அதனை வரவேற்ற பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா, கொழும்பில் மாநாடு நடாத்துவதில் அக்கறை செலுத்தும் அளவிற்கு, தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றி வாய் திறப்பதில்லை.
இலங்கையில் மாநாடுகளையும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், வர்த்தக கண்காட்சிகளையும், பாதுகாப்பு கூட்டங்களையும் நடாத்தும் சர்வதேச நாடுகள், சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமது பூர்வீக நிலத்தையும், தேசிய இன அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களின் நிலை குறித்து பேச மறுக்கிறது.
அபகரிக்கப்பட்ட நிலங்களில், முதலீடு செய்வதில் போட்டி போடும் வல்லரசுகளின் பன்னாட்டுக் கம்பனிகள் , இலாபத்தை குறியாகக் கொண்ட முதலை ஆளும் நிறுவனங்களாகும்.
விரட்டப்பட்ட மக்கள் குறித்தான கவலையும், சமூகம் சார்ந்த அக்கறையும் அந் நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களுக்கோ அல்லது அதில் முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கோ இருக்க வேண்டுமென்று எதிர்ப்பார்ப்பது தவறானதாகும்.
யுத்தம் முடிந்து விட்டது, நாட்டில் சுமுகமான நிலை தோன்றிவிட்டது, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருவதில் எத்தடையும் இல்லையென அரசு விடுக்கும் வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்பவர்களே, ஐ.நா.வில் தீர்மானங்களையும் கொண்டு வருகின்றார்கள்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு, இந்த வல்லரசுகள் ஊடாக காய்களை நகர்த்துவதைத்தவிர வேறு வழியில்லை என்போர், இந்நாடுகளில் இயங்கும் பன்னாட்டுக்கொம்பனிகளும், அதன் அரச நிறுவனங்களும், குறிப்பாக கிழக்கில் முதலீடு செய்ய முண்டியடிப்பதையிட்டு பேசுவதில்லை.
அவ்வாறு பேசும் போது, சர்வதேச அரங்கில் இவர்கள் தம்மைப் புறக்கணித்து விடும் ஆபத்து இருப்பதால், அதனை இராஜதந்திரம் என்கிற வார்த்தைக்குள் மறைத்து விடுகிறார்கள்.
சம்பூர் மண்ணை இழந்த மக்கள், அகதி முகாம்களில் வாழ்வது குறித்து மனித உரிமைப் பேரவையில் முறையிடும் இவர்கள், அம்மண்ணில் பன்னாட்டு முதலாளிகள் தொழிற்சாலைகள் நிறுவுவது தவறானது என்று சுட்டிக்காட்டுவதில்லை.
‘இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு’ என்கிற ஜே.பி.லூயிஸின் நூலில், 1800 களில் வன்னி பெருநிலப்பரப்பின் வாழ்வுச்சூழல் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து விபரிக்கப்பட்டதுபோல, இனிவரும் காலங்களில், மூதூர் கிழக்கின் அழிக்கப்பட்ட வாழ்வு பற்றி எழுதப்படும் வரலாற்றுத் துயரம் நிகழும்.
நிறுவனமயப்படும் பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தின் இருப்பினைப் பலப்படுத்த, கேப்பாப்புலவு தொடக்கம் சம்பூர் வரையான பகுதிகளில் நில ஆக்கிரமிப்புக்களும், அதில் படைக்குடியேற்றங்களும் தொழிற்சாலைகளும் உருவாக்கப்படுகின்றன.
அங்கு முதலீடு செய்வதற்கான 10 திட்டப்பிரேரணைகளை, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிடம் சீனக் கம்பனிகள் சமர்ப்பித்து இருப்பதாக அதன் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதாவது கிழக்கிலும் மத்திய மாகாணத்திலும், உருக்குத் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் மோட்டார் வாகனங்களை பொருத்தும் தொழிற்சாலை என்பவற்றை நிர்மாணிப்பதற்கான திட்டங்களே அவை.
அத்துடன் 25-50 மில்லியன் டொலர் முதலீட்டைக்கொண்ட சிறு உற்பத்தி தொழிற்சாலைகளும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில், மிட்செல் கொன்சோடியம் ( Mitchell Consortium) என்கிற அவுஸ்திரேலிய பன்னாட்டு நிறுவனமொன்றிக்கு, கனரக இயந்திரங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலை, சீனி சுத்திகரிக்கும் மையம் மற்றும் இரும்புத் தாதுக்களை உருக்கும் தொழிற்சாலைகள் என்பவற்றை நிறுவுவதற்கு பொருத்தமான இடங்களை ஆய்வு செய்யுமாறு இலங்கை மந்திரிசபை அங்கீகாரமளித்திருந்தது.
