தெற்கு சூடானைத் தனிநாடாக்குவதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்துமாறு சூடான் அரசை ஏகாதிபத்தியங்கள் நிர்பந்திக்கக் காரணம் என்ன? நீண்ட காலமாக தெற்கு சூடானின் பிரிவினைக் கோரிக்கையை ஏற்க மறுத்து ஒடுக்கி வந்த ஒன்றுபட்ட சூடானின் அதிபரான ஓமர் அல் பஷீர், கருத்துக் கணிப்புத் தேர்தல் நடத்தவும், முடிவுகளை மனப்பூர்வமாக ஏற்பதாக அறிவிக்கவும் காரணம் என்ன? இது, தெற்கு சூடானின் ஆயுதப் போராட்டத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட விளைவா? தனிநாடாக உருவாகியுள்ள தெற்கு சூடான் விடுதலையைப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டுமா? இந்த விவாதங்களுக்குள் நுழையும் முன் சூடான் பற்றிய எதார்த்த நிலையை வரலாற்றுப் பின்னணியோடு நாம் அறிந்து கொள்வது அவசியம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய படையெடுப்பைத் தொடர்ந்து, அரபு மொழி சூடானின் ஆட்சிமொழியாகியதால், அராபியரிடமிருந்து வேறுபட்டுள்ள போதிலும் அரபு மொழி பேசும் வடக்கு சூடானிய கருப்பினத்தவர்களும் தம்மை அராபியர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். வடக்கு சூடானில் இஸ்லாமிய நாகரிகம் வளர்ந்த அதேநேரத்தில், தெற்கே சிறுபான்மையினரான பழங்குடியினர் பல்வேறு மொழிகளுடன் தமது மரபுவழி பழக்க வழக்கங்களுடன் இருந்தனர். மதம்,மொழி, பண்பாடு முதலானவற்றில் வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்குமிடையே வேறுபாடும் முரண்பாடுகளும் நீடித்தன. ஆங்கிலேயர்கள் 19ஆம் நூற்றாண்டில் சூடான் முழுவதையும் தமது காலனியாட்சியின் கீழ் கொண்டு வந்தனர். காலனிய ஆட்சியிலும் வடக்கு தெற்கு முரண்பாடு தொடர்ந்தது. ஆங்கிலேயர்கள் வடக்கு சூடானில் கல்விக்கூடங்களை உருவாக்கி, தமது ஆட்சிமுறைக்கு ஏற்ப வடக்கு சூடானியர்களைப் பயிற்றுவித்தனர். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலவீனமடைந்ததைத் தொடர்ந்து 1956இல் வடக்கு சூடானியர்களிடம் பெயரளவிலான சுதந்திரத்தை அளித்துவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினர். தென்பகுதியின் பழங்குடியினரை நாகரிகப்படுத்தும் பொறுப்பு கிறித்துவ மிஷினரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து வந்த காலங்களில் தெற்கு சூடான் கிறித்துவமயமாகியது.
இஸ்லாமிய வடக்கு சூடானின் அராபிய அரசாங்கம், தனது பேரினவாத அடக்குமுறையை தெற்கில் ஏவி, பல்வேறு மொழிகள் பேசும் பழங்குடி மக்களை அரபு மொழி பேசுமாறு கட்டாயப்படுத்தியது. வடக்கு சூடானில் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியேறவோ, தொழில் செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டது. சூடானின் டார்பர் பிராந்தியத்தைத் தொடர்ந்து, 80களில் தெற்கு சூடானில் எண்ணெய் கண்டறியப்பட்டு, எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்த போதிலும், வடக்கு சூடானின் ஆட்சியாளர்கள் தெற்கு சூடானைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். சூடானின் அப்போதைய சர்வாதிகார அதிபரான நிமோரி, சவூதி அரேபியாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தை நாடெங்கும் திணித்தார். இது, இஸ்லாமியர் அல்லாத தெற்கு சூடானியர்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்தது. இக்கட்டாய சட்டத்தை எதிர்த்து பொர் நகரிலிருந்த இராணுவ முகாம் அரசுக்கெதிராக கலகம் செய்தது. அதே நகரைச் சேர்ந்த ஜான் கரங் என்ற இராணுவத் தளபதி கலகக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது தலைமையில் பின்னர் 1983இல் உருவானதுதான் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (குகஃM). இதன் தலைமையில், சூடான் மக்கள் விடுதலை இராணுவம் கட்டியமைக்கப்பட்டு, அது அரசுக்கெதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது.
