தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா நேற்று 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக முத்து, தோழர் விக்கும் , மாசிலாபாலன், நாவலன், ராமமூர்த்தி, ராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்”என்னும் நூல் அறிமுக கூட்டத்தில் தோழர் முத்து (சிறீ) அவர்களால் படிக்கப்பட்ட தோழர் கைமண் அவர்களின் முழு அறிக்கை.
இங்கு இனியொருவின் பொதுவான அரசியல் கருத்துக்களோடு உடன்படும் முரண்படும் கருத்துக்கள் காணப்படினும், விவாத நோக்கில் முழுமையான கருத்தும் பதியப்படுகின்றது. இணைய வாசகர்களுக்காக கட்டுரை பகுதிகளாகப் பதியப்படுகிறது. அதன் இரண்டாம்பகுதி கீழே:
-மிக ஆழமான ஆய்வான கைமண்ணின் கட்டுரையின் முதாலம் பாகத்தோடு இணைத்துப் படித்தல் இரண்டாம் பாகத்தைப் புரிந்துகொள்ள அவசியமானது-
இவ்விரு மேற்கோள்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, மூன்று விடயங்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன. அவையாவன:
1.உலகப் புரட்சி தொடர்பான அனைத்துலகக் கோட்பாடு.
2.அனைத்துலகவியலுக்கும் தேசியவியலுக்குமான தொடர்புகள்.
3.தோழர் சண் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்பதுபற்றி.
1.உலகப் புரட்சி தொடர்பான அனைத்துலகக் கோட்பாடு.
இதனால் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல் கண்ணோட்டம் உள்ளவர்களால்தான் கம்யூனிஸப் புரட்சியின் அனைத்துலகக் கோட்பாடு தொடர்பாகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கமுடியும். இவ் அனைத்துலகக் கோட்பாடுதான் அவர்களின் உள் அரங்கு நடவடிக்கைகளையும் வழிநடத்துவதாகவும் இருக்கவேண்டும்.
1.தோழர் சண் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை என்பதுபற்றி.
அறிக்கை முழுமையையும் படித்துப் பார்த்தும் இந்த வாக்கியத்தின் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இக் கூற்றை இரு விதமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய 1930களின் பிற்பகுதியில் இருந்து கூறப்படுவதாக இருக்கலாம். அல்லது கட்சியின் 9-வது மகாநாடுதான்(1969) கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தது, அதற்கு முன்னர் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ இயக்கமும் கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டவைகள் அல்ல என்று கூறுவதாகவும் இருக்கலாம். முதலாவது அர்த்தத்திலேயே இக்கூற்று முன்வைக்கப்பட்டதுபோல் தெரிகிறது. எவ்விதம் கூறினாலும் இக்கூற்றுத் தவறானதே. இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இரண்டாவது தலைமுறையினரின் தந்தை என்று கூறினால் அதுகவனத்தில் எடுத்துக் கொள்ளப்படக் கூடிய எடுத்துக் கொள்ளப்படவேண்டிய ஒரு அறிவியல் கூற்றாக அமையும். இல்லையேல் இது ஒரு அறிவியல் கூற்றல்ல.
1.அனைத்துலகவியலும்-தேசியவியலும்
இதை நாம் மூன்று தலைப்புகளில் அவதானிக்கலாம். அவையாவன:
1.உலகளாவிய பொதுப்பார்வையும்- தேசியப்பார்வையும்
2.அனைத்துலகவியலும் சோஷலிஸ தாய்நாட்டியலும்
3.1)உலகளாவிய பொதுப்பார்வையும்- தேசியப்பார்வையும்
உலகளாவிய பொதுப்பார்வை என்பது;
அ) உலக நாடுகளிடையேயான முரண்பாடுகளை உலகளாவிய தனியொரு சமூக நிகழ்வுப்போக்காக அல்லது தனி அலகாக எடுத்துக்கொண்டு, அம் முரண்பாடுகளை கம்யூனிஸ உலகப் புரட்சிக்குச் சாதகமாக கையாள்வது எவ்விதம் என்பது தொடர்பான அரசியல் பார்வையாகும். இது பிரதானமாக அரசியல் தளத்திலானது.
ஆ) மனித சமுதாயத்தைப் பொதுவாக எடுத்துக் கொண்டு மனித சமூக இயக்கவிதிகளைப்பற்றி வகுத்துக் கொள்ளும் பொதுப்பார்வையாகும். இப்பார்வை அரசியல், தத்துவம், பண்பாடு, பொருளாதாரம் இத்தியாதி அனைத்தையும் உள்ளடக்கியதாகும். ஆனால் தத்துவவியலே இதில் முதன்மை பெறுகிறது. இது பிரதானமாக தத்துவத் தளத்திலானது.
