Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் – முஸ்லீம் முரண்பாடு – எதிரிகளை இனம் காண்போம் : சபா நாவலன்

யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக மனித நாகரீகம் அவமானப்படும் வகையில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் குறித்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் பேசப்படுகின்ற அரசியலும் அதன் பின்னரான அணி சேர்க்கைகளும் நம் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் ஆயிரம் அழுக்குகளை உரசிப்பார்க்கும் உரைகல்.

தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் தமிழ் சமூகத்தின் முன்னணி சக்திகள் மத்தியிலிருந்து திரும்பிப் பார்க்கத்தக்க கண்டனக் குரல்கள் வெளிவரவில்லை. அது குறித்த மௌனம் மட்டும் தான் எஞ்சியிருந்தது. விரல்விட்டு எண்ணத்தக்க கயவர்கள் மட்டும் வெளியேற்றத்தை ஆதரித்திருந்தனர். அவர்களில் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற பத்திரிகையாளுரும் ஒருவர். “புத்திசீவிகளின்” அறிக்கையை கண்டித்து கருத்து வெளியிட்ட “தேடகம்” அமைப்பு அப்போது முஸ்லீம்களின் வெளியேற்றத்தைக் கண்டித்து ஒன்றுகூடல் ஒன்றை நடத்திய போது அதனை மூர்க்கத்தனமாக எதிர்தவர் ஜெயராஜ். இன்று கையெழுத்திட்டவராகக் கருதப்படும் 71 பேரில் ஜெயராஜும் ஒருவர். “தேடகம்” எதிர்ப்பக்கத்தில்.

 டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற மனிதர் புதிய அணிசேர்க்கைகளின் வெறுமனே ஒரு குறியீடு மட்டுமே.

சமூகத்தில் மாற்றங்களும், தலைமைக்கான வெற்றிடங்களும் உருவாகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அணிசேர்க்கைகளை வெளிப்படையாகக் கண்டுகொள்ளலாம். ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டம் சமூக அங்கீகாரம் பெற ஆரம்பித்த 80 களிலிருந்து புலிகள் அழிக்கப்பட்ட காலப்பகுதி வரைக்கும் இதே அணி சேர்க்கைகளையும் அவற்றின் மத்தியிலான உள் முரண்பாடுகளையும் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

புலிகள் அழிக்கப்படும் வரை மூர்க்கத்தனமாகவும், பலவந்தமாகவும் தலைமையைத் தக்கவைத்துக்கொண்டிருந்தனர். உறுதியான வர்க்க சார்பின்றிய புலிகளுக்கு தத்துவார்த்தப் பின்புலத்தையும் தலைமையையும் வழங்கியவர்கள் ஏகாதிபத்திய சார் மேட்டுக்குடி அரசியல் சக்திகளே. புலிகளின் தேவை இவர்களுக்கு அற்றுப் போனதும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையோடு புலிகளையும் அழித்துவிட்டு இலங்கை அரசோடு கைகோர்த்துக்கொண்டார்கள்.

இதன் மறுபக்கத்தில் உருவான மேல்தட்டு அரசியல் வியாபாரிகளிடையான முரண்பாடு இன்னொரு பகுதியினரை இலங்கை அரசின் ஆதரவாளர்களாக மாற்றிவிட்டிருந்தது. இவர்கள் இருபகுதியினரிடையேயும் உருவான முரண்பாடு என்பது ஒரு வகையான நட்பு முரண்பாடாகவே இன்று காணப்படுகிறது. இவ்வகையான மேட்டுக்குடிகள் இடையேயான முரண்பாடு தெற்காசிய நாடுகள் அனைத்திலும் கண்கூடான ஒன்று.

முஸ்லீம்களது இன்றைய விவாதங்களிலும் இந்த அணிசேர்க்கையைத் தெளிவாகக் காணலாம். இந்த வர்க்க முரண்பாடுகளின் மோதலில் முஸ்லீம்களின் நியாயமான உரிமைகள் குறித்த விவாதம் பந்தாடப்படுகின்றது.

தமிழ்ப் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தன்னாட்சி உரிமை கொண்ட, தனியான கலாச்சரத்தையும் பொருளாதார அடித்தளத்தையும் கொண்ட வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வட-கிழக்குத் தமிழர்களைப் போன்றும், மலையக மக்களைப் போன்றும் இலங்கை அரச பேரினவாத ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனம்.

