தோழர் சண் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூல் அறிமுகவிழா நேற்று 20.10.2012 லண்டனில் நடைபெற்றது. தங்கவடிவேல் மாஸ்டர், தோழர் தம்பிராசா,காதர் மாஸ்டர் ,யமுனா ராஜேந்திரன், சபேசன் , சஜீவன் , கௌரிகந்தன் சார்பாக முத்து, தோழர் விக்கும் , மாசிலாபாலன், நாவலன், ராமமூர்த்தி, ராகவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்”என்னும் நூல் அறிமுக கூட்டத்தில் தோழர் முத்து (சிறீ) அவர்களால் படிக்கப்பட்ட தோழர் கைமண் அவர்களின் முழு அறிக்கை.
இங்கு இனியொருவின் பொதுவான அரசியல் கருத்துக்களோடு உடன்படும் முரண்படும் கருத்துக்கள் காணப்படினும், விவாத நோக்கில் முழுமையான கருத்தும் பதியப்படுகின்றது. இணைய வாசகர்களுக்காக கட்டுரை பகுதிகளாகப் பதியப்படுகிறது. அதன் முதலாம் பகுதி கீழே:
“ஒரு கம்யூனிஸப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு விழாவில் பேச்சாளராகக் கலந்து கொள்ள அழைத்தமைக்காக முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
மேற்படி விழாப் பேச்சாளன், நூல் பற்றி எதுவும் பேசாமல் நூல் ஆசிரியரின் செயற்பாடுகள் பற்றி மாத்திரம் பேசுவது அழகல்ல. இந்நூல் பற்றி மட்டும் நான் பேசினால் அது தோழர் சண் பற்றிய ஒரு எதிர்மறைப் படிமத்தை உருவாக்குவதாகவே அமைந்துவிடும். அதற்கான அவசியம் எப்போதும் ஏற்படாது. தோழர்
சமூகப்புரட்சியாளர்களாகிய எமது இன்றைய தேவை, தோழர் சண்ணின் அன்றைய சரியான தப்பான நடவடிக்கைகளில் இருந்து கற்றுக்கொண்டு, இன்றைய வரலாற்றிலான எமது பங்காற்றல்களை வினைத்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்வதேயாகும். இவ்விதம் கற்றுக்கொள்வதற்காக நாம் எடுக்கும் பகிரங்கமுயற்சிகள் அவரைச் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவரின் நேர்மறை, எதிர்மறை பங்களிப்புகள் இரண்டையும் பற்றிப் பேசக்கூடியதான ஒரு தலைப்பை, அமைப்பாளரின் அனுமதியுடன் நானே தேர்ந்தெடுத்துள்ளேன்.
எனது தலைப்புக்குள் செல்கிறேன்.
இலங்கைப் புரட்சியிலும், உலகப் புரட்சியிலுமான தோழர் சண்ணின் பங்களிப்புகளை இரு அரங்குகளாகப் பிரித்ததுவும், அவற்றில் உலகப்புரட்சி அரங்கை முதலாவதாக வைத்ததுவும் காரணத்துடந்தான். உலக அரங்கில் அவரின் பங்களிப்புகள் கல்மேல் எழுத்துப்போல் புகழுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் உள்நாட்டரங்கில் அவரின் பங்களிப்புகள் ஆரம்பத்தில் புகழுக்குரியதாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அவரின் புகழ் மங்க ஆரம்பித்தது. அவரின் தவறுகளும் இதற்கோர் காரணமாக இருந்தன. ஆனால் அவரின் இறுதிக்கால உள்நாட்டரங்கு புரட்சிகர நடவடிக்கைகள் அவர் மீண்டும் புகழுடன் எழுவதற்குமான அடிப்படைகளை ஆக்கிவந்தன. ஆனால் இந் நடவடிக்கைகளின் வெற்றிகள் அறுவடை செய்யப்படும் முன்பாகவே அவர் செயற்படாமுடியா நிலைக்கு உள்ளாகிவிட்டார். ஆனால் உள்நாட்டரங்கில் புரட்சிகர எச்சத்தை விட்டுச் சென்றுள்ளார். அனைத்துலகரங்கில் புகழுடம்பு எய்திய அவர், தனது எச்சத்தின் வீச்சால் உள்நாட்டரங்கில் மீண்டும் புகழ்பெறுவார் என நம்புவோம். இந் நம்பிக்கைக்குத் துணைபுரிவதற்காகவே இத் தலைப்புத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தோழர் சண்ணுடனான பகிரங்க வாத-விவாதந்தான் இங்கு தவிர்க்கப்படுகிறதே தவிர, அவரின் எதிர்மறைச் செயல்பாடுகளையும், சுபாவங்களையும் பற்றிய கலந்துரையாடல் தவிர்க்கப்படவில்லை. 1920-இல் பிறந்த நாகலிங்கம் சண்முகதாசன்தான் இறந்துவிட்டாரே தவிர 1969-இல் பிறந்த (கட்சியின் 9வது தேசிய மாநாடு) தோழர் சண் எனும் கருத்துக் கட்டுமான, அமைப்புக் கட்டுமான முன்னோடி இறக்கவில்லை.