இ) உலக நாடுகளை அவற்றின் அரசிய-பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் வெவ்வேறு கொத்தணிகளாகப் பிரித்து, ஒவ்வொரு கொத்தணிகளுக்குமென தனித் தனி பொதுவிதிகளையும் மார்க்கங்களையும் வகுத்துக் கொள்ளல். இது உண்மையிலேயே உலகளாவிய பொதுப்பார்வையல்ல. இது பிராந்தியப் பார்வையே. ஆனால் உலகளாவிய பொதுப்பார்வைக்கு உட்பட்ட, உலகளாவிய அளவிலான கம்யூனிஸப் புரட்சியுடன் ஒத்துப்போகக்கூடிய பிராந்தியப் பார்வையாகும். இது பெருமளவிற்கு அரசிய-பொருளாதாரத் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் ஆனது.
தேசியப் பார்வை என்பது: ஒவ்வொரு தேசங்களையும் அல்லது நாடுகளையும் தனிதனித் அலகுகளாக எடுத்துக்கொண்டு அவ் ஒவ்வொரு அலகுகளிலும் கம்யூனிஸப்புரட்சியை எவ்விதம் நடத்துவது என்பது தொடர்பான விதிகளின் தொகுப்பாகும். இது முன்கூறிய உலகளாவிய பொதுப்பார்வையின் மூன்று பகுதிக்கும் உட்பட்டது. அம்மூன்றுடனும் பொருந்திப் போகக்கூடிய முறையில்தான் இத் தொகுப்பு அமையும். தேசியப்பார்வையின் தனித்துவம் என்பது இம்மூன்றில் இருந்தும் சுதந்திரமானது என்பதல்ல. இம்மூன்றின் துணையுடன், இம்மூன்றுக்கும் இணக்கமாகத் தனது தேசத்துக்கோ அல்லது நாட்டுக்கோ பொருந்தக்கூடிய முறையில், அத்தேசக் கம்யூனிஸ்டுகளின் சொந்த உள்நாட்டு ஆக்கமே இத் தேசியப் பார்வையாகும். தோழர் சண்ணிடம் இவ் உள்நாட்டு ஆக்கத்திறன் மிகப் பலவீனமானதாகவே இருந்தது.
2.அனைத்துலகவியலும் சோஷலிஸ தாய்நாட்டியலும்
கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுகளும் தேசியப் பார்வை இல்லாதவர்களல்ல. அவை தேசியப்பார்வை இல்லாதவர்களாக இருக்கவும் கூடாது இருக்கவும் முடியாது. அவர்களது தேசியப் பார்வை தத்தமது அகநிலைக்குப் பொருத்தமானதாகவும், பிற சோஷலிஸம் அல்லாத நாடுகளுடனான உறவுகளில் அவ்வுறவு பாட்டாளிவர்க்க அனைத்துலக வியலுக்குப் பொருத்தப்பாடு மிக்கதாகவும் இருக்கவேண்டும். அது மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கம்யூனிஸ்ட கட்சிகளும், நாடுகளுக்கிடையேயான உறவுகளில் முதலாளித்துவ வழமையைக் கணக்கில் எடுக்காது தமக்கிடையே பரஸ்பர உறவுகளை தத்தமது இருத்தலுக்கு பாதிப்பில்லாத முறையில் பேணிவர வேண்டும். ஆனால் இவ்விதம் நடைபெறுகிறதா என்பதே இங்குள்ள கேள்வி. புரட்சிகர அனைத்துலக இயக்கத்தில் உறுப்பினராக உள்ள சில கட்சிகளைத் தவிர வேறு எந்தக் கட்சியும் அவ்விதம் நடந்து கொள்வதில்லை.
