Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல் – தமிழ்ப் பகுதிகள் செயலிழக்கும்? : சபா நாவலன்

முள்ளி வாய்க்கால் வரை அழைத்துச் செல்லப்பட்டு சாரி சாரியாகக் கொன்று குவிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களின் இரத்தம் இன்னும் உறைந்துபோக முன்னர் அவரசர அவசரமாக நிகழ்த்தப்படும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை எந்த அர்த்தமும் அற்றது.

அறுபது வருட காலம் சிறுகச் சிறுக நடந்த இனப்படுகொலையின் வெளிப்படையான உயர் வடிவம் தான் வன்னி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைத் தாண்டவம். அதன் உள்ளூர்ப் பிரதிநிதிகளே இலங்கை ஜனதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்களான சரத் பொன்சேகாவும், மகிந்த ராஜபக்சவும். முள்ளிவாய்க்கால் மூலைக்குள் தனது சொந்த மக்கள் துடிக்கத் துடிக்கக் கொன்று போடப்பட்ட மறு நாள் பௌத்த கொடியோடு இலங்கை விமானநிலையத்தில் வந்திறங்கிய போர்க் குற்றவாளி ராஜபக்ச மறு நாளே தலைநகரில் கொலைகளை கோலாகலமாகக் கொண்டாட உத்தரவிட்டவர்.

மனித உரிமை பேசியவர்களை தெருவோரத்தில் கொன்றுபோட்டது இலங்கை அரசு. ஊடகவிலாளர்கள், எதிரணியினர், சமூகப்பற்றுள்ளவர்கள் எல்லாம் தமது வீட்டின் முற்றத்திலேயே கொல்லப்பட்டனர்.

அனகாரிகாவின் வழித் தோன்றல்கள்.

இலங்கை ஒரு பௌத்த நாடு; அதன் பாதுகாவலர்கள் சிங்களவர்கள்; மற்றைய சிறுபான்மையினர் வாழ்வதே அவர்களைப் பாதுகாப்பதற்காக்த் தான் என்ற உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் அனகாரிக தர்மபாலவினூடாக ஊட்டி வளர்க்கப்பட்டது. பிரித்தானியர்கள் உருவாக்கிய அனகாரிக தர்மபால இலங்கைப் பெருந்தேசிய வாதத்தையும், சோவனிசத்தையும் வளர்ப்பதில் வெற்றிகண்டார். இலங்கைப் பாட நூல்களில் அனகாரிக இன்றும் சிங்கள பௌத்ததின் புனித கதாநாயகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

அவருக்காக முத்திரை வெளியிடப்படுகிறது. புனிதமான இலங்கை தேசத்தை பிற்பாடு வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் அழுக்குபடுத்துகிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறிய அனகாரிகவின் வழித் தோன்றல்கள் தான் இலங்கை பெருந்தேசிய அரசியல் வாதிகள்.

சரத் பொன்சேகா கனேடியப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அனகாரிகவின் சிந்தனையை உட்கொண்டு உமிழ்ந்திருந்தார்.

கொலைகாரர்களும், போர்க்குற்றவாளிகளுமான இந்த இரு வேட்பாளர்களின் சிந்தனைப் பின்புலமும் பௌத்த சிங்கள மேலாதிக்க வாதத்தின் பிரதியாகவே அமைந்துள்ளது. ஏதாவது ஒரு தந்திரோபாயத்தைப் பிரயோகித்து, கொல்லப்பட்டவர்கள் போக தமிழ்ப் பேசும் மக்களின் எஞ்சிய வாக்குகளை சுருட்டிக்கொண்டு ஜனாதிபதியாக ஆட்சிபீடம் ஏறிவிட வேண்டும் என்கிறார்கள்.

