Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் மீதான கண்டனம் ரகுமான் ஜான் உரை

ரொறொன்ரோ நகரில் மே 6ம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரை.

(இந்த உரையானது எழுத்து வடிவத்திற்கமையவும், நண்பர்களது கோரிக்கைகளுக்கு இணங்க இன்னும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்திலும் சற்று  திருத்தியமைக்கப்பட்டுள்ளது (edited and updated).)

தம்புள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் என்பது ஒன்றும் முதன்முதலாக நடப்பது அல்ல. புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமது கவனங்களை யுத்தத்தை ஆதரிப்பதில் தீவிரமாக குவித்திருந்த சிங்கள தேசியவாதிகள், யுத்தம் முடிந்த உடனேயே தமக்கான புதிய இலக்குகளை தேர்ந்தெடுத்து அவற்றின்மீது தமது தாக்குதல்களை தொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். மலையக மக்களது இந்து ஆலயங்கள் மணி அடிப்பது தொடர்பான பிரச்சனையை கிளப்பியதிலிருந்து அடுத்து அடுத்து வெவ்வேறு இடங்களில் இதுபோன்ற பிரச்சனையை கிளப்பி வந்தவர்களின் அண்மைக்கால இலக்குத்தான் தம்புள்ள பள்ளிவாசலாகும். இந்த போக்கு இத்துடன் நிறுத்தப்பட மாட்டாது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் சிங்கள தேசியவாதத்தின் இருப்பானது இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மூலமாகவே தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். சிங்கள அரசியல் தலைமையும், சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய படையினரும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட முடியாதவர்களான இருக்கும் வரையில் இந்த சிங்கள தேசியவாத சக்திகள் முழுச்சுதந்திரமாக செயற்படமுடியும்: அவ்வாறுதான் செயற்படும். ஏனெனில் சிங்கள தேசியவாத சக்திகள் சிங்கள சமூகத்தின் மீது தமது சித்தாந்த மேலாண்மையை திடமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கும் வரையில், இலங்கை சமூக உருவாக்கத்தின் திசைவழியை நிர்ணயிக்கும் முக்கிய சக்திகளாக இவர்களே திகழப்போகிறார்கள்.

இது தொடர்பான சரியான விளக்கத்தை நாம் பெற்றுக்கொள்வதானால் நாம் முதலில் ஆளும் வர்க்கம் தொடர்பாக எமது பார்வைகளை விரிவுபடுத்திக் கொள்வது அவசியமானது. மரபார்ந்த அர்த்தத்தில் ஆளும் வர்க்கத்தை பிளவுகள் அற்ற ஏகவினமான ஒரு சக்தியாக பார்ப்பதை (monolithic) கிராம்சி நிராகரிக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், ஆளும் வர்க்கம் என்பது பல கூறுகளினால் ஆனது. பொருளாதார ஆதிக்கமானது இவற்றின் ஒரு பிரிவினரிடத்திலும், அரசியல் ஆதிக்கம் இன்னோர் பிரிவினரிடத்திலும், சித்தாந்த மேலாண்மை இன்னோர் பிரிவினரிடத்திலும் இருக்கலாம். இந்த பிரிவினர்கள் எல்லோரும் இணைந்து தோன்றும் ‘ஆளும் குழுமம்’ (Ruling Bloc) என்ற வகையிலேயே இவர்கள் செயற்படுகின்றனர். இதனால் இந்த ஆளும் குழுமத்தில் இருக்கும் அரசியல் தலைமையானது நியாயமான சிந்தனை உடையவர்களாகவும், இனவாதிகள் அற்றவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், ஏன் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் இதயசுத்தியானவர்களாகவும் கூட இருக்கலாம். இங்கே இருக்கும் பிரச்சனை அதுவல்ல. இவர்கள் தமது அரசியல் வெற்றிகளைப்பற்றிக் கவலைப்படாமல், மேலே கூறப்பட்ட சிங்கள தேசியவாதிகளை முகம் கொடுக்கத் தயாரானவர்களாக இருக்கிறார்களா இல்லையா என்பதே இங்குள்ள தீர்க்கமான பிரச்சனையாகும். இதற்கான பலம் இந்த அரசியல் தலைமைகளிடம் இல்லாதவரையில் இந்த நல்ல அரசியல் தலைமைகள், தாம் இதயசுத்தியுடன் விரும்பினாலுங்கூட இப்படிப்பட்ட தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க கூடியவர்களாக இருக்க முடியாது என்பது வெளிப்படையானது.

இங்கே பிரச்சனையானது இப்படியான ஒரு விரிவான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படாமல், வெறுமனே குறிப்பான சில சிங்கள அரசியல்வாதிகள் நல்லெண்ணங்கள், நோக்கங்கள் என்ற வகையில் புரிந்து கொள்ளப்படவும், விளக்கமளிக்கவும் படுகிறது. “சந்திரிகா நல்லவர்: இனவாதமற்றவர்” ஆதலால் நாட்டின் தேசிய பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வை காண்பார்” என்று முன்பு கூறப்பட்டது. பின்னர் “மகிந்தரின் கருணை” பற்றி பேசுகிறார்கள். இவ்வாறே பிரேமதாசா பற்றியும் பேசப்பட்டது. இன்று நாம் இவற்றைத் திரும்பிப் பார்க்கையில் இவை அனைத்துமே தவறாகிப் போனதை காண்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் நான் மேலே கூறப்பட்ட கருத்துக்களை முற்றாக நிராகரிக்கவும் மாட்டேன். ஏனெனில் இவர்களில் பலர் உண்மையான இனவாதிகள் – சிங்கள தேசியவாதிகள் அல்லர் என்பது உண்மைதான். ஒக்ஸ்போர்ட் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பியபோது தனது “பண்ணையில்” (வளவ்வ) இருந்த குடியானவர்கள் மத்தியில் சரிவர சிங்களத்திலேலே உரையாற்ற முடியாதவராக இருந்த, அந்தளவிற்கு வீட்டில்கூட ஆங்கிலம் பேசும் மேற்கத்திய விசுவாசிகளாக மாறிவிட்டிருந்து பண்டாரநாயக்கா எப்படி சிங்கள இனவாதியாக இருக்க முடியும். ஆனால் இந்த அம்சமானது அவர் சிங்கள மொழியை அரசகரும மொழியாக ஆக்குவதில் நின்றும் அவரை தடுத்துவிடவில்லை. அவ்வாறே டி.எஸ். சேனநாயக்க, ஜோன் கொகத்தலவல போன்ற, வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதை உயர்வாக கருதும் சிங்கள மேட்டுக்குடியிலிருந்து வந்த அரசியல் தலைவர்களுக்கும் பெரிதளவில் பொருந்திவரக்கூடியதே. இவர்கள் அனைவரும் உண்மையில் கறுப்புத் தோலினுள் அடைப்பட்டிருந்த “வெள்ளையர்” களாகவே இருந்தனர். இவரக்கு பின்னால் வந்த டட்லி, ஜே.ஆர், பண்டாரநாயக்கா போன்றோரும் இந்த மேற்கத்தயமயமான மேட்டுக்குடியைச் (western elite) சேர்ந்தவர்கள். இவர்கள் சிங்கள தேசியவாதத்தின் மிகவும் விசுவாசமான ஆதரவாளர்கள் அல்லர். ஆனாலும், இவர்களது அரசியல் தலைமையின் ஊடாகத்தான் அத்தனை சிங்கள தேசியவாத வேலைத்திட்டங்களும் நடந்தேறின.