இரண்டாம் உலகயுத்தத்தின் பின்பான சோவியத் யூனியனும், கலாச்சாரப் புரட்சியின் பின்பான சீனாவும் கம்யூனிஸ உலகப்புரட்சி என்ற கண்ணோட்டத்தை கைவிட்டு, தத்தமது தேசிய நலனையே முன்நிலைப்படுத்தி வருகின்றன. முதலாளித்துவ நாடுகளுடனான நல்லுறவே அவர்களின் தேசிய நலனாக உள்ளது. பாட்டாளிவர்க்க அனைத்துலக நலனைக் கைகழுவி விட்டதே இவ்விரு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் செய்த மாபெரும் தவறாகும். உலக கம்யூனிஸ இயக்கத்தில் உள்ள பிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் மிகப் பெரும்பானமையானவை இவ்விரு பெரும் கட்சிகளின் துதிபாடிகளாக மாறின. துதிபாடிய கட்சிகள் தத்தமது நாடுகளின் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அலங்காரப் பொம்மைகளாக மாறின. சில கட்சிகள் சீரழிந்தன. இவ்விதம் துதிபாடிய கட்சிகள் அனைத்தும் பெரிய சோஷலிஸ நாடுகளை சோஷலிஸத் தாய்நாடு எனக் கருதத் தொடங்கின. இத் தாய்நாடுகளின் தேசிய நலனுக்குப் பணிபுரிவதையே அனைத்துலகப் பாட்டாளிவர்க்கத்துவ்க்கான சேவை எனக் கருதின. சோஷலிஸ தாய் நாடுகளும் இக்கருத்தை ஊக்குவித்தன. சோஷலிஸ எஜமான்களிடமிருந்தும், அவ் எஜமானர்களின் தரகர்களிடம் இருந்தும் (அனைத்துவகைத் திரிபுவாதிகள்) உலக கம்யூனிஸ இயக்கத்தை மீட்டெடுப்பதுதான் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலர்களின் இன்றைய கடமையாகும். இக்கடமையை உள்நாட்டரங்கிலும், அனைத்துலக அரங்கிலும் முன்னெடுத்துச் செல்வதில் தோழர் சண் நல்லதோர் பங்காற்றியுள்ளார்.
அ.3) பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.
■இந்திய கம்யூனிஸ்டுகள் புரட்சிகரப் பாதைக்குத் திரும்பத் துணைபுரிந்தமை.
தோழரின் நினைவுகளை குறிப்பிடுவது அவசியமானது. தோழர் சண்ணின் அனைத்துலக பங்களிப்புப் பற்றி எம்.என்.ராவுணி எனும் மலையாளத்
“1962-இல் நடைபெற்ற இந்திய-சீன யுத்தத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை கடைகெட்ட வகை இந்திய தேசிய பேரகங்காரவாதத்துள் மூழ்கியிருந்தது. அப்போது அவர்(தோழர் சண்) இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ‘தொழிலாளி’யில் யுத்தத்திற்கான காரணம் ஏகாதிபத்தியவாதிகள்தான் என்பதையும் இந்திய தரகு முதலாளித்துவ அரசு ஏகாதிபத்தியவாதிகளின் இஸ்டப்படி செயற்படுகிறார்கள் என்பதையும் தெளிவு படுத்தி பல தொடர்கட்டுரைகள் எழுதிவந்தார்……
இந்திய-சீன உறவுகள் முடிவடைந்த பின்னர், குருஷேவிற்கு எதிரான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களைப் பெறுவது எமக்குச் சிரமமானதாக இருந்தது…..தோழர் சண்முகதாசன் எமக்கு உதவ முன்வந்தார். அவ் இலக்கியங்களை நாம் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். ‘டொகிலியாட்டி பற்றி’ (இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்), ‘டொக்கிலியாட்டி பற்றி மேலும்’ எனும் நூல்கள் உட்பட பல நூல்களை இலங்கையில் அச்சாக்கி ஏராளமான பிரதிகள் எமக்கு அனுப்பிவந்தார்……………. 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாக்ஸிஸ்ட்) உருவானது. ஆனால் தலைமை மிக விரைவிலேயே தனது திரிபுவாதக் குணாம்சத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. சகோதரக் கட்சிகளுக்கு இடையேயான உறவுகள் தொடர்பான ஒழுங்குகளை மீறாத முறையில், அவர்(தோழர் சண்) தலைவர்களின் போக்கைத் தொடர்சியாக விமர்சித்துவந்தார். இக்கட்சியின் 7வது காங்கிரஸ், ‘திரிபுவாதம் பற்றி’ எனும் ஒரு அறிக்கையை கட்சியின் தீர்மானமாக முன்மொழிந்தது. இவ் அறிக்கையில் உள்ளடங்கியிருந்த திரிபுவாதத் தவறுகளை காலதாமதமின்றி நீண்ட அறிக்கைமூலம் எதிர்கொண்டார். கட்சியின் தலைமை இவரின் அறிக்கையை நிராகரித்தது. ஆனால் கட்சியினுள் இருந்த கம்யூனிஸ்டுகள் கட்சியின் தலைமையுடன் போராடுவதற்கும், தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்குமான திசைவழியைக் சுட்டிக்காண்பிப்பதில் இவ் அறிக்கை பெரும் துணைபுரிந்தது.
