Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களை அடுப்பில் இருந்து நெருப்பிற்குள் தள்ளியவர்கள் யார்?:வண்ணை கரன்

amirthalingam  நாம் ஒரு பிரச்சினையை ஆராயும் போது, அந்தப் பிரச்சினை ஆரம்பித்த போதிருந்த சூழ்நிலையென்ன, அதன் வளர்ச்சிப் போக்கென்ன, அதன் இன்றைய நிலையென்ன என்பதை வரலாற்று வளர்ச்சியின் ஊடே புரிந்து கொண்டாலே பிரச்சினைக்குரிய தீர்வைக் காண முடியும். கடந்த காலத்தைப் பற்றிப் பேசாது விடுவோம், இன்றைய நிலை பற்றி மட்டுமே கதைப்போம் என்பது எம்மை மேலும் மேலும் சகதிக்குள் தள்ளும் வேலையேயாகும். இதைத் தான் இன்று தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர்.

 முப்பது வருடங்கள் சாத்வீகம் பேசிப் பாராளுமன்றம் சென்று பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் கூடிக் குலாவி, அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்து நின்று, இன்று அதுவும் தோல்வியில் முடிந்ததாகப் பகிரங்கமாக அறிவித்துத் தமது இயலாமையை வெளிப்படுத்திய தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் மக்களை மேய்க்க வந்துள்ளனர். ‘நடந்தெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம்” எனக் கவி பாடுகின்றனர்.

 தாம் கடந்துவந்த பாதை ஏன் தோல்வியுற்றதென்பதை ஆராயத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இல்லை. கடந்து வந்த பாதை பற்றிச் சுயவிமர்சனம் செய்யாமல் உள்நாட்டிற் பிற்போக்குச் சக்திகளுடனும் வெளிநாட்டில் இந்திய ஆளும் வர்க்கத்துடனும் கூடிக் குலாவுகின்றனர். இடதுசாரிகள் செய்த தவறுகளுக்கு அவர்களை மன்னிக்க முடியாதெனக் கூறுபவர்கள் , தாம் செய்த தவறுகளாற் பல இலட்சக் கணக்கில் தமிழர்கள் கொல்லப் பட்டும் இடம் பெயர்ந்து அவலங்களை அனுபவிப்பதற்கும் கோடிக் கணக்கிற் சொத்துக்களை இழப்பதற்கும் பொறுப்பான இந்தத் தேசியவாதிகளது கடந்த காலத்தை மறந்து மன்னித்தருள வேண்டுமாம். இப்போது கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு வடக்கிலே வாக்குக் கேட்க ஆரம்பித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான தமிழ்த் தேசியவாதக் கனவான்களிடம் தமிழ் மக்கள் கேட்கிறார்கள்,ஐயாமாரே உங்கள் மனைவிமார், பிள்ளைகள், குடும்பங்கள் எங்கே உள்ளனர் என்று உண்மையைக் கூறுவீர்களா?

 மலையகத் தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்புக்குத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உடந்தையாய் இருந்த காரணத்தால் அக் கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தனர். ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியினர் கூட்டங்கள் வைத்த போது அக் கூட்டங்கள் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரால் குழப்பட்டன. அன்று தமிழரசுக் கட்சியினரின் கூட்டங்கட்கு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் பாதுகாப்பு வழங்கினர். அதை அவர்கள் மறந்தது தற்செயலானதல்ல. தமிழரசுக் கட்சியும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்களாகிக் கொண்டது தான் காரணம். தமிழ்க் காங்கிரஸ் சைவ மேட்டுக்குடி வேளாள ஆதிக்கக் கட்சி என்றால் தமிழரசு சைவ கிறிஸ்தவ மேட்டுக்குடி வேளாள ஆதிக்கக் கட்சியாகியது. தந்தை, தளபதி, அண்ணன், தம்பி என வேடமணிந்தவர்களாற் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதே மிச்சமாகும்.