ஆகவே நாம் இலங்கையின் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்று வரும்போது, எமது அக்கறைகளை வெறுமனே தலைமையில் இருக்கும் தனிநபர்கள் பற்றிய விடயமாக குறுக்கிக் கொள்ளாமல், இலங்கையில் சிங்கள தேசியவாதத்தின் தற்போதய நிலைமை. அதனை முகம்கொடுப்பதற்கான தொலைதூர பார்வையும், அதற்கான அரசியல் விருப்பும், தைரியமும் சம்பந்தப்பட்ட தலைவர்களிடம் இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். இது இருக்குமானால் அரசியல் தீர்வு பற்றி நாம் எங்கும் தேடி அலையத் தேவையில்லை. அப்படி செய்வது ‘கையில் வெண்ணைய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது’ போன்றதாகும். இலங்கையானது ஒரு பல்தேச நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்படுமானால், இந்த தேசங்கள் தமக்குள் அதிகாரங்களை சமமாக பகிர்ந்து கொள்வது பற்றி நாம் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும். இதற்கு மாறாக இலங்கை நாடானது பௌத்த சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்தானது. ஏனையவர்கள் வெறும் ஒட்டுண்ணிகள் என்ற விதத்தில் பிரச்சனையானது அணுகப்படுமானால், இலங்கையின் தேசியப்பிரச்சனைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு காண்பது என்பது சாத்தியப்படமாட்டாது.

வழமையாக சிங்கள அரசியல்வாதிகள் ஒடுக்கப்பட்ட தேசங்களையே பிரிவினைவாதிகள் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலையோ இதற்கு மாறானதாகவே இருந்து வந்துள்ளது. இலங்கை ஒரு பல்லின, பல்கலாச்சார நாடு என்ற யதார்த்தை மறுத்து, இலங்கையானது சிங்கள – பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தான ஒரு நாடு என்று வரையறுப்பதில் இருந்துதான் இலங்கையில் தேசிய பிரச்சனை உருவானது. ஆகவே இலங்கையின் தேசிய பிரச்சனைக்கான தீர்வும் இலகுவானதுதான். இலங்கையானது பல்தேச, பல்கலாச்சார நாடு என மீள வரையறுப்பதுடன் இது தொடங்குகிறது. இதற்கு மாறாக, சிங்களது மக்களது மனங்களை கோணாத விதத்தில் (இதனை சிங்கள தேசியவாதிகளது மனங்களை கோணாத விதத்தில் என்று புரிந்து கொள்ள வேண்டும்), தேசிய பிரச்சனைக்கான தீர்வை, வேறு பெயரில், வேறு வடிவில் முன்வைப்பதன் மூலமாக தீர்வு காண முயலலாம் என்பது வெறும் ஏமாற்று மாத்திரமேயாகும். இது இலங்கையில் வாழும் பல்வேறு தேசங்களுக்கு இடையிலான உறவு பற்றிய பிரச்சனையாகும். இதனை அனைத்து தேசங்களைச் சேர்ந்த மக்களும் சரிவர புரிந்து கொண்டு, பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அக்கறையில் இதய சுத்தியுடன் முன்னெடுக்க வேண்டியதொன்றாகும். இதற்கு மாறாக ஒழிவு மறைவாக, தலைவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான ஒப்பந்தங்களும் வெற்றிபெற மாட்டாது. இப்படிப்பட்ட ஒரு துணிச்சலான, மிகவும் முற்போக்கான, நியாயமான ஒரு சமாதானத்தை முன்னெடுப்பதற்கு சிங்கள அரசியல் தலைமைக்கு போதிய மனோ தைரியமும், சமத்துவம், ஜனநாயகம் என்பவற்றில் அசைக்க முடியாக நம்பிக்கையும் இருக்க வேண்டும். இது இல்லாதபோது இவர்கள் வெறுமனே சிங்கள தேசியவாதத்தில் ஏவலாட்கள் போன்ற செயலாற்ற வல்லவர்கள். இவர்கள் தேசிய பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வுகளையும் முன்வைக்கும் தகுதியில்லாதவர்கள் என்பது மட்டுமல்லாமல், இவர்கள் சிங்கள – பௌத்த மேலாதிக்க சித்தாந்தத்தின் செயலாற்றல் மிக்க பௌதீக சக்தியாகவும் அமைந்துவிடுகிறார்கள்.

