புதிய திசைகள் அமைப்பு தனது மேலோட்டமான கொள்கைத் திட்டத்தை விவாதத்திற்கு முன்வைத்துள்ளது. விவாதங்கள், விமர்சனங்கள் வழியாக கீழ் வரும் முன்மொழிவைச் செழுமைப்படுத்தவும் அதனை முழுமைப்படுத்தவும் அனைவரினதும் பங்களிப்பையும் எதிர்பார்பதாக அவ்வமைப்பினர் அறிவிக்கின்றனர். இங்கு கூறப்படும் ஒவ்வொரு விடயங்கள் குறித்தும் ஆரோக்கியமான கருத்துக்களை எதிர்பார்க்கும் புதிய திசைகள், ஏனைய ஊடகங்களும் இப்பிரதியினைப் பதிவிட்டு கருத்தாடலுக்கான வெளியை உருவாக்க உதவுமாறு கோருகின்றனர்.
தேசிய, சமூக விடுதலையை நோக்கிய அமைப்புக்குழு.. -புதிய திசைகள்.
புதிய திசைகள் இலங்கையில் ஒரு கட்சியாகவோ அன்றி ஐக்கிய முன்னணியாகவோ கருதப்பட முடியாத புலம்பெயர் நாடுகளில் வாழும் சமூகப்பற்றுள்ளவர்களின் கூட்டு.
வேலைத் திட்டத்திற்குரிய பிரதான கோட்பாட்டுப் பிரச்சனைகள்:
1. இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு.
2. தேசிய விடுதலைக்கான, தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் முதன்மையானது.
3. பிரதான முரண்பாடுகளைக் கடந்து இலங்கை மக்களின் பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்.
4. குறைநிலை வளர்ச்சியடைந்த – ஏற்றுமதி செய்யப்பட்ட முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், உலகமயமாதல் உருவாக்கிய சமூக அமைப்பும் கருத்தில் கொள்ளப்பட்டு இவற்றின் உருவாக்கமான சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள உழைக்கும் மக்களே எந்தப் போராட்டங்களினதும், குறிப்பாகத் தேசிய விடுதலைப் போராட்டத்தினதும் தலைமைசக்தி.
5. இவற்றிலிருந்து அடிப்படை முரண்பாடாக தரகு முதலாளித்துவத்திற்கும் சமூகத்தின் அடினிலையிலுள்ள உழைக்கும் மக்கள் பகுதியினருக்கும் இடையேயான வர்க்க முரண்பாடாகும்.
6. பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாடிற்கும் தேசிய இன அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களின் வெற்றியே இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனையாக அமைகிறது.
7. ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் முற்போக்குத் தேசிய இயக்கங்கள் நட்பு சக்திகளாகவும், பெருந்தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் சார்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகள் நட்பு சக்திகளாகவும் கருதப்படும்.
8. வறிய கூலி விவசாயிகள், மத்தியதர விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உட்பட்ட அனைத்து உழைக்கும் மக்களும் தேசிய விடுதலைக்கான ஐக்கிய முன்னணியின் நட்பு சக்திகள்.
9. தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சிந்தனை முறையின் நிறுவன மயமான பிரிவுகள் மக்கள் போராட்டங்களின் எதிரிகள்.
10. இலங்கை பேரினவாத, சிங்கள பௌத்த, தரகு முதலாளித்துவ அரசு ஒரு புறத்திலும், அதன் சிந்தனை முறையோடு கூடிய தமிழ்த் தரகு முதலாளித்துவமும் இலங்கையின் ஒடுக்குமுறைக்கான நிறுவனங்கள்.
11. குறைநிலை வளர்ச்சியினதும் நிலப்பிரபுத்துவ சிந்தனையினதும் உருவாக்கமான சாதீயம், பிரதேசவாதம் என்பனவும் பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை போன்ற சமூக ஒடுக்கு முறைகளும், குறுந்தேசியவாதமும் எதிர்கொள்ளப்பட வேண்டியவை.
சர்வதேசச் சூழல்..
1. இலங்கைப் பேரினவாத அடகுமுறைக்கு ஆதரவான அனைத்து ஏகாதிபத்திய அவற்றின் தரகுகளும் மக்கள் விரோத சக்திகள்.
2. புதிய துருவ வல்லரசுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதிக்கமும், இந்திய மேலாதிக்க விஸ்தரிப்பு வாதமும் மக்களின் எதிரிகளே.
3. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து சக்திகளும் சர்வதேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளும், குறிப்பாக இந்தியாவில் சமூக விடுதலையை நோக்கிப் போராடும் சக்திகளும் நட்புசக்திகள்.
புலம்பெயர் சூழல்:
1. புலம்பெயர் சூழல் இலங்கை உற்பத்தியுடனமும் அரசியல் புறநிலை யதார்த்ததிலிருந்தும் அன்னியப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.
2. புலம்பெயர் நாடுகளில் தமிழ் அடையாளத்தை முதன்மைப்ப்படுத்தும் போக்கு குறுந்தேசியவாதமாக உருவாகிறது.
3. தொலை தூரத் தேசியவாதம் என்பது குறுந்தேசிய வாதமாக உருவாகும் போக்கானது எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
4. இதுவரைக்கும் புலம்பெயர் நாடுகள் குறுந்தேசியத்தின் பின்பலமாகவும் ஊக்க சக்தியாகவும் அமைந்திருந்தது பல அழிவுகளை ஏற்படுத்தியது.
தமிழ் நாட்டு சூழல்:
1. தமிழ் நாட்டுத் தமிழ் உணர்வாளர்களின் குறுந்தேசியம் புலம் பெயர் குறுந்தேசியப் போக்குடன் பல ஒத்த போக்குகளைக் கொண்டுள்ளது.
2. இந்திய அரச அதிகாரத்தின் அடக்கு முறை பல தமிழ்த் தேசிய விரக்தி நிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இவர்களை இந்திய அரசிற்கு எதிரான முற்போக்கு இயக்கங்கள் வென்றெடுக்கும் போக்கு ஊக்கமடைய வேண்டும்.
3. தமிழ் நாட்டு முற்போக்கு இயக்கங்களுடனான உறவு வலுப்பெற வேண்டும்.
மலையகத் தமிழர்கள்:
1. இலங்கையின் மலையகத் தமிழர்கள் வடகிழக்குத் தமிழர்களைப் போலவே தனியான தேசிய இனமாகப் பரிணமிக்கும் நிலையிலுள்ளனர்.
2. மலையகத் தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசிய இனங்களில் 95 வீதமான தொழிலாளர்களைக் கொண்ட இனமாகும்.
3. இலங்கை தழுவிய உழைக்கும் மக்களின் போராட்டத்தைத் தலைமை தாங்கும் வலிமைகொண்ட நிறுவன மயமான தொழிலாளர்களை கொண்டது மலையகத் தேசிய இனம்.
முஸ்லீம்கள்:
1. சர்வதேசத் தன்மை கொண்ட, வட கிழக்குத் தமிழர்கள் போலவே வளரும் தேசிய இனம்.
2. தேசமாக உருவாவதற்குரிய தனியான பிரதேசத்தைக் கொண்டிராத பிரதான இயல்பு வளரும் தேசிய இனத்தின் வெளித்தெரியும் பிரதான பங்கு.
3. ஏனைய வளரும் தேசிய இனங்கள் போலவே முஸ்லீம்களின் ஒடுக்கு முறைக்கெதிரான தேசிய இன வளர்ச்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
(பகுதி 1)