” தென்னாசியச் சமுதாயங்கள் சார்ந்தெழுந்த கருத்து நிலைகள்
ஈழத் தமிழர்களின் வரலாறென்பது அவர்களது தொடர்ச்சியான குடிப்பரம்பலாலும்,மானுட வர்க்கப் போராட்டங்களாலும் மிக யதார்த்தமாகப் பதியப்பட்டிருக்கவேண்டும்.ஆனால்,ஈழத் தமிழர்கள் பொத்தாம் பொதுவாகத் தமிழ்ச் சமுதாயமென்றழைக்கும் தகுதியைத் தமது இழி நிலைகளால் இழந்தர்ர்கள்.இது ஒரு மொழி பேசும் மக்கள் தொகுதிக்குள் இயல்பானதாக இருக்கவில்லை.ஒத்த மக்கள்தம்மை ஒருவகையொடுக்குமுறைக்குள் வற்புறுத்தி வெற்றி கொண்டது பொருள் சார்ந்த நலன்களை அவர்களோடு பங்கீடு செய்யாதிருப்பதற்காகவென்பதை, நாம் வெறும் பொருளாதார நலன்களுக்குள்மட்டும் குறுக்கிவிடமுடியாது.
அங்கே , “பண்பாட்டுத் தளத்தில் பாரிய பார்ப்பன நெருக்குதல் மனிதப் பண்பையே சாகடித்திருக்கிறது.அரியரெத்தினத்தை அரியம் என்பதும்,கந்தசாமியை கந்தன் என்ற பதிவுகளும்-கந்தன் தோட்டஞ் செய்தான் என்று பாடத்தில் எழுவாய் பயனிலை கற்பிக்கப்பட்டதும்” நாம் அறிந்ததுதாம்.
வரலாற்றைச் செம்மையாகக் குறித்துவிட முடியாது.ஆனால் , அங்ஙனம் முனையும்போது மிகத் தெளிவாகச் சில வரையறைகளையும் நாம் செய்து கொள்வது அவசியமாகிவிடும்.ஏனெனில், மனிதர்கள் வர்க்கமாக பொருள்களைக் கவர்ந்து தமது வாழ்வைக் கட்டிவைத்திருக்கும் தருணத்தில் ஒவ்வொரு வர்க்கமும் தத்தமது வர்க்கத் தளத்திலிருந்து மற்றையத் தளத்திற்குக் கல் வீசுவது இதுவரை நாம் காணும் தொடர்ச்சிதாம்.
இக்கட்டுரையே,தீபம் தொலைக்காட்சி”கேள்வி நேரம்”உரையாடலில் கீரன் முன்வைக்கும் அல்லது அவர் குரலூடாக முன் தள்ளப்படும் ஒரு வரலாற்றுப் பழி குறித்தான பார்வையை எப்படிப் புரிவதென்ற முயற்சின் நறுக்கே!
“சாதியம்-தீண்டாமை” எனும் கருத்துப் பிரிப்பில்(சமூக உளவியல்) இயகப்பாட்டை மனோவியற்றளத்தில் பண்பாட்டு ரீதியாகப் புரிய வற்புறுத்துகிறார்.அவ்வளவு இலகுவாக இதைப் புரிவது கஷ்டமான காரியம்.எனினும்,முழுமொத்தமிழ்பேசும் மக்கள் மீதான இனவாத ஒடுக்குமுறை நிகழும் ஒரு நாட்டில் இதை எதிர்கொள்வது எப்படி?என்ற சிக்கலை எல்லோரும்தட்டிக்கழித்துப் புரட்சி பேசுகிறோம்.பண்பாட்டு இடைவெளிகள் பூர்ஷ்சுவாக் கருத்தாக்களது வழியுள் அவர்களது நலன்களைத் தக்கவைக்கும் முயற்சியில் அது நிலைபெறத் தொடங்கும்போது எஞ்சியது பூர்ஷ்சுவாப் பண்பாட்டு ஒடுக்குமுறைதானே?
ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை-குறிப்பாக யாழ்பாணச் சமூக அமைப்பின் அரசியல் தன்மை இயல்பு,வர்க்கப் பிளவுகள்,முதலியவற்றை ஒருவர் தனக்குக் கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்ய முனைதல் இதுவரை சாத்தியமாகி வருகிறது.இது மிக ஆபத்தானது.இந்த முயற்சி நம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பது இன்றைய மெய்ப்பாடு.ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிக் கற்றுக் கொள்வோரையும்,அவர்கள் மத்தில் அரசியல் வேலைகளைச் செய்பவர்களையும் உண்மையை அறியுமாறு இன்றுவரை தூண்டும் ஒரு அரசியல் சமூக விஞ்ஞானத் தூண்டலில் இத்தகைய கீரன் போன்றவரது கருத்துக்கள் எப்பவுமே தட்டிக்கழிக்க முடியாதவை.
ஆனால்,இக் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் முன்வைக்கும் சாதியப் பிரச்சனைகள் அவ்வளவு இலகுவா நீர்த்துப் போக முடியாதவை என்றே நான் கருதுகிறேன்.
தனித் தமிழ்அரசு-ஆளுதல்:
“ஆண்ட பரம்பரை ஆளத் துடிக்குது”
இந்தச் சமூக உளவியலையுடைத்துப் புரியும்போது சில நூற்றாண்டாக மூன்றாம் உலகத்தில் நிலவிய காலனித்துவக் கட்டத்தைக் குறித்துச் சில புரிதலுக்கு வந்தாக வேண்டும்.காலனித்துவ வாதிகளது கருத்தாளுமையானது
தமிழ்ச் சமுதாயம் தன்னைத்தான் ஆளுவதற்குத் தகுதியற்றதென்ற தந்திரோபாயத்தோடு-அந்நியர்களால்- இதுவரை வரலாறுற்று ரீதியாக ஒடுக்கப்பட்டு,தனக்குள்ளேயே அது உள்ளியல்புக் காலனித்துவப் பண்புகளை கொண்டிருக்கிறது.இத்தைய உள்ளகக் காலனியத் தொடர்ச்சியின் வழியாகவாவது தமிழ் மேட்டுக் குடியின் ஆளும் மனவிருப்புப் “பூர்த்தியாகும் மனநிறைவு” தொடர்ந்து தனக்குள் மெலியவர்களைக் கொத்தடிமையாக்குவதில் ஒருவித ஆளுமை வெளிப்பாடாக உருப் பெற்றிருக்க வாய்ப்புகள் வரலாற்றில் அதிகமாகவே தென்படுகிறது.இதைத் திட்டமிடப்பட்ட ஆய்வுகளின் வழி நிறுவது கடினமாயினும்,மனோவியற் புரிதலில் வெட்ட வெளிச்சமாக வகுத்துக்கொள்ள முடியும்.
தனியுடமைச்சமுதாயத்ததுள்,நிலவுகின்ற பொருளாதார அமைப்புக்கேற்ற நலன்களும்,அதையொட்டிய ஒடுக்கு முறைகளும் அரசியல் அதிகாரம் என்பதற்கு ஒரு அவசியமான தேவையாகும்.அதன் தொடர்ச்சியுள்தாம் வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பதிவதும்,கூடியவரை-சாத்தியமானவரை விஞ்ஞான ப+ர்வமாகப் புரிவதும் நேரிடும்.ஆனால், அந்த அதிகாரத்தை மக்கள் தொகுதியிலுள்ள எந்த வர்க்கம் கைப்பற்றுகிறதென்ற போக்கில்தாம் அது உண்மையாகத் திரிவின்றியுள்ளதாவென்று தீர்மானிக்க முடியும்.நமது சாபக்கேடு நாம் அதிகாரத்தை வெறும் மொழிசார்ந்த மதிப்பீடுகளால் போட்டுக் குழப்பி எமது மக்களை இணைக்க விரும்புகிறோம்.அங்கே, தமிழ் மக்களைச் சாகடித்து,அவர்கள்தம் வரலாற்றையே தாம் விரும்பும்போக்கில் சிதைத்தவர்கள் நமது வீரதீரத் தலைமைகளும் அவர்கள் வழி சிந்தித்த புத்திசீவிகளும்தாம்.
