மனித அழிவுகளை திட்டமிடும் ஏகாதிபத்தியங்களின் கூறுகளின் ஒவ்வொரு மக்கள் விரோதியும் ஜனநாயகம், மார்க்சியம், வர்க்கப் போராட்டம் என்றெல்லாம் வார்த்தைகளை மந்திரம் போல உச்சரிக்கின்றனர். மறு ஒழுங்கமைக்கப்படும் உலகில் வன்முறையும் அமைதியின்மையும் அடிப்படை வாதமும் பயங்கரவாதமும் திட்டமிட்டே உட்செலுத்தப்படுகின்றன.
உலகில் திட்டமிட்ட அழிவுகளின் இடிபாடுகளிலிருந்து எழுச்சிகொள்ளும் மக்கள் அழிக்கப்படுகிறார்கள். வரலாற்றில் உலகம் ஒழுங்கமைக்கப்படும் போதெல்லாம் மக்கள் தமது மூர்க்கத்தனமான எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள். சமூகத்தை மாற்றியிருக்கிறார்கள், தொழிலாள வர்க்க ஆட்சியை நிறுவியிருக்கிறார்கள், ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளைப் பாதுகாத்திருக்கிறார்கள்.
1923 ஆம் ஆண்டு துருக்கிய நாட்டின் முதலாவது ஜனாதிபதியான கேமல் அட்டாதுருக் உருவாக்கிய தேசிய வெறியின் விதைகள் இன்று பாசிச அரசு மக்கள் வெறித்தனமான தாக்குதல் நடத்துகின்ற அளவிற்கு விருட்சமாக வளர்ந்துள்ளது. ஆர்மேனியர்களை இனப்படுகொலை செய்த, தொழிற்சங்கங்களைத் தடை செய்த, குர்தீஷ் இன மக்களை இரத்தமும் சதையுமாக அழித்த கேமலின் ஆட்சிக்கு மாற்றீடு முதலாளித்துவ ‘அபிவிருத்தியும் வளர்ச்சியும்’ அல்ல என்பதை இன்றைய துருக்கிய அரசு நிறுவியிடுக்கிறது.
1923ம் ஆண்டிலிருந்து விதைக்கப்பட்ட நச்சுவிதைகள் இன்னும் அதிக அளவில் துளிர் விடுகின்றன. 1960 ஆம் ஆண்டு இராணுவச் சதிப்புரட்சிக்கு உள்ளான துருக்கி ஒராண்டுகள் இராணுவ ஆட்சியின் கீழ் நடத்தப்பட்டது. ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கு மாறாக துருக்கியில் மார்க்சிய் லெனினிய கட்சியின் வளர்ச்சி உலகின் ஒடுக்குமுறையாளர்களை அச்சம் கொள்ளச் செய்தது. அதீத பலம் பெற்ற இராணுவத்திற்கு 1980ம் ஆண்டில் துருக்கிய அரசு மேலும் அதிகாரங்களை வழங்குகிறது.
இஸ்லாமிய அடிப்படை வாதத்தை எதிர்த்த மார்க்சிய லெனினியக் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
1973 ஆம் ஆண்டில் துருக்கிய மார்க்சிய லெனினியக் கட்சியைத் (TKP-ML) தோற்றுவித்த, குர்தீஷ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகக் குரல்கொடுத்த இப்ராகிம் கேபாக்கையா சிறைப்பிடிக்கப்பட்டு சிறையில் கால்களும் கைகளும் துண்டிக்கப்பட்ட பின்னர் கோரமாகக் கொல்லப்படுகிறார். மக்களை அச்சத்தில் ஒடுக்கி வைப்பதற்காகத் திட்டமிட்டு பாசிச மிருகங்கள் நடத்திய கொலை புதிய உத்வேகத்துடன் மக்களை எழுச்சிகொள்ளச் செய்கிறது.
1983 ஆம் ஆண்டு தீவிர வலதுசாரிகளான இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு துருக்கிய இராணுவம் தனது நேரடியான ஆதரவை வழங்குகிறது. 2000 ஆயிரமம் ஆண்டில் மார்க்சிய லெனினிய மக்கள் தலைவர்களில் 32 தோழர்களை துருக்கியச் சிறையில் இராணுவம் படுகொலை செய்கின்றது. சிறைகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டுக்களே இவ்வாறு கொல்லப்படுகிறார்கள். அதே வேளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 120 தோழர்கள் சிறைகளில் மரணித்துப் போகிறார்கள். குர்தீஸ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடிய இயக்கதை கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையின்றி ஆதரிக்கிறது. கம்யூனிஸ்டுக்களும், குர்தீஷ் விடுதலைப் போராளிகளும் மிருகத்தனமாக வேட்டையாடப்படுகின்றனர்.