மனித குலம் அவமானம் கொள்ளும் வகையில் அவர்கள் வடக்கிலிருந்து ஆயுத முனையில் வெளியேற்றப்பட்ட அதே பகுதிகளில் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இலங்கை இராணுவத்தினதும், இராணுவத் துணைக் குழுக்களதும் காலடியில் வாழ்கின்ற மக்கள் மூச்சுவிடுவதற்குக் கூட உரிமை மறுக்கப்படும் நிலையில் முஸ்லீம்கள் குடியேறுவதை நிறுவனமயமாக எதிர்க்கிறார்கள் என்பது கேலிக்குரியது.

கலாச்சாரம் பண்பாடு குறித்த வேறுபாடுகள் மேலெழும் போது அவர்கள் மத்தியிலான முரண்பாடுகள் உருவாவது இயல்பானது. இவற்றை ஆழப்படுத்தி அரசியல் இலாபம் சம்பாதித்துக்கொன்றது யாழ்ப்பாணத்தில் அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருக்கும் மேட்டுக்குடி. இந்த முரண்பாடுகளுக்கு எதிரான சமூகப் பொதுப் புத்தி ஒன்றை உருவாக்க வேண்டியது முன்னோக்கிச் சிந்திக்கும் ஒவ்வொருவரதும் கடமை.

நாகாலாந்து மக்கள் மீதான ஒடுக்குமுறையை நாம் உணர்ந்து கொள்வது போன்று, கஷ்மீரிகளின் வலி எமக்கும் வேதனை தருவது போன்று எமது கொல்லைப்புறத்தில் அவலத்துக்கு உள்ளாக்கப்படும் முஸ்லீம்களின் வலியையும் நாம் உணர்ந்துகொள்ளப் பின் நிற்கக்கூட்டது. இந்த உணர்தலினால் ஏற்படும் புதிய சிந்தனைப் போக்கு பிற்போக்கு அதிகார வர்க்கத்தை எதிர்கொள்ளும் பலம் மிக்க முற்போக்கு அணியைக் கூட உருவாக்கும் அடிப்படையாக அமையலாம்.

இதன் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளத் தவறினால் முஸ்லீம்களுக்கும், வட-கிழக்குத் தமிழர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை ஆழப்படுத்த இலங்கை இந்திய அரச சார்பு மேட்டுக்குடிகள் தயாராகிவிடுவார்கள். பன்நாட்டு மூலதனத்தின் பணபலத்திலும், இலங்கை இந்திய அதிகார வர்க்கங்களின் ஆதரவிலும் இயங்கும் இந்த மேட்டுக்குடிகளின் புதிய எழுச்சியின் இன்னொரு முகம் தான் நமது “புத்திசீவிகள்”.

1915 இல் ஆரம்பித்து சிங்கள உயர்தட்டு வர்க்கத்துடன் கைகோர்த்துக்கொண்டு முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படும் அதே வர்க்கத்தின் அடிப்படைப் பண்பு முரண்பாடுகளைத் தமது வர்க்க நலனுக்குச் சார்பகக் கையாள்தல் என்பதே.

எவ்வாறு ஏகதிபத்திய சார்பு தமிழ் குறுகிய தேசிய வாதம் -விதேசியம்- ஒவ்வோர் சமூகப் பிரச்சனைகளிலும் தமிழ் மக்கள் என்ற பொதுமைப்பாட்டை முன்வைத்ததோ அதே வகையில் வடக்குத் தமிழர்கள் என விழிக்கும் “புத்திசீவிதம்” ஒடுக்கப்படும் பெரும்பான்மையான தமிழர்களை முற்றிலுமாக நிராகரிக்கின்றது.

இந்த அடிப்படையில் வடக்கின் அணிசேர்க்கைகள் குறித்த மேலோட்டமான பார்வையாவது அவசியமாகிறது.