“………. இந்தியப் புரட்சிக்குத் தலைமைதாங்கக்கூடிய வலு மா-சே-துங் சிந்தனைக்கு மாத்திரமே உண்டு” எனும் தலைப்பில் ‘லிபரேசன்’ இதழில் இவர் எழுதிய கட்டுரை மிகவும் பிரபல்யமானது. (Theoretical Organ of the All-Indian Co-ordination Committee of Revolutionaries) இக் கமிட்டியின் நான்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக இக்கட்டுரை பேணப்பட்டுவந்தது. இதன் மலையாள மொழிபெயர்ப்பு கேரளாவில் மாத்திரம் பல ஆயிரக்கணக்கான பிரதிகள் பல பதிப்புகளாக வெளிவந்தன. அதே நேரம் இக் கமிட்டியின் ஒருமுனைவாதத் தவறுகள் எனத் தான் கருதியவற்றை அடிக்கடி சுட்டிக்காட்டவும் இவர் தயங்கவில்லை.
■பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியை ஆதரித்து உள்அரங்கிலும், அனைத்துலகரங்கிலும் தத்துவார்த்தப் பிரச்சாரம் செய்தமை. மாநாடுகளில் கலந்துகொண்டமை. கட்டுரைகள் எழுதியமை. இவரின் இரு கட்டுரைகள் பீக்கிங் ரிவீயூ இதழிலும் வெளியாகின. இந்தோனேசியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றிய ஒரு கட்டுரையும் வெளியாகியது. இந் நடவடிக்கைகளின் மூலம் பாட்டாளிவர்க்கக் கலாச்சாரப் புரட்சியை ஏற்றுக்கொண்டவர்களிடையே தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டமை.
■மாஓ சிந்தனையை நிராகரிக்கும் கொள்கையுடன் கூடிய அனைத்துலக புரட்சிகர இயக்கத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியை உலக அரங்கில் முறியடித்தமை.
■மாஓ சிந்தனையை ஏற்றுக் கொண்ட அனைத்துலக புரட்சிகர இயக்கத்தின் (RIM)அமைப்பாளர்களில் ஒருவராகச் செயற்பட்டமை.
■இவ் அமைப்பால் வெளியிடப்படும் விழிப்புணர்வு ஏடான WIN இதழின் பத்திரியகையாளர் சந்திப்பிற்கு RIM சார்பில் தலைமை தாங்கியது. இவரின் நினைவுநாளைக் கொண்டாடும் விதமாக இவ்விதழ் நினைவுக் கட்டுரை ஒன்று வெளியிட்டிருந்தது.
■தெற்காசிய புரட்சி இயக்கங்களின் ஒன்றிணைப்புக் கமிட்டி ஒன்றின் அமைப்புக்கான அத்திவாரம் இட்டது. இக் கமிட்டி தற்போது அமைக்கப்பட்டுவிட்டது
ஆ.1.ஆ) இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.
இலங்கையின் இடதுசாரிகள் அமைப்பாகச் செயல்படும் விடயத்தில் மிகவும் பலவீனர்களாகவே உள்ளோம். இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் இரு பிரிவுகளான ட்ரொக்ஸிஸப் பிரிவும், மாஓயிஸ்ட் பிரிவும் அவை தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை குழுக்களாக தொடர்ந்தும் பிரிவுண்டு செல்வதையும், முக்கிய தோழர்கள் விலகுவதும் அல்லது விலத்தப்படுவதையுமே தமது வழமையாகக் கொண்டுள்ளன. கட்சிக்குள் நடக்கும் வர்க்கபோராட்டங்கள் இவ்விதம் தான் முடிவுறும் என்கிறோம். ஆனால் தேசியக் குழுக்கள் இவ்விதம் பிளவுண்டு கிடப்பது கண்டு, சிறு முதலாளித்துவவாதிகளால் ஐக்கியப்பட முடியாது எனக் கிண்டல் அடிக்கிறோம். எம்மை அளக்க தாராளவாதமும், பிறரை அளக்க மாக்ஸிஸமும்தான் எமது பண்பாக உள்ளது.