ஆகவே இலங்கையின் தேசிய பிரச்சனைக்கான தீர்வு என்பது ஒன்றும் யாராலும் கண்டறியப்படாத, விடைகாண முடியாத ஒரு புதிர் அல்ல. மாறாக அந்த தீர்வானது நீண்ட காலமாகவே சம்பந்தப்பட்ட மக்களின் முன்னர் தெளிவாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை முகம் கொடுக்கும் தைரியம் சிங்கள அரசியல் தலைமைக்கு இருக்குமாயின், நாம் இந்த தேசிய பிரச்சனைக்கான தீர்வை மாகாண, பிரதேச, சமஷ்டி, மற்றும் கூட்டாட்சி போன்ற வடிவங்களில் இலகுவாகவே தீர்வு காணலாம். அது இல்லாத போது ஒடுக்கும் மக்கள் தமக்கான விடுதலையை, தம்முன்னுள்ள அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி அடைந்தே தீர்வர். இதற்கு முஸ்லிம் சமூகமும் விதிவிலக்காக அமையமாட்டாது.

யுத்தத்திற்கு பின்னாலான சூழ்நிலையில் இலங்கையில் தேசங்களுக்கு இடையிலான உறவு எவ்வாறு இருக்கிறது என்பதை சில சாதாரணமான உதாரணங்கள் மூலமாக நாம் விளங்கிக் கொள்ளலாம். சிங்கப்பூரில் இருக்கும் அரசாங்க பொது விடுமுறைகள் மொத்தம் ஐந்து மாத்திரமே. நான்கு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலா ஒரு நாட்கள். மேதினம் தொழிலாளருக்கான விடுமுறை. இங்கே அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இனத்தவரும் பாகுபாடின்றி நடத்தப்படுகின்றனர். இலங்கையில் நிலைமை என்ன? சிங்கள பௌத்தருக்கு 13 பௌர்ணமி தினங்களுடன் கூடவே வெசாக் தினத்துடன் இன்னொரு தினம் மேலதிகமான வழங்கப்படுகிறது. அத்தோடு புதுவருடத்திற்காக உத்தியோகபூர்வமாக இன்னும் இரண்டு தினங்கள். இப்படியாக உத்தயோகபூர்வமாக 16 நாட்கள் விடுமுறைகளாக வழங்கப்படுகின்றன. இதனைவிட உத்தியோகபூர்வமற்றதாக வழங்கப்படும் தினங்கள் இன்னும் பல. ஏனய மதங்களுக்கு வழங்கப்படுவது வெறும் 2 தினங்களேயாகும். நாட்டில் மூலதனம் இட்ட முதலாளிகள் இப்படியாக மிகையான (52 சனி, ஞாயிறு தினங்கள்+ பௌத்த விடுமுறைகள் 16, இத்துடன் இந்து, இஸ்லாமிய தினங்களையும் சேர்த்துவிட்டால் கிட்டத்தட்ட மொத்தம் 130 தினங்களை விடுமுறை நாட்களாக செயலற்று இருக்கின்றன) விடுமுறைதினங்கள் தமது உற்பத்தியை – சுரண்டலை பாதிப்பதாக அரசுக்கு முறைப்பாடு செய்யும்போது அரசானது ஒரு சுலபமான வழியை கண்டுபிடித்தது. தமிழ் மக்களது சிவராத்திரி. மற்றும் முஸ்லிம்களது ஹஜ்ஜுப்பெருநாள் ஆகியவற்றை வெட்டுவதன் இதனை தீர்க்க முனைந்தது. சிங்கள தேசியவாதம் இன்றுவரையில் தான் ஒரு தனிச்சலுகை பெற்ற சமூகமாக திகழ்வதை கைவிட முன்வராதவரையில் இலங்கையில் தேசியப்பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண்பது என்பது ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை.

