Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திகாயத்தின் கண்ணீரில் அவிந்த தேசபக்தீ ! : மருதையன்

காசிப்பூர் எல்லையிலிருந்து விவசாயிகளைத் துரத்திவிடலாம் என்ற திட்டத்துடன், மின்சாரத்தை வெட்டி, குடிநீரைத் தடுத்து, பெரும் போலீஸ் படையைக் குவித்தது மோடி அரசு. உடனே இடத்தை காலி செய்யுமாறு 28 ஆம் தேதியன்று யோகி அரசு நோட்டீசும் கொடுத்தது.

“தூக்கில் தொங்கினாலும் தொங்குவேன். இந்த சட்டங்களை வாபஸ் பெறாமல் இந்த இடத்திலிருந்து அகலமாட்டேன்” என்று உணர்ச்சி வயப்பட்டு கண்ணீர் விட்டபடி 28 அன்று இரவு ஊடகங்களிடம் பேசினார் திகாயத். அந்தக் காட்சி உ.பி, ஹரியானா, ராஜஸ்தான் ஜாட் விவசாயிகள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவியது. அன்றிரவு 11 மணிக்கெல்லாம் காசிப்பூரில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

திகாயத்தின் ஊரான சிசௌலி உ.பி மாநிலம் முசாபர் நகரில் உள்ளது. மறுநாள் அங்கு நடைபெற்ற ஜாட் மகா பஞ்சாயத்தில் வரலாறு காணாத அளவில் மக்கள் திரண்டிருக்கின்றனர். அரியானாவிலும் ஜாட் சாதியினரின் காப் பஞ்சாயத்துகள் நேற்று கூடியிருக்கின்றன. “பாஜக வினரையும், பாஜக ஆட்சிக்கு ஆதரவளிக்கின்ற ஜே.ஜே.பி என்கிற துஷ்யந்த் சவுதாலாவின் ஜாட் கட்சியையும் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. அது மட்டுமல்ல, அவர்களை சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றும் கல்யாணத்துக்கோ கருமாதிக்கோ அழைக்கக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. அந்த அளவுக்கு மோடி அரசுக்கு எதிரான வெறுப்பு பரவியிருக்கின்றது.

செங்கோட்டை சம்பவத்தை வைத்து இந்து – சீக்கிய முரண்பாட்டை ஏற்படுத்தி, போராட்டத்தை பிளவுபடுத்த சங்கிகள் போட்ட திட்டம் பூமராங் ஆகிவிட்டது. இரு பிரிவினருக்கும் இடையிலான ஒற்றுமை மேலும் வலுப்பட்டிருக்கிறது. ஜனவரி 26 செங்கோட்டை சம்பவத்தை வைத்து பாஜக கிளப்பிவிட்ட தேசபக்”தீ” ராகேஷ் திகாயத் வடித்த கண்ணீரில் அவிந்து விட்டது. பஞ்சாப், அரியானா, உ.பி, ராஜஸ்தான் கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் டில்லியை நோக்கி வந்த வண்ணமிருக்கின்றனர். வீட்டுக்கு ஒருவரை போராட்டத்துக்கு அனுப்ப வேண்டுமென்று பல கிராமங்கள் தீர்மானம் நிறைவேற்றி, டில்லிக்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சாபைப் போல அரியானாவில் விவசாய சங்கங்கள் இல்லை. அங்கே ஜாட் சாதியினரின் காப் பஞ்சாயத்துகள்தான் விவசாயிகளைப் போராட்டத்திற்கு அணிதிரட்டுகின்றன. மேற்கு உ.பியில் விவசாயிகள் சங்கமும் இருக்கிறது. காப் பஞ்சாயத்துக்களும் உள்ளன.

000

1988 இல் ராகேஷ் திகாயத்தின் தந்தையும் பாரதிய கிசான் யூனியனின் தலைவருமான மகேந்திரசிங் திகாயத்தின் காலத்தில், சிசௌலி வட இந்திய விவசாயிகள் அனைவரின் தலைநகரம் என்று அறியப்பட்டிருந்தது. அன்று ஜாட், குர்ஜார், முஸ்லிம் விவசாயிகளுக்கிடையில் பிளவு ஏற்படவில்லை. பின்னர் மண்டல் பரிந்துரைக்கு எதிராக திகாயத் சங்கத்தின் ஜாட் தலைவர்கள் பேசியதன் விளைவாக குர்ஜார்கள் அதிருப்தியுற்று விலகினர். பின்னர் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நடந்த தேர்தலில், மனச்சாட்சிப்படியும் ராமனை மனதில் நினைத்தும் வாக்களிக்குமாறு மகேந்திர சிங் திகாயத் பேசினார். இதன் விளைவாக அவர் முஸ்லிம்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் ஜாட் தலைவரானார். சாதி என்ற எல்லைக்குள் வந்துவிட்டதால், ஜாட் சாதிக்குள் ஒரு குறிப்பிட்ட குலத்தின் தலைமையாக சுருங்கிவிட்டது மகேந்திர திகாயத்தின் தலைமை. அவருடைய மகன் ராகேஷ் திகாயத்துக்கு இழந்த கவுரவத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

