவின் பிரச்சாரங்களினதும் நல் விளைச்சல்களை விஜயவீர அறுவடை செய்துகொண்டார். கூடவே தனது இந்திய எதிர்ப்புவாத(மலையகத் தமிழர்களுக்கு எதிரானது), சாதியவாத அறைகூவல்களையும் இணைத்து தனது அரசியல் இலாபத்தை உச்சப்படுத்திக் கொண்டார்.” சண், (ஜே.வி.பி பற்றிய அவரது ஆய்வு நூலில்)

“…….அவர்கள், இந்திய எதிர்ப்புவாதத்திற்கு ஒரு கொடுமையான உள்ளடக்கத்தைக் கொடுத்ததுடன் புரட்சிகர வாய்ச்சொற்களால் அதை மூடிமறைத்தும் வந்தார்கள். இந்திய எதிர்ப்பு அறைகூவலும், ஒரு சாதியை நோக்கிய அறைகூவலும் ஒன்றிணைக்கப்பட்டன. ஜே.வி.பி இயக்கத்தின் தலைவர்களில் பலர் குறிப்பிட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகும்.”……… “ ஜே.வி.பி யால் செலவிடப்பட்ட அவ்வளவு தொகைப் பணத்துக்குக்கும் வரவு காட்டப்படுவதுவும் அவசியம். இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தால் மகிழ்ந்திருந்த தென்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சாதி வர்த்தகர்கள் தம்மை மகிழ்வித்ததற்காக பூரண விருப்புடன் ஆயிரக்கணக்கான ரூபாய்க்களை அள்ளிக் கொடுத்தனர்.” (அதே நூல்)

தோழர் சண் குறிப்பிடும் அந்த ஒரு சாதி கரவாஸ் ஆகும். இலங்கையில் நடந்த தோல்வி கண்ட இராணுவப் புரட்சிகளில் கரவாஸ்களின் பங்கு முக்கியமானது. கரவாஸ்களுக்கென தனியான பௌத்த மதபீடமேயுண்டு. இது 200 வருடங்களுக்குமேல் தொடரும் ஒரு நெருடல் முரண்பாடாகும். தேரவாதப் பிரிவைப் பின்பற்றும் ஆதி ‘சங்க’ தான சியாம் நிக்காயாவாகும். சியாம் நிக்காயப் பிரிவு தனது நிறுவனத்துள் மதரீதியான உயர் பதவிகளுக்கு வரும் தகமை கொவிகம சாதியினருக்கு மட்டுமே உண்டு எனும் வழமையைக் கடைப்பிடித்து வந்தது. இதனால் ‘சங்க’-வில் சீர்திருத்தம் கோரி ஆரம்பித்த உள் கிளர்ச்சி 1803-இல் சங்க இரு கூறாகப் பிரிவடைவதில் முடிவடைந்தது. கரவாஸ் சாதியியனரையும் கொவிகம அல்லாத பிறசாதியியனரையும் உள்ளடக்கிய புதிய நிக்காய ஒன்று உருவாக்கப்பட்டது. இது அமரபுர நிக்காய என அழைக்கப்பட்டது. பெரியாரை முன்நிறுத்தி சூத்திரர் தலைமையில், சமூக சீர்திருத்த இயக்கமாக உருவான பார்ப்பனர் அல்லாதோரின் இயக்கம் இதற்குப் பின்னைய வரலாறேயாகும். இருந்தும் சங்கத்துள்ளான சாதிய முரண்பாடுகள் தீர்ந்தபாடில்லை. 1863-இல் சலுகம சாதிப்பிரிவினரை அதிகமானதாகக் கொண்ட ரமண நிக்காய என்ற மற்றோர் நிக்காய உருவாகியது. யாழ்ப்பாணத்தாரின் சாதிய மொழியில் இந்த மூன்று நிக்காயக்களையும் வெள்ளாள நிக்காய(சியாம்), கரையார் நிக்காய(அமரபுர), பஞ்சமர் நிக்காய(ரமண) என அழைக்கலாம்.

எதுவித ஒழிவுமறைவுமின்றி கரவாஸ்கள் தம்மை தனியாக அணிதிரட்டிவருகிறார்கள். ராஜபக்க்ஷ குடுமபத்திற்கும் சரத் பொன்சேகர குடும்பத்திற்கும் இடையேயான முரண்பாட்டிற்கான காரணமும் இதுதான். இருவரும் தென்பகுதியினர் ஆனால் ராஜபக்க்ஷ கொவிகம, சரத் பொன்சேகர கரவாஸ். ஜே.வி.பி யை வளர்த்துவிடுவதில் யூ.என்.பி க்கும் ஒரு பங்களிப்பு உண்டு என்பதை சண் தனது சுயசரிதையில் ஆதாரங்களுடன் கூறியுள்ளார். யூ.என்.பி கரவாஸ்களின் ஆதரவு பெற்ற கட்சியாகும். இப் பங்களிப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கொவிகமபிரிவினரின் ஆதிக்கத்தின் கீழுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஏப்ரல் கிளர்ச்சியை அவ்வளவு கொடூரமாக அடக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அத்துடன் ஏப்ரல் கிளர்ச்சியானது இராணுவத்துள்ளும், யூ.என்.பியினுள்ளும், நிதி உடமையாளர்களிடையேயும் உள்ள கரவாஸ்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெளிப்படையான இராணுவச் சதியென்ற கருத்தும் உண்டு. 60-களின் பிற்பகுதியில் நடந்த இராணுவ சதியில் றோஹன விஜயவீரவுக்கும் பங்குண்டு என்பதும் வெளிப்படை. இலங்கையின் இதுவரையான வரலாற்றில் ஒரு கொவிகம தவிர்ந்த வேறு எவரும் அரசியல் உயர்பதவிக்கு வரமுடியாது என்பதையும் தோழர் சண் தனது சுயசரிதையில் கூறியுள்ளார். பிரேமதாசவின் பதவி ஒரு வரலாற்று விபத்தாகும். பிரேமதாசவின் பதவிக்குப் போட்டியாக இருந்த கொவிகமவான அத்துலத் முதலியின் விபத்தில்லாத மரணத்தின் மூலம் இந்த விபத்து முழுமைபெற்றது. சிங்கள ஆளும் வர்க்க அரசியலின் இயக்க சக்திகளில் கொவிகம- கரவாஸ் முரண்பாடும் ஒன்றாகும்.

தமிழீழத்தின் உள்நாட்டு யுத்தத்தின் இயக்கசக்தியும் இந்த சாதிய முரண்பாடுதான். இது வெள்ளாள ஆதிக்கத்திற்குப் பதிலாக கரையாரின் ஆதிக்கத்திற்காக எதிராக நடைபெற்றதொன்றாகும். நிலைமை இவ்விதமிருக்கக் கூடியதாக சாதியத்தை மிச்சசொச்சம் என்று கூறியது எப்படிச் சரியாகும்? மிச்சசொச்சத்திற்கு இவ்வளவு சக்தியா? இது சாத்தியமா?

இல்லை, இது சாத்தியமில்லை என்பதை, கலாச்சாரப் புரட்சி பற்றிய தோழர் சண்ணின் விளக்கத்திலும், அரை-நிலபிரபுத்துவம் பற்றி தோழர் சண்ணின் தலைமையிலான கட்சியின் விளக்கத்தில் காணக்கூடியதாக உள்ளது.

முதலில் கலாச்சாரப் புரட்சி பற்றிய சண்ணின் விளக்கத்திற்குச் செல்வோம்;

தனது சுயசரிதையில், 1966-இல் சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சி’ பற்றிய விளக்கத்தின் போது, சண் இவ்விதம் கூறுகிறார்.

“தோற்கடிக்கப்பட்ட எந்த வர்க்கமும் அதிகார ஆசனங்களில் இருந்து அது விலக்கப்பட்டதை இலேசாக எடுத்துக் கொள்ளமாட்டாது. மீண்டும் அதிகாரத்துக்குவர அது சதிசெய்து திட்டமிடும். இந்த முயற்சியில் அதன் பிரதான கூட்டணிகளில் ஒன்று பழைய பழக்கவழக்கங்களும் சிந்தனைகளும் மக்களின் மனதினில் உறைந்திருப்பதாகும். மனிதரின் சிந்தனையைப் புனருருவாக்கி பழைய பூர்ஷ்வா கறுப்புச் சித்தாந்தத்தின் மிச்சசொச்சம் அனைத்தையும் துடைத்தொழிக்க பாரதூரமான வெற்றிகரமான முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால் பூர்ஷ்வாவர்க்கம் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் முயற்சியில் ஈடுபட சாதகமான நிலைமைகள் உருவாக்கப்படும்.” பக்கம் 195

‘பழைய’ என்று கூறுவது தூக்கியெறியப்பட்ட வர்க்கங்களின் பழக்கவழக்கங்களும், சிந்தனைகளும் என்று எடுத்துக் கொள்ளலாம். இதன் படி தோழர் சண்ணிற்கு தோற்கடிக்கப்பட்ட வர்க்க சித்தாந்தத்தின் மிச்சசொச்சம்தான் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் பிரச்சனையாக்கப் படுகிறது. இதுபற்றி லெனின் கூறுவதாக அவர் தனது நூலில் கொடுத்துள்ள மேற்கோளை நோக்குவோம்.

