
இவற்றை அழிக்கும் பாசிச அரசுகள் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்குத் தீர்வுகளையும் திட்டங்களை முன்வைப்பதாகக் கூறிக்கொண்டே அழிப்பைத் தொடர்கின்றன.
இந்த அழிப்பை ஆழமாகத் குடைந்து பார்த்தால் பல் தேசிய நிறுவனங்களின் பங்கும், நிதி மூலதனத்தின் பூதம் போல வெளியேறும்.
அழிப்பிற்கு எதிராக மக்களின் போராட்டத்தைப் பிந்தள்ளுவதற்காகவும் எதிர்பை எதிர்கொள்ளவும் நாடுகள் ஒன்றிணைந்து கொள்கின்றன. நபர்களும், அமைப்புகளும் முடுக்கிவிடப்படுகின்றன. இவர்களிடையே ஒருவகையான ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டுவிடுகின்றது. இந்த ஒழுங்கமைப்பின் பிரதான நோக்கமாக எதிர்ப்பு சக்திகளை அழிப்பதும் போராட்டத்தைத் முளையிலேயே சிதைப்பதுமே காணப்படுகின்றது.
சிலர் விபரம் புரியாமல் முட்டாள்தனமாகவும் பலர் தமது சொந்த வியாபார நோக்கங்களுக்காகவும் இந்த வலைப்பின்னல்களுள் இணைந்து கொள்கிறார்கள்.
இவர்கள் முன்வைக்கும் பிரதான வேலைத் திட்டங்களில் ஒன்று ‘தீர்வு’ என்பது. தீர்வு என்பது அழிக்கும் பாசிச அரசுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக அவர்களுடன் பேசித் தீர்த்துக்கொள்வது என்பதாகும்.
திட்டமிட்டு தெரிந்தே அழிவுகளை நிகழ்த்தும் பாசிச இனப்படுகொலை அரசுகளிடம் தீர்வு குறித்துப் பேசுவதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் குறைவாக அழிப்பை நடத்துங்கள் என்றா? அல்லது அழிப்பதை அழித்துவிட்டு கிடைப்பதில் எங்களுக்கும் கொடுஙகள் என்றா?
அனைத்து அதிகாரத்தையும் கைகளில் வைத்திருக்கும் அழிக்கும் எதிரியோடு பேசுவதற்கு என்ன இருக்கிறது.
இன்று பேச்சுவார்த்தை என்று முழுச் சமூகத்தையும் மந்தைகளாக்கும் கூட்டங்கள் தெரிந்துகொண்டே தமிழ்ப் பேசும் மக்களின்ம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்கள் மட்டுமல்ல அழிப்பதற்கு ஆதரவளிப்பவர்களுமாகும்.
சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அழிக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் பின்னதாக 13 வது திருத்தச்சட்டமாக இலங்கை அரசியல் சாசனத்தில் திருத்ததிற்கு உட்படுத்தப்படுகிறது.
இன்று 13 வது திருத்தச்சட்டம் என்பதை நிறைவேற்றுவதே தீர்வுக்கான வழி என்று கூறும் அரசியல் பிழைப்புவாதிகள் அது தீர்வல்ல என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து 13 வது திருத்தச்சட்டம் வேண்டும் ஆனால் அது தீர்வல்ல என தவிர்க்க முடியாமல் ஒப்பித்திருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களூடாக தமிழர்கள் மூன்றில் ஒரு பகுதியாக்கப்பட்டுள்ளனர். வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்து கிழக்கில் வாக்கெடுப்பு நடத்திய பின்பே தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற இந்தத் திருத்தச்சட்டம் இது குறித்து எந்த வலுவும் அற்றதாகிவிட்டது.
கிழக்கைப் போன்று இராணுவ ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட வடக்கிலும் இலங்கை அரச பாசிஸ்டுக்களும் அதன் அடிவருடிகளுமே பெரும்பான்மையாக ஆட்சியைக் கையகப்படுத்துவார்கள். காணி மற்றும் போலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட மாகாண சபையில் சிங்களக் குடியேற்றங்களும், பல்தேசிய நிறுவனனக்களின் நிலப்பறிப்பும் தங்கு தடையின்றி நடைபெறும். பாசிச ஆட்சி அதிகாரத்திலிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?
தமிழீழம் பிடிக்கிறோம் என்று தமிழ் நாட்டின் எல்லைக்குள்ளேயே பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டத்தைப் போன்றே தீர்வு பிடிக்கிறோம் என்று இன்னொரு கூட்டம் உருவாகியுள்ளது. அதுவும் செத்துப்போய் புதைக்கப்பட்டுள்ள 13 வது திருத்தச்சட்டத்தை தோண்டியெடுத்து தீர்வு பிடிக்கிறார்களாம்.
இன்று இலங்கையில் தங்குதடையின்றி நிகழ்த்தப்படும் நிலப்பறிப்புக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் எழும் என்றெல்லாம் இலங்கை இந்திய அரசுகள் அச்சமடையத் தேவையில்லை.
நிலப்பறிப்பை உலகம் முழுவதும் நடத்தும் அமரிக்க அரசோடு ஒரு கூட்டமும், இந்திய அரசோடு இன்னொரு கூட்டமும் இணைந்து தமிழர்களுக்கு தலைமை தாங்குகிறோம் என்று ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகின்றனர்.
கேட்டால் தமிழ்ப் பேசும் மக்கள் பலவீனமானவர்கள் என்கிறார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்களின் பலம் ஒருங்கிணைக்கப்படவில்லை. பலத்தைப் பிழைப்புவாதிகளே கூறுபோட்டு அழிப்பவர்களிடம் மக்களை அழைத்துச் செல்கிறார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் போன்றே உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகின்றவர்கள் வாழ்கிறார்கள். சிங்கள மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் முற்போக்கு ஜனநாயாக சக்திகள் போராடுவதை முன்னுதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து புதிய போராட்ட தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளும் போது மட்டுமே தமிழ்ப் பேசும் மக்களின் உறைந்துகிடக்கும் பலம் மேலெழும். இந்த ஒருங்கிணைவின் அழுத்தம் ஈழத்தில் ஜனநாயக இடைவெளியை ஒரு குறித்த எல்லைவரையாவது ஏற்படுத்தும். அந்த ஜனநாயக இடைவெளி மட்டுமே ஈழத் தமிழர்கள் தமது உரிமைக்காகப் போராடும் புதிய உத்வேகத்தை வழங்கும். கனவான்களின் கனவுகல அரசியல் அல்ல.