அதாவது சம்பூரிலுள்ள 97 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில், கனரக இயந்திரத் தொழிற்சாலைகளை உருவாக்கும்வகையில், விசேட முதலீட்டு வலயமொன்றினை அமைப்பதுதான் மந்திரிசபையின் நோக்கம்.
ஆனால் இலங்கை முதலீட்டுச்சபையால் கையகப்படுத்தப்பட்ட தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுக்க, சம்பூர் தமிழ்குடிகள் நீதிமன்றில் தொடுத்த வழக்கு, அரசின் திட்டங்களை தாமதப்படுத்தியது.
பொதுவாகவே மந்திரிசபைக்கும், இலங்கையின் நீதித்துறைக்கும் இடையே, அரசியலமைப்பு சட்டம் சார்ந்து முறுகல்நிலை ஏற்பட்டுவருவதை, திவி நெகும சட்ட மூலத்திலும், முன்னாள் பிரதம நீதிபதிசிராணி பண்டாரநாயக்கா விவகாரங்களில் காணக்கூடியதாவுள்ளது.
இவைதவிர, பாரிய 4000 மில்லியன் டொலர் முதலீட்டில், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சிறீலங்கா கேட்வே இண்டரீஸ் லிமிடட் (Srilanka Gateway Industries (Pvt) Ltd ) நிறுவனம், இப் பிரதேசத்தில் பல தொழிற்சாலைகளை நிறுவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கான 819 ஏக்கர் நிலம், 99 வருட குத்தகைக்கு அப்பன்னாட்டுக் கம்பனிக்கு வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக, 700 மில்லியன் டொலர் செலவில், ஆழ் கடல் இறங்குதுறை நிர்மாணிக்கப்படும். அடுத்த கட்டத்தில், கோக் உற்பத்தி மற்றும் இரும்பு தாது தொழிற்சாலை என்பன 1300 மில்லியன் டொலரில் நிறுவப்படும்.
இத்திட்டத்தின் இறுதிக்கட்டமாக, கப்பல்களை வடிவமைத்தல் ,அதனைப் பழுது பார்த்தல் போன்றவை தொடர்பான தொழிற்சாலைகளை நிறுவுவதோடு, கனரக இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலையும் அதனோடு தொடர்புபட்ட சிறு கைத்தொழில்சாலைகளும் நிர்மாணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய பாரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டின் ஊடாக, பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பினைப் பெறுவார்களென்று முதலீட்டு ஊக்குவிப்பு மந்திரி லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மகிழ்வடைகின்றார்.
அபகரிக்கப்பட்ட பூர்வீக நிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்து, அகதிமுகாம்களில் முடக்கப்பட்ட அம்மண்ணின் சொந்தக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அபத்தத்தை என்னவென்று வர்ணிக்க முடியும்?.
சர்வதேசத்திற்கு அவ்வாறான தோற்றப்பாட்டினை காட்ட முயற்சித்தாலும், வேலைவாய்ப்பில் அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டினையே அரசு கடைப்பிடிக்கும் என்பது வரலாறு.
கந்தளாய் சீனித் தொழிற்சாலையில், பெரும்பான்மை இனத்திற்கு அதிக வேலை வாய்ப்பினை அளித்து, அப்பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைத்த வரலாற்றினை மறக்கமுடியுமா?.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், முதலீட்டிற்காக நடைபெறும் ஆக்கிரமிப்பும், தமிழ் தேசிய இனத்தின் நிலத்திற்கான இறைமையை நிராகரிப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இன முரண்பாட்டை மேலும் சிக்கலாக்கும் என்பதை, 13 வது திருத்தச் சட்டமே இதற்கான தீர்வு என்போர் கவனத்தில் கொள்வதில்லை.
13, 19 என்பதல்ல தமிழ் பேசும் மக்களின் முக்கியமான பிரச்சினை. இது நிரந்தரமான தீர்வுமல்ல.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அது குறித்து ‘இடதுசாரிகள்’என்று அழைக்கப்படும் அரச பங்காளிகள் எழுப்பும் எதிர்க்குரல்கள், மனோ கணேசன் விக்ரமபாகு போன்றோர் 13 இற்கு ஆதரவாக முன்வைக்கும் அரசியல், என்கிற கொழும்பு அரசியல் அரங்கிற்கு அப்பால், வட-கிழக்கில் பறிபோகும் நிலம் குறித்தான விவகாரமே, மிக முக்கியமானதும், உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால் நிறைந்த கட்டமைப்பு சார்ந்த இனவழிப்புமாகும்.