Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தீண்டாமைக் கொள்கைகளும் வழக்கங்களும்(3):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

 ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி… பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.

இலங்கைத் தமிழர்களிடையே சமயரீதியாக விதிக்கப்பட்ட தீண்டாமைக் கொள்கை வழக்கத்திலிருந்தது. வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகிய சாதிக் குழுக்கள் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் தாழ்நிலை அந்தஸ்தினைக் கொண்டவர்களாகக் கருதப்பட்டனர். இந்த ஐந்து சாதிக் குழுக்களும் கூட்டாகப் ‘பஞ்சமர்’ என அழைக்கப்பட்டனர். இந்த ஐந்து சாதிக் குழுக்களும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘தீண்டத்தகாதோர்’ என்ற அந்தஸ்தினைப் பெற்றிருந்தன (Raghavan 1953, 1957). பாங்ஸ் (1957) மற்றும் டேவிட் (1974) ஆகியோரது கணிப்பின்படி யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் இப்பஞ்சமர் குழுக்கள் 18 வீதமான இடத்தினைப் பெற்றனர். 1950களில் ஆதிக்க சாதிக் குழுவினரால் பஞ்சமர் குழுவுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. இரகுநாதன் (2004: 22-23) வழக்கத்திலிருந்த பஞ்சமருக்கு எதிரான பின்வரும் 24 தடைகளைப் பல்வேறு ஆதாரங்களுடன் பட்டியல்படுத்துகின்றார்:

1. ஆண்கள் மேலங்கி அணியக் கூடாது.

2. கணுக்கால் வரைக்கும் வேட்டி கட்டக் கூடாது.

3. தோளில் சால்வை போடக் கூடாது.

4. பெண்கள் மேற்சட்டை போடக் கூடாது.

5. தாவணி போடக் கூடாது.

6. சாலைகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் நடமாடும் போது தமது வருகையை உணர்த்தும் வகையில் காவோலையை இழுத்துச் செல்லுதல் வேண்டும்.

7. நகை அணியக் கூடாது.

8. திருமணத்தில் தாலி கட்டக் கூடாது.

9. உயர் சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.

10. விசேட சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது.

11. பிரேதங்களைத் தகனம் செய்யாது புதைக்க வேண்டும்.

12. உயர் சாதியின் சுடலையினைப் பயன்படுத்தக் கூடாது.

13. நன்மை, தீமைகளின்போது வாத்தியங்கள் பயன்படுத்தக் கூடாது.

14. உயர் சாதியின் குளங்களைப் பயன்படுத்தக் கூடாது.

15. குடைபிடிக்கக் கூடாது.

16. பாதணிகள் அணியக் கூடாது.

17. கல்வி கற்க முடியாது.

18. உயர் சாதியின் தெய்வங்களைத் தமது கோயில்களில் பிரதிஷ்டை செய்யக் கூடாது.

19. உயர் சாதியினரின் கோயில்களுக்குள் செல்லக் கூடாது.

20. தேநீர்ச் சாலைகளுக்குள் போகக் கூடாது.

21. பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளக் கூடாது.

22. சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்யக் கூடாது. அவற்றைச் செலுத்தவும் கூடாது.

23. பஸ் வண்டியின் ஆசனங்களில் உக்காரக் கூடாது.

24. பிற்காலத்தில் பாடசாலை அனுமதி கிடைத்த போதிலும் ஆசனங்களில் உக்காரக் கூடாது.

மேற்குறிப்பிட்ட விடயங்களிலிருந்து நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் பஞ்சமர் குழுக்கள் மீது திணிக்கப்பட்ட தடைகள் மிகவும் பரந்து பட்டவையாக இருந்தன. பொது இடங்கள், சேவைகள், மற்றும் பொதுக் குடிநீர் போன்றவற்றினை உபயோகிப்பதற்கு பஞ்சமருக்குத் தடை காணப்பட்டதுடன், அவர்களால் அணியப்படும் ஆடைகளிலிருந்து அவர்கள் இனங்காணப்பட்டனர். மேற்கூறப்பட்டவை தவிர இன்னுமொரு தடை பஞ்சமர்களுக்கு எதிராகக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக, மரணச்சடங்குகளில் பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து அழும் மரபு காணப்பட்ட போதிலும், தாழ்ந்த சாதியைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பெண்கள் இத்தகைய சந்தர்ப்பங்களில் உயர்ந்த சாதிப் பெண்களுடன் இணைத்து அழுவது தவிர்க்கப்பட்டிருந்தது. உயர் சாதிக்காரரின் மரணச் சடங்குகளில் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்கள் கூடி அழுவதற்கென வேறானதொரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தீண்டாமைக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மேற்கூறப்பட்ட பஞ்சமருக்கெதிரான தடைகளில் அதிகமானவை இல்லாது ஒழிக்கப்பட்டதுடன், இவற்றில் சில பல மாற்றங்களுக்குட்பட்டு இன்றும் வழக்கத்திலுள்ளது.

