Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

இன்று(19.06)  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபாவும் அவரோடு ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்ட இன்னும் பதின்னான்கு உறுப்பினர்களும் நிராயுதபாணிகளான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட நாள். ஜூன் மாதம் 19ம் திகதி 1990 அன்று சென்னையில் சக்கிரியா காலனியிலுள்ள அடுக்குமாடிக் கட்டத்தொடரிலுள்ள வீடொன்றில் பதின்நான்கு நிராயுத பாணிகள் கொல்லப்பட்ட செய்தி சென்னை முழுவதும் பரவியது. கடல் அலைகளைக் கடந்து ஈழத்தையும் சென்றடைந்தது.

ஈழப் போராட்டத் தலைவர்களுள் ஆஜனுபாகுவான உயர்ந்த உருவமும் அமைதியான தோற்றமும் கொண்ட பத்மநாபா ஆரம்ப காலங்களில் தோழர் ரஞ்சன் என அழைக்கப்பட்டார். முன்னர் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவராகவிருந்த பத்மநாபா 1980 ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் மந்த நிலையில் காணப்படுகிறது என்று அந்த அமைப்பிலிருந்து பிரிந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கிக் கொண்டார். நாபா உடன் வெளியேறிய ஏனையோரும் இணைந்து EPRLF இன் மத்திய குழு ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். அந்த மத்திய குழுவின் செயலாளர் நாயகமாகப் பத்மநாபா தெரிவு செய்யப்படுகின்றார்.
இலங்கையில் உருவான தேசிய விடுதலை இயக்கங்களுள் முதல் முதலாக கிராம மட்டங்களில் வெகுசன அமைப்புக்களை உருவாக்கிக்கொண்டது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியே (EPRLF) ஆகும்.
கிராமிய அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என்று வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்பதற்கான அடிப்படைகளை EPRLF உருவாக்கிக் கொண்டது. ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ளக வெளியகப் வெளியீடுகள், அரசியல் வகுப்புக்கள் நடத்தப்பட்டன.
1981 ஆம் ஆண்டின் இறுதியிலேயே மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற இராணுவப் பிரிவை உருவாக்கிக்கொண்டு பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வேளையில் சமூக ஏகாதிபத்தியமாக தேய்ந்துகொண்டிருந்த சோவியத் ரஷ்யாவின் தமிழ் நாட்டு முகவர்களின் தலையீடுகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒரு புறத்தில் வெகுஜன அமைப்புகளின் மீதான அக்கறை அருகிவர மறுபுறத்தில் ‘பிராந்திய நல்லிணக்கம்’ என்ற அடிப்படையில் இந்திய அரசுடன் உறவை வளர்த்துக்கொள்கின்றனர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் மத்திய குழுவில் அந்த அமைப்புன் புதிய போலித்தனமான அரசியலுக்கு எதிரான உட்கட்சிப் போராட்டங்கள் வலுவடைகின்றது. அப்போராட்டத்தில் நாபாவும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஓரணியிலும் முற்போக்கான குழுவினர் இன்னொரு அணியிலும் கருத்தியல் விவாதங்களை மேற்கொள்கின்றனர்.

1983 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்திய அரசும் அதன் உளவுப் பிரிவும் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்காகத் தெரிவு செய்துகொண்ட இயக்கங்களுள் ஈ.பி.ஆர்.எல்.எப் உம் ஒன்று.

நூற்றுக்கணக்கான கிராமப்புற இளைஞர்களை விட்டில் பூச்சிகள் போல இந்திய அரசு பயிற்சிக்கு அழைத்துச் சென்றது.

இக் காலப்பகுதியில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மேற்பார்வையில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் உறுப்பினர்களைக் கண்காணிபதற்கு என்று உளவுப்படை ஒன்று உருவாக்கப்படுகிறது.

மக்கள் ஆய்வுப் பிரிவு (MAP) என்று அழைகப்பட்ட அந்த உளவு அமைப்பின் செயற்பாடுகள் EPRLF அமைப்பினுள் பல மோதல்களையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கிறது.