“லெனினுடைய வார்த்தைகள் வருமாறு: “தூக்கியெறியப்பட்டபடியால் (ஒரு நாட்டில் என்றாலுங்கூட) பத்து மடங்கு அதிகரித்த எதிர்ப்புடையதும் சர்வதேச மூலதனத்தின் பலம், பூர்ஷ்வா வர்க்கத்தின் சர்வதேசத் தொடர்புகளின் பலம், உறுதி ஆகியவற்றில் மாத்திரமல்லாது பழக்க சக்தி, சிறிய உற்பத்தி அகியனவற்றின் பலத்திலும் தங்கியிருக்கின்றது. துரதிருஷ்டவசமாக சிறிய உற்பத்தி இன்னமும் உலகில் மிகப் பரவலாக இருக்கின்றது. சிறிய உற்பத்தி முதலாளித்துவத்தையும் பூர்ஷ்வா வர்க்கத்தையும் இடைவிடாது தினசரி மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் தன்னிச்சையாக பெருமளவில் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது.”

லெனின் பழக்க சக்தி என்று குறிப்பிடுவதையே தோழர் சண் மிச்சசொச்சம் என்று குறிப்பிடுகிறார். லெனின் கூற்றில் மிச்சசொச்சம் பற்றி எந்த மயக்கமும் இல்லை. தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்கள் தாம மீளவும் ஆட்சிக்கு வருவதற்காக நான்கு வகையான சக்திகளில் தங்கியுள்ளன. ஒன்று, தமது மனோபாவமும், வைராக்கியமும், மற்றையது, தமது சகாக்களின் புற உலகபலம், இவை இரண்டும் மிச்சசொச்சங்களல்ல. அடுத்தது சமுதாயத்தில் காணப்படும் பழக்க சக்தி. இது இன்னமும் தோற்கடிக்கப்படாத ஒரு பண்பாட்டுக் கட்டுமானமாகும். இதுவும் மிச்சசொச்சமல்ல. மற்றையதும், இறுதியானதும்- மணீத்தியாலத்துக்கு மணீத்தியாலம் தன்னிச்டையாக பெருமளவில் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் சிறு உற்பத்தி முதலாளித்துவம். இதுவும் மிச்சசொச்சமல்ல. லெனின் கூறும் எதுவுமே மிச்சசொச்சங்களல்ல. இவை அனைத்துமே அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமானங்களாகும்.

கலாச்சார புரட்சி பற்றி மேலும் பல மேற்கோள்களை முன்வைக்கின்றார். அவற்றில் மற்றொன்று:

“சீன விடுதலைச் சேனைத் தினசரி சுட்டிக்காட்டியதாவது, “ஒவ்வொரு புரட்சியிலும் அடிப்படைப்பிரச்சனை அரசு அதிகாரப்பிரச்சனை என்பதை பாட்டாளிவர்க்கப் புரட்சியின் வரலாற்று அனுபவத்தில் இருந்து நாம் அறியலாம். நாம் நாட்டிலுள்ள எதிரியை வென்றடக்கி துப்பாக்கிமூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினோம். ஏகாதிபத்தியம் சரி, நிலப்பிரபுத்துவம் சரி, அதிகார முதலாளித்துவம் சரி, லட்சாதிபதிகள் சரி, கோடீஸ்வரர்கள் சரி, கோடானுகோடீஸ்வரர்கள் சரி இவர்கள் அனைவரையும் தூக்கியெறிய முடியும். இவர்களுடைய சொத்தைப் பறித்தெடுக்கமுடியும். ஆனால சொத்தைப் பறித்தெடுத்தால் அவர்களுடைய மனங்களில் இருக்கும் சிந்தனையப் பறித்தெடுத்ததாகாது. தினம் தினம், மணிக்கு மணி அதிகாரத்துக்கு வர அவர்கள் கனவு காண்கிறார்கள்; தாம் இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறக் கனவு காண்கிறார்கள். அவர்கள் மக்கள் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரே என்ற போதும் அவர்களுடைய அரசியல் உள்ளார்ந்த சக்தி கணிசமானது. அவர்களுடைய எதிர்ப்புச் சக்தி அவர்களுடைய் எண்ணிக்கையிலும் பார்க்க விகிதாசாரம் கூடியது.