அன்னிய சக்திகள்

வன்னிப் படுகொலைகளை நிகழ்த்திய இந்த இரு அரச பயங்கரவாதிகள் உள்ளூர்ப் பிரதிநிதிகள் என்றால் அவர்களின் அன்னிய எஜமானர்கள் இந்தியா, சீனா, அமரிக்கா என்று இலங்கையில் தேர்தல் பனிப்போர் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பண உதவி, ஆலோசனை, ஆட்பலம் என்று அன்னிய ஏவல்கள் இரண்டிலொரு அரச பயங்கரவாதியை மக்களின் பிரதிநிதியாக உருமாற்றப் போட்டிபோடுகின்றன. சுப்பிரமணிய சுவாமி தமிழர்கள் ராஜபக்சவிற்கு வாக்களிக்காவிட்டால் இந்தியா தமிழர்களுக்கு உதவி புரியாது என மிரட்டுகின்றார். இந்திய ஆலோசனைக் குழு இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக முகாமிட்டுள்ளது.

இன்னொரு புறத்தில், அமரிக்காவின் கைதேர்ந்த ராஜதந்திரி, ஆப்கான் படையெடுப்பில் பிரதான பாத்திரம் வகித்தவர்; ஈராக்கிய ஆக்கிரமிப்பின் சூத்திரதாரிகளுள் ஒருவார்; பற்றீசியா பட்டனிஸ் தனது அரசியல் சதுரங்கத்தை போரின் பின்னர் தெளிவாகவே ஆரம்பித்துவிட்டார். நோர்வேயும் அமரிக்காவும் சரத் பொன்சேகாவிற்கு பணபலத்தை வழங்குவதாக வந்த செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

போராட்டத்திற்கு எதிராக…

ஈழத் தமிழர்கள் உலக அமைப்பின் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள். கோபம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த புலம் பெயர் தமிழர்களின் அனைத்தையும் தொலைவிலிருந்து செய்வதறியாது திகைத்துப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள். இவையெல்லாம் ஒருங்குசேர்ந்த மக்களின் நினவாற்றல் மறுபடி போராட்டமாக புதிய வீச்சுடன் அரச அதிகாரங்களுக்கு எதிராக முனைப்புப் பெறும் என்பதை அன்னிய சக்திகள் அறியாதவையல்ல. இவ்வாறான சந்தர்ப்பங்களில், மக்களின் கோபத்தைத் தற்காலிகமாகத் தணிப்பதனூடாகவே மக்களைக் கையாள்கின்றன. அழிவுக்குட்படுத்தப்படும் நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் இதற்காக பல வழிமுறகளைப் பிரயோகிக்கின்றன.

தன்னார்வ நிறுவனங்களை மக்கள் மத்தியில் விதைப்பது என்பது ஒரு புறத்திலும் மறு புறத்தில் ஜனநாயக வழிமுறைகள் என்ற அமைப்பாக்கலை அறிமுகப்படுத்தலும் போர் நிகழ்ந் நாடுகளில் பிரயோகிக்கப்படும் முறைமைகளாகும். ஜனநாய வழிமுறை என்ற அடிப்படையில் உலகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, அழிவுக்குட்படுத்தப்பட்ட பெரும்பாலான நாடுகளில் போரின் இரத்தம் உறைவதற்கு முன்பதாகவே ஜனநாயக விரோதிகளை வைத்துத் தேர்தலை நடத்துவார்கள். ஈராக்கிலும், ஆப்கானிலும், யூகோஸ்லாவியாவிலும், ருவாண்டாவிலும் கூட இததைத் தான் இவர்கள் செய்திருக்கிறார்கள்.அவசரமாக நிகழ்த்தப்படும் இந்தத் தேர்தல் என்பதன் மறுதலையான உள் நோக்கம் மக்களின் வெறுப்புணர்வு அரச அமைப்பிற்கும் சர்வதேச அரச ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமாகத் திரும்பிவிடக் கூடாது என்பதுதான்.

