Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேர்தலின் பின்னர் கிழக்கின் அரசியல் – முஸ்லிம்களின் கோரிக்கைகளும் தமிழர்களின் நிலையும் : விஜய்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீ.மு.காங்கிரஸ் மாறியுள்ள நிலையில், ஸ்ரீ.மு.காங்கிரஸினதும் முஸ்லிம் தலைமைகளினதும் பேரங்கள் அதிகரித்துள்ளன: அரசியல் கோரிக்கைகள் பெருகியுள்ளன.

14 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.ம.சு.முன்னணியுடன் 01 ஆசனத்தினைப் பெற்ற சுதந்திர தேசிய முன்னணியும் இணைந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. மறுபுறம் 11 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ் அரசுக் கட்சிக்கு 04 ஆசனங்களைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இந்த நிலையில்தான் கிழக்கில் 07 ஆசனங்களைப் பெற்றுள்ள ஸ்ரீ.மு.காங்கிரஸின் துணையின்றி எக்கட்சியும் ஆட்சியளிக்கு முடியா நிலை தோன்றியிருக்கிறது.

தேர்தலில் கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகவும், முஸ்லிம் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கவும் ஸ்ரீ.மு.காங்கிரஸை பலப்படுத்த வாக்களிக்குமாறு கோரியிருந்த அக்கட்சியினருக்கு இது ஒரு வரப்பிரசாதமாக முடிந்திருக்கிறது. பேரம் பேசும் அரசியலினூடாக முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க முனையும் அக்கட்சிக்கு இச்சந்தர்ப்பம் பெரும் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வரப்பிரசாத நிலையே அரசியலில் அவர்கள் நினைப்பிற்கு மாறான ஒரு வில்லங்க நிலையை எற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீ.மு.காங்கிரஸ் பாராளுமன்றத்தில் ஐ.மு.சு.கூட்டமைப்புடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிற போதும் கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட்டதுடன் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டுமிருந்தது. அண்மைக்காலங்களில் ஏற்பட்ட மத ரீதியான கசப்புணர்வினால் முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராண எதிர்ப்புணவு ஏற்பட்டிருந்த காரணத்தினால் ஸ்ரீ.மு.காங்கிரஸ் தனித்தும்; அரசாங்கத்தினை தீவிரமாக எதிர்த்தும் நிற’க வேண்டியேற்பட்டது. தேர்தல் காலத்தில் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களால்; ஸ்ரீ.மு.காங்கிரஸ் இனவாதம் பேசி வாக்குகளைப் பெற முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.

எனவே அரசாங்கத்துடன் இணைவது என்பது அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தலாம். எனவே பெரும் நன்மைகள் கிடைத்தால் மட்டுமே ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்தலாம். தற்போது முஸ்லிம்கள் மத்தியிலிருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. முக்கியமாக முஸ்லிம் முதலமைச்சர், கிழக்கு மாகாணத்தை முஸ்லிம் மாகாணமாகப் பிரகடனப் படுத்தல் உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டள்ளன.

மற்றொரு புறம் ஸ்ரீ.மு.காங்கிரஸ் முன்வைக்கும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐ.மு.சு.கூட்டமைப்புடன் இனைந்து ஆட்சியை அமைத்தால், அம்மாகாண சபையில் பிள்ளையான் எனும் தமிழ் உறுப்பினர் ஒருவர் மாத்திரமே இருப்பார். த.தே.கூட்டமைப்பு சார்;பான தமிழ் உறுப்பினர்கள் எதிரணியில் இருப்பார்கள். எனவே, முஸ்லிம் முதலமைச்சரை தமிழ் மக்களும் அங்கீகரித்தார்கள் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். முதன் முறையாக பேரம் பேசும் அரசியல் மூலம் கிடைக்கும் முதலமைச்சர் பதவி ஒரு முழுமையற்ற – முழு மாகாண மக்களையும் பிரதிபலிக்காத பதவியாக அமைந்து விடும். முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கில் தமிழ் மக்கள் ஒரு முக்கிய மக்கள் பிரிவினர் என்பது புரிந்திருக்குமோ என்பது தெரியிவில்லை. ஓரளவிற்கு இதனை அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுவரை முடிவெடுக்க முடியாத தடுமாறும் நிலை, ஸ்ரீ.மு.காவும், ஐ.மு.சு.கூட்டமைப்பும் த.தே.கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இதன் விளைவானதாக இருக்கலாம்.

