Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன்

police_france_stateசார்லி எப்டோ கொலையாளிகளின் அதே உத்வேகத்துடன் பிரஞ்சு அரசும், எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் நிராயுதபாணிகளான மக்கள் மீது பயங்கரவாதக் கருத்துக்களைப் பரப்ப ஆரம்பித்துவிட்டன. குறிப்பக வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகவே கூச்சமின்றி ஊடகங்களும் அதிகாரவர்க்கமும் முன்வைக்கின்றன. பிரான்சில் வாழும் அனைத்து வெளிநாட்டவர்களையும் குறிவைக்கும் பிரஞ்சு ஏகாதிபத்தியம் அப்பாவி மக்கள் மத்தியில் நச்சுக் கருத்தைப் பரப்பி வருகின்றன.

பிரஞ்சு நாட்டு அரசு இயந்திரத்தின் ஒவ்வொர் அங்கத்திலும் ஏற்கனவே இழையோடிய நிறவாதம் இன்று வியாபித்துப் படர்ந்து ஒவ்வொரு மனிதனதும் கொல்லைப்புறங்களிலும் குடிபுகுந்து அச்சுறுத்துகிறது.

பிரான்சில் பிறந்து வளர்ந்த வெளி நாட்டவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் இருளடைந்துள்ளது என பாரிஸ் நகரில் வசிக்கும் அறிஞர் டொமினில் லெவி கூறுகின்றார். பிரான்சிஸ் நிறவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிட முஸ்லிம் லீக் இன் உப தலைவரான இவான் ரைட்லி கூறுகிறார்.

பிரான்சில் கல்விகற்று முதுமாணி பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஈழத் தமிழ்த் தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் ஒருவர் பல்கலைக் கழகக் காலத்திலிருந்தே தான் நிறவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். சிறந்த பெறுபேறுகளைக் கடந்த வருடம் பெற்றுக்கொண்ட அவர் இன்னும் எந்த வேலையிலும் சேர்ந்துகொள்ள முடியாமலிருப்பதற்கு நிறவாதமே காரணம் என்கிறார்.

நிதித் துறையில் பயிற்சி தனது பட்ட்ப்படிப்பை நிறைவு செய்த அவர் வங்கியி ஒன்றின் தலைமையகத்தில் பயிற்சிக்குச் சென்றிருக்கிறார். அங்கு இயக்குனராக வேலைபார்த்த வெள்ளையர் இவ்வாறன வேலை வெளி நாட்டவர்கள் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் வேறு வேலைகளைத் தேடுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அருவருக்கத்தக்க பிரஞ்சு ஏகாதிபத்தியதியத்தின் சுரண்டல் அமைப்பு உலகில் வறுமையையும் போரையும் ஏற்படுத்தக் காரணமகியது. இதுவே அகதிகளையும் வறுமையையும் உற்பத்தி செய்தது. இன்று தமது நாட்டில் தஞ்சமடைந்தவர்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

2013 இல் மட்டும் 1274 நிறவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகக் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பிரன்சில் வாழும் 35 வீதமான வெள்ளையர்கள் தாம் ஏதாவது ஒரு வகையில் நிறவாதிகள் என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதாக கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.

சார்லி எப்டோ படுகொலை யாரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது பலத்த சர்ச்சைக்குரிய விடையங்களாகவிருக்க அக்கொலைகளின் பின்னர் நிறவாதம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சமடைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பாசிசக் கட்சியான தேசிய முன்னணி (FN) இதன் பின்னர் மீழெழுச்சி அடைந்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளான சோசலிசக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றிற்கு இணையாக போட்டியிடும் நிலைக்கு பாசிசக் கட்சி எழுச்சி பெற்றுள்ளது.

சார்லி எப்டோ படுகொலைகளின் பின்னர் நிறவாத நஞ்சுட்டப்பட்ட மக்களின் ஆதரவுடனேயே பிரான்ஸ் இராணுவ மயமாக்கப்படுகிறது. போலிஸ் அரசாக பிரான்ஸ் மாறிவருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலை முன்வைத்தே அப்பாவி மக்கள் உளவு பார்க்கப்படுகின்றனர்.

பிரான்சில் தீவிர வலதுசாரி ஆட்சியாகக் கருதப்பட்ட நிக்கொலா சார்கோசியின் குடியரசுக் கட்சியின் கோர ஆட்சியிலிருந்து விடுதலை பெற மக்கள் போலி சோசலிசக் கட்சிக்கு வாக்களிக்க பிரான்சுவா ஒல்லோந் ஜனாதிபதியானார். இலங்கையில் இன்று நடப்பதைப் போன்றே எதிர்ப்புக் குரல் எழுப்பிய ஜனநாயகவாதிகள் அனைவரும் பிரான்சுவா ஒல்லோந்திற்கு ஆதரவளித்தனர்.

சுய திருப்திக்காக இடதுசாரியம் பேசும் குழுக்களும், வெற்று முதலளித்துவ எதிர்ப்புக் குழுக்களும், அனாகிஸ்ட் அமைப்புக்களும், உரிமை அமைப்புக்களும் பிரான்சுவா ஒல்லோந்தை ஜனாதிபதியாக்கின. இன்று தேசிய முன்னணி என்ற பாசிசக் கட்சியின் தலைவியான மரின் லூ பெனை பிரான்சுவா ஒல்லோந் தனது மாளிகைக்கு அழைத்து விருந்து வைக்கிறார்.
பிரான்ஸ் முழுவதிலும் பயங்கரவாத அச்சத்தை பிரான்சுவா ஒல்லோந் விதைக்கும் அதே வேளை பிரான்சில் ஏதோ பயங்கரம் நடக்கப்போவது போன்ற உணர்வு அவதானிப்பவர்களுக்கு மேலிடுகிறது.

இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி மக்களின் ஆதரவுடனேயே நகர்த்தப்படும் பிரஞ்சு நாட்டிற்கு மக்கள் பற்றுள்ள தொழிலாள வர்க்கக் கட்சி மட்டுமே தீர்வாக அமைய முடியும். ஜனநயகப் புரட்சி கூட தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் ஊடாக மட்டுமே சாத்தியமாகும் என்பதை உலகின் ஒவ்வொரு மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் நிறுவிக்கொள்கின்றன.

தமது மூதலீட்டையும் மூலதனத்தையும் உலகம் முழுவதிலும் விதைத்து அறுவடை செய்வதிலேயே குறியாகவிருக்கும் சிறுபான்மை முதலாளிகளால் நிறவாதத்தை மட்டுமே விதைக்க முடியும்.

Exit mobile version