இலங்கையில் சிங்கள தேசியவாதத்தின் மேலாண்மை எந்தளவிற்கு பலமாக இருக்கின்றது என்றால் அது சமூகத்தின் ஏனைய அனைத்து கட்டமைப்புக்களையுமே தனது செல்வாக்கிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், அந்தந்த கட்டமைப்புக்களை தனது ஏவலாட்கள் போல செயற்படுமாறு வைத்துள்ளது. உதாரணமாக தம்புள்ளையில் நடைபெற்ற அசம்பாவிதங்களின்போது அங்கே சட்டம் ஒழுங்கு பற்றிய பிரச்சனை தோன்றுவதையோ, அல்லது இன்னோர் சமூகத்தின் மதவழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியோ, பள்ளிவாசலது சொத்துக்கள் நாசப்படுத்தப்படுவது மற்றும் அங்கு வழிபட்டுக்கொண்டிருந்து பலருக்கு ஏற்படக்கூடிய உயிரிழப்புக்கள் பற்றியே கவலைப்படாமல் காவல் துறையினர் வெறுமனே வேடிக்கை மாத்திரம் பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வாறே கடந்த காலங்களில் அரசின் ஏனைய துறைகளான சட்ட, இராணுவ, கலாச்சார, தொல்பொருள் ஆய்வு அமைச்சு போன்றவையும் வெறுமனே சிங்கள தேசியவாதத்தின் கருவிகள் போலவே செயற்பட்டுக் கொண்டிருந்தன. உதாரணமாக நீதித்துறையானது சிங்கள தேசியவாதத்தின் கருவியாக செயற்பட்டதை நாம் சிங்கள் அரசகரும மொழிச்சட்டத்திற்கு எதிரான கோடீஸ்வரனது நீதிமன்றத்தின் தீர்ப்பில் காண்கிறோம். அப்போது அந்த தீர்ப்பை எதிர்ந்து பிரித்தானிய பிரபுக்கள் கழகத்திற்கு மேன்முறையீடு செய்து கோடீஸ்வரன் வெற்றி பெற்றபோதிலும், அந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது இலங்கை நீதி அமைப்பினால் உதாசீனப்படுத்தப்பட்டது. அவ்வாறே திருகோணமலை சந்தையில் புத்தர் சிலையை வைத்தது சம்பந்தமான வழக்கில் திருகோணமலை நீதிமன்றத்தின் தீர்ப்பை முடக்கில் போடுவதில் சிங்கள் தேசியவாதிகளும், பிரதம நீதியரசர் சரத். என். சில்வாவுமாக முயன்று வெற்றியும் பெற்றார்கள். வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பானது இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலமாக ஏற்படுத்தப்பட்டது. இந்த இணைப்பை நீதிமன்ற ஆணை மூலமாக பிரதம நீதியரசர் இரத்துச் செய்தார். இப்படியாக பல வழிகளிலும் நீதித்துறையானது சிங்கள தேசியவாதத்தின் விசுவாசமான ஊழியனாகவே செயற்படுகிறது. தொல்பொருள் ஆய்வு தினைக்களம் பற்றி கூறவே தேவையில்லை. சிங்கள தேசியவாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தடயங்களை உருவாக்குவதும், சிங்கள தேசியவாதத்தின் இலக்குகளை கேள்விக்குள்ளாக்கும் தடயங்களை அழிப்பதுமே இதன் கடமை என்றாகிவிட்டது. இராணுவமானது தனது யுத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் புத்தர் சிலைகளை அதன் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் வைப்பதும், அவற்றை கோயில்களாக அபிவிருத்தி செய்ய பாதுகாப்பு அமைச்சின் நிதியினை பயன்படுத்துவதுமே இவர்களது பணியாகி விட்டுள்ளது. அரசாங்க நிர்வாக இயந்திரமோ இன்னமும் தமிழ் மக்களுடன் தமிழ் மொழி மூலமாக தொடர்பு கொள்ளாமல் தனிச்சிங்கள் கடிதங்களை அனுப்பி தனது ஆதிக்கத்தை வெளிப்படுகிறது. இந்த பணிக்கென தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரிந்த சில ஆயிரம் பேரை நியமிப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. இதன் மூலமாக நிர்வாகமட்டத்தில் மொழிரீதியான சிக்கல்கள் தீர்வதுடன் பல பன்மொழி ஆற்றல் உடையவர்களுக்கு முக்கியமான வேலை வாய்ப்புக்களையும் வழங்கும். இப்படிப்பட்ட வேலை வாய்ப்புக்களே எதிர்காலத்தில் இன்னும் பலரை மும்மொழியையும் கற்றுத்தேறவும் வழி வகுக்கவல்லது. ஆனால் அப்படியான எந்தவிதமான செயல்பூர்வமான அக்கறைகளும் இன்றி, சிங்கள தேசியவாதத்திற்கு சேவையாற்றுவதையே தமது பணியாகக் கொண்டு அரச நிர்வாக இயந்திரம் செயற்பட்டு வருகிறது. யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்கின் பின்னருங்கூட, இந்த யுத்தத்திற்கு இட்டுச்சென்ற காரணங்களை இனம் கண்டு களைவதும், அரசியல் தீர்வை நோக்கி முன்னேறுவதும் என்பதற்குப்பதிலாக, அரசானது தனது ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்காக பெளத்த மதத்தை எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பதிலேயே கவனமாக இருக்கிறது.

மதங்கள் என்று வரும்போது, ஒரு ஜனநாயக நாட்டில் பல்வேறு மதங்களுக்கு இருக்கக்கூடிய சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய பிரச்சனை எப்படி இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டியிருக்கிறது. அரசியல் அமைப்பு மதத்தாபனங்களை நிறுவுவதற்கான, அல்லது அகற்றுவதற்கான வழிமுறைகள் என்னவென்றதொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. குறிப்பிட்ட ஒரு மக்கள் பிரிவினர் தமது ஆன்மீக மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதற்கான ஒரு தளமாகவே அந்தந்த மக்களது வழிபாட்டுத்தளங்கள் கருதப்பட வேண்டும். இப்படியாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தேவைகள் என்ற வகையில் அணுகப்படும்போது குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் வாழும் பிரதேசத்தில் ஆலயங்களை நிறுவிக்கொள்வதில் அந்த மக்களது ஆன்மீக தேவையொன்றே முதன்மையான அக்கறைக்குரிய விடயமாகிறது. அவ்வாறே குறிப்பிட்டதொரு சமூகமானது குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தை விட்டு பெருமளவில் குடியகல்கையில் குறிப்பிட்ட ஆலயமானது பாவனை குறைந்து படிப்படியாக சிதைந்தோ, அல்லது வேறு சமுதாய தேவைகளுக்காக மாற்றம் பெறுவதோ நடந்தேறும். இதுதான் ஒரு ஜனநாயகமும், மதச்சுதந்திரமும் உள்ள ஒரு நாட்டில் உள்ள சாதாரண நடைமுறையாகும். ஏனைய இந்து, முஸ்லிம், கிறீஸ்தவ மதங்களைப் பொறுத்தவரையில் இன்றுவரையில் நடைமுறையில் இருந்துவருவதும் இதுவேதான்.

