Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

யுத்தம், இடப்பெயர்வு, சாதி

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி முறைமை அண்மைக்கால சமூக மாற்றங்கள் யுத்தம் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட செயற்பாங்குகளினால் அதிக தாக்கத்திற்குள்ளாகி வருகின்றது. யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்திற்குள்ளேயும் யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கையின் வேறு பல பிரதேசங்களுக்கும் பாரியளவிலான சனத்தொகை இடப்பெயர்வு இடம்பெறுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து பாரியளவிலான மக்களின் கடல்கடந்த நாடுகளை நோக்கிய புலப்பெயர்வானது ஒன்றில் சட்டரீதியான முறையிலோ அல்லது சட்டரீதியற்ற முறையிலோ இடம்பெறுகின்றது (Daniel & Thangaraj 1994, Fuglerud 1999). ஈழப்போர் ஒன்று (1983-1987), ஈழப்போர் இரண்டு (1989-1993), ஈழப்போர் மூன்று (1995-2002) மற்றும் ஈழப்போர் நான்கு (2006 இன் பின்) ஆகிய கால கட்டங்களில் அதிகரித்துச் சென்ற முரண்பாடுகள் தொடர்ச்சியான இடப்பெயர்வுகளை ஏற்படுத்தியதோடு வடமாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலில் கணிசமான தாக்கத்தினையும் ஏற்படுத்தியது.

சனத்தொகை இடப்பெயர்வானது உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிக இருப்பிடங்களில் வேறுபட்ட சாதிப் பின்னணியினைச் சேர்ந்தவர்களையும் ஒன்றினைய வைத்தது. 1980பதுகளிலிருந்து தொடர்ந்த யுத்தத்தினால் யாழ்ப்பாணத்திலிருந்தும் வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர் (Sidharthan 2003). இச்சனத்தொகை இடப்பெயர்வில் வேறுபட்ட சாதிப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் யாழ்ப்பாணத்தினை விட்டு வெளியேறுகின்றனர். ஆனாலும், வெள்ளாள சாதிப் பின்னணியிலிருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொழும்பு மற்றும் கடல்கடந்த நாடுகளை நோக்கி வெற்றிகரமாகச் செல்கின்றனர். இவ்வாறு செல்வதற்கு குடாநாட்டுக்கு அப்பால் விரிவுபட்டுள்ள அவர்களது சமூக வலைப்பின்னல் ஒரு முக்கிய காரணமாகின்றது (Sidharthan 2003).

அதிகமான வெள்ளாள நிலச்சுவாந்தர்களின் துரித இடப்பெயர்வு, அவர்களது நிலங்களில் ஏனைய சில சாதிகளைச் சேர்ந்தவர்க்கு விலைபோகும் நிலைமை, LTTEயினால் அமுல்படுத்தப்பட்ட சாதிக் கெதிரான தடை முதலான விடயங்கள் யாழ்ப்பாணச் சாதி முறைமையின் அடக்குமுறைப் பண்பினை பலவீனப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய அண்மைக்காலப் போக்குகளினால் முன்னைய சாதி அடிப்படையிலான பாகுபாட்டு நடைமுறைமகள் மற்றும் வெள்ளாள சாதிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையேயிருந்த சமூக இடைவெளிகள் முதலானவை இல்லாது போயுள்ளது அல்ல பாரியளவில் குறைந்துள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை. இலங்கையிலுள்ள சிங்கள மற்றும் இந்தியத் தமிழ்ச் சமூகங்களிடையே காணப்படுவது போல், யாழ்ப்பாணச் சமூகத்திலும் சாதி என்ற விடயம் மறைந்ததொரு விடயமாகக் காணப்படுகின்றது. இதுவே அண்மைக்கால மாற்றங்களில் குறிப்பிட்டுப் பேசக்கூடியதொரு பண்பாகவுள்ளது.

உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களும் சாதி அடிப்படையிலான பாகுபாடும்

யுத்தத்தினாலும் 2004, டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியினாலும் இடம்பெற்ற அழிவுகள் யாழ். குடாநாட்டில் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. இவ்விரு பாரிய அழிவுகளும் சாதி, வர்க்கம் மற்றும் பால்நிலை என்பனவற்றின் அடிப்படையில்லாது அனைத்து மக்களையும் பாதித்துள்ளது (Silva 2003). எவ்வாறாயினும், இத்தாக்கங்களின் விளைவுகள் வேறுபட்ட மக்கள் குழுக்களிடையே வெவ்வேறான வடிவங்களைப் பெற்றுள்ளது. 1981 இனைத் தொடர்ந்து சனத்தொகைக் கணிப்பீடு மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதனால் யாழ். குடாநாட்டின் தற்கால சனத்தொகையின் எண்ணிக்கை பற்றி மிகச் சரியான தகவல் இல்லை. 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணப்கெடுப்பின்படி யாழ். குடாநாட்டின் மொத்தச் சனத்தொகை 300,000 தொடக்கம் 500,000 என்ற வீச்சினைப் பெறுகின்றது. இச்சனத் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் (1/3 தொடக்கம் 1/5 கணிக்கப்பட்ட மொத்தச் சனத்தொகையில் தங்கியுள்ளது) உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் முகாம்கள் அல்லது தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வசித்து வருகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் (100,756) தமது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வசித்து வருகின்றனர். ஏனையோர் (11,169) அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் பெரும்பாலும் உதவியளிக்கப்பட்டுவரும் முகாம்களில் வசிக்கின்றனர். அரச படைகளால் அமுல்படுத்தப்பட்ட “உயர் பாதுகாப்பு வலயம்” மற்றும் தொடர்ந்து வரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்றவற்றால் முகாம்களில் வசிக்கும் உள்ளுரில் இடம் பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திருப்பிச் செல்லமுடியாத நிலையிலுள்ளனர். பொதுவாக இவர்கள் வரையறுக்கப்பட்ட வளங்களுடனும் பொருளாதார வசதிகளற்றும் இருப்பதனால் வேறு இடங்களுக்குச் செல்லவோ அல்லது புதிதாகத் தமது வாழ்க்கையை அமைப்பதற்கோ முடியாத நிலையிலுள்ளனர்.

குறிப்பாக உள்ளுரில் இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்கள் வரையறுக்கப்பட்ட வளங்கள், வரையறுக்கப்பட்ட சமூகத் தொடர்புகள் மற்றும் வாழ்க்கையின் தரத்தினை உயர்த்திக் கொள்ளுவதற்கு இடவசதியின்மை எனப் பல்வேறு பிரச்சினைகளுடன் வறுமை நிலைக்குள் வாழ்கின்றனர். 31-10-2007இல் வெளிவந்த கணிப்பீட்டின்படி, யாழ். மாவட்டத்தில் உள்ளுரில் இடம் பெயர்ந்த மக்களுக்காக 81 முகாம்கள் இருந்தன. உள்ளுரில் இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் அனைத்து மக்களின் சாதிப் பின்னணி பற்றி மிகச்சரியான தகவல் இல்லை. ஆனால், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலானோர் பஞ்சமர் குழு வினைச் சேர்ந்தவராக உள்ளனர் என்பதை இருப்பிலுள்ள தகவல்கள் உறுதி செய்கின்றன. இக்கற்கையில் இவ்விடயம் ஒரு முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. அத்துடன் சாதி அடிப்படையிலில்லாது யுத்தம் மற்றும் சுனாமி முதலியன அனைத்து மக்களையும் பாதிக்கும் அதேநேரம் பஞ்சமர் போன்ற சில குழுவினைச் சேர்ந்தோர் பொதுவாக அதிகமான பாதிப்புக்குள்ளாவதனையும் இவ்விடயம் காட்டி நிற்கின்றது. உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள சனத்தொகையில் 75 வீதத்திற்கும் மேலானவர்களாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயது முதிந்தவர்கள் காணப்படுகின்றனர் (Gill 2007).