சோஷலிச சமுதாயம் பழைய சமுதாயத்தின் கருப்பையில் இருந்து தோன்றுகின்றது. வர்க்க சமுதாயத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவாகிய தனிநபர் சொத்துடைமைச் சிந்தனையையும், தனிநபர் சொத்துடைமையுடன் தொடர்புடைய சுரண்டும் வர்க்கங்களின் பழக்கசக்தி, சித்தாந்த, கலாச்சார பாதிப்பு ஆகியவற்றையும் இல்லாது செய்வது அவ்வளவு இலகுவானதல்ல. நகரத்திலும் கிராமத்திலும் உள்ள குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் தன்னிச்சையான சக்திகள் புதிய பூர்ஷ்வா வர்க்கப் பிரகுரிதிகளைத் தோற்றுவிக்கின்றன…………” பக்கம் 196-197

சீன விடுதலைச் சேனையும் லெனின் சொன்னதையே தமது சூழலுக்கு ஏற்ப மிக அழகாக எந்தக் குழப்பமும் இன்றிக் கூறுகிறார். லெனின் சுட்டிக்காட்டிய நான்கு சக்திகளில் இரண்டாவதை செஞ்சேனை தவிர்த்துள்ளது. தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களின் அனைத்துலக நண்பர்களை எதிர்கொள்ளத் தயாரான நிலைக்கு தன்னை வளர்த்துவரும் செஞ்சேனை இதுபற்றிச் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. செஞ்சேனையும் முதலாவதாகக் கூறுவது தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களின் கனவுகளையும், உள்ளார்ந்த சகதிகளையுமேயாகும். மூன்றாவதாக நிலவும் பண்பாட்டுக் கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறார்கள். நான்காவதாக இவர்களும் குட்டிபூர்ஷ்வா வர்க்கத்தின் தன்னிச்சையான மீள் உற்பத்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

சுரண்டும் வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்தும், கேந்திரமான பொருளாதார அதிகாரங்களில் இருந்தும் தூக்கிஎறியப்பட்ட பின்னர், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கோலோச்சும் நாடுகளிலேயே இந்த நிலையானால், முதலாளித்துவப் புரட்சி கூட முறையாக நடைபெறாத இலங்கை போன்ற நாடுகளின் நிலை எவ்விதமாக இருக்கும். நிலபிரபுத்துவ வர்க்கம் உட்பட எந்த ஆளும் வர்க்கத்தினதும் அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இன்னமும் தூக்கியெறியப்படவில்லை. நிலபிரபுத்துவ வர்க்கம் உட்பட அவற்றின் சுதந்திரச் செயற்பாடுகள் அச்சுறுத்தலுக்குக்கூட உள்ளாக்கப் படவில்லை. வர்க்கப்போராட்டத்தை முன் எடுத்துச் செல்லவேண்டிய அரசியல் அணியினர் திரிபுவாதம், தொழிற்சங்கவாதம், முதலாளித்துவ அல்லது சிறுமுதலாளித்துவ தேசியவாதம் ஆகிய சேற்றினுள் சிக்கித்தவிக்கும்போது இது சாத்தியப்படுமா என்ன? நிலபிரபுத்துவ கட்டுமானம் இன்னமும் உயிர்த் துடிப்புடன் இருக்கும் இன்றைய நிலையில் நிலபிரபுத்துவ அடக்குமுறைக் கட்டுமானமாகவும், வளங்களினதும், வரப்பிரசாதங்களினதும் அசமத்துவப் பகிர்வை நியாயப்படுத்தும் கட்டுமானமாகவும் இருக்கும் சாதியமும், தீண்டாமையும் எவ்விதம் மிச்சசொச்சமாகிவிடும். லெனின் சிறுமுதலாளித்துவம் பற்றிக் கூறியது போல், சாதியமும், தீண்டாமையும் ‘இடைவிடாது தினசரி மணத்தியாலத்துக்கு மணத்தியாலம் தன்னிச்சையாக பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.’ சிறுமுதலாளித்துவ அணியினர் தமக்குள் நடக்கும் போட்டியில் சாதியத்தையும் தீண்டாமையையும் புதுப்பித்துக் கொண்டேயிருப்பார்கள்.