கம்யூனிசத்தையும் சுய நிர்ணய உரிமையையும் உச்சரிப்பவர்கள் எல்லாம் கோரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கேட்பாரற்றுக் கொல்லப்படுகின்றனர். எல்லாக் கொலைகளையும் ஏகபோக அரசுகள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தன. மனித உரிமை அமைப்புகள் வழமைபோல கூச்சலிட்டு ஓய்ந்து போயின.
அப்பாவி மக்களின் இரத்த வாடையில் ஜனநாயகத்தை காணும் ஐரோப்பாவின் கொல்லைப் புறத்தில் ஜனநாயகத்தின் மீது அக்கறைகொண்டவர்கள் அழிக்கப்பட்ட போது மனித உரிமை காணாமல் போனது.
கம்யூனிஸ்டுக்கள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டனர். ஆங்காங்கே அவர்களின் குரல் மக்களுக்காக ஒலித்தது.
இந்த நிலையில் குர்தீஷ் மக்களின் போராட்டம் தனது வெற்றிப் பாதையைத் தேடிக்கொண்ட போது துருக்கிய ஜனநாயக சக்திகளுக்கு அது நம்பிக்கையைக் கொடுதது.
பாசிஸ்ட் எர்டோகனின் அரசு முன்னிலும் அதிகமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடக்குமுறையாக மக்கள் மீது திணிக்கவும், பல்தேசிய நிறுவனங்களை அந்த ஒடுக்குமுறையின் நிழலில் மேலும் சுந்தந்திரமாக செயற்பட அனுமதித்த போது துருக்கியில் மக்கள் எழுச்சி பெற்றார்கள். துருக்கியில் கடந்த மே மாதத்தின் இறுதி நாளில் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டம் கோரமாக ஒடுக்கப்பட்டது. மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நேட்டோ நாடுகளில் அங்கம் வகிக்கும் துருக்கிய பாசிச அரசு, சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், கம்யூனிஸ்டுக்களின் எழுச்சியையும் ஒடுக்குவதற்காக அதனைப் பயன்படுத்திக்கொண்டது.
இது வரைக்கும் உறுதியான வளர்ச்சி பெறும் பொருளாதாரம் என்றும் நாடு அபிவிருத்தி அடைகிறது என்றும் ஐ.எம்.எப் சான்றிதழ் வழங்கிய துருக்கி, வெளி நாட்டுக் கடனையும் ஏழைகளையும் தோற்றுவித்தது.
வளர்ச்சி என்பது மக்களுக்கானதல்ல என்று மக்களின் போராட்டம் கூறுகிறது. பல்தேசிய அன்னியப் பொருளாதாரத்திற்கு நாட்டை விற்பனை செய்வது சமூகவிரோதம் என்று மக்களின் எழுச்சி உரக்கச் சொல்யிருக்கிறது. மிருகத்தனாம ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களின் போராட்டம் தொடர்கிறது. கம்யூனிஸ்டுக்களின் கொடியும், துருக்கிய எதிர்க்கட்சிகளின் கொடியும், குர்திஷ்தான் விடுதலைப் போராளிகளின் கொடியும் அருகருகே பறக்கும் அதிசயத்தைப் போராட்டங்களில் காணக்கூடியதாக் உள்ளது. இதுவரை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத நிகழ்வுகள் இவை.
அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் துருக்கிய அரசின் ஆர்ப்பாட்டங்கள் மீதான் ஒடுக்குமுறையைக் ‘கண்டித்திருக்கின்றன’. மக்களின் போராட்டம் தவிர்க்க முடியாதது என அறிந்துகொண்ட அமரிக்க ஐரோப்பிய நாசகார அரசுகள் வழமை போல ‘ஜனநாயகத்தைக்’ கையிலெடுத்துள்ளன. தன்னார்வ நிறுவனங்கள் வேறு மக்களுக்காகக் குரல்கொடுக்கிறோம் பேர்வழிகள் என்று நுளைந்துள்ளன.
மிகவும் பலவீனமான நிலையிலுள்ள துருக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை மீளமைத்துக்கொள்ள முனைகிறது. குர்தீஷ் போராளிகள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இனிமேல் மக்களின் போராட்டத்திற்கு ‘போலி ஜனநாயகவாதிகளா’ அன்றி துருக்கிய ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கம்யூனிஸ்டுக்களுமா தலைமை தாங்க்கப் போகிறார்கள் என்பதிலேயே மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.
ஒடுக்கப்படும் மக்களின் சார்பில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடுவதாகக் கூறும் தமிழ்த் தலைமைகள் துருக்கிய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது வரலாற்றுக்கடமை. ஒபாமாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய புலம் பெயர் அரசியல் கோமாளிகளிடமிருந்து ஆதரவு அறிக்கைத் துண்டைக்கூட எதிர்பார்க்க முடியாது. அதே வேளை சுய நிர்ணய உரிமை என்றாலே இனவாதம் என்று பாசிச ராஜபகசவிற்கு துணை போகும் இடதுசாரி முகமூடி போட்ட இனவாதிகளுக்கு துருக்கிய மக்களின் போராட்டத்தை ஆதரிக்க எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது.