Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசியக்கொடியும் தொடர் சர்ச்சைகளும் : வென்நீர்

LTTE_Flagதமிழர் நிகழ்வுகளில் தேசியக்கொடியை பறக்க விடவேண்டும்/வேண்டாம் என்கிற சிக்கல் இன்னும் அதிகரித்துத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அண்மையில் லண்டனில் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடைபெற்ற குழறுபடியை அதன் தற்போதைய உச்சமெனக் கொள்ளலாம்! வழமையாக தேசியகீதம் இசைத்துவிட்டு அல்லது தேசியகீதம் இசைக்கப்படுகிறபோது ஏற்றப்படுகிற கொடி, அன்று BTF அணியை நோக்கிய ஒரு அக்காவின் பச்சைத்தூசண முழங்கலோடு ஒலியமைப்பு பகுதியினைக் கைப்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த TCC அணியினர், தேசியக்கொடியின் முக்கியத்துவம் பற்றிய உடனடி விளக்க அறிவிப்பு செய்து அதை ஏற்றிவைத்தனர்.

ஒரு குழு நாம் கொடி ஏற்ற மாட்டோம் என்றால் அது குறித்து விவாதிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். அல்லது நாங்கள் வேறு இடத்தில் ஒரு நிகழ்வினை ஒழுங்கு செய்து அவர்களுக்குத் தேசியக்கொடியை ஏற்றத் துணிவில்லாதமையால் நாங்களே நிகழ்வினை நடத்துகிறோம் என்று மக்களுக்கு அறிவித்து மக்களுக்கு அரசியல் நிலமைகளைப் புரியவைத்து ஏற்றத் துணிவில்லாத மற்ற குழுவின் மெய் முகத்தை வெளிக்கொணர்ந்திருக்கலாம். அதை விடுத்து அவர்கள் நிகழ்வினில் புகுந்து அதைக் குழப்பி தூசணத்தில் கத்தி தேசியக்கொடியினை ஏற்றுவது என்பது தேசியக்கொடிக்கு நாம் வழங்கும் மரியாதை ஆகாது. தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை பற்றி அறிந்தவர்கள் இப்படி வன்முறையோடு கொடியினை ஏற்றி அதனை அவமதித்திருக்க மாட்டார்கள்.

கம்பனி மௌனிக்கப்பட்ட பின்னரும் ஏஜெண்டுகளை யார் வேலை செய்யச் சொன்னது என்ற கேள்வியும்? அதைவிட அவர்கள் இப்போ தம்மைக் கிளைகள் பேலவே எண்ணி நடந்து கொள்கிற நிலையும் எமது சமூகத்தின் தற்போதைய துர்ப்பாக்கிய நிலையை எண்ணிப் பார்க்க உதவும். இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அப்பால் முதலில் தேசியக்கொடி பற்றி ஆராய்வது நல்லதென்று நினைக்கிறேன்.

“தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை”யின் படி, தேசியக்கொடியின் தன்மை ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.( http://tiny.cc/0b3ujx )

விடுதலைப் புலிகளால் மேற்சொன்ன எந்தப் பண்பையும் தமிழீழத் தேசியக்கொடியில் காண முடியாதது ஏமாற்றமே. கம்பம், கயிறு, கொடிப்பீடம், கொடியேற்றும் முறை என்று பல விடயங்கள் சொன்னவர்கள் கொடியிலுள்ள மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வெறும் நான்கு நிறங்களுக்கு மாத்திரம் விளக்கம் கொடுத்தார்களே அன்றி அதிலுள்ள வங்கப் புலிக்கும் AK-47 ரஸ்யத் துப்பாக்கிக்கும் ரவைகளுக்கும் விளக்கம் தரவில்லை. தரவும் முடியாது. தேசிய பறவை செண்பகம், தேசிய விலங்கு சிறுத்தை, தேசிய மலர் காந்தள், தேசிய மரம் வாகை என்று பார்த்துப் பார்த்து தெரிந்தவர்களுக்கு கொடிபற்றிய அறிவில்லாமல் போக வாய்ப்பில்லை!