1989இல் சூடானின் இராணுவத் தளபதி அல் பஷீர், இஸ்லாமிய மத அடிப்படைவாதக் கட்சியான தேசிய இஸ்லாமிய முன்னணியுடன் சேர்ந்து ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார். சூடானை இஸ்லாமிய அடிப்படைவாதப் பாதையில் இழுத்துச் சென்றார். பின்லாடன் ஆதரவாளர்களுக்கு சூடானில் அடைக்கலமளித்தார். அல் பஷீர் அரசு, அமெரிக்க எதிர்ப்பு இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பிடியில் சென்றதால் சூடான் அரசுடன் அமெரிக்கா முரண்பட்டது. தெற்கிலிருந்த சூடான் மக்கள் விடுதலை இராணுவத்துக்கு ஆயுத உதவிகள் செய்து உள்நாட்டுப் போரைக் கொம்பு சீவிவிட்டது. ஐ.நா. மன்றத்தின் பெயரால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்தது. இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி, அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. தெற்கு சூடானின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடுவதற்கான ஏகாதிபத்தியங்களின் தீராப்பசி தனிநாடு கோரிக்கையாக உருமாறியது. அரபு இஸ்லாமிய பேரினவாதத்தை எதிர்த்து கிறித்துவ தெற்கு சூடான் போரிடுவதாகவும், இது தேசிய சுயநிர்ணய உரிமைப் போர் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் ஊதிப் பெருக்கத் தொடங்கின.
கிறித்துவ சபைகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இராணுவத்துக்குக் கென்யா வழியாக அமெரிக்கா இரகசியமாக ஆயுத உதவிகளைச் செய்தது. தெற்கு சூடானின் நகரங்களில் மட்டும் அரசுப் படைகள் அதிகாரம் செலுத்த, கிராமப்புறங்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் கட்டுப்படுத்தியது. சூடான் அரசுப் படைகளுக்கும் தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் இடையிலான நீண்ட நெடிய உள்நாட்டுப் போரில் ஏறத்தாழ 2 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சம் பேர் அகதிகளாயினர்.
தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இராணுவப் படையின் அரசியலும் சித்தாந்தமும் வலதுசாரி குட்டி முதலாளித்துவ தன்மை கொண்டது. தெற்கு சூடான் பிரிந்து தனிநாடாவதா அல்லது சுயாட்சி உரிமையா என்பதில்கூட இந்த இயக்கம் தெளிவின்றி இருந்தது. மக்களைச் சார்ந்திராமல் ஆயுதங்களையே முதன்மையாகச் சார்ந்திருந்த இந்த இராணுவப் படையில் அடிக்கடி பிளவுகளும் மோதல்களும் தொடர்ந்தன. தெற்கு சூடான் ஒரு தேசிய இனமாக உருவாகி வளரும் போக்கு முழுமையடையாததால், பல்வேறு மரபினக் குழுக்கள் பிளவுபட்டு மோதிக் கொண்டன.
ஏற்கெனவே டார்பர் பிராந்தியத்தில் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட்ட அதிபர் அல் பஷீரைப் போர்க்குற்றவாளியாக அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் குற்றம் சாட்டின. அனைத்துலக நீதிமன்றத்தில் அவர் போர்க்குற்றவாளியாகச் சித்தரிக்கப்பட்டார். உண்மையில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நோக்கம், டார்பர் பற்றியது அல்ல. போர்க்குற்றம் சாட்டுவதன் மூலம் அதிபர் மீது நிர்ப்பந்தங்கள் கொண்டுவருவதற்குத்தான். சூடானின் எண்ணெய் வளத்தையும், கனிம வளத்தையும் நைல் நதியின் நீராதாரங்களையும் கைப்பற்றிக் கொள்ளையிடுவதற்காகவே பொருளாதாரத் தடைகளும் நிர்ப்பந்தங்களும் ஏகாதிபத்தியங்களால் ஏவப்பட்டன.
இந்நிலையில், 2001 செப்டம்பர் 11 நிகழ்வுப் பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் தாக்குதல் தீவிரமானதும், சூடானின் ஆளும் வர்க்கம் தனது நிலையை மாற்றிக் கொண்டு அமெரிக்காவுடன் இணக்கமான போக்கை மேற்கொள்ளத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சூடான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டன. எண்ணெய் வளமிக்க தெற்கு சூடானில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் சீனா, பாகிஸ்தான், மலேசியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இத்தொழிலில் சீனா முன்னணியில் உள்ளது. தெற்கு சூடான் போராளிகள் தொடுத்த ஆயுதப் போராட்டம் காரணமாக மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியேறியதால், அந்த இடத்தை சீனா பிடித்துக் கொண்டது. இப்போது சீனாவை அகற்றிவிட்டு மேற்கத்திய எண்ணெய் கம்பெனிகள் காலூன்றத் துடிக்கின்றன.
சூடான் அரசே அமெரிக்காவுக்கு விசுவாசமாக இறங்கி வந்த பிறகு, அதற்கெதிராக தெற்கு சூடானின் கலகப் படைகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்து சூடான் அரசை நிர்பந்திக்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே, சமரசத்துக்கு வருமாறு இரு தரப்பையும் அழைத்து தெற்கு சூடானைத் தனி நாடாக்கத் தீர்மானித்தது.