ஜாட்டுகளின் காப் பஞ்சாயத்துகள் ஆகப் பிற்போக்கானவை என்பதை நாம் அறிவோம். ஜாட் சாதிக்குள்ளே ஒவ்வொரு குலத்துக்கும் தனித்தனியே காப்புகள் இருக்கின்றன. நாங்கள் சிங்கு போராட்டக்களத்தில் அரியானா காப் தலைவர்கள் சிலரைச் சந்தித்தோம். தலையில் முண்டாசு, கையில் மூங்கில் கம்புடன் அமர்ந்திருந்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் “எங்கள் குலத்தின் காப் பஞ்சாயத்துதான் அரியானாவிலேயே பெரியது” என்று துண்டு துண்டான ஆங்கிலத்தில் மிகுந்த பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தப் போராட்டக் களத்தின் பரிமாணத்தில், தங்களுடைய காப் ஒரு கொசுவைப் போன்றது என்ற உண்மையைக் கூட உணர இயலாத அளவுக்கு நிலப்பிரபுத்துவ சாதிப் பெருமிதம் அவரை ஆட்கொண்டிருந்தது.

பஞ்சாபின் சீக்கிய ஜாட் விவசாயிகளிடம் சாதிப்பெருமிதம் இருக்கிறது என்ற போதிலும், சிறு – நடுத்தர விவசாயிகள், தங்களை ஒரு வர்க்கமாக அடையாளப் படுத்திக் கொண்டு பேசுகின்றனர். நீண்ட போராட்டப் பாரம்பரியம், கல்வியறிவு, இடது சாரி சங்கங்களின் செல்வாக்கு, சீக்கிய மதத்தின் ஒப்பீட்டளவிலான முற்போக்குத் தன்மை போன்ற பல காரணங்களினால் இது சாத்தியமாகியிருக்கிறது.

ஆனால், அரியானா, மேற்கு உ.பி பகுதிகளில் விவசாய சங்கங்கள் பெரிய அளவு இல்லை என்பது மட்டுமல்ல இடதுசாரி சங்கங்களே இல்லை. எனவே ஒரு விவசாயி என்ற முறையில் அவர்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் “அமைப்பு” சாதியாகவே உள்ளது. 2013 இல் லவ் ஜிகாத் என்ற பொய் பிரச்சாரத்தின் அடிப்படையில் பாஜகவால் திட்டமிட்டே தூண்டப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு மதக்கலவரங்களில் ஜாட் சாதியினரின் பாத்திரம் முக்கியமானது. மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ஜாட் வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக அறுவடை செய்வதற்கும், அதை வைத்து உ.பி தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் முசாபர் நகர் கலவரத்தைத்தான் பாஜக பயன்படுத்திக் கொண்டது. இன்று அதே முசாபர் நகரின் ஜாட்கள், விவசாயிகளாக மோடி அரசை எதிர்த்து நிற்கிறார்கள்.

“இது சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட அனைத்து விவசாயிகளின் போராட்டம். தயவு செய்து ஜாட் விவசாயிகள் என்று சொல்லாதீர்கள்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் திகாயத். சாதி மதம் கடந்த வர்க்க ஓர்மை விவசாயிகளிடம் ஏற்பட வேண்டிய தேவையையும், சாதி-மத அடையாளங்கள் வர்க்க ஒற்றுமையின் தடைக்கற்களாக இருப்பதையும் அனுபவம் அவர்களுக்கு உணர்த்துகிறது. சாதிப் பெருமிதம் அகன்று விட்டதாக இதற்குப் பொருளில்லை. அவ்வளவு எளிதாக அது அகன்றுவிடுவதும் இல்லை.

சாதிப் பெருமிதத்துக்கு அடித்தளமாக அமைகின்ற நிலவுடமையும், அது அளிக்கின்ற பொருளாதார ஆதிக்கமும் விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே ஆட்டம் கண்டு வருகின்றன. புதிய தாராளவாதக் கொள்கைகளால் விரைவுபடுத்தப்படும் விவசாயத்தின் வீழ்ச்சி, கிராமப்புற இடைநிலைச் சாதியினரிடம் ஏற்படுத்தும் அதிருப்தியையும் கோபத்தையும் தலித் மக்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் பாஜக திருப்பி வந்தது. இப்போது பாஜக வின் சுயரூபத்தை ஜாட் விவசாயிகள் தரிசிக்கிறார்கள்.

