இந்த வகையில் தேசியம் என்பதன் முழுமையான உள்ளர்த்தம் சரியான வகையில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு தேசிய இனம் பிரிந்து போவதும் அது தன்னாதிக்கத்திற்காகப் போராடுதலும் பிற்போக்கானது என்ற வாதம் வேவ்வேறு நோக்குநிலைகளிலிருந்து முன்வைக்கப்படுகின்றது. ஒரு புறத்தில் உழைக்கும் மக்களைக் கூறுபோடுகின்ற பிற்போக்கு முழக்கமாகவும் மறுபுறத்தில் இனவாதக் குராலாகவும் புனையப்படுகின்றது.
இலங்கையிலும் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளிலும் சுய நிர்ணய உரிமையும் பிரிந்து போகும் உரிமையும் குறித்த உரையாடல்கள் இலங்கை இனப்படுகொலைகளின் பின்னர் முனைப்படைந்துள்ளன.
குறிப்பாக நான்கு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
1. முதலில் பிரிந்து போதலை ஆதரித்தல் என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் பிற்போக்கு முதலாளித்துவத்தை ஆதரிப்ப்பதாக முன்வைத்தல்.
2. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளலும் பிரிந்து போதலை நிராகரித்தலும்.
3. பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொண்டாலும் அதன் உள்ளடக்கமான பிரிந்து போதலை நிராகரித்தல்.
4. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் பிரிந்து செல்லும் உரிமையையும் ஏற்றுக்கொள்ளலும் தேசிய இன ஒடுக்கு முறை மேலோங்கியுள்ள நிலையில் அதற்காகப் போராடல்.
பிரிந்து செல்லும் உரிமையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடது சாரிகள் மார்க்சிய லெனினியத்தை தமது வாதங்களுக்குத் துணையாக அழைப்பதும் மார்க்சிஸ்டுக்களாகத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்வதும் வழமை.
ஒடுக்கும் பேரினவாத அரசின் கருத்தியலோடு ஒரு புள்ளியில் இணையும் இவர்களின் உரிமை மறுப்பு மார்க்சிய ஆய்வறிதலுக்கு அடிப்படையில் முரணானது.
இந்த நிலையில் சுய நிர்ணயம் குறித்தும் பிரிந்து போதல் குறித்தும் லெனின் முன்வைக்கும் தர்க்க ரீதியான ஆய்வுகளை இப்போது மீள் விசாரணை செய்தல் பொருத்தமான அணுகுமுறையாக அமையலாம்.
முதலில் பிரிந்து போதலை ஆதரித்தல் என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் பிற்போக்கு முதலாளித்துவத்தை ஆதரிப்ப்பதாக அமையும் என்ற வாதத்திற்கு லெனினின் தீர்க்கமான பதில் எமது தெற்காசிய இடதுசாரிகளுக்கென்றே கூறுவதைப்போல அமைகிறது. ரோசா லக்சம்பேர்க்குடன் நிகழ்ந்த விவாதத்தில் லெனின் முன்வைகும் கோட்பாட்டு விளக்கம் இது.
” பிரிந்து போகும் உரிமையை ஆதரிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் முதலாளித்துவ தேசியவாதத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என எம்மைப் பார்த்துக் கூறுகிறார்கள். ரோசா லக்சம்பேர்க் இத்தைத்தான் கூறுகிறார். இதற்கு நம் பதில் இதுதான்: இப்பிரச்சனைக்கு செயல்பூர்வமான தீர்வு காணுவது முதலாளிகளுக்குத் தான் முக்கியமானது. இரு போக்குகளின் கோட்பாடுகளையும் வேறுபடுத்தி அறிவதுதான் தொழிலாளர்களுக்கு முக்கியமானது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவிற்குப் போராடுகின்றதோ நாம் அந்த அளவிற்கு அப்போராட்டத்தை ஒவ்வொரு வகையிலும் ஏனையோரைக்காட்டிலும் அதிகமாக ஆதரிக்கிறோம். ஏனென்றால் ஒடுக்குதலுக்குத் தீவிரமாக சிறிதும் விட்டுக்கொடுக்காத எதிரி நாம் தான்.”
