Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருவிழா முடிந்துவிட்டது, கொண்டாட்டங்கள் ஓய்ந்துவிட்டன!: சார்ள்ஸ் தவராசா

மகிந்த ராஜபக்சே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி இனிச் செயல்படுவார். டக்ளஸ் தேவானந்தா யாழ்வெகுமக்களின் விருப்ப வாக்குகளை அதிகம் பெற்றிருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பனிரெண்டு ஆசனங்களை வென்றிருந்தாலும்  வடகிழக்கு மேலாதிக்கத்தை அக்கட்சி இழந்துவிட்டது.

 தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தோல்வியை மறுபரீசீலனை செய்கிறது. புதிய ஜனநாயக் கட்சி, சம சமாஜக் கட்சி போன்ற தமிழ் சிங்கள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே தோல்வியைத் தழுவியிருக்கின்றன. மார்க்சிஸ்ட்டுகள் யதார்த்தம் குறித்த அறிவற்றவர்கள் என்கிறார் பின்னூட்ட மன்னர் மன்னன். புகலிட விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு பலத்த அடி என தேசபக்தர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

 அரசியல்?

 அரசியலுக்கு சிங்கள பெரும்பான்மை தேர்தல்களில் என்றேனும் இடமிருந்திருக்கிறதா?  தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகளுக்கு என்ன ஆனது?

 அது பற்றிப் பேச இது தருணமில்லை. அபிவிருத்தி அரசியலின் காலம் இது. மகிந்தா இதைத்தான் சொல்கிறார். டக்ளஸ் தேவானந்தாவும் இதனைத்தான் சொல்கிறார்.

 மகிந்த ஜனாதிபதி. டக்ளஸ் அமைச்சர். இவர்களிடம் அரசுத்துறைகள் இருக்கின்றன. இவர்களிடம் அரசுப் பணம் இருக்கிறது. இவர்களது தொகுதிகளுக்கு அதனது அபிவிருத்திகளுக்கு இவர்கள் தமது சொந்தப் பணத்தை அள்ளிக் கொடுப்பதில்லை. அரசுப் பணத்தைத்தான் கொடுக்கிறார்கள்.

 அமைச்சரவை அதிகாரமும் அரசுப் பணமும் கொண்ட டக்ளஸ் தேவானந்தா தனிநபராக தேர்தலில் வெல்வது ஆச்சர்யமில்லை. அவரதும் அவரது எஜமானனான மகிந்தாவும் வடக்கில் வெல்வதுதான் ஆச்சர்யம்.

 அது நிகழாது. ஓரு போதும் அது நிகழப் போவதில்லை.

 விடுதலைப் புலிகளின் அழிவின் பின் தமிழ் சிங்கள முரண் முடிந்து போய்விடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பணிரெண்டு தொகுதிகள் வெற்றி அதன் வெளிப்பாடு அன்றி வேறில்லை.

 தமிழ்தேசியக் கூட்டமைப்பு மரபான தமிழ் உயர்வர்க்கத்தினரின் அரசியல் வேட்கைகள் கொண்ட கட்சிதான். என்றாலும் அது இலங்கைத் தீவின் இன்றைய முரண் அரசியலான இன அரசியலை முன்வைத்திருக்கிறது.

 இனமுரண்பாடுதான் இலங்கையின் பிரதான அரசியல் முரண்பாடு.

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழ தமிழ் மக்களினது பிரதிநிதி அல்ல. தலித் மக்களைக் குறித்த கரிசனை கொண்ட கட்சி அல்ல அது. தமிழினத்திலுள்ள ஓடுக்கப்படும் மக்கள் பாலான பார்வை கொண்டது அல்ல அக்கட்சி. தமிழ் முஸ்லீம்கள் பற்றிய மலையகத் தமிழர் பற்றிய கரிசனை கொண்டது அல்ல அக்கட்சி.

 இதனைப் பற்றிய கரிசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும்போதுதான் அது முழு தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துக் கூடிய கட்சியாக மாறும்.

 தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி புகலிட விடுதலைப் புலிகளின் வடகிழக்குக் குரல். அவர்கள் முன்வைத்திருந்த ஆயுதப் போராட்ட அரசியல் அழிவில் முடிந்திருப்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை.

 விடுதலை அரசியல் என்பது மக்களின் அன்றாட நலன்களுடனும் அவர்களது அபிவிருத்தியுடனும் இணைந்தது. விடுதலைப் புலிகள் தமது அதிகாரத்தைக் குறித்து செலுத்திய கவனத்தை மக்களின் அன்றாட நலன்கள் அபிவிருத்தி போன்றவற்றில் செலுத்தவில்லை.

 மக்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். சாவைச் சந்தித்திருக்கிறார்கள். அடிப்படை வசதியற்றவர்களாக இருக்கிறார்கள்.  சோர்ந்து போயிருக்கிறார்கள். வீடற்றவர்களாக வாழ்வுத் துணையற்றவர்களாக உடுக்க உடையற்றவர்களாக இருக்கிறார்கள்.

 இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் என்ன செய்தார்கள்?

 அவர்களது இந்த வெற்றிடத்தில்தான் டக்ளஸ் வெற்றி பெறுகிறார். அவரது அபிவிருத்தி அரசியல் வெற்றி பெறுகிறது. காலம் காலமாக அபிவிருத்தி மறுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட தலித் மக்களது வாக்குகள் டக்ளசுக்குப் போவதில் ஆச்சர்யமில்லை.

 டக்ளஸின் இந்த அரசியல் தற்காலிக அரசியல்.

 வடகிழக்கு இணைப்பு பற்றி அரசியல் தீர்வாக டக்ளஸ் பேசுவதனைத் துப்புரவாக நிராகரிக்கிற அவரது எஜமானன் மகிந்தவுடனான அடிப்படை முரண் உக்கிரமடைகிறபோது அவரது முகம் என்னவாக ஆகும்?

