Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை அழிக்கும் தமிழ் நாட்டின் இனவாதிகள் : நிவேதா நேசன்

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை என்ற முழு நாட்டிலும் சிறுபான்மையினர். ஆக அவர்கள் சிறுபான்மைத் தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். அல்லது தேசிய இனமாக வளர்ச்சியடையும் நிலையிலுள்ளவர்கள். அவ்வாறான தேசிய இனம் ஒன்றிற்குப் பிரிந்து சென்று தனியாட்சி அமைப்பதற்கான உரிமை உண்டு. பெருந்தேசிய ஒடுக்குமுறை பிரதான முரண்பாடாகியுள்ள சூழலில் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான உரிமைக்காகப் போராடுதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

பிரிந்து செல்லும் உரிமையைத் தேசிய இனம் என்ற அடிப்படையில் கருத்தியல்ரீதியாகச் சிதைப்பவர்கள் பலர்.

நேரடியாகவே சுய நிர்ணைய உரிமையை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஒரு வகையினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உட்பட அரச துணைக் குழுக்கள் மற்றும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்பவர்களை இந்த வகையினுள் அடக்கிவிடலாம்.

இலங்கையில் வெளிப்படையான அரசியல் நடத்த வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பிரிவினையைக் கோரமுடியாது என்பதே இவர்களின் வாதம். பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது பிரிவினை அல்ல. தேசிய இனம் என்ற அடிப்படையில், வடகிழக்கில் வாழும் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமை உண்டு.

அந்த உரிமை அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிந்து செல்வதற்கான உரிமை தேசிய இனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டால், தேசிய இனம் ஒடுக்கப்படும் போது பிரிந்து செல்வதும், விரும்பினால் கூட்டாட்சி நடத்துவதும் அத் தேசிய இனத்தின் உரிமையாகும். அதனால் தான் பிரிந்து செல்லும் உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமையே தவிர பிரிவினை அல்ல, இந்த அடிப்படையில் இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமையைக் கோருவதற்கு எந்தக் கட்சிக்கும் தடை இல்லை.

போலி இடதுசாரிக் கட்சிகளோ, பிரிந்து செல்வது என்பது மக்களைப் பிளவுபடுத்தும் எனத் தமது வசதிக்கு ஏற்ப சுய நிர்ணைய உரிமையை தத்தெடுத்து திரிபுபடுத்தி மாற்றி விடுகின்றனர். இப் போலிகளின் பிறழ்வடைந்த கருத்துக்களால் தமிழ்ப் பேசும் மக்கள் ‘இடதுசாரிகள்’ மீது வெறுப்படைந்துள்ளனர் என்பது வேறு விடையம்.

இரண்டாவதாக, சுய நிர்ணைய உரிமைக்கான கருத்தைச் சிதைப்பவர்கள் தமிழின வாதிகள். ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமையை வெறும் மொழிப் பிரச்சனையாக மாற்றி தமிழர்கள் என்ற பொதுவான அடைமொழிக்குள் அவர்களைக் கொண்டுவந்து விடுகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் தனியான தேசிய இனமான மலையகத் தமிழர்களைப் பற்றி அவர்கள் மூச்சுக்கூட விடுவதில்லை.

இவர்களின் அடிப்படைக் கோரிக்கை எந்தத் தர்க்க நியாயங்களும் அற்று தமிழர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்பதால் தமிழீழம் வேண்டும் என்று கோருகின்றனர். ஒரு தேசிய இனம் என்பது அதன் சுய பொருளாதாரத்தை அன்னியத் தலையீட்டிற்கு எதிராக வளர்த்தெடுக்க வேண்டும், சுய நிர்ணைய உரிமையை தமிழர்கள் என்று மொழி சார்ந்த இனக்குழுவின் உரிமையாகக் குறுக்கிய அன்னியர்களின் தலையீடு சுய பொருளாதாரம் என்பதற்குப் பதிலாக தமிழர்களின் பொருளாதாரம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

ஒரு தேசிய இனத்திற்குப் பொதுவான கலாச்சரம் ஒன்றைக் காணலாம். வட கிழக்குத் தமிழர்களிடையே பொதுவான கலாச்சாரம் என்பது வரலாற்று வழிவந்த தொடர்புகள் ஊடாகத் உருவான ஒன்று. தமிழர்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்ட்த்தைச் சிதைக்கும் தமிழினவாதிகள், தமிழினத்தின் கலாச்சாரம் என்ற விசித்திரமான ஒன்றை முன்வைக்கின்றனர். ஒரு தேசிய இனத்தின் தேசியக் கலாச்சாரத்திற்கு ஆபத்தான இக் கருத்தியல் வாக்குக் கட்சிகளின் அரசியலை விட ஆபத்தானது.

தேசிய இனம் ஒன்றின் சுய நிர்ணைய உரிமை என்பதையே தலை கீழாகப் புரட்டிப்போட்டு தமிழர்கள் என்று மொழி சார்ந்த இனக்குழுவின் பிரச்சனையாகக் குறுக்குவது என்பது சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைய அழிப்பதற்கான நாசகார வழிமுறையாகும்.

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் முற்போக்கானது. அன்னியப் பொருளாதார ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள் நாட்டில் தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் தேசிய விடுதலை தங்கியிருபதால் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரானது. இதனால் ஏகதிபத்தியங்களும் அதன் உளவு நிறுவனங்களும் தமிழின வாதிகளைப் பயனபடுத்தி தேசிய விடுதலையைச் அழிக்க முற்படும் என்பது வெளிப்படையானது.

இந்திய அரசு தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கிச் அழித்தது போன்று தமிழின வாதிகள் ஊடாக இன்று அழிக்க முற்படும் என்பது வெளிப்படையானது.

தென்னிந்தியாவிலிருந்து தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமையை மொழிசார்ந்தஇனவாதமாக மாற்றி அழிக்க முற்படும் குழுக்களின் பின்னால் உளவு நிறுவனங்கள் செயற்படுவதற்கான அத்தனை நியாயங்களும் உண்டு.

தமிழ் நாட்டிலிருந்து ரிமோட் அரசியல் தமிழ் இனவாதம் பேசும் ஒவ்வொரு தனி மனிதர்களும் சுய நிர்ணைய உரிமைக்கு எதிரானவர்களே. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் கூட ரிமோட் இனவாதிகள் கட்டளையிடும் அளவிற்கு பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குக் கட்சிகள் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் தற்காலிகத் தடைகள் மட்டுமே. இங்கு ஆபத்தானவர்கள் சுயநிர்ணைய உரிமை என்ற கருத்தியலையே சிதைத்துக் கடத்திச் செல்லும் தமிழினவாதிகளே.

 

Exit mobile version