அமரிக்க, ஐரோப்பா, இந்தியா, சீனா, ரஷ்யா என்று நாளாந்தம் தெருப் பத்திரிகைகளில் அடிபடுகின்ற அத்தனை “முன்னணிப் பேரரசுகளும்” சில ஆண்டுகளாகவே திட்டமிட்டு நிறுவனப்படுத்தி, பிரச்சாரம் மேற்கொண்டு, புலிகளின் உள்ளும் புறமும் மக்கள் விரோதிகள் விலைபேசப்பட்டு வன்னியில் மனித குலத்தின் ஒரு பகுதி துவம்சம் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் தமிழ்ப் பேசியது என்பது மட்டுமே.
இந்தியாவின் கொல்லைப் புறத்தில், இந்தியத் தரை வழிப் பாதுகாப்பிற்கு பிரதான மையம் என நேரு காலத்தில் பரிந்துரை செய்யப்பட்ட ஆப்கானில் நேட்டோ நாடுகள் அனைத்தும் அப்பாவி மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை ராஜபக்சவிற்கு முன்னமே சோதனை செய்து பார்த்தன. இந்தியா அரசு பாதுகாப்புக் குறித்து வாய் திறக்க முன்னமே ஆப்கான் ஆக்கிரமிக்கப்பட்டது. இலங்கையில் மட்டும் இந்தியாவை மீறி மக்களைக் காப்பாற்ற முடியாது என்று ஒபாமா அதிகாரம் ஒப்பாரி வைத்தது.
சாரி சாரியாக அழித்துப் போட்ட ராஜபக்ச குடும்ப அரசு எந்தத் தயக்கமும் இன்றி பயங்கர வாதத்தை அழித்துத் துடைத்து விட்டோம் என்று கூற அமரிக்கா ஒபாமாவைப் போலவே பிரபாகரனையும் கொன்றீர்கள் என்று தட்டிக்கொடுக்கிறது.
தெற்கு சூடானில் மட்டும் அமரிக்கவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் மனிதாபிமானம் பெருக்கெடுத்து ஓடியதில் தனியாட்சி அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆபிரிக்கவில் அழிக்கப்படத்தக்க, ஆபிரிக்காவின் குட்டி இஸ்ரேல் ஒன்று அமரிக்க ஐரோப்பிய அதிகாரங்களுக்குத் தேவைப்பட்டது இந்த மனிதாபிமானத்தின் ஒரு காரணம்.
இதற்காக ஏகாதிபத்தியங்களின் பொய்ப் பிரச்சாரங்கள் அருவருப்பானவை! வட சூடானின் ஒடுக்கு முறைக்கு உள்ளாகியிருந்த பழங்குடி இனக்குழுக்களே விரும்பாதவை!! ஏகாதிபத்திய ஊடகங்கள் அனைத்தும் தென் சூடானிய மக்கள அனைவரும் கிறீஸ்தவர்கள் எனப் பிரச்சாரம் மேற்கொண்டன. அவர்களில் பெரும்பாலனவர்கள் வெவ்வேறு இனக்க்குழுக்களைச் சார்ந்தவர்கள். சிறு தெய்வ வழிபாடுகளை மேற்கொள்பவர்கள். தமது நாடுகளில் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக உள்நாட்டு யுத்தம், கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையாயன பிணக்கு என்று கடந்த பத்தாண்டுகளாகவே பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.
காலனியக் காலப்பகுதியில் தென்சூடானைத் திட்டமிட்டுப் புறக்கணித்த பிரித்தானிய ஆட்சியாளர்கள், வட சூடானை முதன்மைப்படுத்தின. தென் சூடானில் மக்கள் தேசிய சிறுபான்மை இனங்களாகக் கூட வளர்ச்சியடையாமல் இனக்க்குழுக்களாகவே வாழ்ந்தனர். இவர்களின் வறுமையை முன்வைத்து பல கிறீஸ்தவ அமைப்புக்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இப்போதும் கூட கிறீஸ்டியன் எயிட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் தென்சூடானின் பல பகுதிகளில் தீவிர மதமாற்றங்களில் ஈடுபடுகின்றது.
வட சூடான் பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட பல இஸ்லாமிய அமைப்புக்களின் ஆபிரிக்கத் இடைத்தங்கல் வலையமாக மாறியிருந்தது. இவற்றை அமரிக்கா கட்டுப்படுத்த முடியுமா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், அதனைத் தந்து ஆக்கிரமிப்பிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என ஏகாதிபத்தியங்கள் சிந்திக்க ஆரம்பிததன் விளைவாக தென்சூடான் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவை வளங்க ஆரம்பித்தன. தென்சூடானைத் தனக்கு விசுவாசமான அரசியல் மையமாக, ஆபிரிக்காவின் இஸ்ரேலாக உருவாக்கத் தீர்மானித்தன.
இதன் பின்னணியில் தனக்கு ஏற்ற வகையில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வளர்த்து ஆபிரிக்கப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் வாய்ப்பை அமரிக்க அணி ஏற்படுத்திக்கொண்டுள்ளது. மறு புறத்தில் ஆபிரிக்காவில் தனது நம்பிக்கையான தளமாக தென்சூடானை உருவாக்கிக் கொண்டுள்ளது.
உலகின் நூற்றுக்கு மேற்பட்ட பிரதேசங்களில் பிரிவினைக்காகவும், உரிமைக்காகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவற்றையெல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தலையங்கத்தில் அழித்து நிர்மூலமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ஏகாதிபத்தியங்கள், தென்சூடானை குறிவைக்க இன்னொரு பிரதான காரணமும் உண்டு. தென்சூடானின் எண்ணை வளம் அமரிக்கப் பசியை அதிகப்படுத்தியது. எங்கெல்லாம் எண்ணை வளம் உண்டோ அங்கெல்லாம் அமைதியின்மையை ஏற்படுத்தி அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் ஏக போகங்கள், இப்போது ஆபிரிக்காவின் இருதயத்தில் தமது இரும்புக் கால்களால் நசுக்குவதற்கு நிரந்தர வதிவிடம் தேடிக்கொண்டுள்ளன.
ஒடுக்கு முறைக்கு எதிரான தென்சூடானிய மக்களின் போராட்டம் அதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தென்சூடான் விடுதலையடையவில்லை காலனியாக்கப்பட்டுள்ளது. தென்சூடான் ஏகாதிபத்தியங்களின் இந்த நூற்றாண்டின் நேரடிக் காலனியாக்கப்பட்டுவிட்டது. உலக மக்களின் விடுதலைக்கான போராட்டங்களோடு தென்சூடான் மக்களும் இனிமேல் இணைந்து கொள்வார்கள்.
அதுவரைக்கும் நாடுகடந்த தமிழீழத்தின் உருத்திரகுமார் போன்றோர் சீ.ஐ.ஏ. இன் சிலந்தி வலைக்குள் சிக்குண்டு “வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளை” ஆற்றிக்கொண்டிருப்பார்கள்.