Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய விடுதலைப் போராட்டம் தொடரும் – யார் தடைசெய்கிறார்கள் : சபா நாவலன்

mahinthaஇன்று மகிந்த ராஜபக்சவின் பலம் என்பது  சிங்கள பௌத்த மக்களின் பாதுகாவலனாகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதே. சிங்கள பௌத்ததின் எதிரிகளாக சிறுபான்மைத் தேசிய இனங்களை வெளிக்காட்டிக்கொள்வது என்பது முதலாவது தந்திரோபாயம். வட கிழக்குத் தமிழர்களையோ முஸ்லிம்களையோ அன்றி மலையகத் தமிழர்களையோ சிங்கள பௌத்ததின் எதிரிகளாகக் காட்டிக்கொள்வது அறுபது ஆண்டுகால பேரினவாதத்தின் செயற்பாடாகத் தொடர்கிறது. இன்று மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னதாக அது மேலும் சிக்கலான நிலையை அடைந்துள்ளது.

சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை ஊடாக சிங்கள மக்களின் உணர்வுகளை நச்சூட்டி அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது இலங்கையில் சமூகக் கட்டமைப்பிற்கு அவசியமானது. இனவாதம் ஓரளவு தணிந்திருந்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இலங்கை அரசிற்கு எதிரான வர்க்க எழுச்சிகளைக் காணமுடியும். சமுகத்தின் நில உடமைச் சிந்தனையைப் பேணுவதற்கு இந்தியா போன்ற அரசுகள் கையாளும்  இந்துத்துவ தத்துவங்கள் இல்லாத நிலையில் இவ்வாறான எழுச்சிகள் பெரும்பாலும் உடனடியாகவே சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடுகின்றன.

சரி தவறு என்பதற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இலங்கை அரசிற்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதம் தாங்கிய எழுச்சிகள் ஆட்சியைக் கையகப்படுத்தும் வரை நகர்ந்துள்ளன. இவ்வாறான எழுச்சிகள் ஏற்படுகின்ற அளவிற்கு வறுமையும் வேலையின்மையும் ஒடுக்குமுறையும் சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.

ஆக பேரின வாதிகளின் ஒவ்வொரு நகர்விற்கும் பௌத்த சிங்கள சாயம் பூசவேண்டிய நிலை காணப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச அல் ஜசீராவில் நேர்காணல் வழங்கும் போது கூட கையில் பௌத்த சக்கரத்தைச் சிங்கள மக்களை நோக்கிச் சுழற்றவேண்டியிருக்கிறது.

இதனால்தான் தமிழ்ப் பேசும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமே சிங்கள மக்களின் விடுதலைக்கும் ஆதரமாக அமையும் என்பது வெளிப்படை. ஆக, சுய நிர்ணய உரிமைக்கான ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் போராட்டம் இலங்கையில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்வாக அமையும்.

இத்தவிர்க்கவியலாத நிகழ்வினை எப்படி அழிப்பது அல்லது கையாள்வது என்பதுதான் இலங்கை பேரினவாத அரசினதும் ஏகாதிபத்தியங்களதும் முன்னால் தொக்கி நிற்கும் கேள்வி. கடந்த 30 வருடங்களாக சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வெற்றியை நோக்கி நகர முடியாதவாறு ஏகாதிபத்தியங்களால் மிகவும் நுணுக்கமாகக் கையாளப்பட்டு அவர்கள் வேண்டிய வேளையில் அழித்து துவம்சம் செய்தனர்.

இலங்கையில் இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் நிராகரிப்பதைப் போலன்றி சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயகத்திற்குக்கூட முன் நிபந்தனை மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட. இலங்கை அரசு ஆயுதங்களுடன் இராணுவ ஒடுக்குமுறை மேற்கொள்ளும் சூழலில் இப்போராட்டம் ஆயுதப் போராட்டமாக அல்லது அதன் முன்னேறிய வடிவத்தில் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமாகத் தான் அமைய முடியும்.

80களின் ஆரம்பத்திலேயே இந்த அரசியல் புறச் சூழலைச் சரியாகக் கணித்துவைத்திருந்த இந்திய நீட்சிவாத அரசு இலங்கையில் ஆயுதக் குழுக்களைத் தமது தேவைக்கேற்பக் கையாண்டது.

மேற்கு ஏகாதிபத்திய அரசுகளும் போராட்டத்தின் ஒவ்வொரு புள்ளியிலும் மூக்கை நுளைத்தன. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புக்கூட ஆயுதப் பயிற்சியை வழங்கியது.

போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தமது கைகளில் அடக்கி வைத்திருந்த இந்த நாடுகள் இறுதியில் இன அழிப்பை நடத்தி இரத்தம் குடித்து மகிழ்ந்தன.

2009 ஆம் ஆண்டு இனவழிப்பின் பின்னர் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெப்போதையும் விட அதிக அவசியமாகியுள்ள நிலையில் புதிய உக்திகள் அதன் மீட்சியைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு புறத்தில் போராட்டத்திற்கான அவசியம் மக்களால் உணரப்படும் போதெல்லாம் ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று நவனீதம் பிள்ளையிலிருந்து அமரிக்க அதிகாரிகள் வரை திடீரென முளைத்துவிடுகின்றனர். இவர்கள் நினைக்கும் போதெல்லாம் இராணுவ ஆக்கிரமிப்பை நடத்துபவர்கள். உலகம் முழுவதும் தேசிய விடுதலைப் போரட்ங்களை அழித்தவர்கள். அழிப்பதற்குத் துணை போனவர்கள். இலங்கையில் இனச் சுத்திகரிப்பை நிறுத்துவதற்கு சிறிய அழுத்தங்களே போதுமானது. இருப்பினும் அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ஒரே அச்சம் மீண்டும் போராடம் எழுந்துவிடக் கூடாது என்பதே.