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டங்கள் முற்போக்கனவை மட்டுமன்றி அவசியமானவையும் கூட. பிரிந்து போதலுக்கான போராட்டம் என்பதை ஏனையோரைக் காட்டிலும் மார்க்சிஸ்டுக்களும் இடதுசாரிகளுமே ஆதரிக்கின்றனர்.
ஆக, உலக மயமாதல் அதன் பின்னான முதலாளித்துவத்தின் புதிய வடிவங்கள் என்ற அடிப்படையான தத்துவார்த்தப் பிரச்சனைக்கள் குறித்த ஆய்வுகளின் வெளிச்சத்தில் இவை மீட்டமைப்புச் செய்யப்பட வேண்டுமாயினும், இலங்கைப் பிரச்சனையில் பிரிந்து போதல் குறித்த இடதுசாரிகளின் தவறான நிலைபாட்டிற்கு லெனின் உகந்த பதிலை முன்வைக்கிறார்.
தமது கோட்பாட்டுத் தளத்தை விரிவாக்கும் லெனின், பிரிந்து போகும் உரிமையை மறுப்பதன் எதிர்விளைவை இவ்வாறு விளக்குகிறார்.
“நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமையை முன்வைத்துப் ஆதரித்துப் பேசத் தவறினால், நாம் முதலாளிகளின் நோக்கத்திற்கே உதவுவோம். தவிர, ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் நிலப்பிரபுக்களின் வரம்பில்லா ஆட்சியின் நோக்கத்திற்கே உதவுவோம்” என்கிறார்.
ஆக, பிரிந்துபோகும் உரிமையை நிராகரித்தல் என்பதும் ஒடுக்குமுறைக்கு உள்ளான சூழலில் பிரிந்துசெல்வதற்கான போராட்டத்தை நிராகரித்தல் என்பதும் உலக முதலாளித்துவத்திற்குத் துணைசெல்வதாகும். தமது சந்தைப் பொருளாதார நலன்களுக்காக மட்டுமே உலகின் ஒருங்கிணைவைக் குறித்துப் பேசுகின்ற ஏகபோக வல்லரசுகள் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு போதும் ஆதரிக்கப் போவதில்லை.
நமதுஆரம்பகால இலங்கை இடதுசாரித்துவம் பிரிந்து போகும் உரிமையை மறுத்ததும் தேசிய இனப்பிரச்சனை குறித்தை முரண்பட்டைக் கையாளத் தவறியமையும் நிலப்பிரபுக்களுக்கும் தேசிய உருவாக்கத்தின் எதிரிகளான தரகு முதளாத்துவத்திற்குமே வழியைத் திறந்துவிட்டிருந்தது.
தேசிய இன அடக்குமுறையின் உச்சபட்ச எல்லையில் இத் தரகு முதலாளிகளும் நிலப் பிரபுக்களும் தேசியத்திற்கு எதிரான தமது போராட்டத்தை விடுதலைக் குழுக்களூடாக முன்னெடுத்தனர். இவர்களின் பெரும்பகுதி வன்னிப் படுகொலையின் பின்னர் ஒடுக்கும் அரசுடன் இணைந்துகொண்டமை குறித்துக்காட்டத்தக்கது.
இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றுத் தவறு பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை தீவிர வலதுசாரி இயக்கங்களின் தலைமையை நிறுவியது. அவ்வாறான தீவிர வலதுசாரியத்தின் தலைமையில் வளர்ச்சியடைந்த தேசிய விடுதலைப் போராட்டம் இனவாதப் போராட்டமாகச் சீர்குலைய அதன் மறுபுறத்தில் இனவாதத்திற்கு எதிரான பேரினவாதம் மேலும் உறுதிபெற்றது. அதன் அழிவை முள்ளிவாய்க்காலில் சந்தித்த நேர்ந்தது. புலிகள் சார்ந்த இனவாதிகள் எவ்வாறு தமது கடந்தகாலப் போராட்டம் சரியான திசைவழி கொண்டது என இன்னமும் வாதிக்கிறார்களோ அவ்வாறே இடதுசாரிக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகின்றன.
பேரினவாதம், தமிழ் இனவாதம், பிறழ்வுற்ற இடதுசாரியம் என்ற அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அபாயம் இன்னமும் எதிர்கொள்ளப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.