ஆயுதப்போராட்டத்தின் தேவை

அறுபது ஆண்டுகள் இனப்படுகொலையின் கோரத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் இன்று அதன் உயர்ந்த பட்ச வடிவத்தைக் கடந்து செல்கின்றனர். ஆயுதப் போராட்டம் முனைப்படைந்ததாகக் கருதப்படும் 80 களில் இருந்த தேவையை விட இன்னுமொரு பங்கு அதிகமாகவே இன்று அதன் தேவை உணரப்படுகிறது.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன

இந்த நிலையில் பிரதான வேட்பாளர்களான இரண்டு அரச பயங்கரவாதிகள் தவிர, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன என்ற “இடது” வேட்பாளர், வாக்குகளுக்காக மக்கள் முன் பிரசன்னமாகியுள்ளார். இவர் “இடது” பார்வை கொண்ட சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் பெருந்தேசிய இனத்தைச் சார்ந்த வேட்பாளர் என்றே வைத்துக்கொள்வோம். புலிகள் போராட்டத்தைத் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று தெரிந்து கொண்டும் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழ்ங்கிய விக்கிரமபாகு தமிழ் குறுந்தேசிய வாதத்தின் சிங்கள்ப் பிரதிநிதியாகவே செயற்பட்டார் என்பதும் இன்று வரை அது குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாரற்ரவர் என்பது ஒரு புறமிருக்க புலிகளின் ஆதரவு அமைப்புக்கள் கூட இவரைக் கைவிட்டு அரச பயங்கரவாதியான சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பது வேடிக்கையானதும் கூட.

இங்கு யார் எந்தப் பக்கம் என்பது தவிர, இன்றைய இலங்கைத் தேர்தல் என்பதன் அடிப்படையே கேள்விக்குரியதாகும்.

வன்னிப் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்

வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், தென்னிந்தியாவிலே இளைஞர்கள் தீக்குளித்துச் செத்துப் போயிருக்கிறார்கள். அர்ப்பணத்தோடும், தியாக உணர்வோடும் ஆயிரக்கனக்கானோர் தெருவில் இறங்கிப் போராடியிருக்கிறார்கள். புலம் பெயர் தேசங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் தடைகளை மீறி, நகரங்களைச் செயலற்றுப் போகச் செய்திருக்க்கிறார்கள். ஆனாலும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில், வட கிழக்கிலோ, மலையகத்திலோ எந்தப் போராட்டங்களும் இனப்படுகொலையைக் கண்டித்து நிகழவில்லை. ஈராக்கிலும், காஷ்மீரிலும், இராணுவத்தின் இரும்புக்கரங்களுள் இருந்தே இவ்வாறான ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்கின்றன என்றால் ஏன் தமிழ் பேசும் சிறுபான்மையினர் வாழ்கின்ற பகுதிகளில் இவ்வாறான அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழவில்லை என்று பலர் கேள்வியெழுப்புகிறார்கள். இதற்கெல்லாம் பல காரணங்கள் ஈழத்தின் குறிப்பான புறச் சூழலை ஒட்டி முன்வைக்கப்படலாம்.

சொல்லப்பட வேண்டிய செய்தி

நாங்கள் உலக நாடுகளின் பின்புலமாக அமைய, இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்திய இனப்படுகொலையை போர்க்குணத்தோடு ஒருங்கு சேர எதிர்க்கிறோம் என்று கூற தேர்தல் ஒரு புதிய சந்தர்ப்பம்.

உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளுக்கும், பரந்து கிடக்கும் மனிதபிமானிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் யார் என்பதைப் புரியவைக்க இது ஒரு புதிய சந்தர்ப்பம். ‘நாங்கள் சாகடிக்கப்பட்ட மக்களின் பிணங்களின் மேல் நடத்தப்படுகின்ற தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை’. ‘இலங்கையின் ஒற்றை ஆட்சிக்குள் நடத்தப்படும் இந்த நாடகத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.’

‘இந்த அமைப்பு முறை எமது உரிமைகளுக்கு எதிரானது. நாங்கள் திட்டமிட்டு இன்னுமொரு முறை ஏமாற்றப்படுகிறோம்’. என்பதை நாம் சார்ந்த உலகத்திற்குக் கூற வேண்டும். தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் வாழுகின்ற அனைத்துப் பிரதேசங்களும் ஒருமித்து தேர்தலைப் புறக்கணித்து,அனைத்தும் செயலிழந்து, தேர்தல் நாளில் தெருக்களும் வெறிச்சோடியிருக்குமானால் நாங்கள் உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லலாம்.

Exit mobile version