டில்லியைச் சுற்றி இருக்கின்ற அரியானா, உ.பி, ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லைப்புற மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் ஜாட் விவசாயிகள். தங்களுடைய நகரம் என்று இதுகாறும் எண்ணிக்கொண்டிருந்த டில்லிக்குள் நுழைய விடாமல் அவர்களைத் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்துகிறது மோடி அரசு.

குடியரசு தினத்தன்று செங்கோட்டைக் கலவரத்தின் வாயிலாக, விவசாயிகள் அல்லாத பிற பிரிவு மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில், தேசப்பற்று, தேச கவுரவம் என்ற பெயரில், போராட்டத்துக்கு எதிரான வெறுப்பை மோடி அரசு உருவாக்கியது. அது “இந்தியர்களை” விவசாயிகளுக்கு எதிராகத் திருப்புவதற்கான முயற்சி.

“இந்துக்களை” கையாள்வதற்கு சாதி கை கொடுக்கிறது. “மோடி, ஜாட் சீக்கியர்களின் உபரி நிலங்களைப் பறித்து உங்களுக்கு விநியோகிக்கப் போகிறார்” என்று தலித் மக்கள் மத்தியில் பாஜக வினர் பிரச்சாரம் செய்வதாகக் கூறுகிறார் பஞ்சாப் கேத் மஸ்தூர் சங்கத்தின் (விவசாயத் தொழிலாளர் சங்கம்) செயலர் லச்மன் சேவேவாலா. அது தலித் மக்களின் ஜாட் வெறுப்பை அறுவடை செய்யும் முயற்சி.

அரியானாவில் 2016 இல் இட ஒதுக்கீடு கேட்டு ஜாட் சாதியினர் நடத்திய போராட்டத்தில் அவர்கள் நிகழ்த்திய வன்முறையால் வெறுப்புற்ற பிற சாதியினரின் வாக்குகளை பாஜக அறுவடை செய்து கொண்டது. கட்டார் முதல்வரானார்.

சென்ற உ.பி சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியின் வாக்குவங்கியான ஜாதவ் சாதியினரைத் தவிர்த்த வால்மீகி உள்ளிட்ட பிற தலித் சாதிகளை பாஜக தம் பக்கம் இழுத்துக் கொண்டது. யோகி முதல்வரானார். இப்போது மாயாவதி பாஜக வுக்கு ஒத்துழைக்கிறார்.

ஒரு சாதிக்கு எதிராகவும், மேலாகவும் இன்னொன்றை நிறுத்துவதன் வாயிலாகத்தான் பார்ப்பனியம் எனும் படிநிலை சாதியமைப்பு இதுநாள் வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சாதி என்ற நிறுவனம் உணர்வுபூர்வமான முறையில் முற்போக்கான பாத்திரமாற்ற முடியாது. இதை மற்றெல்லோரைக் காட்டிலும் சங்கிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்று, ஜாட் சாதியினர் தங்களுக்கு எதிராகத் திரும்புவது குறித்து அவர்கள் கவலைப்படக் கூடும். ஜாட் சாதி தங்களைக் கைவிட்டாலும், சாதி என்ற நிறுவனம் தங்களைக் கைவிடாது என்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகள் அறிவார்கள். மற்ற சாதிகளை முனைவாக்கம் செய்யத் திட்டமிடுவார்கள்.

திகாயத்தின் கண்ணீர் பல்லாயிரம் பேரைத் திரட்டுகிறது. அது ஒரு ஜாட்டின் கண்ணீராக அல்லாமல் விவசாயியின் கண்ணீராக உணரப்பட வேண்டும். சாதி அடையாள அரசியலை விட்டொழித்து, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளை நெட்டித் தள்ளுகிறார்கள் பார்ப்பன பாசிஸ்டுகள்.

மோடியின் வேளாண் சட்டம் விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பதற்கு முன்னர், அவர்களுடைய சாதிப் பெருமிதத்தைப் பறித்திருக்கிறது. அதன் விளைவுதான் திகாயத்தின் கண்ணீர்.

அவர் வடித்த கண்ணீரில் சிறிதளவு ஜாட் பெருமிதம் கரைந்து விழுந்ததாகக் கொண்டாலும் அது வர்க்க ஒற்றுமையை நோக்கிய முன்னேற்றம்தான்.

Exit mobile version