யாழ்ப்பாணச் சமூகத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள்

1920களைத் தொடர்ந்து பஞ்சமர் மீதிருந்த சமூகத் தடைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வெளிக்கிளம்பின. 1927இல் முதன் முறையாக ஒதுக்கப்பட்ட வர்க்கத்தினைப் பிரநிதித்துவப்படுத்திய தமிழ் ஊழியர் சங்கம் பஞ்சமர் மீது திணிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென நிறுவப்பட்டது. 1928இல் இம்மன்றம் பஞ்சமர்களின் பிள்ளைகளுக்குப் பாடசாலைகளில் சம ஆசனம் மற்றும் சமபோசனம் வழங்கப்பட வேண்டுமென்று ஒரு போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தது. இரண்டு வருடத்திற்கு மேலான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக, அரசாங்க உதவியினால் செயற்படும் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் நிலத்திலே உட்காருவதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஏனைய சாதி மாணவர்க்குள்ள நடைமுறைபோல் ஆசனங்கள் கொடுக்கப்பட வேண்டுமென அரச நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இப்புதிய நடைமுறையை அமுலுக்குக் கொண்டுவந்த 15 பாடசாலைகளை உயர் சாதி இந்துக்கள் எரித்ததன் மூலமாக இந்நடைமுறைக்கான தமது எதிர்பினைத் தெரிவித்தனர். 1930களில் உயர் சாதி அரசியல் குழாம் சம ஆசன ஏற்பாடுகளுக்கான உத்தரவினை விலக்குமாறு பாடசாலை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள் இவ்விடயத்தை மாற்றியமைப்பதில் வெற்றி கொள்ளவில்லை (மேலதிக தகவல்களுக்கு பார்க்க வெகுஜனன், இராவணா 2007).

1931ஆம் ஆண்டில் வெளிவந்த டொனமூர் சட்டவாக்கத்தின் கீழ் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போது, எஸ். நடேசன் போன்ற உயர் சாதியினரின் ஆர்வத்தினைப் பிரதி நிதித்துவப்படுத்தி நிற்கும் பிரதான அரசியற் தலைவர்கள் வாக்களிக்கும் உரிமையைச் சலுகைகள் மறுக்கப்பட்ட சாதியினருக்கு வழங்கக் கூடாது என்ற எண்ணப்பாட்டிலிருந்தனர். ஒதுக்கப்பட்ட சாதிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வாக்களிக்கும் உரிமை தடைசெய்யப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் இவ் அரசியல் தலைவர்கள் தமது வாக்களிக்கும் உரிமையைக் கைவிடும் அளவுக்குச் சென்றனர். அத்துடன் இந்நடைமுறை தப்பான கைகளுக்கு அதிகாரத்தினை மாற்றுவதற்கு வழிகோலும் என்றும் எச்சரித்தனர். வெள்ளாளத் தலைவர்களின் இவ்வேண்டுகோளை மறுத்து அனைவருக்கும் வாக்குரிமை என்ற விடயம் அமுல்ப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்துவந்த காலப் பகுதிகளில் பஞ்சமருக்கு எதிராக ஆதிக்க சாதியினரால் மேற்கொள்ளப்பட்ட தடைகள் மென்மேலும் காத்திரமடைந்தது. பஞ்சமருக்கெதிரான இப்போக்குகள் 1943இல் வட இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்ற அமைப்பின் உருவாக்கத்திற்கு வழிகோலியது. சட்டமியற்றுவதற்கு உரிமையளிக்கப்பட்ட குழுவில் தாழ்த்தப்பட்ட சாதிகளின் வேண்டுகோளிற்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் உட்பட தாழ்த்தப்பட்ட சாதிகளின் உரிமைகளை முன்நிலைப்படுத்தி பல எதிர்ப்பு நடவடிக்கைகளை இவ்வமைப்பு ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணச் சமூகத்தில் வெள்ளாளருக்கு இருந்த உறுதியான பிடி, அவர்களது பொருளாதார, அரசியல், சடங்கு மற்றும் கருத்தியல்சார் ஆதிக்கம் போன்ற விடயங்களால், பஞ்சமர் தம்மை உறுதிப்படுத்துவது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.