ஆனால் சிங்கள தேசியவாதமானது பெளத்தத்தை தனது கையிலேந்திக்கொண்டு செயற்படுகையில் இந்த வழமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு தனது அப்பட்டமான ஆக்கிரமிப்பின் கருவிகளில் ஒன்றாக மதத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இராணுவமானது தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் திடீரென, அந்தப்பகுதியில் கணிசமாக வாழும் மக்கள் பிரிவினரின், குறிப்பாக இந்து, கிறீஸ்தவ, முஸ்லிம் மக்களது, கருத்துக்களை கேட்டறியாமலேயே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அந்த மக்களது தீவிர எதிர்ப்பையும் மீறி புத்தருடைய சிலைகளை பொது இடங்களில் வைப்பதும், பின்பு அதற்கு சிலகாலம் இராணுவ பாதுகாப்பு வழங்குவதும், பின்னர் எதிர்ப்புகள் பலவீனமடைய அந்த சிலைகளைச் சிறிய பௌத்த கோயில்களாக மாற்றுவதும் நடந்தேறுகிறது. அவ்வாறே குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் – குறிப்பாக இந்து, இஸ்லாமிய, கிறீஸ்தவ மதத்தினர் – தொடர்ச்சியாக வழிபட்டுவரும் அவர்களது வழிபாட்டுத்தலங்களை பலவந்தமாக அழித்தொழிக்க முயல்வதும் நடைபெறுகிறது. இது அரசியல் அமைப்புரீதியாக ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் அரச மொழியாக பௌத்தம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அனைத்து மதங்களுக்கான சுதந்திரமும் குறிப்பிடப்படுகிறது. இந்த இரண்டு சரத்துகளுக்கும் இடையிலான இந்த முரண்பாடானது பௌத்த ஆதிக்கத்தின் மேல் ஏனைய மதங்களின் சுதந்திரம் என்பதை அர்த்தமற்றதாக்கிறது. எனவே அரசியல் அமைப்பில் இருக்கும் பௌத்தத்திற்கான முதலிடம் என்ற சரத்து அகற்றப்படாமல், ஏனைய மதங்களுக்கான சுதந்திரம் என்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது. இந்த முரண்பாடுதான் இந்த நிகழ்வுகளில் வெளிப்படுகிறது. மேலும் நாம் ஒரு இடைக்கால நிலப்பிரபுத்துவ சமூகத்தில் (Medival fuedal society) வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. மாறாக, இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில்கூட நாம் முதலாளித்துவ தாராண்மைவாத கொள்கைகளின்படி அரசிலிருந்து மதத்தையும், மதத்திலிருந்து பாடசாலைகளையும் பிரித்து, மதத்தை தனிநபர்களது தனிப்பட்ட விவகாரமாக பிரகடனப்படுத்த முடியவில்லையானால் இலங்கையில் நிலவும் ஜனநாயகத்தின் தன்மை பற்றியும் நாம் சிந்தித்தாகவேண்டியிருக்கிறது அல்லவா?

தம்புள்ளை விவகாரமானது இலங்கையில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட தேசங்களதும் மதசுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என்றவகையில் இதனை வன்மையாக கண்டிப்பது அனைத்து முற்போக்கு-ஜனநாயக சக்திகளதும் கடமையாகும். அதிலும் தமிழ் முற்போக்கு-ஜனநாயக சக்திகள் இப்படிப்பட்ட தேசிய ஒடுக்குமுறை செயற்பாடுகளை நிபந்தனையின்றி கண்டிக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட செயற்பாடுகள் நடைபெறும்போது அவை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமாக இருக்கிறதா, இல்லையா என்று கணித்து அதற்கேற்ப கண்டிப்பது அல்லது மௌனம் சாதிப்பது என்பது நேர்மையான ஜனநாயக நடைமுறையாகமாட்டாது. அந்தவகையில் முன்னர் முஸ்லிம் மக்கள் பிரச்சனை தொடர்பாக அறிக்கை விட்ட “புத்திஜீவிகளது” மௌனம் இப்போது உறுத்திக்கொண்டு நிற்கிறது.

தமிழ் முற்போக்கு-ஜனநாயக சக்திகள் இப்படிப்பட்ட சம்பவங்களை கண்டிப்பதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. அவர்கள் தமிழ்-முஸ்லிம் தேசங்களிடையே முறுகல் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் காரணிகள் மீது – குறிப்பாக தமிழ் மக்கள் தரப்பில் காணப்படும் கூறுகள் மீது – தமது அக்கறைகளை குவிக்கவேண்டிய காலம் இதுவாகும். அந்தவகையில் நான் முஸ்லிம் மக்களது அரசியல் தொடர்பாக தமிழர் தரப்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டுவரும் சில விசனங்கள் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கையின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிரான மாநாட்டில் முஸ்லிம் தலைமை சிறீலங்கா அரசை காக்கமுனைந்தது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. அத்தோடு தமது விடுதலைக்காக இதுவரைகாலமும் போராட முற்படாத முஸ்லிம்கள் தமிழருக்கான அரசியல் தீர்வு என்றுவரும்போது மட்டும் குறுக்கே வந்து தனது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பற்றி குரல் எழுப்புவதாகவும், அதன்மூலமாக தமிழருக்கு கிடைக்கக்கூடிய அரசியல் தீர்வுக்கு தடையாக அமைவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்தும் வருகிறது. இந்தவிதமான குற்றச்சாட்டுகளை பரிசீலிப்பதற்கு முன்னாள் இன்னும் சிலவிடயங்களை நாம் பரிமாறிக்கொள்வது அவசியமானதாகிறது.

ஆங்கிலத்தில் Prejudice, Stereotyping, Political Correctness, Ethnocentrism, Islamophobia போன்ற பதங்கள் மிகவும் பரவலாக பேசப்படும் விடயங்களாக இருக்கின்றன. தமிழில் இவற்றிற்கு இணையான பதங்கள் பாவனையில் இல்லாதது மட்டுமன்றி, இந்த விடயங்கள் பற்றி பிரக்ஞையே இன்றி சாதாரண மக்கள் மாத்திரமன்றி முற்போக்கு-ஜனநாயக சக்திகள்கூட தமது அன்றாட உரையாடல்களை நடத்துவது மாத்திரமன்றி, பொதுசன ஊடகமான வலையில்கூட கருத்துக்களை வெளிப்படுத்துவதை நாம் பரவலாக அவதானிக்கமுடியும். கறுவலும், சப்பட்டையும், சோனியும் இப்படிப்பட்ட உரையாடல்களில் சாதாரணமாக பாவிக்கப்படுவதுண்டு. இந்த பட்டியலில் தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், ஏனைய எல்லாவிதமான ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கும் எதிரான சொல்லாடல்களும் அடங்கும். முற்போக்கானவர்கள், புரட்சிகரமானவர்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் சக்திகளால் நடத்தப்படும் வலைகளில் அண்மையில் அவதானித்த சில விடயங்களை நாம் எடுத்துக்கொள்வோம். “முஸ்லிம்கள் ஏமாற்றுபவர்கள்”, காட்டிக்கொடுப்பவர்கள், தொப்பி பிரட்டுபவர்கள் (இரயாகரன், நேசன்) என்ற வாதங்கள் மிகவும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. சாதாரணமாக ஒரு போராளி காட்டிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டுவதாயின் அதற்கான பலமான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பர். ஆனால் சம்பந்தப்பட்ட போராளி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், எவ்வித ஆதாரமும் இன்றி இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம் என்ற நிலைமை காணப்படுகிறது (இரயாகரன்). யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவந்த முஸ்லிம்கள் அரசுக்கு தமிழ் போராளிகளை காட்டிக்கொடுப்பதாக ஒருவர் பகிரங்கமாகவே குறிப்பிடுகிறார் (த. சோதிலிங்கம்). ஒரு சோமாலியாக்காரர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் எல்லா முஸ்லிம்களும் ஏமாற்று செய்பவர்களே என்கிறார் இன்னொருவர் (ப.வி. ஶ்ரீரங்கன்). இப்படியான குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் பகிரங்கமாக, பொது ஊடகங்களில் முன்வைக்கும்போது அந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு இந்த வலைகளை நடத்துபவர்கள் கோராதது மட்டுமன்றி, பல சந்தர்ப்பங்களில் இந்த வலைகளை நடத்துபவர்களே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது. பொதுப்புத்தி ஊடகமானது பிற்போக்கு சித்தாந்தங்களை மறுஉற்பத்தி செய்வதிலிலேயே போய்முடியும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

