Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோல்வியின் பின்னர் – எங்கிருந்து தொடங்குவது : சபா நாவலன்

ஒடுக்கப்ப்பட தமிழ்ப் பேசும் மக்கள் அறுபது வருட கால அவலத்தின் ஒட்டுமொத்த ஒருங்குபுள்ளி போல அமைந்தது தான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கும் தேசியவாத அரசில் மறுபடி ஒரு முறை அழிவுகளை நோக்கி இழுத்துச் செல்லப்படக் கூடாது என்பதில் சமூக அக்கறையும் மக்கள் பற்றும் மிக்க ஒவ்வொரு மனிதனும் கவனம் கொள்கிறான்.

70களின் ஆரம்பப் பகுதிகளில் தமிழ்த் தேசிய வாத அரசியல் தமிழ்ப் பேசும் மக்களின் வன்முறை சார்ந்த போராட்டமாக உருவாக ஆரம்பித்தது. தமிழ் மேலாண்மையை அரசியலாக முன்வைத்து உருவான தேசிய வாத்தின் தத்துவார்த்த, சிந்தனைக் கூறுகள், ஏனைய இனக்குழுக்களையும், தேசிய இனங்களையும் தமக்குக் கீழான நிலையிலுள்ளவர்களாக் கருதியது.

ஆண்ட பரம்பரை மீளவும் ஆட்சிசெய்யும், இலங்கையின் ஆரம்பக் குடிகள் தமிழர்கள், போன்ற அரசியல் முழக்கங்கள் தமிழ்த் தேசியத்தின் சிந்தனைமுறையாகவும், தத்துவார்த்த அடித்தளமாகவும் சிறுகச் சிறுக மாற்றமடைந்ததது.

ஆளப்பிறந்த தமிழர்கள் கல்வியிற் சிறந்தவர்கள் என்றும், ஏனைய தேசிய இனங்கள் அவர்களுக்குச் சேவையாற்றப் பிறந்தவர்கள் என்றும் தமிழரசுக் கட்சிக் காலத்திலிருந்து சமூகத்தில் விதைக்கப்பட்ட சிந்தனை வன்முறை அரசியலோடும் இணைந்துகொண்டது.

தமிழ் மேலாண்மை என்பது யாழ்ப்பாணத்திலிருந்தே உருவாகின்றது என்றும் அவர்களே புத்திசாதுரியமுடைய கற்றவர்கள் என்றும் உருவாக்கப்பட்ட எண்ணக்கரு மேலாண்மையின் ஈர்ப்பு மையமாக யாழ்ப்பாணத்தைக் கருதியது. இதுவே யாழ் மையவாதமாக உருவெடுத்தது. இதன் வழியே, போராட்டத்தின் பின்னர் உருவான அனைத்து சிந்தனைப் பகுதிகளும் யாழ் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஆக, போராட்டம் என்பது,

1. மேலாண்மையையும் மேலாதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.

2. ஏனைய ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களையும் மக்களையும் நிராகரித்தது.

3. தேசிய இனத்தின் இனத் தூய்மையையும் அதன் தொடர்ச்சியையும் வலியுறுத்தியது.

4. தமது தேசிய இனத்துள்ளேயே மேலாதிக்கத்தின் மையமாக யாழ்ப்பாணத்தைக் கருதியது.

இந்த இயல்புகளைக் கொண்ட தன்னாதிக்கத்திற்கான குரலை, குறுந்தேசிய வாதம் என்று அழைக்கிறோம். வரலாற்று ஆதாரங்களையும், தவறான அடையாளங்களையும் முன்வைத்துத் தம்மை வேறுபடுத்திகொள்வதில் குறுந்தேசிய வாதிகள் முனைப்புக் காட்டுவார்கள் என்கிறார் ரேமன்ட் வில்லியம்ஸ்.

தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் சாதீயம், பிரதேசவாதம், போன்ற தவறான அடையாளங்கள் அழுதப்பட்டுத்தப்பட்டன. தேசியம் என்பதன விஞ்ஞான பூர்வமற்ற கருத்தியல் கோட்பாடாக இவ்வடையாளங்கள் ஏகாதிபத்தியக் கல்விமுறைக்கு உட்பட்டோராலும் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியம் என்பது சாதீய அடையாளத்தையும் உட்படுத்தியது என்ற வல் டானியல் என்ற மனிதவியலாளரின் கூற்றுக் கவனிக்கத் தக்கது. மேலாண்மையையும், இனத் தூய்மையையும் அடிப்படையாகக் கொண்ட தேசியச் சிந்தனை என்பது அத்தூய்மைக்கு எதிரான தனிமனிதக் கொலைகளைத் தூண்டியது. அதன் மேலாண்மை என்பது சமூகத்தின் தவறான, எதிர்கொள்ளப்பட வேண்டிய கூறுகளின் இருப்பை மாற்றமேதுமின்றி ஏற்றுக்கொண்டது. அவற்றின் மாற்றத்தை நிராகரித்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதித்துவம் செய்த இக் குறுந்தேசிய வாதம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்முறை அரசியலாக மாற்றமடைந்தது. இன்றிருப்பது போன்றே இலங்கைப் பேரினவாத ஒடுக்குமுறை வன்முறைப் போராட்டத்திற்கான புறச் சூழலை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வன்முறைப் போராட்டத்தின் தத்துவார்த்தப் பின்புலம் குறுந்தேசிய அரசியலாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அரசியலின் ஒட்டுமொத்தப் பிரதிநிதிகளாக உருவாகியிருந்தனர். ஏலவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் இதே அரசியல், சமூகத்தின் சிந்தனை முறையாக விரவியிருந்தது. சமூகத்தின் பொதுவான சிந்தனை வழங்கிய தத்துவார்த்தப் பலத்தின் பாதிப்பால், குறுந்தேசிய அரசியலிற்கும் அதன் வழிவந்த இராணுவத் தூய்மை வாதத்திற்கும் எதிராக உள்ளும் புறமும் எழுந்த போராட்டங்கள் வலுவிழந்து செத்துப் போயின.

புலிகள் தவிர, பின்னதாக உருவான புளொட், ரெலோ போன்ற இயக்கங்கள் கூட குறுந்தேசிய வாதத்தையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற சில அமைப்புகள் குறுந்தேசிய வாத சிந்தனை முறைக்கு அப்பால் செயற்பட முற்பட்ட போதும் 1983 இல் இந்திய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், குறுந்தேசிய அலைக்குள் மூள்கிப் போயினர்.

தவிர, என்.எல்.எப்.ரீ போன்ற சிறிய குழுக்களிடம் மக்களை அணிதிரட்டும் எந்தக் குறிப்பான வேலைத் திட்டமும் இல்லாதிருந்த நிலையில் குறுந்தேசியக் கூறுகளையே கொண்டிருந்தன. மேலாதிக்க மனோபாவமும், இராணுவத் தூய்மையுமே தமது அரசியல் நெறியாகக் கொண்டிருந்த புலிகள் தமது தேசியத்தின் குறுகிய எல்லைகளை மேலும் குறுக்கியதன் எதிர்விளைவாக ஏனைய விடுதலை அமைப்புக்களையும், ஏதாவது ஒரு காரணத்திற்காக அழித்தொழித்தனர்.

தமது சொந்த வாழ்வை இழந்து புத்தகங்களுக்குப் பதிலாக துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு போராடப்போன ஆயிரமாயிரம் இளைஞர்கள் தெருத்தெருவாகத் துரோகிகளாகக் கணிக்கப்பட்டுக் கொன்று போடப்பட்டனர். குறுந்தேசிய அரசியல் எங்கெல்லாம் கோலோச்சுகிறதோ அங்கெல்லாம் அது பாசிசத் தன்மை கொண்டதாக வளர்ச்சியடையும். ஸ்ரேலில் இருந்து பால்கன் நாடுகள் வரைக்கும் அதற்கான உதாரணங்கள் விரிந்துகிடக்கின்றன.