காலனித்துவத்துக்குப் பின்பான நவ காலனித்துவ-பல் தேசிய மயக் காலகட்டத்து இந்த அமைப்பைத் தூக்கி நிறுத்தும் கருத்தியல் தளத்தை முன்னெடுக்கும் நிறுவனங்கள், மிகப் பெரும் பலம் பொருந்திய தளத்தை நமக்குள் பண்பாட்டு ரீதியாகவும்,அறிவியல் ரீதியாகவும்,சமூகவுளவியற்றளத்திலும் மிக ஆழமாகவ+ன்ற வைத்துள்ளன. இவற்றைக் கடந்து நாம் இந்தப் பாழ் வரலாற்றை விடுவிப்பது என்பதைவிட புதிய பாட்டாளிய வர்க்கப்பண்பாட்டை,பன்மைத்துவ சிறு அடையாளங்களை,பொருந்தாத் தன்மையிலான சிறு சமூக அமுக்கக் குழுமங்களாக உருவுறும் வேறுபாடுகளை இணைக்கும் பண்பாட்டைப் படைப்பவர்களாக ஒருமைப்பட வேண்டும்.
ஏனெனில் , வரலாற்றைப்படைப்பவர்கள் உழைக்கின்ற மக்கள் கூட்டம்தாம்.அவர்கள் இந்தியப் பார்ப்பனப் பண்பாட்டு ஒடுக்குமுறைக்குப் பலியாகும் சாதிய வேறுபாடுகளால் பிளவுண்டு போகமுடியாது.கீரன் இத்தகைய பிளவை மிக வன்மமாக வற் புறுத்துகிறார்.இதற்குப் “பாகிஸ்த்தானைப் பிரித்தது ஜின்னாதாமென”ப் புலம்பித் தனது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்.அகண்ட பாரதம்,ஆபத்தானதெனக்கொள்ளும் நவ காலனித்துவம் இப்படி, காந்தி-ஜின்னா வழியூடாக வேறு வரலாற்றைச் சொல்ல வைத்திருக்கிறது.அதை,வாந்தியெடுப்பது அனைவருக்குமான விடுதலையைத் தந்துவிடப் போவதில்லை!
பாண்பாட்டு ஒடுக்குமுறை வரலாறு:
வரலாறென்பதைத் தனிநபர் திருத்தலாக்கிவிட முடியாது இல்லையா கீரன்?
அங்ஙனஞ் செய்யப்பட்ட சிங்கள வரலாற்றுப் புனைவுகளின் இன்றைய இழி நிலையை நாம் ஆளும் வர்க்கத்தின் குருதி தோய்ந்து பற்களினூடாகப் பல்லிளிப்பதைக் காணமுடியும்.எனவே, புனைவுகள்,புரட்டல்களைப் பண்டுதொட்டுச் செய்த வரலாற்றுக் காரணங்கள்,தேவைகள் இன்றும் நிலவுவதை இனம் காண்பதே சாலச் சிறந்தது.அதையொட்டியே பாரிய அறிவுத் தேடலையும்,குறிப்புகளையும் சமூகப் பொறுப்போடு செய்யவேண்டும்.சாதியத்தை வேரறுப்பதற்கான முதற்படி இங்கிருந்துதாம் தொடங்க முடியும்(இதைவிட்டு இனவாதத்துக்கு எதிரான எழிச்சியைப் போராட்டத்தைக் கூறுபோடுவது அல்ல என்பதையும் இதில் புரிந்தாகவேண்டும்!.
அங்ஙனம் செய்யாத நிலையை எய்வதற்காக தமிழ்ச் சமூகத்தின்உரிமைகளைச் சிதைக்கும் காரியத்தில் புலம்பெயர் தலித்துவக் குறுக்கல் வாதம் தொடர்ந்து தன்னை விருத்திக்கிட்டுச் செல்கிறது.இதைக் கீரன்போன்ற இலங்கைச் சிங்கள அரசுக்குப் பலிபோன கடாக்களது வழி புரியும்போது,இவர்கள் குறுக்கே நின்று தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய உரிமை மீது கல்லெறிவதைக் குறித்து விவாதிக்க முடியுமேயொழிய இவர்களிடமிருந்து உழைக்கும் மக்களது வரலாற்றை விடுவிப்பதென்பது மிகை மதிப்பீடு.
ஒவ்வொரு அரசியல் முன்னெடுப்பிலும்-போராட்டப் பாதையிலும் முதலில் புரியப்பட வேண்டிய அரசியலறிவானது நாம் யார்?எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.இங்கே வர்க்க ஒடுக்குமுறை எந்தத் தளத்தில்,எப்படி நிகழ்வதென்பதே!
