Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துருப்புச் சீட்டாக மாறுகிறதா நிபுணர் குழுவின் அறிக்கை? : இதயச்சந்திரன்

தற்கால ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான, நம்பகத்தன்மையற்ற செய்திகளை வெளியிடுகின்றன. உண்மையை உண்மையாக உரத்துக் கூறும் வகையில் இந்நிலை மாற வேண்டுமென யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம், யாழ். பல்கலைக்கழக ஊடகவியல் கற்கை நெறி மூன்றாம் வருட மாணவர்கள் நடத்திய விழாவொன்றில் கூறியுள்ளார்.

இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கருத்தாக இது அமைவதை மறுக்க முடியாது.

புதிய சிந்தனைகளுக்கான உரையாடல் வெளி, யாழ். குடாவில் இல்லை என்பதனை இக் கூற்று உணர்த்துகிறது.

இணக்க அரசியல் (CONSENSUS POLITICS), ஒடுக்கப்படும் இனத்தின் அரசியலிற்கும் ஒடுக்கும் இனத்தின் அரசியலிற்கும் இடையே பொதுத் தளத்தினை உருவாக்க முற்படுகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகள், அடிபணிவு அரசியலின் எதிர்வினையாக தோற்றம் பெறும்.

நம்பகத்தன்மையற்ற செய்திகள், வெறும் ஊடகங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு நிஜமானது போன்று மக்கள் முன் கொண்டு செல்லப்படுவதை, சமூக அக்கறை கொண்ட அறிவியலாளர்கள், துயரத்தோடு பார்க்கின்றார்கள்.

பகை முரண்பாடுகளை வெறும் தோற்றப்பாடாக சித்தரிக்கும் போக்கு, ஊடகப் பரப்பினை ஆக்கிரமிப்பது ஆரோக்கியமான விடயமல்ல.

அதேவேளை, உடன்பாட்டு அரசியலை எவ்வாறு கையாள்வது என்கிற சிக்கல், நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், இலங்கை ஆட்சியாளர் மத்தியில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

கோப்பாய் பாடசாலை கட்டிடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்வது, அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தை மக்களிடம் திரும்ப ஒப்படைப்பது போன்ற பரப்புரைகளை முன்னெடுப்பது என்பன தமிழ் மக்களுடனான இணக்கப்பாட்டு அரசியலிற்கு அரசு தயார் என்பது போன்று சர்வதேசத்திற்கு காட்டப்படும் தோற்றப்பாடுகளாகும்.

அதேவேளை, இறுதிப் போரில் நடைபெற்ற இனப்படுகொலைகளால் எழுந்த அனைத்துலகின் எதிர்ப்பலைகளை சமாளிக்க நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் ஐவரடங்கிய விசாரணைக் குழு போன்றவை தமிழ் மக்களுடன் இணைவு அரசியலிற்கு வழி கோலும் என்கிற கற்பிதம் அரசால் உருவாக்கப்படுகிறது.

சர்வதேச வல்லரசாளர்களுக்கிடையே நிகழும் பூகோள ஆதிக்கப் போட்டியை, அவர்களுக்கிடையே நிலவும் நலன்சார்ந்த முரண்பாடுகளை வெகு நேர்த்தியான முறையில் கையாள்வதாகக் கற்பிதம் கொண்டு, “”பயங்கரவாதத்தை தோற்கடித்தல் மற்றும் இலங்கையின் அனுபவங்கள்” என்ற ஆய்வரங்கம் ஒன்றினை 240 மில்லியன் ரூபாய் செலவில் அரசு நடத்தியது.

இக் கருத்தரங்கும் உலகின் பொதுவான அச்சுறுத்தலாகக் கருதப்படும் பயங்கரவாதத்தை தோற்கடித்த நாடு என்கிற வகையில் அனைத்துலக நாடுகளுடன் ஒரு இணைவு அரசியலை ஏற்படுத்த உதவுமென இலங்கை ஆட்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

ஆசிரியர்களுக்கு மாணவனொருவன் நடத்த முற்படும் பட்டறிவிலிருந்து கற்றுக் கொண்ட அனுபவப் பகிர்வாகவும் இம் மாநாட்டைப் பார்க்கலாம்.

சர்வதேச ஆதிக்கங்களுக்கு அப்பால், ஒடுக்கும் அரசுகளின் இணைவு அரசியலிற்கான பொதுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.

இதில் இராணுவ கேந்திர மூலோபாயக் கற்கை நெறிகளில் நிபுணத்துவம் கொண்டவர்களும் பயங்கரவாத ஒழிப்பில் நடைமுறை சார்ந்த பல அனுபவங்களைக் கொண்ட பெரும் அரசறிவியலாளர்களும் கலந்து கொண்டனர். தாங்கள் வழங்கிய ஆலோசனை போர்க்களத்தில் எவ்வாறு பிரயேõகிக்கப்பட்டன என்கிற விடயத்தை அதில் நேரடியாகப் பங்காற்றியவர்களின் ஊடாக அறிந்து கொள்ள, இவர்கள் முயற்சித்திருக்கலாம்.

