தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.
ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.
முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.
மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.
தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.
“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.
மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.
இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.
உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம் பணிந்தளிக்கும் கருணை மனு.
குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29 ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.
இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே” என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.
நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர் அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.
தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.
இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive) குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.
ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?
ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம் மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.
இந்திய இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.
‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும். இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.
மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.
கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்.
_________________________________________________________________