இதைக்கடந்த எந்த உறவுகளும் மானுட சமூகத்துள் நிலவ முடியாதென்பதற்கு இன்றைய பெரு மூலதன நகர்வில் ஐரோப்பிய அரசுகள் செய்யும் லிபியா மீதான அழிவு யுத்தம் நல்ல உதாரணமாக முடியும்.இதையுங் கடந்து “கிரேக்க அரசுமீது சுமத்தும் அழுத்தம், கிரேக்க உழைக்கும் வர்க்கத்தின் மீதான அதீத ஒடுக்குமுறையை ஜேர்மனிய டொச்சு வங்கி பிரேரிக்கும்போது” அந்தப் பிரேரணையை ஜேர்மனிய அரசு தனது நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளடக்கிறது.இவையெல்லாம் வர்க்கங் கடந்த அரசியலை வற்புறத்தவில்லை.இதைக்கடந்து தலித்துவ அரசியலைப் புரிந்து கொள்வதில் வரலாற்று ஒடுக்குமுறையென்பதை முன் நிறுத்துவதில் தமிழ்ச் சமுதாயத்தில் சமூக வளர்ச்சி-சிதைவுகுறித்த புரிதல் கவனித்தில் இருத்தப்படாது தட்டிக் கழிக்கப்படுவதன் உள் நோக்கம் என்னவாக்க இருக்கமுடியும்?
தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் பிரச்சனை,அது குறித்து”ஆய்வு”ரீதியான உரையாடலுள்”சாதியம் இருக்கிறது-தீண்டாமை விலகுகிறது”என்ற புள்ளியில் மீளவும் தமிழ்ச் சமுதாயத்திள் மொத்த சமூக வளர்ச்சிக் கட்டங்கள் குறித்துச் சரியான புரிதலை மறுப்பதில் முழுமொத்த இந்தியத் துணைக்கண்டத்தில் நிலவும் சாதியவொடுக்குமுறையைத் தமிழ் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிறுத்துகிறார்.யாழ்ப்பாணம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிதியீடாகும் ஒரு குறு நிலப்பரப்பு.அதைத் தாண்டிய சாதியவொடுக்குமுறை முழுமொத்தத் தென்னாசிய இனக் குழுமங்களுக்குள்-தேசிய இனங்களுக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தப்படும் பண்பாட்டின்மீது வைக்கவேண்டியதும்,அந்தப் பண்பாட்டைத் தூக்கி நிறுத்தும் பொருளாதாரத்தைக் கேள்விக்குட்படுத்தாது,ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் கீரனது அறிவின்மீது ஆணி அடிப்பதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?
சாதியத்தின்மீத கீரனது பார்வையை இந்தியாவுக்குள்ளும்,சிங்களச் சமுதாய அமைப்புக்குள்ளும் பொதுமைப்படுத்திப் பார்த்தோமானால்
கீரன் சிறுபிள்ளைத் தனமாகவும், அப்பாவித்தனமாகுவம் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுக்க அல்லது அதை நியாயப்படுத்த முனைந்து தனது அறிவிலப் புலம்பலை முழுமொத்த தமிழ்பேசும் மக்களுக்கெதிராகச் செய்து சிங்கள இனவாத முன்னெடுப்புகளைத் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்.
யாருக்கு யார் குரலிடுவது?:
யாரு யாருக்குக் குரல் கொடுப்பது,யாருடைய குரலைப் பதிவிடுவது?
பாடசாலைகளில், இலங்கை மாணவர்கள் கற்கும் வரலாற்றுக் கல்வி உண்மையில் வர்க்கஞ் சாராத முழுமொத்த மக்களின் வாழ்வியற் தொடர்ச்சிகளைப் பதிந்துள்ளதா? இந்தக் கல்வியைக் கையில் வைத்திருக்கும் இலங்கை அரசு குறித்தும், அதன் சாதியப் பிளவு அரசியல் குறித்தும் கண்டிய-கரையோரச் சங்களச் சமுதாயத்தின் சாதிய வேறுபாட்டிலிருந்து புரிவதும் அவசியமில்லையா?கொய்கமச் சாதியத்தின் வரலாறு என்ன?அதன் பொருளாதார ஆதிக்க நலன்கள் எவையாக இருக்கின்றன கீரன்?
