Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் எஸ்.என்.நாகராஜன்: ஒரு எதிர்மறை ஆசான் – ரவிக்குமார்

தோழர் எஸ்.என்.நாகராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை தோழர் டி.எஸ்.எஸ் மணி பகிர்ந்திருந்தார். ‘அவரும் போய்விட்டாரா!’ என்று மனம் அரற்றியது.
எஸ்.என் எனத் தோழர்களால் அழைக்கப்படும் அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் எனது நினைவுகள் ஓடின. எனது வீட்டில் 18.3.1990 அன்று நிறப்பிரிகை ஆய்விதழ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட முதல் கூட்டு விவாதத்தில் பங்கேற்பதற்காக அவர் வந்திருந்தார். இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி இருந்தார். அவரோடு உரையாடிய காலம் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கிறது. “ ரஷ்யா சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவை மார்க்சியத்தின் முன் எழுப்பியுள்ள கேள்விகளும்” என்ற தலைப்பில் அந்த கூட்டு விவாதத்தை நிறப்பிரிகை சார்பில் ஒருங்கிணைத்திருந்தோம். அதில் அவர் கலந்து கொண்டு முன் வைத்த கருத்துகள்தான் அன்று அதிக அளவிலான விவாதங்களை எழுப்பின.
“ சரியான கருத்துக்கள் எங்கிருந்து தோன்றுகின்றன” “முரண்பாடுகள் பற்றி” ஆகிய மாவோவின் இரண்டு கட்டுரைகளும் இன்று நமக்குத் தேவையாக இருக்கின்றன” என்று எஸ்.என்.நாகராஜன் அப்போது குறிப்பிட்டார். “ மாவோவின் அறிவுத் தோற்றவியல் ( epistemology )மேற்கத்திய அறிவியலுக்கு நேர் எதிரானது. மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் உட்பட்ட மேற்கத்திய மார்க்சியத்தில் இருந்து வேறுபட்டது மாவோவின் இயங்கியல். அது பெண்மைத்தன்மை ( feminine ) கொண்டது. மக்களிடம் அன்புடன் அணுகவேண்டும் எனப் போதிப்பது. முரண்பாடுகளின் எதிர்ப்பைக் காட்டிலும் இணைவை முக்கியமானதாகக் கருதுவது. வன்முறையற்ற போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது. அன்பு வழியை வலியுறுத்துவது. இது கீழைத்தேயத்தின் ( oriental countries) கொடை. கீழைத்தேய இயங்கியல் எனவும் இதைச் சொல்லலாம். மேலைத்தேய வரலாற்றைப் போல இங்கே கிறித்துவ மதமும் அரசும் பிரிக்க முடியாமல் இணைந்திருக்கவில்லை. சகோதரத்துவமும் சமத்துவமும் மிக்க சுரண்டலற்ற சமூகத்தை கீழைத்தேய சிந்தனை முன்வைத்தது. கீழைத்தேய இயங்கியலே சரியான மார்க்சியம்.” என்று நாகராஜன் தனது நிலைபாட்டை அக்கூட்டத்தில் விளக்கினார்.
“ கீழைத்தேய இயங்கியல் (oriental dialectics) விவசாய சமூகத்தின் விளைபொருள். மேலை இயங்கியலோ ( western dialectics) அடிமைச் சமூகத்தின் விளைபொருள்” என்று கூறிய நாகராஜன் தனது பேச்சு முழுவதிலும் ஐரோப்பிய நாடுகள் எதிர் கீழ்த்திசை நாடுகள்; மார்கஸ் எதிர் மாவோ என்ற எதிர்வுகளை முன்வைத்தார். “சுரண்டல் பற்றிய பொது கோட்பாட்டை மார்க்ஸ் உருவாக்கவில்லை. அதிகாரம் பற்றிய மாக்கியவல்லிய ( Machiavellian )கோட்பாட்டிற்கு எதிராக பெண்மை அதிகாரத்தை முன்னிறுத்த வேண்டும் என்பதே படிப்பினை” என்று அவர் வாதிட்டார்.
ஆனால் எஸ்என் நகராஜனுடைய கருத்துக்களோடு நான், அ.மார்கஸ் உள்ளிட்ட பெரும்பாலானோர் உடன்படவில்லை. இந்தியாவில் இந்துத்துவப் புத்துருவாக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது. சாதி குறித்த விவாதங்கள் அப்போதுதான் இடதுசாரிகளிடையே துவங்கியிருந்தன. அந்த நிலையில் ‘கீழைத்தேய இயங்கியலே புரட்சிகரமானது’ என்ற எஸ்.என்.நாகராஜனின் கூற்றை இந்துத்துவத்துக்கு வலு சேர்ப்பதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் நாங்கள் பார்த்தோம்.