இந்திய அரசின் உற்பத்தியான PLA இராணுவப் பிரிவு அரசியலில் அரிவரி கூடத் தெரியாத டக்கள்ஸ் தேவாநத்தாவினால் தலைமை தாங்கப்படுகிறது. டக்களஸின் இராணுவ சாகசங்களாலும், உடல் வலிமை காரணமாகவும், இயல்பான பண்புகளாலும் இராணுவப் பிரிவின் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தார். இதனால் ஏற்பட்ட வெறுப்புணர்வினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் நாபா குழுவினர் டக்ளஸைப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். 1986 ஆம் ஆண்டில் டக்ள்ஸ் தேவாந்தாவிற்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையின் பணம் மற்றும் ஆயுதக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட டக்ளஸ் – நாபா பிளவு நிரந்தரமாகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் கைப்பொம்மை போல நாபாவும் இந்திடாவின் கைப்பொம்மையாக சுரேசும் செயற்பட மத்திய குழுவிலும் அமைப்பு முழுவதிலும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய ஜனநாயக மற்றும் முற்போக்கு இளைஞர் சக்திகள் டக்ளஸ் இற்கு ஆதரவு வழங்கினர்.

1986 ஆம் ஆண்டு ஆரம்பப்பகுதிகளில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் நம்பிக்கைக்கு உரிய கபூர் என்பவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுகிறார். டக்ளஸ் குழு தனியாக இயங்க ஆரம்பிக்கிறது.

1986 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் அழிக்கப்படுகின்றது. ஆரம்ப நிலைப் போராளிகளிலிருந்து முகாம்கள் வரை இயக்க உறுப்பினர்கள் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனர். பலர் ஏன் மரணித்துப் போகிறோம் என்று அறியாமலே அனைதைகள் போன்று தெருக்களிலும் புலிகளின் முகாம்களிலும் கொல்லப்படுகின்றனர்.

சுரேஷ் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட கபூர் உட்பட பலர் கொல்லப்படுகின்றனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இந்தியத் தலையீட்டுக்கு எதிராகவும் மக்கள் திரள் வழிமுறைகளுக்காக்வும் உட்கட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பலரும் புலிகளின் துப்பாக்கிகளுக்கு இரையாகின்றனர். எஞ்சியிருந்த சிலரைப் புலிகள் இயக்கத்தினர் தேடித்தேடி அழிக்கின்றனர். பலர் தமிழ்ப் பகுதிகளிலிருந்து வெளியேறி இந்தியா உட்பட வெளிநாடுகளில் தஞ்சமடைகின்றனர்,

இவர்களின் வெளியேற்றத்தோடு போராட்டத்திற்கான மற்றொரு வழிமுறையை முன்வைத்த இறுதிக் குரல்களும் மௌனிக்கப்படுகின்றன.

நூற்றுக்கணக்கான போராளிகளோடு தமிழ் நாட்டில் தஞ்சமடைந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ‘புரட்சிகர’ சுலோகங்களோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இந்திய உளவுத்துறையின் தயவின்றி ஒரு காத தூரம் கூட நகர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

வாழ்வாதாரத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்திய அரசைத் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.

1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துகொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் குழுக்களாகச் செயற்படுகின்றது.

இந்திய இராணுவத்துடன் இணைந்து மக்கள் மீதான தாக்குதல்களிலும் சமூகவிரோதச் செயற்பாடுகளிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபடுகின்றது. சுரேஷ் பிரேமச்சந்திரனின் தலைமையில் வரதராஜப்பெருமாளின் ஆலோசனையுடன் மண்டையன் குழு என்ற கொலைகாரக் குழு உருவாக்கப்படுகின்றது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தாலும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனாலும் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்படுகின்றவர்களின் தலையைச் சீவிக் கொல்வதானால் மண்டையன் குழு என வடக்கிலும் கிழக்கிலும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் குழு அழைக்கப்பட்டது.

1988 டிசம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் துணையோடு நடத்தப்பட்ட போலியான தேர்த்தலில் வரதராஜப்பெருமாள் வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராகிறார்.

1989 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற இந்திய அடியாள் படை ஒன்றைத் தோற்றுவிப்பதற்காக வரதாராஜப்பெருமாள், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஆகியோர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்திய இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்படுகின்றனர்.