1950களில் ‘உயர் சாதிப்’ பழைமை வாதிகளினை அதிகளவில் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரசை (Tamil Congress) எதிர்த்து நின்ற தமிழரசுக் கட்சியில் (Tamilarasu Party) பஞ்சமர் குழுவைச் சேர்ந்த பலரும் இணைந்தனர். 1957களில் உருவாக்கப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தினை உருவாக்குவதற்கு தமிழரசுக் கட்சி துணையாக இருந்தது. இச்சட்டம் பொது இடங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு பாராட்டப்படுமாயின் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்று உணர்த்தி நிற்கின்றது. ஒக்டோபர் 1958இல் சிறுபான்மைத் தமிழர் மகாசபை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேநீர்க்கடைப் பிரவேச இயக்கத்தினை (Teashop Entry Movement) ஆரம்பித்து வைக்கின்றது. நவம்பர் 1958 இனைத் தொடர்ந்து சில முஸ்லிம் தேநீர்க்கடைச் சொந்தக்காரர் பஞ்சமர்களுக்கு அனுமதி வழங்கி நின்றனர். இதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் ஏனைய பல தேநீர்க் கடைகள் பஞ்சமர் குழுக்களுக்கான அனுமதியை வழங்கியிருந்தன.

பஞ்சமர்களின் ஆலயப் பிரவேச இயக்கம் (Temple Entry Movement) 1968இல் இலங்கைச் சமவுடமைக் கட்சியின் (Communist Party) உதவியுடன் வலிமை பெற்றது (Vegujanan & Ravana 2007). ஆலயப் பிரவேசப் போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியிலிருந்த “உயர்” சாதித் தலைவர்கள் பலர் ஆதரவு அளிக்காது இருந்தமையால், பஞ்சமர்களுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையே முறிவு ஏற்பட்டது. இப்போராட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட ஆதிக்க சாதிக் காரர்களின் நடவடிக்கைகள் வன்முறை மற்றும் படுகொலைகளுக்கு இட்டுச் சென்றன. இவ்விடயத்தினை ஃபாபன்பேகர் (1990) பின்வருமாறு விவாதிக்கின்றார். இக்கட்டத்தில் தமிழ்த் தேசியவாதம் தமிழ்ச் சமூகத்தினுள் இருக்கும் சாதியினால் ஏற்பட்ட பிளவுகளை ஆற்றுவதற்கான தற்காப்பு தேசியவாதமாக வடிவம் கொள்கின்ற அதேநேரம் சிங்கள ஆதிக்க அரசிடமிருந்து வரும் பாரிய சவால்களுக்கான எடுத்துரைப்பாகவுமுள்ளது. ஆலயப் பிரவேசப் போராட்டம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் உட்பட வேறும் பல பிரதான யாழ்ப்பாண இந்துக் கோயில்களுக்குள் பஞ்சமர்கள் சென்று வழிபாடாற்றுவதற்கான அனுமதியை வழங்கியது என்ற அளவுடன் வெற்றி கண்டது.

கல்வியின் விரிவாக்கம், அரசு மற்றும் சிவில் சமூகத்தின் தலையீடு, பஞ்சமர்களின் ஒரு பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் போன்ற காரணங்களால் மரபுரீதியாக பஞ்சமர்கள் மீது திணிக்கப்பட்ட தடைகளில் பல இல்லாது போனது, 1980களைத் தொடர்ந்து LTTE யினால் சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தடைநடவடிக்கைகள் இவ்விடயத்தினை மேலும் இல்லாது செய்தன.

