Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் மக்களின் தலைவிதியை யார் தீர்மானிப்பது?:வெகுஜனன்

8520தமிழ் மக்கள் இன்று சகல நிலைகளிலும் அவலங்களுக்குள்ளாகிச் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். உயிரழிவுகள், இடப் பெயர்வுகள், சொத்தழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்ட பல்வகை இழப்புகளின் மத்தியில் நிர்க்கதியான வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். கடந்த முப்பது வருட பேரினவாத யுத்தமும் ஆயுதம் தாங்கிய போராட்டமும் தமிழ் மக்களின் வாழ்வையும் வளங்களையும் பாழ்படுத்திவிட்டன. அத்துடன் 5 /19இன் இறுதிப் போர்க்களத்தில் பேரினவாத ஒடுக்குமுறையாளர்களுக்குக் கிடைத்த வெற்றியும், தங்களை விட எவரும் இல்லை எனப் போராடி நின்ற புலிகள் இயக்கத்தின் தோல்வியும் அழிவும் மூன்று லட்சம் வரையான தமிழ் மக்களை முட்கம்பிவேலி முகாங்களுக்குள் தள்ளியது. அதே வேளை, முப்பதினாயிரம் முதல் ஐம்பதினாயிரம் வரையான மக்கள் இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் ஆங்காங்கே வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரையான முப்பது வருட யுத்தம், போராட்டம் என்பனவற்றாற் குத்துமதிப்பாக இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். பலநூறு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப் பட்டுள்ளன. உள்நாட்டில் ஐந்து லட்சம் மக்கள்வரை அகதிகளாகினர். பத்து லட்சம் வரையானோர் புலம் பெயர்ந்தது அயல் நாடுகளைச்; சென்றடைந்தனர். சொந்த மண்ணில் இறுதிவரை வாழ்ந்து வந்த மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களைச் சுமந்த வண்ணம் நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வடக்கு-கிழக்கின் ஒவ்வொரு தமிழ் மனிதருக்குப் பின்னாலும் ஒரு நீண்ட சோக வரலாறு படிந்திருப்பதைக் காணலாம்.

இத்தகைய வரலாற்று அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் சின்னாபின்னப் பட்டிருப்பதற்கும் யார் காரணகர்த்தாக்கள்? மூன்று தரப்பினரே இவை அனைத்திற்கும் காரண கர்த்தாக்களும் பொறுப்புடையோரும் ஆவர். முதலாவது தரப்பாக இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமே இருந்து வந்திருக்கிறது. இரண்டாவது தரப்பாக தமிழ்க் குறுந் தேசியவாதத் தலைமைகள் பாராளுமன்றத் தளத்திலும் ஆயுதப் போராட்டத் தளத்திலும் இருந்து வந்துள்ளனர். மூன்றாவதாக, இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகள் ஒருபுறமாகவும் அமெரிக்க மேற்குலக மேலாதிக்க சக்திகள் மறுபுறமாகவும் இருந்து யுத்தம்-போராட்டம் என்பனவற்றுக்கு எண்ணெய் வார் த்து அப் பெருநெருப்பில் குளிர்காய்ந்து தத்தமது நலன்களைப் பாதுகாத்து விரிவு படுத்தியும் கொண்டனர்.

