நாட்டின் தலைநகரில் குவிந்து முற்றுகை போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முற்றுகைப் போராட்டங்களில் அந்நாட்டு மக்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து வந்து நாள்கணக்கில் வாரக்கணக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசியாவில் இத்தகைய ஒரு புதிய ஆராக்கியமான போக்கு உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஊடகங்கள் அவற்றின் வரம்புகளுக்கு ஏற்பவே இத்தகைய போராட்டங்களைப் பற்றி செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தோ சிதைத்தோ சித்தரித்து தமது கடமையை சிமேற்கொண்டு செய்து வருகின்றன.
இந்த நிலைமையில் இத்தகைய போராட்டங்கள் எவ்வாறு ஏன் நடைபெற்று வருகின்றன என்பதை அறிய வேண்டிய அவசியத்தில் இருக்கின்றோம்.
தாய்லாந்தில் 1992முதல் 2005 வரை பத்திரிகையாளராக பணியாற்றிய சத்யா சிவராமன் 25.5.10 அன்று சென்னைக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக வந்தார். தாய்லாந்தில் இருந்தபோது NDTV-ன் செய்தியாளராகவும் தாய் மொழியில் நடத்தப்பட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக தனது அலுவல் காரணமாக ஆண்டிற்கு 3 முறை தாய்லாந்து சென்று வரும் அவர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விவகாரங்களை கூர்ந்து கவனித்து வருகிறார்.
மேலும் ஈராக் சிக்கலை ஒட்டி இவர் எழுதிய கட்டுரைகள் Contercurrents.org வெளிவந்துள்ளன. தவிர ஹிந்து ராமை நையாண்டி செய்து அம்பலப்படுத்தும் நாடகம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவை தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளன.
சென்னை வந்து அவரிடம் தோழர் பாஸ்கர் (ஆசிரியர் குழு உறுப்பினர், ‘புதிய போராளி’ இதழ்) தாய்லாந்து நிலைமை பற்றி கலந்துரையாடினார். அப்போது சத்யா சிவராமன் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் பின்வருமாறு.
கடந்த மே 19 வரையில் 1 1/2 மாதமாக தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கை முற்றுகையிட்டு நடந்து வந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் ‘சர்வாதிகார எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் பின்வரும் கோரிக்கைகளுக்காக இவ்வாறு போராடி வருகின்றனர்.
அக்கோரிக்கைகள் பின்வருமாறு:
1. தற்போதைய பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவாவின் பதவி விலகல்.
2. நாடாளுமன்றத்தை கலைத்தல்.
3. நாடாளுமன்றத்திற்கான புதிய தேர்தல்.
4. 1997-ல் இயற்றப்பட்ட அரசியல் சாசனத்தை மீட்டமைத்தல்.
இப்போராட்டமானது 2006ல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாக தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட தக்ஷின் ஷினவத்ரா என்பவர் தலைமையில் நடக்கிறது. அவர் வெளிநாடுகனில் இருந்துகொண்டு இதைச் செய்து வருகிறார். அவர் செப். 2006ல் ஐ.நா.அவையில் உரையாற்றச் சென்றபோது இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது.
அவர் 2001ல் ஆட்சியில் அமர்ந்தபோது சாதாரண மக்களுக்கான சில நலவாழ்வு திட்டங்களை அமல்படுத்தினார். அனைவருக்கும் குறைந்த செலவில் மருத்துவம் தாய்லாந்தின் நாணயமான பாட் (ஙிணீலீt)- ல் ஒரு பாட் செலவழிக்கப்பட்டால் சாதாரண காய்ச்சல் முதல் நவீன அறுவை சிகிச்சை வரை மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். மேலும்கல்வி, உழவர்களுக்கு தாராள சலுகைகளுடன் கடன், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை போன்றவையே அந்த திட்டங்கள் ஆகும்.
இந்த திட்டங்களை அமலாக்குவதற்கு மது, சூதாட்டம் போன்றவை மீது வரியை விதித்தார்.
1997-ல் தென்கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது தாய்லாந்து திவாலானது. அப்போது சர்வதேச செலவாணி நிதியமானது (மிவிதி) கடும் நிபந்தனைகளுடன் கடனுதவியை வழங்கியது. தக்ஷின் 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த நிபந்தனைகளுக்கு செவிசாய்க்காமல் மேற்கண்ட நலவாழ்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். மிவிதி-ன் கடனை திருப்பிச் செலுத்தவும் செய்தார்.
2001ல் நடந்த தேர்தலின்போது கொடுத்த மேற்கண்ட நலவாழ்வு திட்டங்கள், வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய அவர் 2005ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதிக இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தார்.
இதைப் பொறுத்துக் கொள்ளாத மேட்டுக்குடியினரும் மஞ்சள் சட்டையினர் என்று அழைக்கப்படும் கட்சியினரும் (இவர்கள் மஞ்சள் சட்டைகளை அணிந்து கொண்டு வீதிகளில் போராடினர்) பாரம்பரிய ஆளும் வர்க்கத்தினரின் (அரசர், ராணுவம், அதிகாரவர்க்கம்) தீவிர ஆதரவோடு களம் இறங்கினர்.
விளைவாய், தக்ஷின் 2006ன் தொடக்கத்தில் மீண்டும் தேர்தலை நடத்தினார். மஞ்சள் சட்டையினர் இதைப் புறக்கணித்தனர். ஆனால் தக்ஷின் பெரும் வெற்றியைப் பெற்றார்.
ஆனாலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத பாரம்பரிய ஆளும் வர்க்கம் அவர் செப்.2006ல் நாட்டின் பிரதமர் என்ற வகையில் ஐ.நா. அவைக்கு உரையாற்ற சென்றபோது இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது.
அத்துடன் அவரது கட்சியையும் தடை செய்தது. சொத்துக்களை முடக்கியது. நேரடியாக விசாரிக்காமலேயே 2 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்தது.
அனைத்திற்கும் மேலாக 1992முதல் 1996 வரை மக்கள் போராடியதால் 1997ல் இயற்றப்பெற்ற அரசியல் சாசனம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிபதிகளையும் அதிகார வர்க்கத்தினரையும் ஏன் பிரதமரையும் கூட திரும்ப அழைக்கிற உரிமையை மக்களுக்கு வழங்கியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின் இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது.
அதே நேரத்தில் மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்ற 30 பாட் என்ற மருத்துவ திட்டத்தில் மாற்றம் செய்து அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவம் என்பதாக அறிவிக்கப்பட்டு இராணுவ ஆட்சிக்கு ஆதரவைப்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்றுக்கொள்ளாத தக்ஷின் கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும் பெரும் மக்கள் திரளினர் களத்தில் இறங்கினர். இதையட்டி இராணுவம் தவிர்க்க இயலாமல் தேர்தலை நடத்தியது. அதிலும் தக்ஷின் தொடங்கிய புதிய கட்சியே (மக்கள் சக்தி கட்சி) பெரும் வெற்றி பெற்றது. சோமக் சுந்தரவெஜி என்பவர் பிரதமர் ஆனார்.
இதையும் பொறுக்க முடியாத பாரம்பரிய ஆளும் வர்க்கம் அரசியல் சாசன நீதிமன்றத்தின் மூலமாக அவரை பதவி நீக்கம் செய்தது. தொலைக்காட்சி இதழியலாளரான இவர் பதவிக்கு வருவதற்கு முன்பு ஒப்புக்கொண்டவாறு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதற்கு பணம் பெற்றார் எனக் கூறி இதனால் பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என அவ்வாறு செய்தது.
அடுத்த பிரதமரானவர் சோம்சாய் வாங்சாட் என்பவர் ஆகும். இவர் வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் பதவி நீக்கம் செய்தது அதே நீதிமன்றம்.
மேலும் தக்ஷின் தலைமையிலான கட்சியின் தலைவர்கள் பலரை ஏதோ சாக்குப்போக்குச் சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தக் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்து ஆட்சி அமைக்கும் உரிமை இல்லாமல் போய்விட்டது.
அதன் பின்னர் பிரதமரான அபிசித் வெஜ்ஜஜிவா ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார். இவருடைய பதவி விலகலைக் கோரியும் நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரியும் நாடாளுமன்றத்திற்கு புதிய தேர்தலை நடத்தக் கோரியும் நாடாளுமன்றத்தை கலைக்கக் கோரியும் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தலை நடத்தக் கோரியும் 2 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் அங்கமாக அண்மையில் தற்காலிகமாக முடிவுற்ற 45 நாள் பாங்காக் முற்றுகைப்போராட்டம் ஆகும்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் பாங்காங் நகரத்தைச் சேர்ந்த எழை மக்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு தாய்லாந்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகள்- கைவினைஞர்கள் முதலியோர் விடா முயற்சியுடன் போர்க் குணமிக்க வகையில் பங்கெடுத்தனர்.
அரசாங்கமே ஸ்தம்பித்துப் போனது. போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு போலீஸ் மறைமுகமாக ஆதரவாக இருந்தது.
1.5-2 லட்சம் பேர் கலந்துகொண்ட இந்த முற்றுகைப் போராட்டத்தில் நாட்டின் இராணுவப் பாசறைகளை முற்றுகையிட்டனர்.
1932லிருந்து 32 இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்த தாய்லாந்தில் இராணுவத்திலேயே ஜெனரலாக பணியில் இருக்கும் போதே சேடங் எண்பவர் 50-60 இராணுவ வீரர்களுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார். இராணுவம் அவரை சுட்டுக்கொண்று போராட்டத்தையும் நசுக்கி முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்தப் போராட்டம் தற்காலிகமாகத்தான் முடிவுக்கு வந்துள்ளது, மீண்டும் விரைவில் தொடங்கக் கூடும். ஏனெனில் இந்தப் போராட்டமானது வெறுமனே நலவாழ்வுத் திட்டங்களுக்கானது அல்ல, அல்லது இது அத்தகைய திட்டங்களைத் நடைமுறைப்படுத்திய தக்ஷின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான போராட்டம் மட்டும் அல்ல. இந்தப் போராட்டமானது மன்னர் தலைமையிலான பாரம்பரிய ஆளும் வர்க்கத்திற்கு எதிரானது. சாராம்சத்தில் மக்கள் தாம் தேர்ந்தெடுத்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான, அத்தகைய ஆட்சியை கவிழ்ப்பதற்கான உரிமையை மன்னர் தலைமையிலான பாரம்பரிய ஆளும் வர்க்கத்திற்கு தர மறுக்கின்ற போராட்டமாகும்.
மொத்தத்தில் இது குடியரசுக்கான போராட்டமாகும்.