Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தல், அபிவிருத்தி, புலம்பெயர் வியாபாரிகள் : சபா நாவலன்

முப்பது ஆண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய குறுந்தேசிய வாத அரசியல் முள்ளிவாய்க்காலில் முடிபிற்கு வந்த பின்னர், இலங்கையின் புதிய அரசியல் சூன்யமான சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. புலிகளின் பின்னர் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் அரச அடக்குமுறைக்கு எதிரான பலமான எந்த அரசியல் சக்திகளும் அற்றுப்போன சூழல் உருவாகியுள்ளது.

இலங்கை சோவனிச அரச அதிகாரம், புலிகளைக் காரணமாக முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலிருந்து உருவாகவல்ல அனைத்து எதிர்ப்புக் சக்திகளையும் நிர்மூலமாக்கியுள்ளது.

இன்னொரு புறத்தில், தமது தமிழ் பேசும் மக்கள் சார்ந்த ஜனநாயக, முற்போக்கு எதிர்ப்பரசியலும் அதன் கீழ் நிலை அங்கங்களான வெகுஜன அமைப்புக்களும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன.

இந்த அரசியல் பகைப்புலத்திலிருந்து தான் இலங்கை அரச சர்வாதிகாரம் இலங்கை முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது. உலகின் புதிய பொருளாதார ஒழுங்கு ஏற்படுத்திய அரசியல் சூழல், துருவ வல்லரசுகளின் தோற்றம் என்ற அனைத்துப் புறக்காரணிகளும் ஒருங்கு சேர அரச பாசிசம் ஒரு குறித்த நீண்ட காலத்திற்கு தன்னை நிலை நிறுத்தும் வலுவைப் பெற்றுள்ளது.

 இந்த அரசியற் சூழல் இரண்டு பிரதான புறநிலைகளை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசினதும் ஆசியப் பொருளாதார உருவாக்கத்தினதும் அரசியல் பொருளாதர நலன்களுக்கு உட்பட்டுச் செயலாற்றும் இலங்கை அரசு இரண்டு முதன்மையான அரசியற் செயற்பாடுகளை கொண்டுள்ளது.

எதிர்ப்பரசியலின் சாத்தியத்தை நிர்மூலமாக்கும் வழிமுறைகளை இலங்கை அரசும் அதன் துணை அமைப்புக்களும் தமிழ்ப் பேசும் மக்களின் மத்தியிலிருந்து உருவாக வாய்ப்புள்ள தேசிய எழுச்சியை அழிப்பதன் மூலமே சாதித்துக்கொள்ள முனைகின்றன:

வடகிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பல்தேசியக் நிறுவனங்களின் குப்பை மேடாக இப்பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக ஒழுங்கு சீர்குலைந்துள்ள வடகிழ்க்கில் இவ்வொழுங்குகளை நட்சத்திர விடுதிகள், நட்சத்திர உணவகங்கள், மதுபான விடுதிகள், உல்லாசப் பயணத்துறை போன்ற நுகர்வு வர்க்கத்தின் உணர்வுகளிலிருந்து நிறுவுதலூடாக சீரழிவை ஏற்படுத்துகிறது.

இதேவகையில் திட்டமிட்ட நுகர்வுக் கலாச்சாரத்தால் ( consumeristic culture) உருவாக்கப்பட்ட Franchised state என்று அழைக்கப்படும் பங்காளாதேஷ் என்ற நாடு இன்று மீட்சியடைமுடியாத வறுமையில் சிக்கித் தவிக்கிறது.

 உரிமைக்கு எதிராக “சீரழிவு” அபிவிருத்தியை முன்னிறுத்தும் ஒன்று கூடல் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக்த்தில் அரசின் துணைக் குழுக்களாலும் அதன் புலம்பெயர் தொங்கு தசைகளாலும் நிகழ்த்தப்பட்டது. இலங்கை அரசின் இந்தத் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் இந்திய அரசும் அதன் பல்தேசியக் நிறுவனங்களும் உள்ளன என்பது அவற்றின் மிகையான முதலீடுகளே சாட்சி.