இம் மூன்று தரப்பினரதும் அரசியல் பொருளாதார ராணுவ காய்நகர்த்தல்களுக்கும் ஏமாற்றுகளுக்கும் தமிழ் மக்கள் பலியாகினர். வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளையும் இருப்பையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் நோக்குடனேயே பேரினவாத ஆளும் வர்க்க சக்திகள் ஆட்சியதிகாரத்தின் மூலமாகத் தொடர்ச்சியாக ஒடுக்குமுறையைப் பிரயோகித்து வந்துள்ளன. அதனை உரிய அரசியல் கொள்கை நிலைநின்றும் சரியான போராட்ட தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியும் பரந்துபட்ட வெகுஜனப் போராட்ட மார்க்கத்தை தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் முன்னெடுக்கவில்லை. அதே சூழலை இந்தியாவும் அமெரிக்க மேற்குலக சக்திகளும் தத்தமது வல்லரசு நலன்களுக்குப் பயன்படுத்திக் கொண்டன. இவற்றின் ஒட்டுமொத்த விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்து நிற்பது மட்டுமன்றி திக்குத் தெரியாத அரசியல் வனாந்தரத்திலும் விடப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எதிர்காலமே இருள் சூழ்ந்துள்ள அந்தகார நிலையில், தமிழ் மக்களின் தலைவிதியை யார் தீர்மானிப்பது என்றதொரு பாரிய கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இக் கேள்விக்கு உரிய சரியான விடையைக் கண்டறியும் பொறுப்பும் தேவையும் சாதாரண உழைக்கும் மக்களான பரந்துபட்ட தமிழ் மக்களிடமே உண்டு. தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுதொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் எனும் பரந்த தளத்தில் உள்ள மக்கள் தான் தமது தலைவிதியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். கடந்த காலங்களில் தொடரப்பட்டு வந்த தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் பிற்போக்குத்தனங்கள் பற்றிய மறுமதிப்பீட்டையும் விமர்சனத்தையும் அவர்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். திறந்த மனதுடனான அரசியல் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு ஆரம்பத்தில் குறிப்பிட்ட மூன்று தரப்புச் சக்திகள் பற்றிய அரசியல் உரையாடல்கள் விவாதிக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சி பற்றியும் அவற்றின் கொள்கைகள் தலைமைகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றியெல்லாம் மக்கள் மன்றத்தில் சுதந்திரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு விசாரிக்கப்படல் வேண்டும். அதன் மூலம் சரிபிழைகள் மக்களால் தீர்மானிக்கப்பட முடியும். தமிழ் மக்களின் இன்றைய அவலவாழ்வில் இருந்து விடுபடவும் எதிர்காலத்திற்கான சரியான அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணம் மேற் கொள்ளவும் இதனை விட வேறு மார்க்கம் இல்லை.

எதிர்காலத்திற்குரிய அத்தகையதொரு ஆரோக்கியமான அரசியற் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் முன்வரமாட்டார்கள். ஏனெனில் எல்லோரும் அரசியல் இரத்தக்கறை படிந்த கரங்களுடன் இருந்து வருவது தான். அவர்களிடம் அரசியல் மனச்சாட்சி இருக்கப் போவதும் இல்லை. தமது கறைகளையும் தவறுகளையும் ஏமாற்றுக்களையும் இயலாமைகளையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி மனம் திறந்த கலந்துரையாடல்களுக்கு வரத் தயாராக இல்லை என்பதையே காண முடிகிறது. தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், முன்னாள் ஆயுத இயக்கங்கள் யாவும் தத்தமது பழைமைவாதப் பிற்போக்குத் தனங்கள் கொண்ட தமிழ்த் தேசியவாத ஆதிக்க அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விடுபடத் தயாராக இல்லை. முற்போக்கான ஒரு தேசியவாத அரசியலைக் கூட முன்னெடுக்க அவர்கள் முன்வரமாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவாக இருப்பது அடுத்து வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலாகவே உள்ளது. இன்றைய பேரவலச் சூழலுக்குள் சிக்கியிருக்கும் மக்களை இந்தியாவினதும் மேற்குலகத்தினதும் அழுத்தங்களின் ஊடாக விடுவித்து வைத்தால் அதுவே தமது பழிபாதங்களுக்கான பாவமன்னிப்பாகி விடும் என்ற நம்பிக்கையிலேயே இருந்து வருகிறார்கள்.

5 /19இல் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதில் மேலே குறிப்பிட்ட அத்தனை தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கும் மனமார்ந்த திருப்தியேயாகும். அதன் ஊடாகத் தமது பாராளுமன்றப் பதவிகளுக்கு சற்றுப் பின்னடைவு ஏற்பட்டாலும் அதனை மீட்டெடுப்பதற்கான உள்ளார்ந்த உபாயங்களுடனேயே இத்தலைமைகள் காத்திருக்கின்றன. அதன் வழியிலேயே இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களை அடைவு வைப்பதற்கு எவ்வித வெட்க ரோசமும் இன்றி கெஞ்சி வருகிறார்கள்.

