தெலுங்கானாவிற்கு நீண்ட கால வரலாறு உண்டு. 1946-ல் ஜூலை 14-ஆம் நாள் கிளர்ந்த உழவர் கெரில்லா ஆயுதப் போராட்டத்தை நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் ஆந்திர மாநிலக் கமிட்டி நடத்திய அந்த போராட்டத்தை அன்றைக்கு காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்டுகளின் வன்முறை என்று சித்தரித்தது. ஐந்தாண்டுகாலம் நீடித்த அந்த ஆயுதப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகளின் மத்தியக் கமிட்டியின் நிர்ப்பந்தத்தின் பேரிலும், அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியாமலும் நிறுத்திக் கொண்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. பல்லாயிரம் தோழர்களின் உயிர்த்தியங்கள் தெலுங்கானாவின் ரத்த சாட்சியாய் இன்றும் உயர்ந்து நிற்கிறது. ஆனால் வீரம் செறிந்த உழவர் புரட்சியை சந்தர்ப்பவாதிகளிடம் இழந்த முற்போக்கு சக்திகள் ஒரு பக்கம் என்கிற நிலையில் சுரண்டல் சமூக நடைமுறைகளை எதிர்த்து உருவான புரட்சி வடிவம் ஐம்பதுகளில் தனி மாநிலக் கோரிக்கையாக உருவாகி, உருமாறி வந்திருக்கிறது.அல்லது கைவிடப் பட்ட கிராம மீட்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தனி மாநிலக் கோரிக்கை எழுந்தது.உழவர் இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி அரைகுறையான வெற்றிகளோடு முடிந்து போனது ஒரு சோக வரலாறு.
கொடூரமான நிலப்புரபுத்துவ வடிவமாக திகழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானமும், இது போன்ற நிலபிரபுத்துவ வடிவமாகத் திகழ்ந்த ஹைதராபாத் நிஜாமும் இந்தியாவோடு இணைய முரண்டு பிடித்தன. ஒரு பக்கம் நம்பூதிரி , நாயர்களின் சாதி, சுரண்டல் அடக்குமுறைக்குள்ளான தெற்கு மக்கள், இன்னொரு பக்கம் முஸ்லீம் அரசர்களின் கொடூரமான அடக்குமுறைக்குள்ளான தெலுங்கானா மக்கள். தெலுங்கனாவின் ஒட்டு மொத்த உழைக்கும் மக்களும் முஸ்லீம் அரசர்களை எதிரிகளாகப் பார்த்தார்கள். ஆனால் நேரு முஸ்லீம் மன்னர்களுக்கு எதிரான இந்துக்களின் கோபம் அல்லது கிளர்ச்சி என்று அதை திரித்தார். ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு எதிராக மதவாத நச்சு விதையை ஊட்டியவர் சோசலிச எண்ணம் கொண்டவராக சித்தரிக்கப்பட்ட நேருவே….. ஆரிய சமாஜம், போன்ற பார்ப்பன சைவ எண்ணம் கொண்ட கலாசார அமைப்புகள் கூட ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக போராடின. ஆனால் அவர்களின் போராட்டம் என்பது அரசர்கள், உயர் ஜாதி பண்ணைகளுக்கு மக்களின் நிலங்களை வழங்கியதையோ, கொடூரமான சாதி, சுரண்டல் முறைக்கு எதிரானதோ அல்ல, அடிபணிய மறுக்கும் ஒரு முஸ்லீம் மன்னனை இந்திய பேராதிக்க எல்லையோடு சேர்த்துக் கொள்வதிலேயே இருந்தது. ஹைதராபாத் நிஜாமில் முஸ்லீம் மன்னனுக்கு எதிராக கிளர்ந்த வர்க்க கிளர்ச்சியை இந்துக்களின் கோபம் என்று எப்படி நேரு மாற்றினாரோ அது போல காஷ்மீர் மக்களின் தன்னாட்சிக் கோரிக்கையை இந்து மன்னனுக்கு எதிரான முஸ்லீமகளின் கிளர்ச்சி என்று சித்தரித்தார் நேரு. அதனால்தான் சமஸ்தானங்கள் குறித்த தனது எண்னவோட்டத்தை இப்படிப் பதிவு செய்கிறார் நேரு ” காஷ்மீரில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள் அங்கே ஒரு இந்து மன்னன் ஆளுகிறார். ஹைதராபாத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிறார்கள் அங்கே ஒரு முஸ்லீம் மன்னன் ஆளுகிறார்”என்று மதவாதக் கண்ணோட்டத்தோடு தனது விஸ்தரிப்புக் கனவுக்களுக்காக பிரச்சனையை மடை மாற்றினார் நேரு.