பிரிந்து செல்லும் ஒவ்வொரு குழுக்களும் தம்மைக் கட்சிகள் என்றே அழைத்துக் கொள்கின்றன. ஆனால் இவற்றில் எதுவுமே கட்சிகளல்ல. கட்சியென்பது தமக்குத் தாம வழங்கிக் கொள்ளும் பதக்கமும் அல்ல, பிறர் அவர்களுக்கு வழங்கும் பதக்கமும் அல்ல. கட்சி என்பது மக்கள் திரளின் (அமைப்புரீதியாக அணிதிரண்டுள்ள மக்கள்) அரசியல் தலைவர்களின் ஒன்றிணைவாகும். அதிலும் கம்யூனிஸ்ட் கட்சியென்பது பல்வேறுபட்ட வர்க்கங்களினதும், வர்க்கத் தட்டுகளினதும் இயங்குநிலைக் கூட்டுத் தொகுப்பாக அமைந்த மக்கள் திரளின் அரசியல் தளபதிகளின் கூட்டமைப்பாகும். ஒவ்வொரு தளபதிகளும் மக்கள் திரளின் வெவ்வேறு தொகுப்புகளுக்கு தலைமை தாங்குபவர்களாகும். இத்தலைமையும் கூட தனிநபர் பொறுப்பும் கூட்டு முடிவும் என்ற முறையில் அமைந்ததாகும். ஆனால் 1971-இல் இருந்து தோன்றத் தொடங்கிய ஒவ்வொரு ‘கட்சி’களும் படையில்லாத் தளபதிகளின் கூட்டாகவே உள்ளன. இக் கூட்டும் சிறு பேதங்கள் வந்தாலும் உடைந்துவிடும் தன்மை பெற்றதாகவெ உள்ளன. தனிநபர் பொறுப்புகள் இல்லாத தனிநபர்களின் கூட்டு இவ்விதமானதாகதான் இருக்கும். ஆகவே இடது ‘கட்சி’களின் அமைப்பு உருவாக்க வரலாறு என்பது எதிர்மறை வரலாறேயாகும். இதற்கான பழியை தோழர் சண்மீது சுமத்துவதே பொதுவான வழமையாக இருந்தது. அதுபற்றி சற்று அவதானிப்போம்.
1978-இல் கட்சியைவிட்டு விலகிச்சென்று இ.க.க.(இடது) எனும் பெயரில் இயங்கத் தொடங்கிய அணியின் கருத்தை நோக்குவோம்:
“….. அவற்றை(அனைத்துலக கோட்பாடுகளை) இலங்கையின் யதார்த்த நிலைமைக்கு பொருந்தும் வகையில் எவ்விதம் பயன்படுத்துவது என்பதில் சரியான தலைமைத்துவத்தை அவரினால் வழங்க முடியாத நிலைக்கு உள்ளாக வேண்டி ஏற்பட்டது. நடைமுறைபற்றிய கேள்விகள் மீண்டும்மீண்டும் முன்வைக்கப்பட்டபோது சண்முகதாசன் தத்துவங்களுக்குள் மட்டுமே தலைபுதைந்து நின்றாரேதவிர அவற்றின் நடைமுறைக்கு உகந்த வழிமுறைகளை முன்வைக்கமுடியாத கையறுநிலைக்குத் தள்ளப்பட்டார். சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலை உருவாகியது. இதனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது தலைமையை நிராகரித்து பல்வேறு குழுக்களாகவும், தனிநபர்களாகவும் பெரும்பாலானவர்கள் வெளியேறிச்செல்ல நேரிட்டது……..பிற்காலத்தில் எதனையும் எதிர்த்துக் கேள்விகேட்டால் அத்தைகையவர்கள் கட்சியைவிட்டுப் போய்விடவேண்டும் என்ற கூறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இதனால் அவரது தலைமையிலான கட்சி ஒரு ஜனநாயக மத்தியத்துவம் அற்ற கட்சியாகவும், தனிநபர் வழிபாடு மிக்க ஒரு சிலரை மாத்திரம் கொண்ட கட்சியாகவும் இருப்பதில் திருப்தி காணும் நிலைக்குச் செல்லவேண்டியிருந்தது.” (கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தோழர் சண்முகதாசன்-விமர்சன கண்ணோட்டம்-வெகுஜனன், இமயவரம்பன் பக்கம்10)