லெனினும், சீனச் செஞ்சேனையும் பழக்கம் என்றும் பழக்கவழமையென்றும் கூறும் பண்பாட்டுக் கூறுகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவும் நாடுகளின் பண்பாட்டுக் கட்டுமானத்தின் எதிரோட்டங்களேயாகும். அவ்விதம் இருந்தும் அவர்கள் அதை மிச்சசொச்சம் என்று கருதவில்லை. ஆனால் இலங்கை உட்பட்ட தெற்காசிய நாடுகளில் சாதியமும், தீண்டாமையும் அதிக்கம் பெற்று நிலவும் பண்பாட்டுக் கூறுகளின் பிரதான ஓட்டமாக உள்ளன. அவை இன்னும் பழமையாகி விடவில்லை. சாதியத்தையும் தீண்டாமையையும் மிச்சசொச்சம் எனக் கூறுவது நிலபிரபுத்துவத்தின் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும், நிலபிரபுத்துவக் கட்டுமானத்தையும் பாதுகாப்பதாகவே அமையும்.

கட்சி(CCP-M) நிலபிரபுத்துவக் கட்டுமானம் பற்றி இவ்விதம் கூறுகிறது:

“அரை நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள், நவ- காலனியல் உற்பத்தி உறவுகளுடன் அருகருகில் தன்னை நிலை நிறுத்தி வைத்திருக்கவில்லை. அரை-நிலபிரபுத்துவ உற்பத்தி உறவுகள் ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளுள் அழுந்தியும் அதற்குக் கீழ்ப்பட்டுமே தம்மை நிறுத்தி வைத்திருக்கின்றன. ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகள் தம்முள் அழுந்தியுள்ள இவ் உற்பத்தியுறவுகளை மீளுற்பத்தி செய்தும், மீள் சக்திபடுத்தியும், ஊக்கமுடன் செயற்படவைத்தும் வருகின்றன.”……. “பொதுவில் பார்க்கப்போனால் ஒடுக்கப்பட்ட நாடுகளின் உற்பத்தி முறைமையானது (Mode of Production). அரை-நிலபிரபுத்துவமாகவும், அரை-காலனியல்துவமாகவுமே இன்னமும் நிலவுகின்றன. அரை-காலனியல்துவமே இங்கு பிரதானமானதும், சாராம்சமானதுமாகும். இதன் அர்த்தம் உலக ஏகாதிபத்தியத்தினால் திணிக்கப்பட்ட புதிய வடிவிலான பொருளாதார ஆதிக்கத்தாலும், ஊடுருவலினாலும் இந்நாடுகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை இந்நாடுகளின் உற்பத்தி முறைமையிலும், சமூக உருவாக்கத்திலும் ஏற்பட்டுவரும் மாற்றங்களை நிராகரிப்பது என்பதல்ல……… புதிய வடிவிலான இந்த ஊடுருவல் ஒடுக்கப்பட்ட நாடுகளின் வர்க்க மற்றும் மூலதன உருவாக்க இயக்கப் போக்கிலும் அரசியல் போராட்ட வடிவங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தவே செய்கின்றன…. இதனால் பொதுவாகப் பார்த்தால் நிலபிரபுத்துவ நில உடமையாளர்களால் சுரண்டப்படுவதைவிட விவசாயிகள் உலக ஏகாதிபத்தியத்தாலும் அனைத்துலக நிதி மூலதனத்தாலுமே அதிகமாகச் சுரண்டப்படுகிறார்கள். பிரபுத்துவ உற்பத்தி உறவுகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஏகாதிபத்திய உற்பத்தி உறவுகளே விவசாயப் பொருளாதாரத்தின் செயற்பாட்டை தீர்மானிக்கும் தீர்மானமான சக்தியாகத் திகழ்கிறது.”

இலங்கையின் சமூக உருவாக்கம் பற்றிய CCP(M)-இன் மதிப்பீடு நிலபிரத்துவக் கட்டுமானத்தை மிச்ச சொச்சமென்று சொல்லவில்லை. இக்கட்டுமானத்தின் இருத்தலையும், தன்மையையும், அதன் மீழுருவாக்கத் திறனையும், அதன் பாதுகாவலர்களையும் பற்றி மிகத் தெளிவாகக் கூறுகின்றது. பிரபுத்துவக் கட்டுமானம் மிச்சசொச்சம் என்றால் எதற்காக புதிய ஜனநாயகப் புரட்சி? சோஷலிஸப் புரட்சியையே பிரகடனப் படுத்தலாமே.

