முதல் தடவையாக முஸ்லீம் வணக்கத் தளங்கள் மீது; தாக்குதல் நடைபெறவில்லை. இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளன. கடந்த ஜனவரியில் அனுராதபுரத்தில் உள்ள தர்க்கா ஒன்றும் பௌத்த சிங்கள இனவாதிகளால் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது இனவாதிகள் முஸ்லீம்கள் மீது தமது கவனத்தை திருப்பியுள்ளதன் வெளிப்பாடாகும். அத்துடன் இந்தப் போக்கானது இச் சம்பவத்துடன் முடிந்து போவதல்ல. தொடர்ச்சியாக இந்து, முஸ்லீம் வணக்கத் தலங்கள் மீது தாக்குதல்களை எதிர்பார்க்கலாம்.
இப்படியாக முஸ்லீம் மக்கள் மீது தொடரும் தாக்குதல்களை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் தலைமைகள் தாக்குதல்களை தடுத்து நிறுத்த முடியாமல் இருப்பது கவனிக்கத்தக்கது; இதே இன வெறி சிஙகள அரசில் முஸ்லீம் காங்கிரசின் ரவ+ப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருப்பது வேடிக்கையானது.
ஸ்ரீலங்கா – மகிந்த அரசின் எடுபிடிகளாக இருக்கும் தமிழ், முஸ்லீம் தலைமைகள் கடந்த காலங்களில் நடைபெற்ற இன அழிப்பிற்கு “புலிகளின் பயங்கரவாதம்” காரணம் என கூறிவந்தன. மாறாக ஸ்ரீலங்கா பௌத்த சிங்கள இனவாதமானது இன அழிப்பை தீவிர முனைப்புடன் செயல்படுத்திவருகின்றன. இதில் சிங்கள தலைமைகள் மிகத் தெளிவாக உள்ளன.
இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவதும், இலங்கையில் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதும், இலங்கையானது ஒரு பல் தேச பல் கலாச்சார சமூகம் என்பதை ஏற்றுக் கொண்டு, அதனை அரசியல் அமைப்பில் உறுதி செய்வதும், அந்த அடிப்படையில் அரசியல் தீர்வுகளை முன்வைப்பதிலுமே தங்கியுள்ளது.
இப்படிப்பட்ட தீர்க்கமான அறிவார்ந்த முன்மொழிவுகளுக்கு மாறாக பௌத்த சிங்கள இனவாதிகளின் உணர்வுகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறையில் மேற்கொள்ளப்படும் எந்த முன்மொழிவுகளுமே இலங்கையில் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதில் எந்த விதமான பாத்திரமும் ஆற்ற முடியாது. இது சிக்கலை மேலும் ஆழப்படுத்தவே வழிவகுக்கும். இதனை புரிந்து கொள்வது அவசியம்.
தம்புள்ளையில் பள்ளிவாசல் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு மூலகாரணமாக அமைந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிப்பதில் அனைவரையும் ஒன்று திரளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அசை (சமூக அசைவிற்கான எழுத்தியக்கம்)
தேடகம்
இனியொரு
புதிய திசைகள்
மே 18 இயக்கம்