 திட்டமிட்ட குடியேற்றங்கள், சிங்கள மொழியின் திட்டமிட்ட திணிப்பு, பௌத்ததின் விரிவாக்கம், போன்ற அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் அரச துணைக்குழுக்களின் துணையோடு இனச் சுத்திகரிப்பாக நடைமுறைப்படுத்தபடுகிறது. தேசியத்தைச் சீர்குலைத்தல் என்பதும் இனச் சுத்திகரிப்பு என்பதும் இன்றைய இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் பிரதான அம்சமாகும். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நில அபகரிப்பையும் அரச துணைக் குழுக்களும் அவற்றின் புலம் பெயர் தொங்கு தசைகளும் நியாயப்படுத்துகின்றன.

அழிவிற்குப் பின்னான சமூகச் சூழலில் மனித நடத்தை குறித்து ஆராயும் கிரிஷ் அஷ்மான் தனது நூலில்( Understanding Human Behavior and the Social Environment) குறிப்பிடுவது போல, அழிவிற்குப் பின்னான ஐந்தாண்டுகள் வரை நீடிக்கக்கூடிய சமூகச் சூழலில் மனித நடத்தை சுய நலம் மிக்க சொந்த இருப்பை நிலை நாட்டிக்கொள்ளவே பயன்பெறும் என்று மதிப்பிடுகிறார். இயற்கையான இந்த மனோ நிலையை பல புறக்காரணிகளும் தாக்கத்திற்கு உட்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வாறான மனோ நிலையைப் பயன்படுத்திக்கொள்ள அரசியல் வியாபாரிகள், அபிவிருத்தி என்ற சுலோகத்தின் கீழ் இணைந்து கொள்கிண்டு மக்கள் மீதான தமது அதிகாரத்தைப் பிரயோக்க முனைகின்றனர்.

ஆசிய நாடுகளுக்கு காலனியாதிக்க நாடுகள் ஏற்றுமதி செய்த ஜனநாயக முறைமையானது, நிலப்பிரபுத்துவ அமைப்புடன் ஒப்பீட்டளவில் முற்போக்கானது. ஏற்றுமதி செய்யப்பட்ட ஆசிய ஜனநாயக முறைமை உலக மயமாதலின் பின்னால் செத்துப் போய்விட்டது. மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்து சாரிசாரியாகக் கொன்றொழித்துவிட்டு அவர்களின் பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் புதிய ஆசிய ஜனநாயகம் அபாயகரமானது.

பழங்குடி மக்கள் மீது அவர்கள் வாழும் பகுதிகளைக் கொள்ளையடிப்பதற்காக படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிடும் இந்திய ஜனநாயகம், ஐம்பதாயிரம் அப்பாவிகள் மீது குண்டுபோட்டு அழித்த இலங்கை ஜனநாயகம் என்று அது தனது குறைந்தபட்ச நெகிழ்வுத் தன்மைகளைக் கூட இழந்துவிட்டது.

முதலாளித்துவ ஜனநாயகத்தை மறு சீரமைப்பதற்கான வேலைகள் அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த ஜனநாயகம் ஏற்படுத்தும் இடைவெளியில் மக்களமைப்புக்கள், மக்கள் நிர்வாக அங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புக்கள், மாணவர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தவிர, அரசும் அதன் துணைக் குழுக்களும் அவற்றின் புலம்பெயர் நீட்சிகளும் எதிர்கொள்ளப்பட வேண்டும். உலகமெங்கும் பரந்து கிடக்கும் அனைத்து ஒடுக்கப்பட்ட முற்போக்கு சக்திகளின் இணைவோடு இதன் ஆரம்பம் அமைக்கப்படலாம்.

ஆக, முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுசீரமைப்பதற்காக, அதன் அடிப்படை ஜனநாயக விழுமியங்களை மறு ஒழுங்கிற்கு உட்படுத்துவதற்காக, பாராளுமன்ற ஜனநாயகத்தை இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்ளாத அரசியற் சக்திகளை தேர்தலில் ஊக்கப்படுத்துவதும் ஆதரவளிப்பதும், முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய கடமை.

Exit mobile version