இனவழிப்பு நடைபெற்ற பின்னர் பல்வேறு மக்கள் எழுச்சிகள் இராணுவ ஒடுக்கு முறையையும் மீறி நடைபெற்றிருக்கின்றன. இவற்றை அடுத்த நிலையை நோக்கி வளர்த்தெடுக்க அரசியல் தலைமைகள் அற்றுப்போயிருந்தாலும் அது தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டன. ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருங்கள்’ என்ற வகையில் இந்தியாவும் மேற்கு ஏகபோக அரசுகளும் கூறிவந்தன. இன்று ‘நான் சட்டரீதியாக எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் நீங்கள் அடங்கியிருங்கள்’ என்று கூறுவதற்கு தமது அடியாள் ஒருவரை அழிக்கும் அரசுகள் தெரிந்தெடுத்துள்ளன. அவர் பெயர் சீ.வி.விக்னேஸ்வரன்.

மேற்கு ஏகபோக அரசுகளும், ஐ,நாவும் மறுபக்கத்தில் ராஜபக்சவைத் தண்டிக்கிறோம் என்றும் தமிழர்களுக்கு உரிமை வாங்கித்தருகிறோம் என்றும் மாயையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் தோன்றுவதற்கான காலம் பிந்தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

80 களில் இந்திய அரசு போராட்டத்தை அழிப்பதற்காக ஆயுதங்களுடன் செய்த அதே வேலையை இன்று மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் ஆயுதங்களின்றி மென்மையான அணுகுமுறையூடாகச் செய்து முடிக்கின்றன.

இதனை தனக்கு சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் ராஜபக்ச மறுபுறத்தில் மேற்கு நாடுகள் தனக்கு எதிராகச் செயற்படுகின்றன என்றும் இவற்றின் தலையீட்டிலிருந்து சிங்கள பௌத்தத்தைப் பாதுக்காக்கிறேன் என்றும் மாயையை ஏற்படுத்தி வருகிறார். இந்த மாயையைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் மத்தியிலிருக்கும் போலி இடதுசாரிகளான வாசுதேவ நாணயக்கார மற்றும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றைக் கூட உள்வாங்யிருக்கிறார்.

சிறுபான்மைத் தேசிய இனங்களை எதிரிகளாகச் சிங்கள மக்கள் மத்தியில் உருவகப்படுத்துவது முதலாவது தந்திரோபாயம் என்றால், மேற்கு ஏகதிபத்தியங்களிடமிருந்து சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்வது என்பது இரண்டாவது ராஜபக்சவின் தந்திரோபாயம்.

யாதார்த்தில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையின் போதும் அதன் பின்பும் கூட மேற்கு அரசுகளும் இந்திய அரசும் ராஜபக்சவிற்கும் பேரினவாதத்திற்கும் ஆதரவாகவே செயற்படுகின்றன.

அமரிக்க, சீன, ஐரோப்பிய, இந்திய நிறுவனங்களுக்கு அப்பாவி மக்களின் நிலங்கள் தாரைவார்த்த்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

விக்கிலீக்ஸில் வெளியான கேபிள்களில் ஒன்றாவது இலங்கைஐ அரசை தண்டிப்பதற்கோ மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ மேற்கு ஏகபோக அரசுகள் இதுவரை ஆதரவாக இருந்ததாக எந்த இடத்திலும் பதியப்படவில்லை. இலங்கையில் இதுவரை ஆட்சிசெய்த அத்தனை அரசுகளையும் விஞ்சி மேற்கு ஏகபோகங்களின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ராஜபக்ச அரசே! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்ற துறைகளில் ராஜபக்சவிற்கு முன் எந்த அரசுகளும் கைவைக்கத் துணிந்ததில்லை. மேற்கு அரசுகளின் திட்டங்களுக்கு ஆதரவாகவே சுந்ததிட வர்த்தக வலையத்திலும் வெலிவேரியவிலும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. இப் படுகொலைகளைக் கூட வெறும் மனித உரிமைப் பிரச்சனையாக சில காலங்கள் பேசி தொடர்ச்சியான எழுச்சிகளைத் தடுத்தனர்.

அமரிக்க அரசின் பிரச்சாரப் பீரங்கி போன்று செயற்படும் அல்ஜசீரா என்ற வியாபார ஊடகத்தின் விருப்பு ராஜப்கசவைத் தண்டிப்பதோ அழிப்பதோ அல்ல. மக்கள் எழுச்சிகளையும் புதிய அரசியல் தலைமைகளின் தோற்றத்தையும் தடுப்பதே.

இன்று, இந்தியாவையும், அமரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியங்களயும் அவற்றின் மனித உரிமை அமைப்புக்களையும், தன்னார்வ நிறுவனங்களையும் நிராகரித்து புதிய மக்கள் நலன் சார்ந்த சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படுவதைக் காலம் தாழ்த்தலாகாது. செயற்கையான இராணுவ தாக்குதல்களாக அன்றி சீராக வளர்ச்சி பெறும் ஒடுக்கப்படும் மக்கள் தலைமையிலான போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். இன்று குர்தீஷ் மக்களது போராட்டமும், வியற்னாமியப் போராட்டமும், நேபாள மக்களின் போராட்டமும் எவ்வாறு வெற்றிப்பாதையில் சென்றன என்ற அனுபவங்கள் எமக்கு முன்னால் உள்ளன. அதே வேளை கடந்த காலப் போராட்டத்தில் எமது தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன. உலகம் முழுவதும் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவோரும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் எமக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தயாராகவே உள்ளனர்.

Exit mobile version