இந்த குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும் எவருக்கும் இவற்றில் வெளிப்படும் ‘இஸ்லாமியவெறுப்பு’ (Islamophobia) பளிச்சென தென்படும். உதாரணத்திற்காக ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்துக்கொள்வோம். இன்று வெளிநாடுகளில் உள்ள பலரும் ஏஜென்சி மூலமாக பணம்கட்டித்தான் இங்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இவர்கள் எத்தனை ஏஜென்சிகாரர்களால், எப்படியெப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். இங்குள்ள பலரது சொத்துக்கள் ஊரிலுள்ள இரத்த உறவினரால் எப்படியெல்லாம் மோசடிசெய்யப்பட்டன. இவ்வளவும் இருக்கத்தக்கதாக எப்படி இவர்கள் முஸ்லிம்கள் ஏமாற்றுபவர்கள் என்ற முடிவுக்கு வந்தார்கள்? இன்று யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றை உளவுப்பிரிவினர் தெரிந்துகொள்ள பலநூறு வழிமுறைகள் அவர்களுக்கு இருக்கின்றன. உதாரணமாக ஊர்விதானை தொடக்கம் சிங்கள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், ஓடுகாலியாகிப்போன ஈபிடிபி போன்ற முன்னாள் போராளிகளின் அமைப்புக்கள், இவற்றைவிட வாராவாரம் இராணுவ முகாமிற்கு வந்த கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள்… இத்தியாதி இத்தியாதி எத்தனையோபேர்கள் அரசுக்கு உளவுவேலை செய்துகொண்டிருக்க, இருபது வருடத்திற்கு பின்பு யாழ்ப்பாணம் திரும்பியுள்ள முஸ்லிம்கள் உளவுபார்ப்பதாக குற்றஞ்சாட்டுவது என்பது யாழ்ப்பாணத்தில் இருந்து முன்பு அநீதியான முறையில் வெளியேற்றப்பட்ட இந்த முஸ்லிம்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிவருவதை எதிர்ப்பதற்கு சமமானது என்பதை இந்த நபர்கள் புரிந்துகொள்ளாதது ஏன்? அத்தோடு ஜெனிவாவில் சிறீலங்கா அரசின் தலைமைப்பிரதிநிதியே ஒரு தமிழர்தான் என்பதும், அங்கே பெருந்தொகையான தமிழ் அரசியல்வாதிகள் குவிக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் கண்ணில் படாமல், அங்குசென்ற முஸ்லிம் குழுவினர் மாத்திரம் உங்களது கண்களை உறுத்துகிறது என்றால், சம்பந்தப்பட்டவர்களது பார்வையில் ஏதோ கோளாறு இருப்பதாகத்தானே அர்த்தம். இந்த கோளாறைத்தான் ‘இஸ்லாமோபோபியா’ என்று குறிப்பிடுவார்கள். இந்த கோளாறு நிவர்த்திக்கப்படும்போது நான் முன்னே குறிப்பிட்ட முஸ்லிம் மக்களது அரசியல் தொடர்பான பிரச்சனைகளும் புதிய வெளிச்சம்பெறும். அவ்வாறே ‘தேசம்நெற்’ வலையில் நிஸ்தார் எழுதிய “சோனகர் என்றோர் இனமுண்டு…” என்ற கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட பலரும், முஸ்லிம்கள் தனியான ஒரு இனம் என்ற கருத்தை எதிர்த்து வாதிக்கும்போதே, முஸ்லிம் மக்கள் தொடர்பாக பல்வேறு மோசமான கருத்துக்களையும் தாராளமாக கொட்டினார்கள். இவை பெரும்பாலும் Ethnocentrism வகைப்பட்டவையாகும். அதாவது, இங்கு கருத்து தெரிவித்த பலரும், ஒவ்வொரு சமூகத்திலுள்ள நடைமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் என்பவை அந்த சமுதாயத்தின் குறிப்பான விழுமியங்களுக்கூடாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். மாறாக, வேறொரு சமுதாயத்தைச்சேர்ந்தவர்கள், தமது சமுதாயத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இன்னொரு சமுதாயத்தின் நடைமுறைகளை புரிந்துகொள்ள முனைவது, அந்த புரிதலின் அடிப்படையில் அவை தொடர்பாக ஏற்றத்தாழ்வான அபிப்பிராயங்களை வெளிப்பிடுவது அந்த குறிப்பிட்ட சமுதாயங்களிடையே ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கவும், அடக்கு முறைகளை தொடரவும் வழிவகுக்கும். இதனையே மானுடவியளாளர்கள் Ethnocentrism என்பார்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் மூலமாகவும், முஸ்லிம்களை வடக்கிலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்ததன் மூலமாகவும் இப்படிப்பட்டவர்கள் தமது நோக்கங்களுக்கு மாறாக முஸ்லிம் மக்கள் தனியான ஒரு தேசம்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் என்பதுதான் நிதர்சனமானது. இங்கு எனக்கு எழும் முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால், தம்மால் ஒடுக்கப்பட்ட முஸ்லிம் தேசம் தொடர்பாக இத்தனை காழ்ப்புணர்வுகளை கொட்டும் சம்பந்தப்பட்ட “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” சிங்கள தேசத்துடன் ஐக்கியம் பற்றி பேசுவதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதுதான். ஒன்றில் இது அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாகவோதான் புரிந்துகொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும்.