மல்லாகத்தில் சாதி

இலங்கையில் சாதி அடிப்படையிலான சனத்தொகைக் கணக்கெடுப்பு அலுவலகரீதியிலான ஒரு முறையாக இல்லை. LTTEயின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒரு தடை செய்யப்பட்ட விடயமாகவுள்ளது. இத்தகைய காரணங்களால் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக பாரிய மாற்றத்திற்குள்ளாகி வரும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒவ்வொரு சாதி அடிப்படையிலும் சனத்தொகையினைக் கணக்கெடுப்பதென்பது கடினமானதொரு விடயமாகும். இவ்வாய்வில், குறிப்பிடத்தக்க உள்ளுரில் இடம்பெயர்ந்த சனத்தொகையை உள்வாங்கி மல்லாகத்தின் தற்கால சாதிக் கோப்புப் பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பெற்றோம்.

மல்லாகத்தின் சனத்தொகையில் ‘உயர் சாதி’ வெள்ளாளர் 31 வீதத்தினைக் கொண்டிருக்கின்றனர். பஞ்சமர்களான வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் சாதியினைச் சேர்ந்தோர் கூட்டாக சனத்தொகையில் பெரும்பான்மை (58.3%) அந்தஸ்தினைப் பெறுகின்றனர். இப்பஞ்சமர் குழுவில் நளவர் (26.6%) மற்றும் பள்ளர் (28.5%) சாதியினைச் சேர்ந்தோர் மொத்தச் சனத்தொகையில் குறிப்பிடத்தக்கதொரு பகுதியைக் கொண்டு காணப்படுகின்றனர். மல்லாகத்திலுள்ள ஒவ்வொரு சாதிகளின் சனத்தொகையினையும் வேறுபடுத்தி நோக்குவோமேயானால், வெள்ளாளர் (31%) எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடத்தினைப் பெறுகின்றனர். 1950களில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையில் வெள்ளாளர் 50 வீதமாக இருந்தனர் என்பது அறியப்பட்டதொரு விடயமாகும் (Banks 1960: 67).

வெள்ளாளர், பிராமணர், பண்டாரி, கோவியர், தச்சர், நட்டுவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகிய பதினொரு சாதிகள் மல்லாகத்தில் காணப்படுகின்றன. இச்சாதிகளில், வெள்ளாளரும் பிராமணரும் ‘உயர்ந்த’ சாதிகளாகவும் பண்டாரி, கோவியர், தச்சர் மற்றும் நட்டுவர் ‘நடுத்தர அல்லது இடைநிலைச்’ சாதிகளாகவும் வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோர் ‘தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும்’ கணிக்கப்படுகின்றனர். சமூகத்தின் படிநிலையில் அடிமட்டத்திலுள்ளவர்களாகக் கருதப்பட்ட இந்த ஐந்து ‘கீழ்ச் சாதிக்’ குழுக்கள் பஞ்சமர் என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றனர்.

யாழ். குடாநாட்டின் வடக்கு கரையோர பிரதேசங்களான காங்கேசன்துறை, மயிலிட்டி, ஊறணி, மற்றும் வயாவிளான் முதலான “உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து” இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகையானோர் மல்லாகத்தில் அமைந்துள்ள நான்கு முகாம்களில் வசிக்கின்றனர். தும்புத் தொழிற்சாலை முகாம், நீதவான் முகாம், கோணப்புலம் முகாம் மற்றும் ஊறணி முகாம் என்பவையே இந்நான்கு முகாம்களுமாகும். தும்புத் தொழிற்சாலை முகாம் மல்லாகம் தெற்கு கிராம சேவகர் பிரிவினுள்ளும் (J/212), நீதவான் முகாம் மல்லாகம் மத்தி கிராம சேவகர் பிரிவினுள்ளும் (J/213), கோணப்புலம் மற்றும் ஊறணி முகாம்கள் மல்லாகம் வடக்கு கிராம சேவகர் பிரிவினுள்ளும் (J/214) உள்ளடங்குகின்றன.

தொடரும்…

நோக்கியதொரு போக்கினைப் பிரதிபலித்து நிற்கின்றது எனலாம்.

முன்னையவை:

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி(2):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா
யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி:பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா
தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா
Exit mobile version