தெலுங்கானாவின் கெரில்லா போராளிகள் நவாப்களிடம் இருந்து கைப்பற்றி வைத்திருந்த கிராமங்களையும் சொத்துக்களையும் எங்கிருந்து யாரிடம் இருந்து எடுத்தார்களோ அந்த விவாசிகளுக்கே வழங்கியது .ஆனால் நேரு அனுப்பிய ஐம்பதாயிரம் படைகளோ சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்துவிட்டு கெரில்லா போராளிகளை வேட்டையாடியது. ஐந்து ஆண்டுகாலம் நீடித்த தெலுங்கனா போரில் நான்காயிரம் போராளிகள் வரை கொல்லப்பட்டனர். கடைசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலக் குழு தங்களின் போர் நடவடிக்கையை கைவிட்டது.
மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது தெலுங்கனா தனி மாநிலமாக இருந்தது. விசாலாந்திரமும் மக்கள் உரிமையும் கேட்டு அதாவது ஆந்திரத்தோடு தெலுங்கனாப் பகுதியை இணைத்து ஒரு மாநிலமாக உருவாக்கக் கோரி தெலுங்கானா மக்கள் போராடினார்கள். தெலுங்கனா ஆந்திரமாக உருவானது. ஆனால் 53-ல் உருவான ஒன்று பட்ட ஆந்திர உணர்வு எழுபதுகள் வரை இல்லை.காரணம் முன்னர் நிஜாம்களின் கொடுங்கோலாட்சியில் சுரண்டப்பட்ட தெலுங்கனா மக்கள் இப்போது மீண்டும் தேஷ்முக்குகளாலும் உயர்சாதி
பண்ணைகளாலும் சுரண்டப்பட்டனர். எந்த மக்கள் ஒன்று பட்ட ஆந்திரத்துக்காகப் போராடி இணைந்தார்களோ அவர்களே இப்போது தனி மாநில கேட்டும் போராடுகிறார்கள்.
70, 80, 90 – கள் என தெலுங்கானா என்கிற கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடினார்கள். வருகிறார்கள். இன்று தெலுங்கானா என்னும் தனி மாநிலக் கோரிக்கையை கையிலெடுத்து தனது சந்தர்ப்பவாத பதவி அரசியலுக்காக நாடகம் ஆடும் சந்திரசேகரராவை தெலுங்கானா மக்கள் நம்புகிறார்கள். அல்லது நம்பித்தான் ஆக வேண்டும் என்று மக்களை நிர்பந்திக்கிறார் ராவ். ஆனால் ராவின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகாமல் போராட்டத்தை முன்னெடுக்கும் வேட்கையோடு களமிரங்கியிருக்கிறார்கள். ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள். சாகும்வரை உண்ணாவிரதத்தைத் துவங்கிய ராவ் மறு நாளே உண்ணாவிரதத்தை கைவிடும் முடிவை அறிவிக்க ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் ராவின் கொடும்பாவியை கொளுத்தி எதிர்ப்பைக் காட்ட வேறு வழியில்லாமல் ராவ் உண்ணாவிரத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதற்குள் போராட்டம் பெரும் நெருப்பாக வெளியே மாணவர்களிடம் பற்றிப் படந்திருக்கிறது.தெலுங்கானாவில் எழுந்துள்ள இந்த எழுச்சி ராவே எதிர்பாராராது. இந்த எழுச்சிக்குப் பின்னால் பன்னெடுங்கலாமாய் புரட்சிகர சக்திகள் விதைத்த விதையும் இந்த எழுச்சிக்கு ஒரு காரணமாக அமைகிறது. மிகப் பரந்த அளவிலான ஹைதராபாத முற்றுகைக்கு மாணவர்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
அன்றைக்கு தெலுங்கனாவின் உழவர் புரட்சியை இந்து முஸ்லீம் பிரச்சனையாகத் திரித்த நேருவின் பாணியையே அண்டானியோ மேனியா என்னும் இயர்பெயரைக் கொண்ட சோனியா வழிநடத்தும் இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சரும் வேட்டி கட்டிய தமிழருமான பழனியப்பன் சிதம்பரமும் கையாளாகிறார்கள்.இன்றைய தெலுங்கனா கிளர்ச்சியை ஆந்திராவுக்கும் தெலுங்கனாவுக்குமான மோதலாக உருமாற்றுவதும் இவர்கள்தான். உண்மையில் தெலுங்கானா மக்களின் உணர்வு என்பது ஆந்திர மக்களுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசுக்கு எதிரான உணர்வு.