நிலபிரபுத்துவ நில உரிமைமுறையுடன் எதுவிதத் தொடர்பும் இல்லாமல், முலாளித்துவ நிலஉடமை முறையின் கீழ் ஏகாதிபத்திய அதிகாரத்துவக் கட்டுமானத்தால் நேரடியாகவே சுரண்டப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கூட சாதியம் ஒரு மிச்சசொச்சம் அல்ல என்பதைக் கட்சியின் அறிக்கை மிகத் தெளிவாகக் கூறுகிறது.

“உச்சபச்ச சலூகைகளை அனுபவிப்பவர்களாகவும், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்துகொண்டு மலையகத் தமிழ் மக்கள்மீது எஜமானத்துவம் செலுத்திவரும் ஆளும் வர்க்கத்தை மேலும் வலுப்படுத்துவதே பாரளுமன்ற பிரதிநிதித்துவக் கட்டுமானத்தின் பங்களிப்பாக இருந்து வருகின்றது. தொழிற்சங்க ராஜாக்கள் இந்த ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளார்கள். பெரும் தோட்டத் தொழிலாளர்களை பசியால் வாடும் தெருநாய்களாகக் கருதி எலும்புத் துண்டுகளைத் தூக்கிப்போடும் இவ் ராஜாக்கள், ஆளும் வர்க்கங்களின் சுகபோக நிகழ்வுகளில் பங்கெடுக்கத் தவறுவதில்லை. இந்த நவீன பிரபுத்துவ-காலனிய தந்தைவழி அதிகாரக் கட்டுமானமானது பல்வேறு விதமான தேசிய, வர்க்க, சாதிய மற்றும் பாலிய அடக்குமுறை வடிவங்களை தோற்றுவித்துக் கொண்டும் புதுப்பித்துக் கொண்டுமிருக்கின்றன”……. “ தமிழ்த் தோட்ட சமூக உருவாக்கத்தின் உள்ளடக்கம், தொழிலாளர்கள் மீது மிக இறுக்கமான மரபுவழி-பிரபுத்துவத் தந்தைவழிக் கட்டுமானத்தைத் திணிப்பதாகவே அமைந்துள்ளது. மலையகத் தமிழர்கள், தேசிய ஒடுக்குறை வர்க்கச் சுரண்டல் ஆகியவற்றுடன் சேர்த்து அதிகார அடுக்குகளால் பிரயோகிக்கப்படும், மிகத் தொன்மைக்கால சாதிய, பாலிய பிரபுத்துவ வடிவங்களைக் கொண்ட முறைப்படுத்தப் பட்ட மனித உரிமை மீறல்களையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.”

எவ்வளவு தெழிவான கணிப்பீடு. தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தாம் வாழ்ந்துவந்த நிலபிரபுத்துவக் கட்டுமானங்களில் இருந்து வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எடுக்கப்பட்டவர்களாகும். அதன் அவ் உற்பத்தி உறவுகளின் மிச்ச சொச்சத்தைக் கூட காணும் வாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, முதலாளித்துவக் கட்டுமானத்துள் திடீர் எனத் திணிக்கப்பட்டவர்கள். முதலாளித்துவ கட்டுமானத்துள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருந்தாலுங்கூட முன்னைய பிரபுத்துவ பண்பாட்டுக் கட்டுமானத்தை தமக்குள்ளான உறவுகளில் பேணி வருகிறார்கள். அவர்கள் புதிதாக அறிமுகமாகியிருந்த முதலாளித்துவக் பொருளாதரக் கட்டுமானத்துக்கு அவை புதியவைதான், ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவை புதியனவுமல்ல பழையனவுமல்ல. அது அவர்களின் வழமை. முக்காலத்துக்கும் உரியவையாக அவர்களால் கருதப்படுபவை.