அதிகாரத்தை நிலைப்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த எடுத்த-எடுக்கும் முயற்சி யாருக்கு எதிரானது?யாரை ஒடுக்கிய இராணுவ முன்னெடுப்புகளை வரலாற்றுப்படமாகவுள்ளது?போர் வரலாறு என்றும் முழுமொத்த மக்களையும் சார்ந்த வரலாறாக இருப்பதில்லை(வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது-மார்க்ஸ் (The history of all hitherto existing Society is the history of Class Struggles).அஃது, தொடர் வருத்தல்களை ஒரு இனத்துக்குள்ளேயே வற்புறுத்தி அந்த இனத்துள் கணிசமானவர்களையொடுக்கி வருவது. வரலாற்றில் இயங்கும் சக்திகளைச் சரியான வர்க்கப்பார்வையின்றி மதிப்பீடு செய்வது கும்பல்ல கோவிந்தாப்போடுவதாக இருக்கும்.இதுதாம் சொல்கிறது நமது தேசயவாதம் “தற்காப்புத் தேசியவாதம்”என்று.
இப்படியும்,இதற்கு மேலும் அது கடைவிரிக்கும்.ஆனால்சிங்களப் பேரனவாதத்தையும் அதன் வரலாற்றுப் புரட்டுக்களையும் மறுத்துப் பேசும் தகுதியைத் தமிழ் அறிவாளிகள் இழந்ததென்பது சிங்கள அதிகாரத்தால் அல்ல.அது திட்டமிட்ட தமிழ்வரலாற்றுக் குருடாகளால் முன்னெடுக்கப்பட்டதும்,அதைப் பிழைப்புக்காக அரசியலாக்கிய அந்தப் பெருங்குடிப் பிறப்புக்களாலுமே.
என்றைக்குமே ஆதிக்கத்தை நிலைப்படுத்துபவர்களின் ஊடகங்களும்,அவர்களின் பரபலங்களும் தம்மிலும் கீழானவர்களுக்கு எந்த வகை உதவிகளைச் செய்துள்ளார்கள்?
சாதியத்தை; துடைத்தெறியும்-சமூக மேம்பாடு என்ற திசைக்கும் நிலவும் மறைமுகமான அவமானப்படுத்தல்கள்-தொடர்ந்தும் சாதியத்தை நிலைப்படுத்தும் அடையாளங்கள் யாவும் ஒரு முனையில் இன்னொரு வகை அகவொடுக்குமுறையைச் செய்கிறதேயொழிய பண்பாட்டு மாற்றத்தைக்கோரவில்லை!அத்தகைய நிலையில்,தொடர்ந்தும் அவர்களது கால்களில் விழுந்தொழும்வுவதற்கான தளங்களையும்,வலைகளையும் உதவி-மனிதாபிமானம் என்ற முகமூடிக்குள் ஒழிந்தாற்றும் கபடம் அறியத் தக்கதுதாமே?
இதிலிருந்து தலித்துவக் கோரிக்கைகளைப் பிரித்துப் பார்க்க முடியுமா?
இத்தகைய ஒடுக்குமுறையாளர்களிடம் எந்தச்”சாதகம்-பாதகம்”என்ற அளவுகோல் முன்னிலைப்படும்?அதென்ன அவர்களுக்கிருக்கும் உரிமை?தமது எஜமானர்களுக்கு வாலாட்டும் உரிமையா?அந்த உரிமைக்குள் இருக்கும் நரித்தனம் இன்னொரு இனத்தின் விடுதலையைக் குழி தோண்டிப் புதைக்குமானால் அதைக் குறித்து என்ன வகைமாதிரியான அணுகு முறையை நாம் செய்யவேண்டும்?.
பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும் மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச் சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப் பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா? இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை அழித்தனர்?
ஆளும் வர்க்கக் கருத்தியல் தளத்தில் நிற்கும் கீரன்-தேவதாசன் போன்றோரிடம்இவற்றைக் குறித்த புரிதல்கள் இல்லாமலா இருக்கும்?அல்லது மறந்துவிடுகிறார்களென்றோ கூறுவதற்கில்லை!
ஒவ்வொரு வர்க்கமும் தன் தன் வர்க்க நலனுக்குச் சாதிய நலனுக்கொப்பவே காரியமாற்றும்.இது அனைத்து மக்கள் கூட்டத்திடமும் நிலவும் விஷயம்.இதை இப்படியும் பார்க்கலாம்.ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம் ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப் பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள் என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப் புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும் இருப்பவர்களே!