 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களம் மட்டும் மசோதாவைப் பாராளுமன்றத்திற் சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விட்ட வேளை, அதை எதிர்த்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி என்பன வாக்களித்தன. அன்று சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வாக்களித்த தமிழ்ப்; பாராளுமன்ற அங்கத்தவர்களிலும் பார்க்கக் கூடுதலான சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர் என்பதை அரசியல் ஆய்வுப் பிரநிதிகள் அறிவார்களா?

 இது ஒரு முக்கிய நிகழ்வு. பாராளுமன்ற இடதுசாரிகள் பிற்காலத்திற் செய்த தவறுகளுக்கு மன்னிக்கவே கூடாதென்பவர்கள் இச் சம்பவத்தைப் பற்றி ஏதும் பேசத் தயாரில்லை. அப்படியான ஒரு நிகழ்வு இடம் பெற்றதாகவே கூறுவதற்கு தயாரில்லை. அன்றைய தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்து அப்போதைய பருத்தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கம்யூனிஸ்ட் தோழர் பொன் கந்தையாவின் காரசாரமான உரையைத் தமிழ்த் தேசியவாத ஆய்வு மரமண்டைகள் ஒரு முறை தானும் வாசித்திருக்குமா?

 தமிழ் மக்களுக்கு அநீதி விளைவித்த பண்டாரநாயக்க அரசாங்கம், அதே வேளை, நாட்டின் சுதந்திரத்தையும் இறமையையும் வலியுறுத்திப் பாதுகாத்த உண்மையை மறுப்பது நியாயமாகாது. அன்று பண்டாரநாயக்க அரசாங்கம் நாட்டிலிருந்த பிரிட்டிஸ் தளங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த போது, அதை எதிர்த்து மாட்சிமை தங்கிய மகாராணியாருக்கு தந்தியடித்த பெருமை தமிழரசுக் கட்சியின் இரும்பு மனிதர் டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதனையே சேரும். தமிழத் தேசியவாதிகள் பிற்போக்காளர் பக்கத்திலும் அந்நியச் சக்திகளின் அடிவருடிகளாகவுமே அன்றிலிருந்து இன்றுவரை செயற்பட்டனர் என்பதற்கு இது ஒரு சான்று. தேசியத் தலைவரெனப்பட்ட பிரபாகரன் கடைசி நேரத்தில் ஒபாமா நிர்வாகம் தம்மைக் காப்பாற்றுமென எதிர்பார்த்தது, இவர்களின் மேற்கத்தைய ஏகாதிபத்திய சார்பு, உயர் வர்க்க நிலைப்பாட்டை அம்பலப் படுத்தியது. பண்டாரநாயக்க ஆட்சியின் போது, பண்டா-செல்வா உடன்படிக்கை செய்யப்பட்டு, எழுதிய மை காய முன்பே தளபதி அமிர்தலிங்கம் சிறீ எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்து ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்கான சூழலை உருவாக்கினார். அதை அப்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த போது ஏற்க மறுத்த அமிர்தலிங்கம், பிற்காலத்தில் ஒப்பந்தம் கிழிக்கப் படுவதற்குத் தானும் ஒரு காரணம் என ஏற்றுக்கொண்டார். அதை எத்தனை தமிழ்த் தேசியவாத ஆய்வாளர்கள் நினைவூட்டத் தயாராக உள்ளனர்?