அந்தவகையில் ஒடுக்கும் சக்திகளின் நண்பனாக இருக்கும் இந்திய அரசுக்கு எதிரான உணர்வு என்கிற ரீதியில் தமிழ் மக்கள் தெலுங்கனா மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே வேளையில் உலகெங்கிலும் எதிர்ப்பியங்கள் தோல்வியடைந்து ஜனநாயகப் பாதைகள் தகரும் போது வன்முறை வழி போராட்டங்களே சிறந்த வழி என்பதை தெலுங்கனாவும் நமக்கு உணர்த்தி நிற்கிறது. ஆயுதப் போராட்டங்களோ மக்கள் வன்முறைகளோ நிண்ட காலப் போராட்டங்களாக மாறும் போது அது ஒடுக்கப்படும் மக்களின் எதிர்ப்பியங்களுக்கு புதிய வடிவங்களையும் அரசியல் சிந்தனையையும் கொடுக்கிறது. அந்த வகையில் மிகப் பெரிய இன அழிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழ் மக்களாகிய நாம் வன்முறைப் போராட்டத்தை தொடர்ந்தும் இந்திய, இலங்கை அரசுகளுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்தியா எங்கள் நட்புச் சக்தி என்று இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தமிழக, ஈழ தலைமைகள் இன்னமும் இந்தியா போன்ற பிராந்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட வல்லரசுகளிடம் இருந்து எதுவிதமான பாடங்களையும் கற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை.
ஈழப் போரை ஒட்டி தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலைகளை பாசிசத் தனமாக ஒடுக்கி போராட்டக்காரார்களின் மண்டைகளை உடைத்து சிறைக்கு அனுப்பிய கருணாநிதி இன்று அதே பாணியை தெலுங்கனா போராட்டங்களை ஒடுக்க கற்றுக் கொடுக்கிறார். எப்படி உயர்நீதிமன்றத்திற்குள் புகுந்து போருக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்களின் மண்டையை கருணாநிதி ஏவிய போலீஸ் உடைத்ததோ அது போல போராடும் ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் ஆந்திர, தமிழக, மத்திய இராணுவக் கூட்டுப் படை உள்ளே நுழைந்து மண்டையை உடைக்கிறது.
முத்துக்குமாரின் தியாகத்தை ஒட்டி எழுந்த எழுச்சியை கருணாநிதி அடக்கிய போது ஈழ ஆதரவாளகளில் ஒரு சில அமைப்புகளைத் தவிற ஏராளமான தமிழ் அமைப்புகள் பயந்து போய் அஞ்சி நடுங்கி தங்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட்டன. அதே நேரத்தில் அஞ்சாமல் போராடிய பல அமைப்புகளின் தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டங்களை கைவிட்ட பல தமிழ் அமைப்புகள் செம்மொழி மாநாட்டின் பெயரால் கருணாநிதியோடு மறைமுகமாகவும் நேரடியாகவும் இன்று கைகோர்த்திருக்கிறார்கள். தமிழக மக்களின் விரோதிகளான ஜெ, கருணாவை அப்புறப்படுத்தி எதிர்ப்பியங்களை வன்முறை வழியில் முன்னெடுப்பதே தற்காகத்தில் நாம் ஒடுக்கும் சக்திகளுக்கு விடும் சவாலாகும். அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமே மக்களை எதிர்ப்பியங்களில் இணையச் செய்ய முடியும். இன்றைய நவ காலனியச் சூழலில் ஊழல் மயமானது அரசியல்வாதிகளும், அரசும் மட்டுமல்ல, மக்களும்தான்.