ஆக, இரண்டு விடயங்கள் தான் இதற்கான காரணங்களாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

01. தம்முடைய புலிக்கொடியை விடுத்து அவர்களுக்கு வேறொரு கொடியினை உருவாக்க விருப்பம் இருந்திருக்கவில்லை

02. வல்லரசுகள் மக்களையும் விடுதலை இயக்கங்களையும் பிரித்தாள முன்னர் மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள் என்ற பாணியில் சிவத்தத் துணியில் “விடுதலைப்புலிகள்” என்ற எழுத்தினை மாத்திரம் அகற்றி விட்டு அதே கொடியைப் பேணியிருக்கலாம்.

அதை ஒரு விடுதலைப் இயக்கத்திற்கான கொடியாக ஏற்கலாமே அன்றி ஒரு தேசியக் கொடியிற்குரிய தன்மையுடனான கொடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாளை தமிழர்களுக்கு என்று ஒரு நாடு உருவாகுமேயாகில் “தேசியக்கொடியின் தன்மை” என்பதைக் கருத்திற்கொண்டே ஒரு கொடி உருவாக்கப்படவேண்டும். அதற்குரிய பக்குவப்பட்ட தெளிவான அரசியல் மனநிலையில் பலர் இருக்கிறார்களா என்பது பெரிய பிரச்சனை!

இந்த விளக்கம் இங்கு தமிழீழதேசியத்தின் பால் அக்கறை கொண்டு அதை நிகழ்வுகளில் ஏற்றுதல் பற்றிச் சண்டைபிடிக்கும் விடுதலை வீரர்களிடமாவது இருக்கிறதா?

வெறுமனே மக்களின் உணர்ச்சியினை வியாபாரமாக்கி தம்முடைய வாழ்வாதாரத்தினைக் கவனித்துக்கொண்டு, உலக அரசியல் புரியாமல் ஏகாபத்தியத்தோடு சேர்ந்து விளக்கமில்லாமல் எங்களின் இலக்கினை சிறிது சிறிதாய் உருக்குலைக்கும் பொறுப்பாளர்களுக்கு அந்த விளக்கம் இல்லை!

அப்படி இருந்தாலும் மக்களுக்கு உருவேற்றி அந்த உணர்ச்சித் தீயில் குளிர்காய்பவர்கள், அது பற்றி தம்மோடோ அல்லது தமக்குக் கீழ் இருப்பவர்களுக்கோ தெளிவுபடுத்த விரும்பமாட்டார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை முக்கியமாய் மாவீரர் தினம், விளையாட்டு விழா போன்றவற்றில் பெரிய அளவிலும் அன்னை பூபதி, கிட்டண்ணை நினைவு நாள் என்று சிறிய அளவிலும் நிகழ்வுகளை நடத்திக்கொண்டு மக்களின் உணர்வுகளைப் பணமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

பெரிய நிகழ்வுகளில் வருகிற வருமானங்களுக்கு அவர்கள் யாருக்கும் கணக்கு காட்டுவதில்லை. அவர்களை சூழ உள்ளவர்கள் அவர்களை நம்புகிறார்கள். அது அவர்களுக்குப் போதும்!

அப்படி கேள்விகேட்பவர்களை துரோகிகள் ஆக்கிவிட்டு வியாபாரத்தினைக் கவனித்துக்கொள்கிறார்கள்!

அடிக்கடி இந்த மாதிரிக் கொடியேற்றல் போன்ற சில உணர்ச்சி பூர்வமான விடயங்கள் ஏதாவதை செய்து விடலை பருவத்தில் உள்ளவர்களையும் உள் இழுத்துக்கொள்வதோடு மற்றவர்களின் உணர்ச்சியினை Charge செய்கிறார்கள்! இவர்களின் தமிழ்த்தேசியம் என்பது ஒரு உணர்சிக்கூடாரம்! இதுதான் இங்குள்ள தமிழர்களின் இன்றை நிலை!

Exit mobile version