1980களைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால் வடகிழக்கு இலங்கை பிரிவுண்டதுடன் குறிப்பாக சாதி அடிப்படையிலான பாகுபாட்டிலும் பொதுவாக சாதி முறைமையிலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டன. முதலாவதாக, தமிழ் ஆயுதப் போராளிகளால் மேற்கொள்ளப்படும் போராட்டம், அரச நெருக்கீடு, மற்றும் தமிழரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் அரச இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றினால் சாதியைக் கருத்தில் கொள்ளாத ஒருமைப்பட்ட இன ஐக்கியம் தமிழ் இனத்துவக் குழுக்களிடையேயும் வளர்ச்சியடைந்தது (Daniel & Thangaraj 1994). இரண்டாவதாக, 1995இல் இடம்பெற்ற யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கான மக்களின் நீண்டதூர இடப்பெயர்வினால் வேறுபட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து அவசரகால நிலைமைகளிலும் ஒருவருக்கொருவர் இடைவினை கொள்ளவேண்டியிருந்தது.

இத்தகைய விடயங்கள் சாதி அடிப்படையிலான சமூக வேறுபாடு மற்றும் தீண்டாமை ஆகிய விடயங்களின் நிலையான தன்மைகளைக் கடினத்திற்குள்ளாக்கியது (Hoole முதலானோர் 1990). மூன்றாவதாக, LTTE இயக்கத்தின் தீவிர போரியல் போக்கினால் மரபுரீதியாக இருந்த வெள்ளாள அரசியல் அதிகாரத் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பின்மை காரணமாக, யாழ்ப்பாணச் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளிலிருந்த ‘உயர் சாதி’, ‘உயர் வகுப்பு’ வெள்ளாளக் குடும்பங்களின் வெளிநாடு நோக்கிய பாரிய புலப்பெயர்வு மற்றும் முன்னெப்போதும் இல்லாதவாறு ‘தாழ்த்தப்பட்ட சாதிகள்’ தாமாகவே தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் போன்றவற்றால் சாதி நிலைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன.

இறுதியாக, LTTE இயக்கத்தின் வளர்ச்சி பெரும்பாலும் சமூகத்தின் நடுத்தர மற்றும் தாழ்ந்த சாதிகளிலிருந்து வந்த தலைவர்கள், போராளிகளின் சாதிச்சார்பற்ற பயிற்சி மற்றும் அசைவியக்கம், சாதி பற்றிய வெளிப்படையான தடை மற்றும் ஆர்ப்பாட்டம் என்பன சமூகத்தில் சாதிப்படிநிலை ஒரு வலிமைமிக்க சக்தியாக இருப்பதனை இல்லாது செய்தன. எவ்வாறாயினும், இத்தகைய விருத்தி நிலைகள் மக்களின் மனங்களிலே பதிந்துள்ள சாதி வேறுபாடுகளை உண்மையில் இல்லாது செய்துள்ளதா என்பதற்குப் போதிய சாட்சிகள் இல்லாதுள்ளது. திருமணம், சடங்குகள் மற்றும் நிரந்தர சமூக ஐக்கியம் என்பவற்றில் சாதியின் பங்கினை நடைமுறையில் அவதானிக்க முடிகின்றது. சமூக, அரசியல் அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்ட சாதி பற்றியதொரு பாராமுகப் போக்கு, சாதி தொடர்பாக அரசியல் ரீதியாகத் திணிக்கப்பட்ட மௌனநிலை போன்ற விடயங்களால் தற்கால யாழ்ப்பாணத்தில் சாதி பற்றிய எத்தகையதொரு அனுபவம்சார் ஆய்வுகளைச் செய்வதிலும் கடினம் உள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பொதுவாக யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதிபற்றி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்காததொரு கொள்கையினைக் கடைப்பிடிக்கின்றது. இது ஒருவகையில் தமிழ்த் தேசியவாதத்தினைக் கடைப்பிடிக்கும் ஆர்வத்தில், சாதியின் மறுதலிப்பு நோக்கியதொரு போக்கினைப் பிரதிபலித்து நிற்கின்றது எனலாம்.

முன்னையவை:

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி(2):பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி:பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

Exit mobile version