பெரும் பண்ணைகளும் தொழிலதிபர்களும் கோலோச்சும் தேர்தல் நடைமுறையில் மக்களுமே இத்தகைய கோடீஸ்வரர்கள் போட்டியிட்டால் மட்டுமே தமக்கும் ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். ஊழல் என்பது மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை விரவிக் கிடப்பதோடு. மக்களையும் தங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் கைகோர்க்க அறைகூவல் இட்டு எதுகை மோனை திராவிடத் தமிழில் அழைக்கிறது. ஆளும் வர்க்கம். மக்களை நக்கிப் பிழைக்கும் நாய்களாக மாற்றும் போக்கை ஊட்டி வளர்த்ததும் இந்த கருணாநிதிதான். தந்தை பெரியாருக்குப் பிறகு திராவிட இயக்கத்தைக் கைப்பற்றிய அண்ணாதுறை அதை கவர்ச்சி அரசியலில் ஆரம்ப புள்ளியாக மாற்றினார். திராவிட இயக்கத்தின் கடைசி சீரழிவு சக்தியாக இருக்கும் கருணாநிதியின் முன்னால் தோற்றுப் போன ஒரு உணர்வை தமிழ் மக்கள் இன்று பெற்றிருக்கிறார்கள்.
கையாலாக தமிழார்வலர்கள் ஒரு பக்கம், அடக்கும் போலீஸ் ஒரு பக்கம், என்று நம்பிக்கைகள் தகர்ந்து கொண்டிருக்கும் போது நேபாளத்திலும், தெலுங்கானாவிலும், வடகிழக்கிலும் எதிர்ப்பியங்கங்கள் உற்சாகமளிக்கின்றன. சமகாலத்தில் இப்பிராந்தியத்தில் எழும் மக்கள் எதிர்ப்பியங்களை தமிழ் மக்கள் காணாமல் விட்டால் இழப்பு தமிழர்களுக்கன்றி போராடுகிறவர்களுக்கு இல்லை.
இந்தக் கால ஓட்டத்தினூடாக நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ள முடியும் காந்தீய சிந்தனைகள் இன்று மறு சிந்தனைக்குள்ளாக்கப்பட்டு அஹிம்சா என்னும் கருத்து பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான ஆயுதமாக அறிவு மட்டங்களில் முன் வைக்கப்படுகிறது. வடகிழக்கிலும், மத்திய கிழக்கிலும், ஈழத்திலும் அஹிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்றுள்ளதை நாம் காண முடிகிறது. உண்மையில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதாக நான் நம்பவில்லை. இன்றும் உண்ணாவிரதம் இருப்பவர்களையும், மனுக்கொடுப்பவர்களையும், பார்க்கும் போது கோமாளிகளைப் போல அவர்கள் தென் படுகிறார்கள்.
ஆமாம் அதுதான் உண்மை…இரத்தத்தை மட்டுமே பரிசளிக்கும் அரசுகளிடம் அஹிம்சை என்பது மக்களை மடையர்களாக மாற்றும் வேலை.
அதைப் புரிந்து கொண்ட மத்தியகிழக்கு மக்களும், வடகிழக்கு மக்களும் ஆயுதக் கிளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். இன்றைய தெலுங்கானா கோரிக்கைகள் நாளை ஆயுத வடிவத்தை எடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.ஆனால் தத்துவார்த்த ரீதியாக நாம் நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம்.என்பதும் கற்றுக் கொண்டபடிப்பினையில் இருந்து பூகோள ரீதியாக வன்முறை போராட்டத்திற்கு தமிழர்கள் எப்படி அணியமாகவேண்டும் என்பதிலும், அரசியல் தத்துவம் என்கிற நிலையில் எந்தப் பாதையை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதிலுமே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. நம்பிக்கையளிக்கும் மாவோயிஸ்டுகளோடு கைகோர்ப்பதன் மூலமும் வலிமையான இடது சாரிப் புரட்சியின் மூலமே நாம் தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுத்து, பௌத்த சிங்கள பேரினவாத அரசு பயங்கரவாதிகளை தண்டிக்கவும் முடியும்.ஆமாம் எதிர்ப்பியக்கம் சாத்தியம்தான். அதுவும் ஆயுதப் போராட்டம்….
(இக்கட்டுரை எழுதி முடித்த பின்பு தெலுங்கனா தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு தோழர் சொன்னார். தெலுங்கனா என்று சொல்வது தவறு தெலிங்கானா என்றுதான் சொல்லவேண்டுமாம். மூன்று சிவலிங்க கோவில்கள் அங்கு இருப்பதால் தெலிங்கானா என்று பெயர் வந்ததாகச் சொன்னார் அந்தத் தோழர். )