இலங்கையில் தமிழர்களிடையே காணப்படும் இஸ்லாமிய வெறுப்பானது சில குறிப்பான வரலாற்றுக் காரணங்களினால் உருப்பெற்றதாகும். முதலாவது சர்வதேச நிலைமைகளினால் உருவானது. அதாவது, 1990 இல் சோவியத்யூனியனின் தகர்வை அடுத்து, ஏகாதிபத்தியங்களுக்கு தமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களை தமது சமுதாயத்திலுள்ள முதன்மையான பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்பி வைக்க இன்னொரு பூச்சாண்டி தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்குதான் இஸ்லாமிய வெறுப்பாகும். இன்று சர்வதேச அளவில் பொதுசன ஊடகங்கள் யாவும் இல்லாமிய வெறுப்பை கக்கிவருகின்றன. இது தவிர்க்கமுடியாதவாறு தமிழ் ஊடகங்களையும் ஊடுருவுகின்றன. அடுத்தது, இலங்கையில் தமிழ் – முஸ்லிம் உறவுகளில் காணப்படும் குறிப்பான வரலாற்று மற்றும் அரசியல் காரணங்களிலிருந்து பிறப்பதாகும்.(இது பற்றி விபரமாக இன்னோர் சமயத்தில் பார்ப்போம்). இந்த அம்சங்களின் காரணமாக தமிழ் ஊடகங்களிலும், சாதாரண மக்கள் மத்தியிலுங்கூட இந்த இஸ்லாமிய வெறுப்புணர்வானது ஓங்கி நிற்கிறது. எமது சமுதாயத்தில் பிறந்து வளரும் ஒவ்வொருவருமே பல்வேறு ஆதிக்க சித்தாந்தங்களின் செல்வாக்கிற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்காவது உட்பட்டிருப்பது தவிர்க்க முடியாதது. ஏனெனில் நாம் பிறந்து, வளர்ந்த சமூகத்தில் ஏற்கனவே இருந்துவரும் ஆதிக்க சித்தாந்தங்களை விமர்சனமின்றி உள்வாங்கிக்கொண்டதன் விளைவுதான் இது. எமது சமூக பிரக்ஞையானது இப்படிப்பட்ட ஆதிக்க சித்தாந்தங்கள் பற்றிய விமர்சனத்துடன்தான் தொடங்குகிறது. எமது சமுக பிரக்ஞை வளர்ந்து செல்வதற்கேற்ப, நாம் புதிய புதிய ஆதிக்க சித்தாந்தங்களை இனம் காண்பதும், அவற்றுடன் கணக்கு தீர்த்துக்கொள்ள முனைவதும் தொடர்கிறது. இது வர்க்க, சாதிய, ஆணாதிக்க, யாழ்மையவாத, இஸ்லாமிய வெறுப்பு என்ற பல்வேறு ஆதிக்க சித்தாந்தங்களுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் விடாப்பிடியான போராட்டமாக தொடர்ந்தாக வேண்டியுள்ளது. தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளிடம் இஸ்லாமியவெறுப்பு வெளிப்படுவதாக நான் கூறும்போது தனிப்பட யாரையும் இழிவுபடுத்தும் நோக்கில் கூறவில்லை. எப்படியாக நாம் எம்மிடையே நிலவும் குட்டிமுதலாளித்துவ, ஆணாதிக்க, சாதிய, யாழ்மையவாத சிந்தனைகளுக்கு எதிராக விடாப்பிடியாக போராட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோமோ, அவற்றுடன் இதுவரையில் போதியளவு கவனத்தை உரியமுறையில் பெறாத, இஸ்லாமியவெறுப்பிற்கு எதிராகவும் திருப்ப வேண்டும் என்பதே இதன் தார்ப்பரியமாகும். சமுதாயத்தில் உள்ள ஆதிக்க உறவுகளை மிகவும் இயல்பானவையாக தோற்றமளிக்கச் செய்வதே சித்தாந்ததின் பணியாகிறது. இங்கே தொப்பி பிரட்டி என்பதை மிகவும் இயல்பான வார்த்தை பிரயோகம் என்று இரயாகரன் குறிப்பிடும்போது, அவர் இத்தனைக்குப் பின்னும் இஸ்லாமிய வெறுப்பு சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருப்பது பற்றி அறவே பிரக்ஞையற்று இருப்பதையே காட்டுகிறது. தம்மை புரட்சிகர சக்திகள் என்று அழைத்துக்கொள்பவர்கள் இப்படிப்பட்ட ஆதிக்க சித்தாந்தங்களுடன் கணக்குத் தீர்த்துக்கொள்வது, அவர்கள் தம்மை புரட்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்வதற்கு முன்னிபந்தனையாகிறது. அதிலும் இவர்கள், தமக்கு எதிரானவர்கள் என்று கருதுபவர்கள் மீது தாக்குதலை தொடுப்பதற்கு, சாதாரண மக்கள் மத்தியில் இருக்கும் இப்படிப்பட்ட சித்தாந்தங்களின் செல்வாக்குகளை பயன்படுத்த முனைவதானது, இவர்களது அயோக்கியத்தனத்தையே நிரூபிக்கிறது.