“ கம்யூனிஸ்ட் கட்சி என்பது கம்யூனிச சமுதாயத்தை முன்மாதிரியாகக்கொண்டு கட்டப்பட வேண்டும். லெனினியம் வற்புறுத்துவது போல கட்சி என்பது ஒற்றைப் பரிமாணம் உடையதாக இருக்கக்கூடாது. மாற்றுக் கருத்துகளுக்கான அமைப்பு வடிவங்கள் கட்சிக்குள் இருக்க வேண்டும். இதுகுறித்து சீனத்தில் மாவோ மேற்கொண்ட மாற்றங்களும் போதாது. ஆய்வுகளைக் கீழே கொண்டுபோய் கோட்பாட்டு உருவாக்கம் செய்ய மாவோ தவறிவிட்டார். எனவே அவரது கருத்துக்கள் வெறும் அடையாள வாதமாகவே நின்று விட்டன. தனிநபர் வழிபாட்டை அவரால் தடுக்க முடியாமல் போனது எப்படி? என்பதும் பரிசீலிக்கப்பட வேண்டும். மார்க்சியத்தில் ஊடாடி உள்ள ஹெகலிய சிந்தனைகளின் தாக்கம், எங்கல்ஸின் குடும்பம் பற்றிய கோட்பாட்டில் மார்கனின் செல்வாக்கு, ஒழுக்கம் பற்றிய இயங்கியலுக்குப் புறம்பான தன்மைகள் கொண்ட வரையறைகள், உயர் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்த லெனினியச் சிந்தனை ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. சோஷலிசத்திற்குப் பிந்திய வடிவங்கள் குறித்த ஆய்வுகள் தேவை” என்று நான் அக்கூட்டத்தில் குறிப்பிட்டேன்.
‘ கீழைத்தேய எதேச்சாதிகாரம் ( oriental despotism ) என மார்க்ஸ் முதலானவர்களால் வரையறுக்கப்பட்டதும், சாதியக் கொடுமைகள் மிக்கதுமான இந்திய சமூகத்தை அன்புமிக்க சமூகம் என்று சொல்வதும் காத்லின் கோ போன்றவர்களால் theocratic state என்று சொல்லப்பட்ட இந்த சமூகத்தை அரசும் மதமும் பிரிந்த சமூகமாகப் பார்ப்பதையும் நாங்கள் விமர்சித்தோம். அந்த விவாதம் அதன் பிறகும் நிறப்பிரிகை இதழில் தொடர்ந்தது. நிறப்பிரிகை இரண்டாவது இதழில் (ஜனவரி 1991) ‘நவீன விஞ்ஞானம் மார்க்சியம் மற்றும் மாந்தனுடைய விடிவு’ என்ற தலைப்பிலான எஸ்.என். நாகராஜனின் விரிவான கட்டுரையை வெளியிட்டோம்.
அவரது நிலைபாட்டை கோவை ஞானி தொடர்ந்தும் ஆதரித்து வந்தார். சூழலியல், தமிழ்த் தேசியம் முதலானவற்றில் ஈடுபாடு கொண்ட தோழர்கள் சிலர் அவர்மீது அளப்பரிய மரியாதை வைத்திருந்தனர்.
நவீன விஞ்ஞானம்- மேற்கத்திய இயங்கியல்- மார்க்ஸியம் ஆகியவற்றை ஒரே கோட்டில் வைத்த எஸ்.என்.நாகராஜன் அவற்றுக்கு மாற்றாகக் கீழைத்தேய சிந்தனை என்ற பெயரில் நுட்பமான இந்துத்துவக் ( refined hindutva) கருத்தியலையே முன்வைத்தார் என்பது எனது புரிதல். அதனால்தான் சாதிப்பிரச்சனை தொடர்பாக எந்தவொரு ஆழமான கருத்தையும் அவரால் வெளிப்படுத்த முடியாமல் போனது.
எஸ்.என்.நாகராஜனின் கருத்தியல் நிலைபாடு காரணமாக அவரோடான தொடர்பு சீக்கிரமே எனக்கு அற்றுப்போனது.
தோழர் எஸ்என் நாகராஜன் அவர்கள் நல்ல ஆங்கிலப் புலமை கொண்டவர். கார்ல் மார்க்ஸை மட்டுமின்றி ஆங்கிலத்தில் வெளியான பல தத்துவ அறிஞர்களின் நூல்களையும் அவர் வாசித்திருந்தார். ஆனால் 1960 களோடு அவரது வாசிப்பு தேங்கிவிட்டது. அதற்குப் பிறகான எந்தவொரு சிந்தனையாளரின் நூலையும் அவர் வாசித்ததற்கான தடயம் அவரது எழுத்திலோ, பேச்சிலோ வெளிப்படவில்லை.
தோழர் எஸ்.என்.நாகராஜனை நான் ஒரு ‘ எதிர்மறை ஆசானாகக்’ கருதுகிறேன். அவரை மறுப்பதற்காகவேனும் அவர் கூறியதைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வலதுசாரிப் பார்வை ஊடுருவிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியம், இயற்கை வேளாண்மை, மாற்று மருத்துவம், சூழலியல் முதலான களங்களில் நாம் முற்போக்கான நிலைபாட்டை மேற்கொள்வதற்கு தோழர் எஸ்.என். நாகராஜனின் கருத்துகளை ஆராய்வதும் அதிலிருந்து பாடம் கற்பதும் அவசியம். தோழர் எஸ்.என்.நாகராஜனுக்கு என் அஞ்சலி!
– Ravikumar.

Exit mobile version