வன்னி இனப்படுகொலையிம் பின்னர், வடக்கில் புதிய மேல்தட்டு வர்க்கம் ஒன்று வேர்விட்டு விருட்சமாக வளர ஆரம்பித்துள்ளது. இவர்கள் அரச அதிகாரிகள், பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் முகவர்கள், நில உடமையாளர்கள் உட்பட பல அதிகார மையங்களைச் சார்ந்தவர்கள். இவர்களின் பின்பலமாக இராணுவம், இராணுவத் துணைக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்றவை செயற்படுகின்றன.

இவர்களின் ஒரு பகுதி முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன்வைக்க இன்னொரு பகுதி தமிழர்களைக் குற்றம் சுமத்துகிறது. தமக்கிடையே நட்பு முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் இவர்கள் ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் பற்றுமிக்க அனைவரும் இவர்களின் எதிரிகள்.

இராணுவத்தினதும் அதன் துணைக் குழுக்களதும் இரும்புக் கரங்களில் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ளைப் பொறுத்தவரை முஸ்லீம் தமிழர்களுக்கு எதிராகக் குரழெழுப்ப வேண்டும் என்று சிந்திப்பதே இயலாத ஒன்று. மூச்சுவிடக் கூட அச்சப்படும் அவர்களைக் குற்றம் சுமத்தும் இராணுவத்தோடு இணைந்து செயற்படும் ஈ.பி.டி.பி என்ற துணைக்குழுவின் ரங்கன் போன்ற உறுப்பினர்கள் தமிழர்களைக் குற்றம் சுமத்துவதன் உள் நோக்கம் புரிந்துகொள்ளத் தக்கது.

ஆக, யாழ்ப்பாணத்தின் அதிகாரத்தைப் புதிதாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ள மேல்தட்டு வர்க்கத்தின் நட்புப் பாராட்டும் உள்முரண்பாட்டின் ஒரு பகுதி முஸ்லீம்களை நோக்கித் தமிழ் மக்களைக் குற்றம் சுமத்த மறுபகுதி தமிழர்கள் என்ற பொதுமைப்பட்ட முகமூடியுடன் முஸ்லீம்களைக் குற்றம் சுமத்துகிறது.

இதேபோன்ற இலங்கை அரச அதிகாரத்தின் வால்களாகத் தொழிற்படும் முஸ்லீம்களின் மேட்டுக்குடி அரசியல் வியாபாரிகளுக்கும் ஒடுக்கப்படும் பெரும்பான்மையான முஸ்லீம் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இருவரது நலன்களும் வேறுபட்டவை.

வன்னி அழிவுகளின் பின்பதாக ஒடுக்கு முறைக்கு எதிராக தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களோடு இணைந்து போராடியிருக்கிறார்கள். இதனால் அச்சம் கொண்ட இலங்கை இந்திய அதிகாரங்களைச் சார்ந்த உயர் தட்டுவர்க்கத்தினர், ஒரு புறத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் மறுபுறத்தில் முஸ்லீம்களை முன்வைத்துத் தமிழர்களுக்கு எதிராகவும் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்த இரு ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு  இடையேயான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தலே இவர்களின் அடிப்படை நோக்கம். இதற்காக ஏகாதிபத்திய தன்னார்வ  நிறுவனங்களும் இலங்கை இந்திய அரச அதிகாரங்களும் பின்னணியில் செயலாற்றத் தயார் நிலையில் உள்ளன.

தமிழர்கள் என்ற முகத்திரைக்குள் மறைந்து கொள்ளும் இந்த இரண்டு பகுதியினரும் இலங்கை அரச பேரினவாதத்தை எதிர்கொள்ளும் சாமன்யர்கள் அல்ல.

இந்த அடிப்படை அணி சேர்க்கைகளை உணர்ந்து கொள்ளும் சமூக உணர்வும் மக்கள் பற்றும் மிக்க அரசியல் சக்திகள் இலங்கை அரச பாசிசத்திற்கு எதிராகவும் அதன் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கு எதிராகவும் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து போராடும் பொது வெளி ஒன்றை உருவாக்குவார்கள். முப்பது வருடப் போராட்டத்திலிருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட மக்கள் கூட்டம் தவறுகளுக்காக அழுது வடித்துக்கொண்டிராது. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும். குண்டுச் சன்னங்களைச் சுமந்த புதிய தலைமுறை புதிய எதிரிகளை உணர்வு பூர்வமாக இனம்கண்டுகொள்ளும்.

Exit mobile version