Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசியத் தலைவனின் வழியில் தமிழ்த் தேசிய உணவகத்தில்..:சோளன்

ltte_leaderஇரண்டு வாரங்களுக்கு முன் லண்டன் ஈஸ்டாம் ஈழக் கடைத்தெருவால் தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நடந்துவந்து சிவனே என்று சாப்பாட்டுக் கடையில் குந்தினான் சோளன். ரெண்டு வடையும் தேத்தண்ணியும் ஓடர் போட்டுவிட்டு மூலையில் முடங்கியிருந்தான். மற்ற மூலையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒரே ‘இன்டர்லெக்சுவல்’ திண்டுக்கல் லியோனியின் கூச்சல் தோத்துப்போகும் அளவிற்கு கருத்துப் பரிமாறிக் கொண்டார்கள். ஐரோப்பா கள்ளும் கசிப்பும் செய்த வேலை என்று எண்ணியபடியே வடையை வாயில் வைத்து சோளன் ரீயை உறிஞ்ச ஆரம்பித்தான்.

இடையே கே.பி, கருணா, மொபைல் என்று ‘சொல்லாடல்கள்’ காற்றலைகளில் கலந்து சோளனின் காதுகளில் ஊடுருவ இரண்டு காதுகளும், நாட்டு நாயைப் போல ‘ஓட்டோ மூவிங்’ செய்து முன்னால் வந்தது.

அங்கிருந்த ஆஜானுபாகுவான அவுஸ்திரிலேயன் தாடி வைத்திருந்தவர் வியாபாரம் என்டு வந்தால் கே.பி என்ன கோத்தா என்ன எல்லாரோடும் டீல் வைக்கத்தான் வேணும் என்றார். சோளன் சோமபானம் அருந்தாமலே சுறுசுறுப்பானான். சுற்றியிருந்த சிலர்…கே.பி துரோகி பிஸ்னஸ் பேசவேண்டாம் என்று அன்பொழுக ஆஜானுபாகுவைக் அறிவுறுத்தினார்கள்.

நாங்கள் என்ன காட்டியா குடுக்கிறாம் பிஸ்னஸ் மட்டும் தானே பண்ணுறம். சிங்களவனுக்கு யாவாரம் போறத தடுத்து தமிழன்ர கையில் எடுக்கிறது எங்களுக்குத் தானே நல்லது. அதுவும் தேசியத்தை வளர்ப்பதற்கு ஒரு பங்கு என்றார் ஆஜானுபாகு.

யூதர்களும் அப்படித்தான். யாவாரத்தை வளர்த்தே ‘அவங்கட தமிழ் ஈழத்தைப்’ பெற்றனர் என்றார். இதுவரைக்கும் விஜய் ரசிகர்களின் ரேஞ்சில் இருந்த தமிழ் ஈழ தேசியத்தின் உச்சக்கட்ட அறிவை எண்ணி சோளன் வெம்பியதுண்டு. ஆனால் அதையும் விஞ்சியதாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விஸ்கி ஸ்பீடில் தேத்தண்ணியை குடித்த சோளன் கிளாசை அறைந்து மேசையில் வைத்து ரெஸ்ரோரன்ட் அண்ணாச்சியின் முறைப்பைச் சந்தித்துக்கொண்டான்.

சோளனின் முதுகுப் பக்கமாகவே ‘தேசிய விவாதம்’ நடைபெற்றுக்கொண்டிருந்ததால் முகங்களை நேரடியாகப் பார்க்க முடியவில்லை. பேச்சுக்கள் மட்டும் லியோனியின் தொனியில் கேட்டது. ஆஜானபாகுவின் தொண்டைக்குள் அப்புச்சாமி அம்பிளிபயர் வைத்துப் படைத்திருந்திருப்பார் போல… அப்படி ஒரு அசத்தலான குரல்.

அவரை எதிர்த்த நலிந்த தேசியர்கள் 30 வருடங்களாக பெற்றுக்கொண்ட தேசிய சிந்தனையிலிருந்து சில முத்துக்களை அவிட்டுவிட்டனர். ‘என்னெண்டாலும் சிங்களவன் ஏமாற்றிப்போடுவான். கடைசீல எல்லாத்தையும் அடிச்சுக்கொண்டு ஓடீருவான்’ என்றார் ஒருவர்.

அதற்கு உத்தியோகபூர்வமாக மறுப்புத் தெரிவித்த மற்றவர் ‘சிங்களவனுக்கு அப்பிடி ஒன்றும் செய்யத் தெரியாது, மோட்டுச் சிங்களவன்’ என்றார் ‘ஆனால் மனசு கேட்கேல்ல’ என்றார்.

சோளனுக்கு இந்த ‘தேசிய அறிஞர்களின்’ முகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. சந்தாணத்தின் நகைச்சுவையை யூரியூப்பில் பார்த்து அழுத நாளிலிருந்து நவீன நககைச்சுவை என்றாலே சோளனுக்கு வெறுப்பு. இப்போது வில்லத்தனம் கலந்த நகைச்சுவை நடைபெற்றுக்கொண்டிருந்தது. கொக்கயின் கலந்த ரசம் மாதிரி உடம்பு புல்லரித்தது.

