Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேயிலைத் தடையை நீக்க ஆட்கொல்லி அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளுக்கு இணக்கம்!

சிறிலங்காவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தடைசெய்திருந்த அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை மீண்டும் இறக்குமதி செய்யவேண்டுமென ரஷ்யா அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளைப் பாவிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உருவாகுவதாக சிறிலங்கா அரசாங்கம் தடைவிதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

இதில் 2018ஆம் ஆண்டு அஸ்பெஸ்ரஸ் கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முற்றாகத் தடைசெய்வதாகவும், 2024ஆம் ஆண்டுக்குள் அதன் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தது.

சிறிலங்காவுக்குத் தேவையான அஸ்பெஸ்ரஸ் கூரைத் தகடுகளை ரஷ்யாவே ஏற்றுமதி செய்து வந்தது.

இந்நிலையிலேயே, கடந்த வாரம் சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையில் வண்டுகள் இருப்பதாகத் தெரிவித்து, சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு ரஷ்யா இடைக்காலத் தடை விதித்தது.

ரஷ்யாவின், 23 வீதமான 18மில்லியன் தொன் தேயிலையை சிறிலங்கா அரசாங்கமே ஏற்றுமதி செய்து வந்தது.

சிறிலங்கா, கடனில் மூழ்கியுள்ள இந்நிலையில், ரஷ்யா தேயிலைக்கான தடையை விதித்ததால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அவசரமாக கடிதம் எழுதியுள்ளதுடன், அடுத்த வாரம் அமைச்சர்கள் குழுவொன்றையும் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.

இதன்போது அஸ்பெஸ்ரஸ் கூரைத்தகடுகளை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்காவுக்கு ரஷ்யா அழுத்தம் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் அழுத்தத்திற்கு சிறிலங்கா இணங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version