 புதிய ஜனநாயக் கட்சியும் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் இந்தத் தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள்.

 புதிய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த அரசியல் முரண் கொண்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய ஆதிபத்தியம் என்றெல்லாம் எதிரிகளை வரையறுக்கிற அக்கட்சி சீனா என்று வருகிறபோது சீன அரசியலையும் இலங்கையில் சீன மூலதனத்தையும் வரையறுப்பதில் அது தடுமாறுகிறது.

 இலங்கையின் இனமுரண்பாட்டில் சீனா எங்கே நிற்கிறது?

 தமிழர்கள் அழிவுபற்றியும் இலங்கை ஒடுக்குமுறையும் பற்றியும் பேசுகிற அக்கட்சி தமிழர்களைக் கொன்றொழிக்க ஆயுதம் வழங்கிய சீனா பற்றிப் பேசாமல் தமிழர்களிடம் வாக்குக் கேட்பது ஒரு மிகப் பெரும் அரசியல் முரண். யதார்த்தமற்ற முரண்.

 புதிய ஜனநாயகக் கட்சி அபிவிருத்தி அரசியலா பேசுகிறது? அல்லவென்றால் அது பேசுவது தமிழர் ஆதரவு அதிகாரப் பகிர்வு அரசியலும் அல்ல.

 சிறுபான்மைத் தமிழர் மகாசபை குறைந்தபட்சம் தலித் வாக்காளர்களைச் சுவீகரித்த டக்ளசுடனோ ஈ.பி.ஆர்.எல்.எப் சிறிதரனுடனோ குறைந்தபட்ச உடன்பாட்டுக்கு வரமுடியவில்லை என்பது அதனது  தனிநபர் அதிகார அரசியலையே முன்வைக்கிறது.

 இலங்கையிலும் புகலிடத்திலும் அபவிருத்தி அரசியலின் அதரவாளர்கள் அதிகாரப் பகிர்வு அரசியல் பற்றிய எந்தவிதத் தெளிவும் அற்றிப் பேசிவருகிறார்கள்.

டக்ளசின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி அல்ல. தமிழ் மக்களினிடையில் மகிந்தவின் பெருந்தேசிய அரசியலை முன்னிறுத்தும் குரலின் வெற்றி.

 சித்தார்த்தன் ஈ.பி.ஆர்.எல்.எப் சிறிதரன் போன்றவர்களின் தனிப்பட்ட தோல்விகள், இடசாரிகள் தலித்துகள் போன்றோரின் விலக்கப்பட்ட அரசியல் போன்றன தெளிவான ஒரு உண்மையைச் சுட்டி நிற்கின்றன.

 இன அரசியலில் நீக்குப் போக்கு நிலைபாடு என்பது சாத்தியமில்லை. 

 இனமுரண்பாட்டின் அடிப்படையை முன்வைத்து இனி தமிழர்களுக்கிடையில் இரு அரசியல் அணிதிரட்டல்கள்தான் சாத்தியம். டக்ளசின் மகிந்த ஆதரவு அரசியல் ஒன்று. பிறிதொன்று தமிழர்க்கான அதிகாரப் பகிர்வை முன்வைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அடிப்படை இன முரண்பாட்டை முன்னிறுத்தும் வலதுசாரி அரசியல்.

 தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு குறித்த அவர்களது அரசியல் தமிழ் மக்களுக்குள்ளாக ஜனநாயகபூர்வமாக நடந்தே தீர வேண்டிய தலித் முஸ்லீம் மலையக சிறுபான்மையின மக்களது அதிகாரப் பகிர்வும் குறித்ததான அரசியலாகத் தன்னை மாற்றிக் கொள்ளும்போதுதான் தமிழ் தேசிய அரசியல் இடதுசாரி அரசியலாக, முழுத் தமிழ் மக்களினதும் அரசியலாக ஆக முடியும்.

 இது நடக்கக் கூடிய சாத்தியமான ஜனநாயக நகர்வு.

 பிரதான எதிரிக்கு எதிராக இந்த நடந்தே தீரவேண்டிய  நகர்வுகள் தமிழ் தேசியவாதிகளிடமும் அதுவல்லாத அரசியல் சக்திகளிடமிருந்தும் நடப்பது என்பது சாத்தியமா?

 இது சாத்தியமாகாத வரையிலும் சிங்களப் பெரும்பான்மை தேர்தல் அமைப்பில் தமிழர்களுக்கு எந்த விதமான அதிகாரப் பகிர்வும் சாத்தியமாகப் போவதில்லை.

 இன்றைய இலங்கை ஜனநாயகத்திலோ தேர்தல் அமைப்பிலோ சிங்களத் தரப்பிலிருந்து ஒருவர் ஜனாதிபதியாவதற்கோ நீண்டகாலம் அவர்கள் ஆட்சி செய்வதற்கோ தமிழர்களின் வாக்குகள் அவசியமில்லை.

 இலங்கையை ஜனநாயக அமைப்பு என்று நம்புபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள்.

 இட்லரது தேசிய சோசலிசத்தையும் அவரது பாராளுமன்றத்தையும் அவரது நீதியமைப்பையும் ஜனநாயக அமைப்பாகக் கருதுகிறவர்கள் மட்டுமே அதனது முதிர்ச்சியடையாத ஜனநாயக வடிவமான, தேர்தல் வடிவமான இலங்கை அரசியல் அமைப்பை நிஜமான ஜனநாயக அமைப்பு எனக் கருதுவார்கள்.

 பாசிசம் பற்றிய படிப்பு என்பது துவங்க வேண்டிய இடமும் இதுதான்.

Exit mobile version