இப்போது மீண்டும் தமிழ் – முஸ்லிம் தேசங்களுக்கிடையிலான உறவுகள் பற்றிய விடயத்திற்கு வருவோம். முஸ்லிம் மக்களுக்கு முன்னதாகவே தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக குரல் எழுப்பியதுடன், அதற்கான போராட்டத்தில் மிகவும் விலைமதிக்க முடியாக தியாகங்களை மேட்கொண்டமையானது, அது தமிழர் தரப்பினர் இலங்கையின் ஒடுக்கப்பட்ட தேசங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஏகபிரதிநிதித்துவம் பெறுவதற்கான நியாயமான ஒருவாதமாகிவிடமுடியாது. இதே காரணங்களைத்தான் தமிழ் மக்கள் தொடர்பாக சிங்கள தரப்பினர் முன்வைக்கின்றனர் என்பதை சற்று உற்று நோக்குவது நல்லது. சிங்கள தலைவர்கள் மாத்திரம்தான் இலங்கையின் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டதால் சிங்களவர்களே இலங்கையின் இறைமையில் தனியாதிக்கம் பெற்றவர்கள் என்றவாதம்தான் இலங்கையின் தேசியபிரச்சனையின் மூல ஊற்றாகும். இப்போது அதேவாதத்தை தமிழர் தரப்பானது முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும்போது, தமிழரது அரசியல் கோரிக்கைகளின் தார்மீக தன்மையானது அடிபட்டுப்போகின்றன என்பதை கவனத்தில் கொள்வது நல்லது. அத்தோடு இப்போது தீர்வு காணப்படவேண்டியது இலங்கையின் தேசங்களுக்கு இடையில் அதிகாரப்பகிர்வு பற்றிய பிரச்சனைக்கான தீர்வேயொழிய, வெறும் தமிழர்களது பிரச்சனை பற்றிய விடயம் மட்டுமல்ல. அப்படியான ஒரு பேச்சுவார்த்தைகளில் ஒடுக்கப்பட்ட தேசங்கள் அனைத்தினதும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் உரிமையுடையவர்கள். சிறிலங்கா அரசானது இலங்கையில் கூர்மையடைந்துள்ள போரட்டத்திற்கு தீர்வுகாணும் முயற்சியை நீர்த்துப்போகச் செய்யும் நோக்குடன்தான் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக பாசாங்கு செய்வதாக வைத்துக்கொண்டாலுங்கூட, கிழக்கில் மூன்றில் ஒரு பகுதியினராக வாழும் முஸ்லிம் மக்களது பங்குபற்றலும், சம்மதமும் இன்றி வடக்கு –கிழக்கு இணைப்பு பற்றி பேசமுடியாதல்லவா? இலங்கையில் சிங்கள பேரிவனவாதத்தை முதலில் இனம்கண்ட அல்லது முகம்கொடுத்து போராடியவர்கள் தமிழர்கள் என்பதாக ஏற்றுக்கொண்டால், அவர்கள் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அரவணைத்து தலைமைதாங்கி செல்வதன் மூலமாக முன்மாதிரியாக திகழமுடியுமே ஒழிய, ஏகபோகம் பேசுவதனால் ஏனைய ஒடுக்கப்பட்ட தேசங்களை சிங்கள் தேசியவாதத்தின் கரங்களுக்குள் தள்ளிவிடும் காரியத்தை செய்துவிட முடியாது. சரி ஒருவாதத்திற்காக தமிழர்தரப்பின் இந்த வாதத்ததை நாம் ஒத்துக்கொள்வதாக வைத்துக்கொண்டாலுங்கூட, அது இன்னும் சில பிரச்சனைகளை எழுப்புகிறது அல்லவா? உதாரணமாக ஒரு குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு அந்த குடும்பத்தின் மூத்தவாரிசு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். மூத்த வாரிசின் இந்த நடவடிக்கையானது, அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசுகளை தமது பங்கிற்கான கோரிக்கை எழுப்புவதில் நின்றும் தடுத்துவிடாது அல்லவா?

தமிழ் – முஸ்லிம் தேசங்களுக்கிடையிலான உறவானது இலங்கையில் ஒடுக்கப்பட்ட இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவுகள் என்றவகையிலேயே அணுகப்படவேண்டும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு அணுகுவதை தடுக்கும் ‘இஸ்லாமியவிரோத’ சிந்தனைகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகளும் இதயசுத்தியுடன் போராடவேண்டும். “இன்னொரு தேசத்தை ஒடுக்கும் ஒரு தேசம் தனது ஒடுக்குமுறைக்கான அடிமைச்சங்கிலியை தானே உருவாக்கிக்கொள்கிறது” என்ற மார்க்சின் வாசகத்தை வெறுமனே சிங்கள தேசம் தொடர்பான விமர்சனமாக மாத்திரமன்றி, முஸ்லிம் தேசம் தொடர்பான தமிழரது அணுகுமுறையையும் உள்ளடக்கும்விதத்தில் புரிந்துகொள்வது இப்போது அவசியமானதாகிறது. இந்த புரிதலானது, தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் முன்னுள்ள அவசரமான பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞை பெறுவதற்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதை மனதிற்கொள்வோம்.

மீண்டும் அண்மையில் இலங்கையில் நடைபெற்றுவரும் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல்கள் உட்பட, அனைத்து ஜனநாயகவிரோத நடவடிக்கைகளையும் நான் பகிரங்கமாக கண்டிக்கிறேன். அத்துடன் இலங்கையின் தேசிய பிரச்சனையானது இலங்கை ஒரு பல்தேச சமூகம் என்ற வகையில், இந்த தேசங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு என்ற கண்ணோட்டத்துடனேயே தீர்வுகாணப்படலாம் என்பதையும வலியுறுத்துகிறேன். இப்படியானதோர் தீர்வுக்கு சிங்கள தேசம் முன்வராதவரையில் ஒடுக்கப்பட்ட தேசங்கள் தமது தலைவிதியை தமது கரங்களில் ஏந்திக்கொள்வதைவிட வேறு வழிகள் இருக்கமாட்டாது என்பதையும் வலியுறுத்தி எனது உரையை முடித்துககொள்கிறேன்.

Exit mobile version