 பண்டாரநாயக்கவிற்கு எதிராக அவருடைய கட்சிக்குள் புத்தரக்கித்த தேரோ, விமலா விஜயவர்தன போன்றோர் செயற்பட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தைச் செய்ததன் காரணமாகத் தமிழரசுக் கட்சியினர் தனக்கு ஆதரவளிப்பார்களென பண்டாரநாயக்க எதிர்பார்த்தார். ஆனாற் தமிழரசுக் கட்சியினரோ, பண்டாரநாயக்க அரசுக்கு ஆதரவளித்து ஒப்பந்தத்தை அமுல் நடாத்துவதற்குப் பதிலாக, அவருக்குத் தொந்தரவு கொடுத்தனர். யூ.என்.பியினர் ஜே.ஆர். தலைமையில் கண்டி யாத்திரை மேற்கொண்டனர். அந்தப் பாதயாத்திரையை இம்புலகொடவில் எஸ்.டி. பண்டாரநாயக்க முறியடித்தார் என்ற போதும், தமிழரசுக் கட்சியின் ஆதரவு கிடைக்காததாலும் பண்டாரநாயக்க ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார் என்பது மற்றொரு மறைக்கப்படும் பக்கமாகும். பண்டா-செல்வா ஒப்பந்தம் அமுலாகியிருந்தாற், பிற்காலத்தில் இடம்பெற்ற குடியேற்றத் திட்டங்களைத் தடுத்திருக்கலாம். ஏன் வட-கிழக்கு இணைப்பிற்கும் அவ் ஒப்பந்தத்தில் ஏற்பாடு இருந்தது. அதை விட, லட்சக் கணக்கான உயிர்களைப் பாதுகாத்திருக்கலாம். இடப் பெயர்வுகளைத் தடுத்திருக்கலாம். ஆனாற் தெற்கின் பேரினவாதிகளும் வடக்கு-கிழக்கின் தமிழ்க் குறுந் தேசியவாதிகளும் அதற்கு வழிவிடவில்லை. பண்டா-செல்வா ஒப்பந்த விடயத்திற் தமிழரசுக் கட்சியில் அமிர்தலிங்கம் தலைமையிற் செயற்பட்ட ஒரு பகுதியினரின் அதி தீவிர நடவடிக்கையின் விளைவால் நாம் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தோம். அவற்றிற்காகத் தமிழ்த் தேசியவாதிகளை மன்னிக்கலாமா என்பதை எதிர்காலத் தமிழ் இளந் தலைமுறையினர் தான் முடிவுசெய்ய வேண்டியவர்களாவர்.

 பண்டாரநாயக்க ஆட்சியின் போது மேற்கொண்ட முற்போக்கு நடவடிக்கைகளை எல்லாம் மேட்டுக்குடி உயர்வரக்கப் பிரதிநிதிகளான தமிழரசுக் கட்சியினர் எதிர்த்து வந்தனர். பண்டாரநாயக்க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட சட்டங்களுள் நெற்காணி மசோதாவும் ஒன்று. அதையுந் தமிழரசுக் கட்சியினர் எதிர்த்தனர். நெற்காணிச் சட்டம் முழுமையாக அமுற் படுத்தப்பட்டிருந்தால் குடியேற்றத் திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டிராது. விவசாயிகளைக் காணிகளிலிருந்து வெளியேற்றுவதை அச் சட்டம் தடைசெய்தது. ஏழை விவசாயிகள் நன்மை பெறக் கூடியதாக இருந்தது.

 பண்டாரநாயக்கவின் அரசியலிற் பங்கேற்று ஒப்பந்தத்தை அமுல் நடத்தாதவர்கள் பிற்காலத்தில் டட்லியுடன் ஒப்பந்தம் செய்து அவரின் அமைச்சரவையில் உள்ளுராட்சி அமைச்சர் பதவியை மு. திருச்செல்வத்திற்கு வாங்கிக் கொடுத்தனர். எவ்வாறாயினும் வட-கிழக்கில் மலசல கூடங்களைத் தானும் அவர்களால் கட்ட முடியவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் தமது வர்க்க நிலைக்கு அமைவாகப் பிற்போக்கு அரசியல்வாதிகளின் பின்னாலேயே சென்றதற்கான இவ் உதாரணங்கள் வரலாற்றில் என்றும் இருந்து வரவே செய்யும்.

Exit mobile version