அ. அனைத்துலக அரங்கில்
தோழர் சண்ணின் அனைத்துலக அரங்கப் புகழுக்கான காரணங்கள் மூன்றாகும். அவையாவன:
அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’ குணாம்சங்கள்.
பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக தத்துவார்த்தப் பங்களிப்புகள்.
பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.
ஆ. உள்நாட்டரங்கில்
தோழர் சண் உள்நாட்டரங்கில் மதிக்கப்படுவதற்கான காரணங்கள் எட்டு வகைப்படும். அவையாவன:
இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு (அ) தத்துவார்த்தத் தலைமை ஏற்றது. (ஆ)அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.
இறுதிவரை விலை போகாமை.
சிறந்த அறிவாளி.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை போராளிகளாக அணிதிரட்டியமை.
யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.
பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகரமான நிலைப்பாடு.
1983-ற்குப் பின்னர், இலங்கையின் தேசிய இனச்சிக்கல் தொடர்பாக நேர்மறைக் கொள்கையின் படி செயற்பட ஆரம்பித்தது.
தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் சுய விமர்சனத்தில் ஒரு புதிய நேர்மறை வரலாற்றை ஆரம்பித்து வைத்தது.
இவ் எட்டு அமசங்களிலும் அவரின் நேர்மறைப் பங்களிப்புகளும் உண்டு, எதிர்மறைப் பங்களிப்புகளும் உண்டு. இவை அனைத்தையும் சிறப்பான முறையிலும் அல்லது முற்போக்கான முறையிலும் தொடக்கிவைத்தார். அனால் அவை புரட்சிகரமான முறையில் தொடங்கி வைக்கப்படாத படியால் ஒன்றில் இடையில் கைவிடப்பட்டன அல்லது தவறான முறையில் முடிக்கப்பட்டன. பலராலும் தோழர் சண்ணின் மிகச்சிறப்பு அம்சமாகக் கருதப்படும் அவரின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இங்கு தவிர்க்கப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் இருந்தே தொழிற்சங்க வேலைகள் திரிபுவாதத் தன்மை பெற்றதாகவே இருந்து வந்தது என்பதாலும், அவரின் உள் அரங்குத் தவறுகளுக்கெல்லாம் காரணமாக இருந்தது அவரின் தொழிற்சங்க கண்ணோட்டமும், பலமும்தான் என்பதாலும் அத் தலைப்பு இங்கு சேர்க்கப்படவில்லை.
இது அரை மணிநேரத்துள் அமையவேண்டிய ஒரு உரையாக உள்ளதால், இவற்றுள் சில தலைப்புகள் மட்டுமே இங்கு அலசப்படுகிறது. ஏனையவை முற்றாகவே தவிர்க்கப்படுகின்றன. அலசப்படும் தலைப்புகள்:
அ.1) அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’ குணாம்சங்கள்.
அ.3) பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் வளர்ச்சியில் அவர் வகித்த அனைத்துலக அமைப்புப் பங்களிப்புகள்.
ஆ.1.ஆ) இரண்டாவது தலைமுறை இடதுசாரிகளின் மாஓ பிரிவுக்கு அமைப்பு உருவாக்கத் தலைமை ஏற்றது.
ஆ.5) யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் நடத்தியது.
ஆ.6) பௌத்தம் பற்றிய அவரின் புரட்சிகரமான நிலைப்பாடு
அ.1) அவரிடம் காணப்பட்ட ‘பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்’ குணாம்சங்கள்.
இதன்படி மொத்தத் தலைப்புகளில் ஐந்து தலைப்புகளே எடுக்கப்பட்டுள்ளன.
இவரின் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல் கண்ணோட்டத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(மாஓ), Thousand Flowers என்ற தலைப்பிலான தனது Journal of the Ceylon Communist Party-Maoist (CCP-M) Volume 1, Issue 1 March 2008 இதழில் பினவருமாறு கூறுகின்றது.