“அதே வேளை, சண்முகதாசனுடைய தலைமையின் தவறுகளும் நண்பர்களைப் பகைவர்களாக்கி ஐக்கியப்படவேண்டியவர்களிடம் இருந்து கட்சியைத் தனிமைப்படுத்தின. அவர் செய்த ஸ்தாபனரீதியான தவறுகளையோ அவரது தனிப்பட்ட குறைபாடுகளையோ விட அவரது அகச்சார்பான அரசியல் மதிப்பீடுகளின் பாதிப்புகள் பாரியவை.” (அதே நூல் பக்கம் 22)
“(மாக்ஸிஸ லெனினிஸக்) கம்யூனிஸ்ட் கட்சியில் சண்முகதாசனை ஒத்த அரசியல் ஞானமும் திறனும் ஆய்வுத்திறனும் கொண்டவர்கள் இருந்தாலும் பிளவுண்ட கட்சியைத் தலைமைதாங்கி நடத்திச்செல்லும் ஆற்றலில் அவர் அனைவரையும் மிஞ்சியே நின்றார். இதன் பாதகமான விளைவு சண்முகதாசனின் மிகை முக்கியத்துவம் என்றே எண்ணுகிறேன். சண்முகதாசனின் கொள்கைப்பிடிப்புக்கும் உறுதிக்கும் அடிப்படையாக இருந்த அவரது பிடிவாதப் போக்கு, கட்சிக்குள் தன்னுடன் முரண்பட்டோரை எதிரிகளாகவே காணும் போக்குக்கும் காரணமாயிற்று.” முன்னைய நூல் பக்கம்20
அவர் அனைவரையும் மிஞ்சிநின்றதற்கான முதன்மைக் காரணம் அவரின் ஞானமோ, திறனோ அல்ல. அது இரண்டாம் பட்சமானது. கட்சியின் ஒரே மக்கள் அமைப்பான தொழிற்சங்கம் அவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததுவும், கட்சியின் சார்பிலும் தொழிற்சங்கத்தின் சார்பிலும் உருவாக்கப்பட்ட அந்நியத் தொடர்புகள் அனைத்தும் அவரின் ஊடானதாக இருந்ததுவும், இவை இரண்டுந்தான் கட்சியின் பிரதான பணவரவு மார்க்கமாக இருந்துவந்ததுவுந்தான் இதற்கான முதன்மைக் காரணமாகும். திரிபுவாதத் தலைவர் பாரளுமன்றத்துள் செல்வதைத் தடுத்து அந்த இடத்தை புரட்சித் தலைவரான தன்னைக்கொண்டு நிரப்புவதற்காக பீட்டர் கெனமனின் தேர்தல் தொகுதியான கொழும்பு மத்தியதொகுதியில் 1965 தேர்தலில் சண் நின்றதற்கான காரணம் இதுதான். அவரின் ஆசைக்கு மத்தியகமிட்டி தலையாட்டியது. ஆனால் கொழும்பு மக்கள், அதிலும் குறிப்பாக தொழிலாளர்கள் தலையாட்டவில்லை. விழுந்த வாக்குகள் மிகக் குறைவானவை. 2விழுக்காடு. அதேபோல் மத்திய கமிட்டி தலையாட்டினாலும், இதனால் மத்திய கமிட்டிக்குள் முரண்பாடுகள் முளைவிட ஆரம்பித்தன. தோல்வி கண்ட சண், எட்டாப்பழம் புளிக்கும் என்ற நரியின் நிலைப்பாட்டை எடுத்து பாராளுமண்றத்துக்கு எதிராக மேலும் மேலும் முழங்கத் தொடங்கினார். ஆனால், சண்ணுக்கு துணைபுரிந்துவந்த வலதுசாரி அணியினர், முணங்கலைத்தான் எதிர்பார்த்தனரே தவிர முழக்கத்தை எதிர்பார்க்கவில்லை. இதனால் பிரேம்லால் குமாரசிறி தலைமையில் முதலாவது அணி கட்சியை விட்டு விலகியது. பாரளுமன்றப்பாதையையும், தொழிற்சங்கப்பாதையையும் முழுமையாகவே நிராகரித்த நடைமுறையை பின்பற்றவிரும்பியவர்கள் கட்சிக்குள் தனியாக அணிதிரள ஆரம்பித்தாரகள். ஒரு அணிக்கு விஜவீராவும் மற்றோர் அணிக்கு காமினி யாப்பாவும் தலைமை தாங்கினர். விஜயவீராவால் தலைமை தாங்கப்பட்ட அணியே ஜே.வி.பி-யாகும், காமினி யாப்பாவால் தலைமை தாங்கப்பட்ட அணியே கீழைக்காற்று இயக்கமாகும் (சிங்களத்தில் பெரதிகசுலங்க).