எந்தப் பொருளாதார வேரும் இன்றி தனிமனித மனங்களிலும் மலையக சமூக மனங்களிலும் மட்டும் வாழும் இந்த

பிரபுத்துவ பண்பாட்டுக் கட்டுமானத்தை முதலாளித்துவம் அழித்ததா. இல்லை. அதை வளர்த்தது. அதை தனது அதிகாரக் கட்டுமானத்துடன் இணைத்துக் கொண்டது. முதலாளித்துவ அடிக்கட்டுமானத்தில் நிலபிரபுத்துவ மேற்கட்டுமானம் வளர்க்கப்பட்டது. புத்துயிர் ஊட்டப்பட்டது, புனரமைக்கப்பட்டது, தகவமைக்கப்படது. சாதியம் மிச்சசொச்சம் அல்ல என்ற நிலைமையை மலையகத்தில் ஏற்படுத்துவதில் காலனிய முதலாளித்துவம் வெற்றிபெற்றுவிட்டது. செம்மை மா-லெனினிஸ்டுகள்(Classical) இதனை நம்பமாட்டார்கள், அல்லது இது ஒரு வரலாற்று விபத்து எனக் கூறி இதன் காரண காரியத் தொடர்பை மறுப்பார்கள். ஆனால் இது நடக்கின்ற உண்மை.

இ.க.க.(மாஓ)-யின் இக்கருத்துக்கள்தான் தோழர் சண்ணின் இன்றைய கருத்துக்கள் என நாம் நம்பலாம். சில வேளை இக்கருத்துகளுக்கு அவரே காரணமாகவும் அமையலாம். இதன் மூலம் கடந்தகாலச் செயற்பாடுகளை ஆராய்வதற்க்கானதோர் சித்தாந்த ஆயுதத்தை தந்துள்ளார் என்றும் கூறலாம். ஆகவே அவரின் முன்னைய தவறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டுவது அவர் மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக அல்ல. தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் இடையில் தொலைந்து போனமைக்கான காரணம் இத் தவறான அணுகு முறையேயாகும் என்பதைச் சுட்டிக்காட்டவேயாகும்.

அத்துடன், வடபகுதியில் தீண்டாமை இன்னமும் ஒழியவில்லை. சாதிய அடக்குமுறையும் , ஓரங்கட்டப்படலும். முன்பைவிட உயர்வான முறையில் தீண்டாமையும், விழிம்புநிலையாக்கப்படலும் இன்னமும் தொடர்கிறது. புதிய வடிவத்தில் புதுப்பிறப்பெடுத்துத் தொடர்கிறது, ஆகவே இதற்கெதிரான போராட்டத்தின் அவசியம் இன்னமும் உள்ளது. முன்பைவிட அதிகமாக உள்ளது. அகவே பஞ்சமர்களை தமிழ்த் தேசியப் போராட்டத்தின் பிரதான செயற்படுகளமாக மாற்றுவதற்கான சந்தர்ப்பம் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை. புதிய ஜனநாயகக் கோட்பாட்டாளர்கள், தமிழ் தேசியப் போராட்டத்தை, தமது தலைமையின் கீழ் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கு இனியும் எதற்காகத் தாமதிக்கவேண்டும். களம் உண்டு, படையுண்டு, தளபதிகளை மட்டும் காணோம். மிச்சசொச்சம் பற்றிய அலசலுக்கான காரணம் தளபதிகளைத் தேடும் இந்த ஆதங்கந்தான், வேறு எதுமில்லை.

ஆ.6) பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகர நிலைப்பாடு.

இலங்கையின் முதல் தலைமுறை இடதுசாரிகளும், தேசியவாதிகளும், இலங்கை அரசியலில் பௌத்த மதபீடங்களின் ஆதிக்கம் பற்றி எதுவுமே பேசுவதில்லை. அப்படிப் பேசினாலும் சில பௌத்த குருமார்களின் அல்லது சில ‘பிறிவினா’-க்களின் ஒழுங்குமீறிய நடவடிக்கைகளாகவே இவற்றைப் பார்க்கிறார்கள். இது ‘சங்க’-வின் பொதுக்குணாம்சம் என்பதை எவருமே ஒத்துக்கொள்வதில்லை. சண்தலைமையிலான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், அக்கட்சியை விட்டுப் பிரிந்த குழுக்களும் இதே நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். இவ்விதம் இருக்க சண் தனது சுயசரிதையில் இதற்கு நேர் எதிரான ஒரு நிலைப்பாட்டை முன்வைத்துள்ளதன் மூலம் இலங்கைப் புரட்சிக்கு ஒரு புதிய வழிகாட்டலை சுட்டிக் காட்டியுள்ளார். இதோ அவரின் கூற்றை அவதானிப்போம்:

“ஆகவே இலங்கையில் புத்தமதச் சங்கம் அநேகமாக எதிர்மறைப் பாத்திரத்தையே வகித்திருக்கிறது. சிங்களவர்கள் அதாவது புத்தமதத்தவர்கள் சங்கவின் ஆதிக்கம்- அடிமைத்தனத்தில் இருந்து விடுபடாமல் இருந்தால் எதிர்காலம் இருண்டதாக இருக்கும்…………… மதத்தை அரசியலில் இருந்து பிரிக்காவிட்டால் இலங்கைக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது.” பக்கம்- 285