மற்றொரு புறம், ஸ்ரீ.மு.காங்கிரஸ் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து கொண்டால் இரண்டு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி வரும். ஒன்று, மத்திய அரசில் நிலவும் ஐ.மு.சு.கூட்டமைப்புடனான உறவு சீர்குலையும். அமைச்சுப் பதவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தற்போதுள்ள வசதி வாய்ப்புக்கள் பறிபோகும். இரண்டாவதாக, முஸ்லிம் முதலமைச்சர் உட்பட்ட முக்கிய கோரிக்கைகள் ஆளும் கட்சியினால் ஆங்கீகரிக்கப்படாத நிலை தோன்றும்.

இத்தகைய அரசியல் முக்கியத்தவம் மிக்க கோரிக்கைகள் பதவி நிலைக்கு அப்பால் அது சார்பானவர்களிடம் அங்கீகாரத்தை – ஏற்றுக்கொள்ளலைப் பெற வேண்டியது அவசியமானதாகும்.

பேரம் பேசும் அரசியலில் உள்ள அபாய நிலையை ஸ்ரீ.மு.காங்கிரஸ் தற்போது எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிகிறது. பேரம் பேசுதலில் மூலமாக அன்றி வலுவான போராட்டங்கள் ஊடாகவே அரசியல் கோரிக்கைள் வலுவானதாக – ஏற்றுக் கொள்ளத்தக்கதாக மாற்றமடையும். இந்த ஏற்றுக் கொள்ளல் சொந்த இன மக்களால் மட்டுமன்றி அது சார்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும். முஸ்லம் முதலமைச்சர் என்ற பதவி பற்றி அவர்கள் பலகாலமாகப் பேசிவருகிறார்கள். ஆனால் கிழக்கு முஸ்லிம் மாகாணமாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானதொரு அரசியல் கோரிக்கை.

அக்கோரிக்கையினை இன்றைய பேரம் பேசல் சந்தரப்பத்தினைப் பயன்படுத்தி அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் மத்தியில் கிழக்கை – அம்பறையை யைமாகக் கொண்ட ஒரு அரசியல் அலகு என்ற கோரிக்கையே இதுவரை காலமும் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவற்றிற்கு அப்பால், த.தே.கூட்டமைப்புத் தலைவர்கள், முஸ்லிம் முதலமைச்சர் உட்பட்ட பல சலுகைகளை வழங்குவதாக கூறி ஸ்ரீ.மு.காங்கிரஸை இணையுமாறு கோரியுள்ளனர். இதுவரைக்கும் முதலமைச்சர் பதவியை பரிமாறிக் கொள்ளலாம் என்றே கூறி வந்த த.தே.கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்வாறு கூறியிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பது கேள்விக்குரியதே. கிழக்கில் முதலமைச்சர் பதவியை மையமாக வைத்தே த.தே.கூட்டமைப்புத் தலைவர்கள் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன், முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கை வட, கிழக்கு இணைப்பு என்ற தமிழர்களின் கோரிக்கையுடன் இணைந்து நிற்குமா?

கிழக்கின் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு நேரடியாக போட்டியிட்டு தமிழ்த் தேசியத்தினை மலினப்படுத்தக் கூடாது, பொதுக் குழுவொன்றினை தேர்தலில் களம் இறக்க வேண்டும் என்ற கோரிக்கை பகிரங்கமாகவே முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதனையும் மீறி சர்வதேசங்களின் வேண்டு கோளிற்காக தேர்தலில் த.தே.கூட்டமைப்பு களம் இறங்கியது. பின்னர் வேட்பாளர்கள் தெரிவின் போதும் அக்கட்சியினர் முறையாக நடந்து கொள்ள வில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. கடந்த தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் மக்கள் மத்தியில் பணியாற்றாத பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களையும் தெரிவு செய்தமை பற்றி பகிரங்கக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

கல்குடாத் தேர்தல் தொகுதியில் பிள்ளையானும், கருணாவின் சகோதரியும் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிடும் நிலையில், அப்பகுதயில் அவர்கள் தளம் கொண்டுள்ள நிலையில, அவர்களை எதிர்கொள்ளத்தக்க பலமான வேட்பாளர்களை தெரிவு செய்யாமை மற்றொரு குற்றச்சாட்டாகும். அதற்குத் தகைiயான வேட்பாளர்கள் இருந்தும் தெரிவு செய்யவில்லை. மட்டக்களப்பின் முதன்மை வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெறும் வேறு ஒருவரை அப்பகுதியில் வேட்பாளராக நிறுத்த விரும்பாதமையினாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுவதில் எந்தளவு தூரம் உண்மையுள்ளதோ தெரியவில்லை.