சிறுவர்களும் இளைஞர்களும் வயது வேறுபாடின்றி பயிற்சிக்காகப் பலவந்தமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பாடசாலைகளில் அருகாமையிலும், விளையாட்டு மைதானம் போன்ற இளைஞர்கள் கூடும் இடங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எப் துப்பாக்கிகளோடு சென்று இளைஞர்களை அழைத்துச் சென்று அசோக் ஹொட்டேலில் சிறை வைத்து இராணுவத்தில் இணைத்துக்கொண்டது. தமிழ்த் தேசிய இராணுவத்திற்கு சுரேஷ் பிரேமச்சந்தினர் பொறுப்பதிகாரியாகச் செயற்பட்டார்.

ஒவ்வொருதடைவையும் தெரு நாய்களைப் போன்று இளைஞர்கள் பயிற்சிக்கு என்று பிடித்துவரப்படும் போதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் மிரட்டல் கலந்த உரையாற்றுவார். இந்திய இராணுவத்தை எதிரியகக் கருதிய பலருக்கு குறுகிய காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் புலிகள் இயக்கத்தினரால் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டு இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கொல்லப்பட்டனர்.
1990 ஆம் ஆண்டு பத்மநாபா சுரேஷ் குழுவினர் இந்திய இராணுவத்தோடு வெளியேற வரதராஜப்பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை திருகோணமலையில் முன்வைக்க இலங்கை ஜனாதிபதி பிரேமதாச மாகாண சபையைக் கலைத்துவிடுகின்றார்.

வரதராஜப்பெருமாளை இந்திய இராணுவம் தனது பாதுகாப்பில் அழைத்துச் செல்கிறது. பத்மநாபாவும் மத்திய குழுவில் சிலரும் இந்திய இராணுவத்தில் வலைக்குள் தாம் முழுமையாகச் சிக்குண்டதை உணர்ந்துகொண்டதாகவும் அது தொடர்பான மத்திய குழு ஒன்று கூடல் ஒன்றை ஒழுங்கு செய்ததாகவும் கூறப்படுகின்றது. மத்திய குழு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடைவேளையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கிருந்து வெளியில் செல்கிறார். அவ்வேளையில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த கொலையாளிகளால் பத்தமநாபாவும் பதின்மூன்று மத்திய குழு உறுப்பினர்களும் கொலைசெய்யப்படுகின்றனர்.

80களின் ஆரம்பத்தில் ரஞ்சன் தோழர் என்று தொலைதூரக் கிராமங்கள் பலவற்றில் அறியப்பட்ட நாபா, உண்ண உணவின்றி மக்களின் விடுதலைக்காக உழைத்திருப்பதை அந்தக் கிராமத்து மக்களே சாட்சியாகச் சொல்வார்கள். அமைதி நிறைந்த தோற்றம் கொண்ட நாபா அதிகமாகப் பேசுவதில்லை. தனது அருகிலுள்ள அனைவரின் மீதும் அன்போடு நடந்துகொள்வார். லண்டனில் மேற்படிப்பிற்காக வந்த நாபா விடுதலை இயக்கத்தில் இணைந்துகொள்வதற்காகவே திரும்பிச் சென்றவர்.

இந்திய அரசினதும் அதன் உளவுப்படையினதும் சதிவலைக்குள் சிக்குண்டு சமூக விரோதச் செயல்களுக்குத் தலைமை வகித்து ‘துரோகியாக’ கொல்லப்பட்டார். இறுதியில் நாபாவைக் கொலை செய்த துப்பாக்கிகளின் பின்னணியிலும் இந்திய உளவுத்துறையே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் பலரால் தெரிவிக்கப்படுகின்றன.
பத்மநாபாவின் பெயரால் மக்களின் அவலங்கள் குறித்துத் துயர்கொள்வதாகக் கூறும் குழுக்கள் இந்த உண்மைகளை மறைத்துவிடுகின்றன..
பத்மநாபாவை விமர்சிக்கத்துணிவற்ற அதிகாரவர்க்கத்தின் அடியாள் கும்பல்கள் ஜூன் 19ம் திகதியை தியாகிகள் தினம் என்று கொண்டாடி மகின்ழ்கின்றன.

Exit mobile version