இங்கு அடிமைத்தனம் எனக் குறிப்பிடுவது மாக்ஸிய நிலைப்பாடாகும். பௌத்த மதச் சங்கங்கள் சிங்கள மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்பதை மட்டுமல்ல சிங்கள மக்கள் அவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதையும் கூறுகிறார். அத்துடன் நிற்கவில்லை. அனால் கம்யூனிஸ்ட் கட்சியிடம் சங்கவின் அடிமைப்படுத்தலுக்கு எதிராக எந்த வேலைத்திட்டமும் இருக்கவில்லை. தற்போதும் இருப்பதாகத் தெரியவில்லை. 2008-ஆம் ஆண்டு கொள்கைப் பிரகடன அறிக்கையில் இதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு ‘சொல்லொன்றும் செயல் வேறொன்றுமாக’ இல்லை. ஆனால் ‘சொல்வதுடன் சரி’ என்ற நிலையே காணப்படுகின்றது.

‘சங்க’-வின் அதிகாரத்தைப் பறிப்பதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கான எந்தத் தனியான வேலைத்திட்டமும் தேவையில்லை, புதிய ஜனநாயகப் புரட்சியின் போது அது தானாகவே நிறைவேறும் எனறோ அல்லது புதிய ஜனநாயகப் புரட்சியின் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்றோ கருதுவது தவறானது. பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் வர்க்க அடிப்படையிலான அரசியல் அதிகார மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற நிலையில் பல நாடுகள் இருந்துள்ளமையையும் தற்போதும் இருந்துவருவதையும் நாம் காண்கிறோம். இலங்கையில் சிங்கள மக்களின் நிலையும் இவ்விதமானதே. சிங்கள மக்களின் பண்பாட்டுக் கட்டுமானத்தில் ஒரு அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தாமல் சிங்கள மக்களிடையே புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்த முடியாது. சிங்களத் தேசிய இனம் தொடர்ந்தும் தேசிய ஒடுக்குமுறைக் குணாம்சம் கொண்ட இனவாதத் தேசிய இனமாகவே இருக்கும். ஆசியாவின் யூதர்களாக அவர்கள் இருப்பார்கள். தெற்காசியாவின் ஒரு இஸ்ரேலாக இருக்கும். நேட்டோவின் இஸ்ரேலா, பிறிக்கின் இஸ்ரேலா என்பது இன்னமும் நிச்சயமாகவில்லை. ஆகவே, முழு இலங்கைக்குமான புதிய ஜனநாயகப் புரட்சியையோ அல்லது சோஷலிஸப் புரட்சியையோ முன்வைக்கும் தமிழர்களோ அல்லது சிங்களவர்களோ எவராயினும் சரி, அவர்கள் புரட்சியாளர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது ‘சங்க’-வின் அடிமைத்தளைகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்கொண்டு செல்கிறார்களா இல்லையா எனபதுதான்.

ஆனால், ‘இலங்கைக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது’ எனும் நிலையை உருவாக்கியதும், அந்நிலையைப் பாதுகாத்து வருவதுவும் பௌத்தம் மட்டுந்தானா? பார்பனிய மதங்களினதும்(சைவம், இந்து, வைணவம்), இஸ்ரேலிய மதங்களினதும்(கிறிஸ்துவம், இஸ்லாம்) சித்தாந்தம் நேர்மறை சீர்திருத்த அம்சங்கள் கொண்டனவா? இல்லை. இலங்கையின் இன்றைய அரசியலில் பௌத்தம் போல் அவை நேரடியான அரசியல் பங்கு வகிக்காவிட்டாலும் அவை தீய பங்கு வகித்துள்ளன. தற்போதும் வகித்து வருகின்றன. ஆகவே கம்யூனிஸ்டுகளுக்கு மதம் பற்றிய ஒரு ஸ்துலமான கண்ணோட்டமும் வேலைத்திட்டமும் இருக்கவேண்டும். கறிக்குதவாத சில ஏட்டுச் சுரைக்காய்களை மட்டும் வைத்திருப்பதால் பயனில்லை.

தோழர் சண்- உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இரண்டாம் பாகம்-
தோழர் சண்- உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண்(1)
Exit mobile version