மேலும், பிரச்சாரத்தினை திட்டமிட்டு. வலுவானதாகவும் மேற்கொள்ள முடியவில்லை. தீவிர தேசிய ஆதரவாளர்களின் துணையுடன் தான் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற்றது. தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கான அவாவவை த.தே.கூட்டமைப்பு அறுவடை செய்துள்ளது.

மேலும், மட்டக்;களப்பில் த.தே.கூட்டமைப்பின் வாக்குகள் மாற்றப்பட்டாதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், தாங்கள் அந்த நேரத்தில அங்கு நிற்கவில்லை என்றே த.தே.கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்சியினரும், பல ஆர்வமுள்ள தனிநபர்களும் அங்கு நின்று நிலைமைய அவதானித்திருக்கிற நிலையில் இவர்கள் இப்படிக் கூறியிருக்கிறார்கள். மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து தங்கள் வாக்குப் பலத்தை வழங்கியிருக்கிற நிலையில் அதனைக் காப்பாற்ற கூட்டமைப்பினால் சிறு போரட்டத்தினை விடுத்து சட்டரீதியான சிறு செயற்பாட்டையேனும் மேற்கொள்ள முடியாது போயுள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு, வேட்பாளர் தெரிவிலும் கோட்டை விட்டு, பிரச்சாரத்தினையும் ஒழுங்குறச் செய்ய முடியாது, வாக்கு மாறாட்டத்தினையும் தடுப்பதில் தவறிழைத்து விட்டு இரண்டு அல்லது மூன்று ஆசனங்களை இழந்து ஏனைய கட்சிகளை பலமாக்கியிருக்கிறார்கள்.

போனஸ் 02 ஆசனங்களையும் இழந்திருக்கிறார்கள். அதன் பின்னர், மக்கள் நலன் சார்ந்து இணைந்து செயற்பட வருமாறு ஸ்ரீ.மு.காங்கிரசிற்கு அழைப்பு விடுக்காது சலுகைகளை வழங்கி அவர்களை இணைக்க முயற்சித்து வருகிறார்கள். அதிலும் கிழக்குத் தமிழ் மக்கள் மத்தியில் ஆசைகாட்டப்பட்ட முதலமைச்சர் பதவியை வழங்குவதாக வேறு கூறியிருக்கிறார்கள். இந்த நிலைமைகள் கிழக்கில் த.தே.கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு ஒரு சிறு பின்னடைவை ஏற்படுத்தும். அது மாற்று அரசியல் சக்திகளுக்கு ஒரு வலுவை ஏற்படுத்தும்.

முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னரும், கடந்த மூன்றாண்டு காலமான பல்வேறு நெருக்கடிகளுக்கும் சளைக்காது முகம் கொடுத்தும் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்துச் சென்றதில் த.தே.கூட்டமைப்பின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் அவர்களின் அரசியல் தவறுகள் தமிழ் மக்களிற்குப் பின்னடைவுகளாக அமையும் போது அதனை மீறிச் செல்வதும் தவிர்க்க முடியாததே. எந்த வகையிலும் போராட விரும்பாது ஆனால் எதிர்ப்பரசியலுக்குத் தலைமை தாங்க முனையும் அவர்களால் -போரடியே உரிமைகளைப் பெற வேண்டிய நிலையிலுள்ள தமிழர்களுக்குத் தலைமை தாங்க முடியுமா என்பதுவும் கேள்விக்குரியதே.

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தேர்தல், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழ்ப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரங்கள், முடிவுகள், முஸ்லிம் தலைமைகளின் கோரிக்கைகள் தமிழர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று ஏற்பட்டுள்ள இந்த அரசியல் விழிப்புணர்வு தற்காலிகமானதா, போலியானதா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

மக்கள் விடுதலைக்கான வழியைக் காட்ட ஒரு இறைதூதர் வரமாட்டார் என்பதனையும் மக்கள் தாம் தங்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் கூறி முடிக்கிறேன்.

Exit mobile version