“ஒன்றில் நாம் அனைவரும் உலகைக் கம்யூனிஸமயமாக்கி ஒருமித்து விடுதலையடைவோம் அல்லது எம்மில் எவராலும் விடுதலையடைய முடியாது.” என்பதே பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் அனைத்துவியாபக விதியாகும். இவ்விதியானது, ஏகாதிபத்தியக் கட்டுமானம் அடிஅந்தமாகவும், வேரும் வேரடி மண்ணோடும் தூக்கியெறியப்படவும், நொறுக்கப்படவும், வேண்டுமெனும் ஆணித்தரமான உண்மையைப் பறைசாற்றுகிறது. அப்போதுதான், அனைத்துவளங்களும், சுதந்திரமும் அனைவருக்கும் உரித்தானது எனும் அடிப்படைக் குணாம்சத்தைக் கொண்டிருக்ககூடியதாக இன்றைய உலகையும் சமுதாயத்தையும் மறுநிர்மாணம் செய்யமுடியும். சமுதாயத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கங்களினது அனைத்து அதிகாரங்களையும் வல்லமைகளையும் பறித்தெடுப்பதன் மூலமே இவ்வித மறுநிர்மாணம் சாத்தியப்படும்…..”
“….கம்யூனிஸப் புரட்சியானது சாராம்சத்தில் மனித இனத்தின் அனைத்துலகளவிலான பரிணாம வரலாற்று நிகழ்வுப் போக்காகும். இப் பரிணாமம், தனிச்சொத்தின் பொருள்மய, சித்தாந்தமய அடித்தளத்தையும், தனிச்சொத்து அவா மனிதனின் சுயத்தை சக்திமிக்கதாக்கிறது எனும் மாயையும் தகர்த்து எறிதலை மையக் குறிகோளாகக் கொண்டது. இது உலகையும் மனித இனத்தையும் விடுதலை செய்வதை நோக்கிய பரிணாமம் ஆகும். ‘ஒன்றில் நாம் அனைவரும் சொர்க்கத்தை உருவாக்குவோம் அல்லது எம்மில் எவராலும் இவ் நரகத்தில் இருந்து மீழமுடியாது.’ இதுதான் பாட்டாளிவர்க்க அனைத்துலக வியலை இயக்கும் அறிவியல் கோட்பாடாகும். ஒவ்வொருவருக்கும் கிடைக்கப்பெறும் சுதந்திரமான புறச்சூழல்தான அனைவருக்குமான சுதந்திரம் என்ற உண்மையின் வடிவமே பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலாகும். அறிவிய-தத்துவவியத் தன்மைபெற்ற இக்கூற்றின் மூலம் மாக்ஸிசஸமானது பிற அனைத்து தத்துவ இயற், மதவியற் சிந்தனைகளையும் மேவிநிற்கிறது.”……….
பாரதி தனது கவித்துவ வார்த்தையில் இதை இவ்விதம் கூறுகிறார். “முப்பது கோடியும் வாழ்வோம் வீழின் முப்பது கோடியும் ஒன்றாய் வீழ்வோம்”
……. “மாக்ஸ் கூறியது போல ‘மனித இனத்தை மீட்காது பாட்டாளி வர்க்கத்தால் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது.’ தன்னால் முன்வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் வேலைத்திட்டத்தை பின்வரும் அறைகூவலுடன் முடிக்கிறார். ‘ உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுவீர்! உங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால் பெறுவதற்கோ ஒரு உலகமேயுண்டு.’……”
“தோழர் சண்ணின் மெச்சத்தகுதன்மையைப் புரிந்துகொள்வதற்கும், உண்மைப் புரட்சியாளர்களுக்கும் போலிப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதற்கும் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் அறிவியல் கோட்பாடுகளை சரியாகவும், ஆழமானமுறையிலும், இறுக்கமாகவும் பற்றிக்கொள்ளல் அவசியமானதாகும்…………….எங்கும்-என்றென்றும், எச்சந்தர்ப்பத்திலும், என்றென்றும் புரட்சிக்கு வழிகாட்டவும், தலைமைதாங்கவுமான அறிவுபூர்வமான மார்க்கத்தை வகுப்பதில் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியல்தான் அடிப்படையாக இருக்கின்றது என்பதே ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் நம்பிக்கையாக இருக்கவேண்டும். தன்னாட்டில் தன்னால் கட்டிவளர்க்கப்படும், ஒழுங்குபடுத்தப்படும் புரட்சியானது உலகப்புரட்சியின் பிரிக்கமுடியாத அம்சம் என்பதையும், உலகப் புரட்சியில் இருந்துதான அது முளைத்தெழுகின்றது என்பதையும் அவர் நினைவில் கொள்ளவேண்டும். தனியொரு நாட்டின் புரட்சியானது உலகப் புரட்சியை முன்னெடுக்கவும், துரிதப்படுத்தவுமான குறிக்கோளுக்கு சேவைசெய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். இதுதான் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் விதியும், பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலின் சாராம்சமுமாகும்.”