அதாவது, ஒடுக்குமுறையாளர்களுக்கு எந்த நிறமும் இல்லை.அவர்கள் சாரம்சத்தில் பொதுவானவொரு வர்க்கக் கூட்டைக் கொண்டிருக்கிறார்கள்.இன்று ஆறுமுகத்தைப்பற்றிக் கூறுகையில் அவர் ஆசான்,நாவலர் என்று ஒளிவட்டம் உண்டு.ஆனால், அவரது மறுபக்கமோ அப்பட்டமான சாதி வெறியன் என்பதாக விரியும்.ஊருக்கு ஊர் எழுந்த “சைவப்பிரகாச வித்தியாலயம்”எனும் ஆரம்பப்படசாலைகளுக்கூடாக நாம் காணும் சமூக யதார்த்தம் என்ன?
இது தாழ்த்தப்பட்டவர்கள்-ஒடுக்கப்பட்டவர்கள்-உழைப்பாளர்களது பிள்ளைகள் அரச கலவன்பாடசாலையுள் உள்வாங்கப்பட்டதற்கு எதிர்க்கும் முகமாக எழுந்ததா இல்லையா? இந்த ஆறுமுகத்திடம் இருந்த ஆதிக்க-மேலாதிக்க மனம் எந்தக் கருத்தால் வடிவமைக்கப்பட்டது? தனியே சாதியத்திமிரா அல்லது வர்க்க நலனா?
ஒரு தேசிய இனமெனும்பொழிவு, புலப்படும்சிந்தனை :
எவ்வளவுதாம் நாம் முயன்றாலும் தமிழ்பேசும் உலகம் ஒரு தேசிய இனமாக இருப்பதற்கான ஒழுங்கமைக்கு குறைவானது.தமிழ் பேசுபவர்களை பல் தேசிய இனங்களாக இலங்கைக்குள்ளேயே நம்மால் பார்க்கமுடியும்.எனவே, அகிலவுலகத்துத் தமிழரெனும் பெருங்கூட்டத்துள் எமது தொடர்ச்சியை நிலைப்படுத்துவது அவ்வளவு இலகுவல்ல.
அதுவும் அவசியமற்றது.ஏனெனில், நம்மைத் தொழிலால் ஒன்றுபடுத்திவிடமுடியும்.மொழியால் கூறிடப்படும் மானுடம்,தன் தொழிலால்-படைப்பால் ஒன்றுபடும்போது அங்கே ஒருமித்த மக்கள்பலம் தன்னையொடுக்கும் பெரு நகர்வை மிக இலகுவாக-வெளிப்படையாகப் புரிகிறது.இங்கே ஒடுக்கப்படும் அந்தக் கூட்டம் ஒடுக்குபவர்கள் தத்தம் இனங்களுக்குள்ளேயும்,வெளியேயும் கரங்களை இணைப்பதைப் புரிந்திட வாய்ப்புண்டாகிறது.இதுவன்றி நமது மானுடத் தொடர்ச்சியைக் குறுக்கி இனம்சார்ந்த-மொழிசார்ந்த அலகுகளுக்குள் இனம்காணும்போது, நிகழ்வது வெறும் உணர்வு நிலைப் புள்ளியில் தங்கும் பெருமிதம்தாம்.அங்கே செயற்கரிய விய+கம் அடிபட்டுப்போகிறது.
எதிரியும் நமது இனம் எனும் பச்சோதாபம் எம்மை விடுவிக்கப் பங்கஞ் செய்து படிமத்துள் தள்ளும் நம்மை.
கோழைத்தனமும்,இரண்டாம் நிலைச் சமூகம் எனும் உணர்வு நிலை எங்ஙனம் தொடர்ச்சியை வற்புறுத்தி இதுவரை நம்மைத் தொடர்கிறது.தனிநபர் வழிபாடு,ஏன்-எதற்கு என்ற கேள்வி ஞானமின்றிய கட்சி-இயக்க விசுவாசம்,நக்கிப் பிழைப்பதே சாலச் சிறந்ததாக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல்,சினிமாத்தனமான கருத்தாடல்,தனிமனிதவாதம்.இவைகளெல்லாம் ஓட்டுமொத்தமாகவுள்ள ஒரு சமூகம் அதிலிருந்து விடுபடும் பண்பாட்டுப் புரட்சிக்கு எவர் தடைக்கல்லாக இருக்கிறார்கள்.அகவிடுதலையென்பது புறவிடுதலையோடுமட்டுமே சாத்தியமாகும்போது,அகத்தைப் புறத்திலிருந்து பிரித்தெடுதுப்பார்த்தல் அகவயக் குறைபாடுதாமே?