இவ்விடத்திலே தான் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் புதியதோர் அரசியல் விழிப்புணர்வு உருவாக வேண்டும். அரசாங்கத்துடன் இணங்கிப் போகவும் முடியாது. பழைய தமிழ்த் தலைமைகளை நம்பி ஏமாறவும் முடியாது என்ற நிலையில் தமக்கான அரசியல் தலைவிதியைத் தமிழ் மக்கள் தாமே தீர்மானிப்பதற்கு முன்வரல் வேண்டும். கடந்து வந்த அழிவுகளையும் இழப்புக்களையும் இழிவுகளையும் பட்டறிவாகக் கொண்டு புதிய அரசியல் திடசங்கற்பத்துடன் தமிழ் மக்கள் பயணிக்கத் தயாராக வேண்டும். இத்துணைக்கும் மத்தியில் இந்த மண்ணில் மனவைராக்கியத்துடன் இருந்து வந்த மக்கள் தான் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான உரிமையும் உறுதியும் இம்மக்களிடம் தான் இருக்க வேண்டும். இதனைத் தட்டிப்பறித்து பழைய பாதையில் பயணிக்க திட்டமிட்டு வரும் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளை தமிழ் மக்கள் நிராகரித்து நிற்க வேண்டும். இந்தியாவையும் அமெரிக்க மேற்குலகத்தையும் அடிமைத்தனமாக நம்பும் போக்குத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அப்பாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து வரும் தமிழ் மேட்டுக்குடி உயர் வர்க்கத் தமிழர்கள் எறிந்து கொள்ளும் எத்தகைய கயிற்றையும் இலங்கைத் தமிழர்கள் பற்றிக் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அவர்களது புதுப்பாட்டு அவர்களது பிழைப்பிற்கும் இருப்பிற்குமே அன்றி மண்ணில் வாழ்ந்து வரும் மக்களின் உரிமைகளை மீட்பதற்காக அல்ல. இத்தகைய புலம்பெயர்ந்த தமிழ்ச் சீமான்களும் சீமாட்டிகளும் தமது வர்க்க மேம்பாட்டிற்காக என்றோ நாடு கடந்துவிட்டார்கள். நமது மண்ணில் இருந்து வேர்களை அறுத்துச்சென்ற அவர்களுக்கு எமது மக்களின் உணர்வுகள் புரியாது. தமிழ் மொழி கூட ஒழுங்காகப் பேச வராது. இத்தகைய ‘டமில்” கனவான்களின் வெட்டி வீண் பேச்சுக்கள் எமது மக்களுக்கு உரிமைகளைக் கொண்டு வந்துவிடாதது மட்டுமன்றி எமக்கு மேலும் ஆபத்துக்களை அபாயங்களையும் அவலங்களையுமே மேன்மேலும் தேடித்தர வல்லனவாகும்.

அமெரிக்க மேற்குலக ஆதரவோடு தமிழீழம் அமைக்கப் புறப்பட்டு அழிவுக்குள்ளாகிய கொள்கைக்கு வழிகாட்டியவர்கள் 5 /19க்குப்பின் நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி அறிக்கை விட்டு வருகிறார்கள். இது கொசோவோ வழியில் அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்ட இஸ்ரேல் வழியிலேயே கூறப்பட்டும் வருகிறது. இதனைத் தமிழ் மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்?

எனவே வடக்கு-கிழக்குத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சிக் கோரிக்கையை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வென்றெடுக்க முன்வந்து அதற்கான பரந்துபட்ட வெகுஜனப் போராட்டப்பாதையில் அணிதிரள வேண்டும். அதன் பாதையில் மட்டுமே தமிழ் மக்கள் தமது எதிர்காலத்தை வென்றெடுத்து அடிப்படை வாழ்வுரிமைகளை நிலைநாட்ட முடியும். அதற்கான கொள்கைகளையும் பொது வேலைத்திட்டங்களையும் உருவாக்க வேண்டும். அதுவே இன்றைய தேவையும் அவசியமுமாகும்.

Exit mobile version