குறுந்தேசியம், தான் சார்ந்த தேசிய இனத்தை முன்நிறுத்தி  அனைத்துத் தேசிய இனங்களையும் குழுக்களையும் எதிரிகளாக்கிக் கொள்ளும் என்பதன் அனைத்து உதாரணங்களையும் புலிகள் தன்னகத்தே கொண்டிருந்தனர். 1990ம் ஆண்டு யாழ்ப்பணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம்களை ஒரு இரவுக்குள் புலிகள் வேரோடறுத்து வெளியேற்றினர். முள்ளிவாய்க்கால் அழிவின் சற்று முற்பட்ட காலப்பகுதியில் கூட சிங்கள அப்பாவிகள் பலரைக் கொன்று குவித்தனர்.

இதே வகையான நடவடிக்கைகளை ஈரோஸ்,ரெலோ,ஈ.பி,ஆர்,எல்.எப் போன்ற அமைப்புக்களும் வேவ்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளனர். மேலாதிக்கமே

குறுந்தேசிய வாதத்தின் முதன்மையான அரசியல் என்ற வகையில் இராணுவ வெற்றிகள் அனைத்தும் அரசியல் மேலாண்மையின் வெற்றியாகக் கருதப்பட்டன. போராட்டத்தின் வேறு வழிமுறைகள் குறித்து சிந்திபோர் இந்த வெற்றிகளின் பின்னணியில் அழித்தொழிக்கப்பட்டனர். வெகுஜன இயக்கங்கள், மக்கள் போராட்டங்கள், சிங்கள மக்களின் மத்தியில்ருந்த ஆதரவு சக்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

புலிகளின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய இயக்கங்கள் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள இலங்கை அல்லது இந்திய அரசுகளின் துணைப்படைகளாக அல்லது உளவுக் குழுக்களாக மாறிப்போயின. குறிந்தேசிய வாதம் மேலாதிக்க சக்திகளுடன் மட்டுமே தனது உறவைப் பேணிக்கொள்ளும். தமிழ் நாட்டில் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடு தமது உறவை வளர்த்துக்கொண்ட புலிகளும் ஏனைய அமைப்புக்களும் மக்களிடமிருந்தும், போராடும் சக்திகளிடமிருந்தும் அன்னியமாகின. முள்ளிவாய்க்கால் அழிவின் போது இந்திய அரசிற்கு எதிராக போராடவல்ல, இந்தியா முழுவதும் பரந்துகிடக்கும் நூற்றுக்கணக்கான முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் புலிகளைச் சந்தேகக் கண்கொண்டே நோக்கின.

அழிவின் விழிம்பிலிருந்த வேளையில் கூட நெடுமாறனும், வை.கோவும். ஜெயலலிதாவும் தான் புலிகளின் நண்பர்களாகக் கருதப்பட்டனர். அழுகுரல்களோடும், அழிவுகளோடும், அவலங்களோடும் முப்பது வருட ஆயுத எழுச்சி நந்திக்கடலில் கரைந்து போனது. குறுந்தேசிய வாதத்தின் ஒரு பகுதி அரச அதிகாரத்தோடு கைகோர்த்துக்கொண்டது.

எதிரியின் முகாமிலிருந்து நியாயமாகப் போராட எழுந்தவர்களைக் காட்டிக்கொடுக்கிறது. அரச துணைக் குழுக்களோடு இணைந்து கொள்கிறது. இன்னொரு பகுதி அதே குறுந்தேசிய வாதத்தின் அபாயத்தைப் புரிந்து கொள்ளாமல் அப்பாவித்தனமாக தோற்றுப் போன வழிமுறையை மீண்டும் பற்றிக்கொள்ள எண்ணுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா விலைகொடுத்து வாங்கி இலங்கை அரசிற்கு விற்பனை செய்துவிட்டது. இப்போது தமிழ்த் தேசிய முன்னணி அவர்களுக்குச் சற்றும் குறைவற்ற அரசியலை முன்னெடுக்கிறது. விலை போகக் கூடிய கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. புலம் பெயர் நாடுகளில் குறுந்தேசிய நிலைகளுள் கட்டுண்டிருக்கும் மக்களின் உணர்வுகள் சரியான திசையை நோக்கி வென்றெடுக்கப்பட வேண்டும்.