அனைத்துலகளவில் சண் நடத்திய வர்க்கப்போராட்டத்திற்குத் துணைநின்ற சண்ணின் சிந்தனைக் கட்டுமானத்தை இது தெழிவாக எடுத்தியம்புகின்றது. இரு பெரும் சோஷலிஸ நாடுகளும் தமது பாட்டாளிவர்க்க அனைத்துலக நலனைக் கைகழுவிவிட்ட நிலையில், உலகம் எங்கும் பரந்து வாழும் புரட்சியாளர்கள் அவநம்பிக்கை யுற்றுவாழ்ந்த நிலையில் பாட்டாளிவர்க்க அனைத்துலகவியலை முன்வைத்ததுவும் அதன் அடிப்படையில் உலகளாவிய அளவில் கம்யூனிஸ்டுகளை ஒன்றுசேர்த்து அமைப்புக் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டது உலகப்புரட்சிக்கும் இலங்கைப் புரட்சிக்கும் தோழர் சண் செய்த மகத்தான பங்களிப்பாகும். உலகப் புரட்சி செழுமைப்படுமென்றால் இன்றோ நாளையோ இலங்கைப் புரட்சியும் செழுமைப்படும்.
…….. “தனித் தனி நாடுகளில் நடைபெறும் புரட்சிகர போராட்டங்கள்தான் உலகப் பாட்டாளி வர்க்க சமதர்மப் புரட்சியின் பிரிக்கமுடியாத, அத்தியாவசிய ஆக்கக்கூறுகளாகும். பழைய ஏகாதிபத்திய ஒழுங்குமுறையை அழித்தொழித்ததுவும், பாட்டாளிவர்க்கப் புரட்சியையும், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் அனைத்து கட்டங்களிலும், அனைத்து நிலைகளிலும் முன்னெடுத்துச் செல்லவும், இவை எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளில் இருந்தும், திருப்புமுனைத் தடுமாற்றங்களில் இருந்து இவற்றைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நடவடிக்கைகள்தான் உலகப் புரட்சியைத் துரிதப்படுத்துவதற்கும் முன்னெடுத்துச் செல்வதற்கும் தனித்தனி நாடுகளின் புரட்சிப் போராட்டங்களின் பங்களிப்புகளின் சாராம்சமாகும். தனித்தனிநாடுகளில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டங்களும், அவர்களால் நிறுவப்படும் பாட்டாளிவர்க்க அரசும், உலகப் புரட்சியின் தளப் பிரதேசங்களாகச் செயல்படுகின்றன. உலகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இவ்வரசுகளின் பங்களிப்புகள் என்னவாக இருக்கின்றன என்பதுதான் இவ் அரசுகளின் புரட்சிகரத்தன்மை பற்றிய மதிப்பீட்டிற்கான அளவுகோலாக இருக்கும். ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சிக்கு வேறு எந்த மதிப்பீடும் இல்லை, இவ்வித புரட்சி நிலைத்து நிற்பதற்கான வேறு எந்தக் காரணமும் இல்லை. அதுபோலவே, ஒரு கம்யூனிஸ்ட் தனது சொந்த நாட்டின் பாட்டாளிவர்க்கப் புரட்சியை நேரடியாகவும் பிற நாடுகளின் புரட்சியை உலகளவில் கூட்டாகவும் முன்னெடுத்துச் செல்லாவிட்டால் அவனுக்கு எந்த மதிப்பீடும் இல்லை. அவன் இருப்பதற்கான காரணமும் இல்லை.”……..
…… “ஆகையினால், ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் வாழ்க்கை, அதிலும் குறிப்பாக, ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் வாழ்க்கை, மா-லெ-மாஓயிசம் என்ற அறிவியலைப் பாதுகாக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படவேண்டும். இந்த அர்த்ததில் உலகப் பாட்டாளிவர்க்க சமதர்மப் புரட்சியைப் பாதுகாக்கவும் வளர்த்தெடுக்கவுமான பணியில் மிகவும் முக்கியத்துவம் மிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். கம்யூனிஸ்ட் புரட்சியை எமது நாட்டில் நடத்துவதற்காக தமது வாழ்க்கையை அர்பணிக்க விரும்பும் எவராயினும் சரி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீர்மானகரமான இறுதி யுத்தத்தையும், வரலாற்றுக்கு முன்னைய அடிமைத்தனத்தையும் எதிர்பதற்கான யுத்தத்தை நடத்த விரும்பும் எவராயினும் சரி, உலகளாவிய மனித ஈடேற்றம் பெற்ற புதிய உலகொன்றைப் படைக்க விரும்புவோர்கள் எவராயினும் சரி, அவர்கள் தமது கைகளை உயர்த்தி எமது நாட்டின் கம்யூனிஸ இயக்கத்தின் தந்தையும், அன்புக்குரிய ஆசானும், மதிப்புமிக்க தலைவனுமான தோழர் சண்ணிற்கு வணக்கம் செலுத்தாமல் இருக்க முடியாது.”
மேலும் வரும்…