திடிரென்று ஆஜானுபாகுவின் தொண்டை நசுக்கப்படுவது போல குரல் தளதளத்தது. ‘பேசிய அலைவர்’ என்று ஏதோ அலட்ட ஆரம்பித்தார். போனாப் போகுதென்று சோளன் திசையை மாற்றி விவாதம் நடைக்கும் திசையை நோக்கி உட்கார்ந்து கொண்டான். . அப்போது தான் ஆஜானுபாகு வாயிலிருந்து சூப்பிய கோழிக்காலை எடுத்துக்கொண்டிருந்தார்.

கோழிக்கால் வாயின் எல்லையத் தொட்டதும் அவர் வசனத்தை மீண்டும் ரிப்பீட் பண்ண ஆரம்பித்தார். தேசியத் தலைவரை வாய்க்குள் இருந்த  கோழிக்கால் ‘பேசிய அலைவராக’ மருவ வைத்திருந்தது.

ஆஜானுபாகு வசனத்தை நிதானமாகச் சொன்னார். என் தேசியத் தலைவனின் வழியைத் தான் நானும் பின்பற்றுகிறேன் என்றார். சுற்றியிருந்தவர்கள் கோழியற்ற வெற்று வாயை உற்றுப்பார்க்க ஆரம்பித்தனர். தேசியத் தலைவர் இந்தியனை விரட்ட பிரேமதாசாவுடன் டீல் போட்டு கொழும்புக்கு என்னை அனுப்பேக்க எனக்கு 20 வயசு. அதே சிறு லங்காவோட தான் இப்ப நான் டீல் போடுறன். அதுவும் தனியா இல்ல. தேசியத் தலைவரின் 30 வருச நம்பிக்கைக்கு உரிய கே,பி ஊடாக… அதுவும் தமிழ்த் தேசியத்தை வளர்ப்பதற்காக….! நான் யாவாரம் தொடங்கிறது ஜப்னாவில.. தமிழற்ற நிலத்தில… தமிழன் தொடங்காட்டி சிங்களவன் தொடங்குவான்.. இப்ப கருணாவைக்கூட நான் பிழை சோல்ல மாட்டன்.. கருணா அமைச்சராகாட்டி சிங்களவன் ஒருத்தன் அந்த இடத்தில் குந்தியிருப்பான்…

நான் பார் ரெஸ்ரோரன்ட் தானே திறக்கப்போறன்.. தமிழனும் அனுபவிக்கத் தானே வேண்டும்.. யாழ்ப்பாணம் தானே தமிழீழத்தின் மூளை என்ர ரெஸ்ரோரண்டில மூளையால் வேலை செதவர்கள் களைப்பெடுக்கும் போது மசாஜ் செய்ய வசதியும் இருக்கு..,,தேசியத் தலைவரின் கனவு கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறுது’.

என்று ஒரே மூச்சில் மூச்சுவிடாமல் சொல்லி முடித்த ஆஜானபாகு கையில் வைத்திருந்த கோழிக்காலை கோப்பையில் வைத்துவிட்டு தாடியைத் தடவ ஆரம்பித்தார்.

யாழ்ப்பாணம் மூளை என்றால் தாடி பூனகரி, வன்னி பின்வாசல் … இப்படி இசக்குப் பிசகாக ஓடுய விதேசியச் சிந்தனையிலிருந்து வடையைக் கடித்து சோளன் விடுபட்டுக்கொண்டான்.

‘என் தேசியத் தலைவனின் தமிழ் மண்ணில் வெட்ட வெட்ட எழுவோம்’ என ஆஜானபாகு மீண்டும் உரத்துச் சொல்ல சுற்றியிருந்தவர்கள் தலையைத் தொங்கப்போட்டனர். ‘சரி சரி .. இனி முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்குப் பிறகுதான் அடுத்த பார்ட்டி என்று குடிக்கிறத இன்றைக்கு குடியுங்கோ’ என்று அஜானுபாகு அறிவுறித்தியதும், அங்கு உக்காந்திருந்த இளைய ‘தேசியம்’ கலங்கிய கண்களோடு விஸ்கிப் போத்தலை 90 பாகையில் சரித்து ஊற்றிற்று.

முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் தேசியக்கொடி பிடிக்கக்கூடாது என்று துரோகிகள் சொல்லுறாங்கள்… இவங்களை எல்லாம் தலைவர் அப்பவே மண்டையில் போட்டிருக்க வேண்டும் என்று ஆஜானபாகு காசியானந்த்தன்  பாணியில் கடித்தது.

சோளனுக்கு வயிற்றை குமட்டிக்கொண்டு வந்தது. வடை செய்த வேலையாக இருக்குமோ என்று கூட சந்தேகம் வந்தது. ரெஸ்ரோரண்ட் காரனை கூப்பிட்டு அண்ணை இது நேற்றயான் வடையா எனக் கேட்டுவைக்க, அவர் வடையை வெடுக்கென துக்கிக்கொண்டார். ‘நேற்றையான் வடை வேணுமென்றால் குப்பைல போட வைத்திருக்கிறம் இப்ப கொண்டுவாரன்’ என்று முறைத்தார். அடப்பாவமே… அவரும் தேசிய சிந்தனையில் ஆட்கொள்ளப்பட்டுள்ளாரோ என்று நரம்பு புடைக்கும் சீமானின் உணர்ச்சியோடு சோளன் தமிழ்த் தேசியச் சிந்தனை உணவகத்திலிருந்து சிலோ மோஷனில் வெளியேறினான்.

Exit mobile version