 இலங்கையில் குறுந்தேசியம் எதிர்கொள்ளப்பட வேண்டும். முற்போக்குத் தேசியம், மக்கள் சார்ந்து புத்துயிர் பெற வேண்டும். முன்னையவற்றை விமர்சித்தல் என்பது புதிய அரசியலை முன்வைப்பதிலிருந்தே ஆரம்பிக்க முடியும். வெறும் காழ்ப்புணர்வின் அடிப்படையில் புலிகளை விமர்சித்தலோ, அரச சார்பு நிலையிலிருந்து புலிகளை விமர்சித்தலோ அழிவு அரசியல். சமூக அக்கறையோடு புலிகளின் அரசியலை விமர்சிப்பதும், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளலும் இன்றைய பிரதான கடமை.

 இலங்கை சர்வாதிகாரப் பேரினவாத அரச அதிகாரத்திற்கு எதிரான ஈழத் தமிழர்களினது உணர்வுகளையோ, புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளையோ குறைத்து மதிப்பிடலாகாது. அரச ஆதரவு அரசியல் வியாபாரிகளை எதிர்கொள்ளும் பலம் அவர்களிடம் பொதிந்திருக்கிறது.

ஆக, இன்று புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் குறுந்தேசியத்திற்கு எதிரான முற்போக்குத் தேசியம் உருவாக்கப்பட வேண்டும். இந்திய இலங்கை அதிகாரங்களையும் ஐரோப்பிய அமரிக்க ஏகாதிபத்தியங்களையும் நிராகரித்து, போராடும் மக்கள் பகுதியினரோடு நம்மை இணைத்துக் கொள்வதற்கான வேலை முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையிலிருக்கும் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களான, மலையகத் தமிழர்கள் முஸ்லீம்கள் ஆகியோரின் உரிமைப் போராட்டங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ராஜபக்ச சர்வாதிகாரத்தின் கோரப்பிடியில் வாழ்வதற்காகப் போராடும் ஆயிரமாயிரம் சிங்கள மக்களின் போராட்டங்களுக்கு நாம் பின்பலமாகத் திகழ வேண்டும். அரச அதிகாரங்களின் காலடியில் இரந்து பின்செல்வதற்கு மாறாக அவர்களுக்கு அழுத்தம் வழங்கும் போராட்டங்கள் நிகழ்த்தப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிற்கு ஆதராங்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்மை ஏமாற்றிய அவர்களும், பிரித்தானியாவும், அமரிக்காவும் இலங்கையைத் தண்டிப்பார்கள் என எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டு ஐக்கிய நாடுகளுக்கு அழுத்தம் வழங்கும் பிரசாராங்களும் போராட்டங்களும் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட வேண்டும்.

ஐரோப்பாவில், இந்தியாவில், அமரிக்காவில் தெருவிற்கு வந்து உரிமைக்காகப் போராடும் மக்கள் அமைப்புக்கள் அனைத்தும் அணுகப்பட வேண்டும்.

உலகில் அடக்கப்படுகின்ற மக்களின் போராட்டங்களின் ஒரு பகுதியாக எமது போராட்டம் அறிவிக்கப்படுவதற்கான ஆரம்பமாக இது அமைய வாய்ப்புள்ளது மட்டுமன்றி குறுந்தேசிய வாதத்தை எதிர்கொள்வதற்கான போராட்டமாகவும் பரிணாமம் பெறலாம். தவிர, இலங்கையில் மக்களை அணிதிரட்டும் குறைந்தபட்ச ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான ஆரம்பமாகக் கூட இது அமையலாம்.

Exit mobile version