மேலும், தெற்கு சூடானைவிட அதற்கு வடக்கேயுள்ள அபெய் மாகாணத்தில்தான் அதிக அளவுக்கு எண்ணெய் கிடைக்கிறது. வடக்கு சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையிலுள்ள அபெய் மாகாணம் யாருடன் சேர்வது என்பது குறித்துத் தனியாக வாக்கெடுப்பு நடத்துகிறது. தொடரும் உள்நாட்டுப் போர் காரணமாக, தெற்கு சூடான் மற்றும் அபெய் மாகாணங்களில் பெட்ரோலிய உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏகாதிபத்தியங்கள் கொள்ளையிட முடியாமல் போனதால், ஏகாதிபத்தியவாதிகளின் நிர்பந்தத்தாலேயே இப்படியொரு சமரச ஏற்பாடு நடந்துள்ளது.
அமெரிக்காவின் தலையீட்டினால் கடந்த 2005ஆம் ஆண்டில் சூடான் அரசுக்கும் தெற்கு சூடானின் மக்கள் விடுதலை இயக்கத்துக்குமிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, 22 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அப்போது தெற்கு சூடானுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டு, இது 6 ஆண்டுகள் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படை கண்காணிப்பில் சமாதான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
நேற்றுவரை சர்வதேசப் போர் குற்றவாளியாகச் சித்தரிக்கப்பட்ட
சூடானின் அதிபர் பஷீர், தெற்கு சூடானில் கருத்துக் கணிப்புத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த முன்வந்ததும், அவருக்குப் போர் குற்றங்களிலிருந்து மன்னிப்பு வழங்க ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதப் பட்டியலில் இருந்து சூடானை நீக்க அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு ஆமாம் சாமி போட்டதால், போர்க் குற்றவாளியான அதிபர் அல் பஷீர் இப்போது புனிதமானவனாகிவிட்டார். எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடவும் இஸ்லாமிய வட ஆப்பிரிக்காவில் தமது விசுவாச கிறித்துவ நாட்டை உருவாக்குவதற்காகவுமே சூடான் இப்போது பிளவுபடுத்தப்படுகிறது.
சூடானிலிருந்து பிரிந்து தனி நாடாகியுள்ள தெற்கு சூடான் ஒரு சுதந்திர நாடல்ல. அது ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்துக்கான களம். அவற்றின் காலனியாதிக்க மேலாதிக்க ஆட்டங்களுக்கான பகடைக்காய் என்பதுதான் உண்மை. ஏகாதிபத்தியப் பொன் விலங்கைப் பூட்டிக் கொண்டாலென்ன, எப்படியோ வடக்கு சூடானின் பேரினவாத இரும்பு விலங்கு போனால் போதும் என்று நியாயவாதம் பேசி ஏகாதிபத்திய வலையில் வீழ்வது தேசிய இன விடுதலையாகாது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடாமல் எந்தவொரு தேசிய இன விடுதலையையும் சாதிக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கண்காணிப்புப் பிடியில் சிக்கித் தவிக்கிறது தெற்கு சூடானின் “தேசிய இன விடுதலை’.
ஏகாதிபத்தியத்தை வலுப்படுத்தக்கூடிய அதன் மேலாதிக்கத்துக்குப் புறக்காவல் அரண்களாக அமைந்துள்ள இத்தகைய “விடுதலை’ களை ஆதரிப்பதானது, தேசிய இன விடுதலைக்கே எதிரான ஏகாதிபத்தியக் கைக்கூலித்தனமாகும். தேசிய இனங்களின் உரிமையையும் ஜனநாயகத்தையும் மதித்து அங்கீகரிக்கும் சைவப்புலியாக ஏகாதிபத்தியம் மாறிவிட்டதாகக் காட்டி ஏய்க்கும் அயோக்கியத்தனமாகும்.
உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகளை அலசி ஆராயாமல், உணர்ச்சி வேகத்தில் தமிழினவாதிகள் சூடானைப் போல ஈழமும் மலரும் என்று நம்புவது அவர்களது அரசியல் சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது. இப்படித்தான் கொசாவோ விடுதலையையும் இவர்கள் ஆதரித்து நின்றனர். திபெத்தின் தலாய்லாமா இந்தியாவின் கைக்கூலி என்று நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது இலட்சியம் உயர்வானது என்று நியாயப்படுத்துகின்றனர். ஏதோ ஒரு வழியில், எப்படியாவது தனிநாடு அமைந்தால் அதை ஆதரிப்பது என்பதற்கு மேல் இதில் ஒரு வெங்காயமும் இல்லை. ஏகாதிபத்தியத்தைப் பலவீனப்படுத்தாத இத்தகைய பிற்போக்குத்தனமான “விடுதலை’ களைப் பாட்டாளி வர்க்கம் வரவேற்று ஆதரிக்கவும் எந்த அடிப்படையும் இல்லை.
நன்றி : புதியஜனநாயகம்