முப்படைகளை தன்னகத்தே கொண்டிருந்த மிகப் பலம் வாய்ந்த இறுக்கமான விடுதலை இயக்கமொன்றினை எதிர்கொண்ட விதம், அதன் அனுபவங்கள், தேசிய இன விடுதலைப் போராட்டங்களை இப்போதும் ஒடுக்கிக் கொண்டிருக்கும் அரசுகளுக்கு தேவையானதொன்றுதான்.

ஆனால் இக் கருத்தரங்கில் கலாநிதி அஹமட் எஸ். ஹாசிம் நிகழ்த்திய உரை சற்று வித்தியாசமாக புலமை சார் நிபுணத்துவத்தின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியது.

அமெரிக்க கடற்படைக் கல்லூரியில் மூலோபாயக் கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளராக இருக்கும் பேராசிரியர் அஹமட் ஹாசிம், சதாம் உசேயினின் வீழ்ச்சிக்குப் பின்னரான கால கட்டத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஈராக்கிற்கான ஆலோசகராக பணியாற்றியவர்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டம், கலப்புப் போர் முறை (HYBRID WARFARE) சார்ந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

பயங்கரவாதம், கெரில்லா போர் முறை, நகரும் மரபுப் போர் முறைமை போன்ற சமாந்தரமான முப்பரிமாணங்களைக் கொண்ட படைத்துறை வடிவங்களை விடுதலைப் புலிகள் கொண்டிருந்ததாகக் கூறும் கலாநிதி ஹாசிம், வெறுமனே “பயங்கரவாதிகள்’ என்கிற வரையறைக்குள் புலிகளை மட்டுப்படுத்தி விட முடியாதென விளக்குகிறõர்.

அநுராதபுர, கட்டுநாயக்க விமானப் படைத் தளங்கள் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் மூலம், பயங்கரவாதம் என்பதற்குமப்பால் அவர்களை ஒரு கிளர்ச்சி அமைப்பாக பார்க்க வேண்டுமென்பதே அஹமட் ஹாசிமின் கருத்தாக அமைகிறது.

போரின் இறுதி நான்கு ஆண்டுகளில் 5.5 பில்லியன் டொலர்களை இலங்கை இராணுவம் செலவு செய்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுனர் அஜீத் நிவாட் கப்ரால் வெளியிடும் புள்ளி விபரச் செய்திக்கு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் மூலவளங்களை விரயமாக்கும் வழி முறைகள் இதுவென அஹமட் ஹாசிம் விளக்கமளிக்கிறார்.

இன்று நடைபெறும் யுத்தங்களில் கையடக்கத் தொலைபேசியோடு செல்லும் இராணுவத்தினரை கட்டுப்படுத்த முடியõதென்கிற விடயத்தை அஹமட் ஹாசிம் விளக்குகையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க் குற்ற ஆதாரங்கள் நினைவிற்கு வருகின்றன.

புதிய தகவல் தொழில் நுட்பமானது, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று விளிக்கப்படும் யுத்தத்தில் ,எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி விடுகிறது என்பதனை மிக நாசூக்காகச் சுட்டிக் காட்டும் இவர் இதனை கட்டுப்படுத்த முடியாது என்று திடமாக நம்புகிறார்.

இஸ்ரேல் உடனான போரில், அல்மனார் தொலைக்காட்சி ஊடாக 220 மில்லியன் அரபுக்களுக்கும் மற்றும் இஸ்ரேலியர்களுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் செய்தி சென்றடைந்த விவகாரத்தை நவீன உலகின் தகவல் பரிமாற்றத்திற்கான நல்ல சான்றாக கலாநிதி அஹமட் ஹாசிம் முன்வைப்பதைக் காணலாம்.

போர்க் காலத்தில் இராணுவத்தினரின் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளே ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போர்க் குற்றங்களுக்கான முக்கிய ஆதாரங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாடுகளோடு மீண்டுமொரு இணைவு அரசியலை உருவாக்குவதற்கு இந்த காணொளிச் சான்றுகள் பெரும் தடுப்பரணாக இருப்பதை இலங்கை அரசு உணர்த்துகின்றது.

கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கையின் சிறப்புத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, “நிபுணர் குழுவின் குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை, ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்படவில்லை’ என்று மறுத்தாலும் ஐ.நா. சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகார அதிகாரியும் தென்னாபிரிக்காவின் சட்ட நிபுணருமாகிய பேராசிரியர் கிறிஸ்ரோட் ஹெயின்ஸ் நிகழ்த்திய உரை, பெரும் நெருக்கடிகளை இலங்கைக்கு உருவாக்கியுள்ளதெனலாம்.

பேரவையின் தலைமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மற்றும் அமெரிக்க பிரதிநிதி எயிலீன் சாம்பலீன் டொனகோ நிகழத்திய உரைகள், போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தின.

இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு முண்டு கொடுக்கும் வகையில் “”நிபுணர் குழு அறிக்கை சரி பார்க்கப்பட்ட தகவல்களைக் கொண்டதல்ல” என்று பாகிஸ்தான் தூதுவர் சமீர் அக்ரமும் “”இக்கவுன்சில், மறுபடியும் இவ் விவகாரத்தை எடுத்திருப்பது இதன் இரட்டைப் போக்கினைக் காண்பிப்பதாகவும், வளரும் நாடுகளை சக்திமிக்கோர் அடக்க முயல்வதாகவும் வழமையான ஏகாதிபத்திய பல்லவியை கியூபா தூதுவர் பாடி முடித்துள்ளார்கள்.

மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் இம்மாதம் 17 ஆம் திகதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய போர்க் குற்ற ஆதாரங்கள் அடங்கிய காணொளிக் காட்சி, ஐ.நா. சபையில் முன் வைக்கப்படும் என பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி கூறுகிறது.

“”போரின் பின்னரான இரண்டு வருடங்கள் கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்களா?” என்று தலைப்பிட்டு இந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புக்களினால் நடத்தப்பட்ட கருத்தரங்கு மேலும் புதிய இராஜதந்திர நெருக்கடியை அரசிற்கு தோற்றுவிக்குமென எதிர்பார்க்கலாம்.

இவை தவிர நேர்த்தியான ஆங்கிலத்தில் நியூஸிலாந்து “”கிறிஸ் லெயிட்ஸ் லோ” நிகழ்ச்சி (CHRIS LAIDLAW’S SHOW) கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க இனச்சிக்கலிற்கான அடிப்படை காரணிகளை மேலோட்டமாக விளக்கி நிபுணர் குழுவின் அறிக்கையில் உண்மைத் தரவுகள் குறைவாக உள்ளதாகவும் பொதுமைப்படுத்தப்பட்ட தன்மை காணப்படுவதாகக் (SHORT OF FACTS, BIG ON GENERALISATION) கூறி மேற்குலக நாடுகளோடு புதிய அரசியல் உறவினை மேம்படுத்த முயற்சித்துள்ளார்.

போரின்போது ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள், போர் முடிவடைந்ததும் அதுபோன்ற உடன்பாட்டு அரசியலிற்கு (CONSENSUS POLITICS) எதிரான நிலையில் செல்கின்றார்களே என்கின்ற ஆதங்கமே அரச உயர் மட்டத்தினரிடம் காணப்படுகின்றது.

வல்லரசுகளின் புவிசார் இராஜதந்திர உறவு சார்ந்த மாற்றமடையும் உத்திகளை, ஜனாதிபதியின் வெளியுறவு கொள்கை வகுக்கும் ஆலோசகர்கள் புரிந்து கொள்ளவில்லைபோல் தெரிகிறது.

கொழும்பில் 3 நாட்கள் நிகழ்ந்த “போர்க் கருத்தரங்கில்” உலக நாடுகளுக்கு அறிவுரையொன்றினை பேராசான் ஜீ.எல். பீரிஸ் வழங்கியிருந்தார்.

அதாவது உலகளாவிய ரீதியில் பயங்கரவாதக் குழுக்கள் பரவி வருவதால் சர்வதேச சட்டங்களின் முழுமையான கட்டுமானங்களையும் மீளாய்விற்கு உட்படுத்த வேண்டுமென்பதே அவ்வறிவுரையாகும்.

அரசுகளுக்கிடையே நிகழும் போர்களுக்காக உருவாக்கப்பட்ட அனைத்துலக விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் என்பன பயங்கரவாதத்திற்கெதிரான போரிற்கு பொருத்தப்பாடல்ல என்பது தான் அவரின் நிலைப்பாடு.

ஆகவே நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிக்குமாறு ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்துவது போலுள்ளது.

ஆனாலும் சில விட்டுக் கொடுப்புக்களினூடாக எங்கோ ஒரு புள்ளியில் இணைவு அரசியலிற்காக சந்திப்பு நிகழும் வாய்ப்புமுண்டு.

மனித உரிமைப் பேரவையில் நிகழும் விடயங்கள் தொடர்பாக அமைதி காப்பது போல் இருக்கும் இந்தியாவின் தோற்றப்பாடு, சீனா, பாகிஸ்தானின் வெளிப்படையான அரசு ஆதரவு நிலைப்பாடு என்பன சந்திப்புப் புள்ளியை வெகு தூரத்தில் நிறுத்திவிடும் போல் தெரிகிறது.

ஆனாலும் மனித உரிமைப் பேரவையில் எழுப்பப்படும் கேள்விகளும் பதில்களும் வருகிற 17 ஆம் திகதியோடு அடங்கி விடும்.

அதற்கு அப்பால் எவ்வõறான நகர்வுகள், மேற்குலகத்தாலோ அல்லது இலங்கை அரசின் மீது நெருக்கடிகளை கொடுக்க வேண்டுமென விரும்பும் பிராந்திய சக்திகளினாலோ முன்னெடுக்கப்படும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version