எல்லைகளை விடுவித்துப் புவிநிலைசார் விடுதலையை ஒருபோதும் சாதிக்க முடியாது.எங்கே தேசியத்தன்மைகள் அழிகப்பட்டனவோ அங்கே அந்த அலுகுகள் மீளக் காக்கப்பட்டு,அது சார்ந்த பொருளாதாரச் சுதந்திரமின்றி புவிசார் விடுதலை கனவிலும் சாத்தியமில்லை.இது எல்லா வகைப்பட்ட விடுதலைக்கும் புறநிலையாக இருக்குமொரு முன் நிபந்தனை.அதை மறுதலித்தபடி நாம் சொல்லும்-செய்யும் விவாதம் உட்புறத்துள் ஊனத்தைக்கொண்டபடி கருத்து நிலையில் தோல்விக்கான காரணங்களை வேறொரு பொருளில் பேச முற்படும்.
இதைத்தாம் இப்போது கீரன் மற்றும் தலித்துவ மேம்பாட்டு முன்னணி வகையறாக்கள் பேசுவதில் முடிந்துள்ளது!
இன்றைய மேலாண்மைச் சிந்தனையானது வெறும் கருத்துகளால்மட்டும் ஆனதில்லை.அது அவர்களது பொருட்களிலும்,மருத்துவ மற்றும் விஞ்ஞானத்திலும் மெருக்கேற்றப்பட்டு நம்மைத் தாக்குபவை.இன்றைய வர்த்தகக் கலாச்சாரமென்பதை எங்ஙனம் மதிப்பிடுவது?
இதன் போசாக்கென்பது மூன்றாம் உலகத்தை ஏப்பமிடுவதிலும்,நுகர்வடிமையாக்குவதிலுங் மையங் கொள்கிறதென்பது உண்மையா?
அப்படியாயின் இதற்கெதிரான போராட்டம் எல்லையைத் தூய்மைப்படுத்துவதோடு நின்றுவிடுமா அல்லது எமது வரலாற்றைப் புரட்சிகரமான முறையில் உந்தித் தள்ளி மாற்றை வைத்துப் போராடுவதில் நிசமாகுமா?
இலங்கையை உதாரணமாக எடுத்தால் நமது சிந்தனையை நாம் நமது நோக்கிலிருந்து இதுவரை முன்னெடுத்தபோதெல்லாம் எமக்கு எதிரான ஆதிக்கக் கருத்துக்கள் மெல்லத் தாக்குகின்ற வரலாறு வெறுமனவே நம்மை வந்தடையவில்லை.அவை நமக்குள் இருக்கும் குறை வளங்களாலேயே (சாதியம்-பெண்ணடிமை,மத வேறுபாடு,மொழி வேறுபாடு-பிராந்திய வேறுபாடு இத்தியாதி) முன்னெடுக்கப்படுவதை நாம் எதிர்கொள்ளும் இன்றைய யதார்த்தத்தில்- அதை மேன்மேலும் பலவீனப்படுத்தும் எதிர்ப்பியக்கம், அந்த மேலாதிக்கத்தைச் சார்ந்திருக்கும் தருணத்தில் எங்கே செல்லும்?
கீரன் பேசும் சாதியறுப்புக்கான கருத்துக்கள் எந்த வகையிலும் சாதியத்தை வேரறுப்பது அல்ல. மாறாக, அது இலங்கைப் பாசிச அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற-அவர்களால் தகவமைக்கப்பட்ட கருத்தாடலே.இது, ஒருபோதும் தலித்துவ மக்களுக்கான விடுதலையையோ அன்றி முழுமொத்த தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணய உரிமைக்கோ எந்த விதத்திலும் உதவாது, அடக்கு முறையாளர்களது தயவுக்காக நக்கிப் பிழைக்கும் கருத்தாடலாகவே காணப்படும்.இஃது, காலப் போக்கில் நிகழும்போது இத்தகைய தலித்துவக் கோரிக்கைகள் காணாமற் போவது மட்டுமல்ல,யாருக்காகப் போராடுவதாகச் சொன்னார்களோ அந்த மக்களே தம்மை ஒடுக்கு முறையாளர்களது வலையிற் சிக்க வைத்து மேலும் வதைப்படுவர்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
26.06.11
தீபம் தொலைக்காட்சியின் கேள்வி நேரம் :
http://www.youtube.com/user/anasnawas?feature=mhee