Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதற்காக முன்நின்று பேசி வருகின்றனர்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அரியேந்திரன், சிறிதரன் ஆகியோர் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஜெர்மனி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். வேறும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்து பேசி வருகின்றனர். இவர்களுடன் சுடர்ஒளிப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வித்தியாதரனும் பேசி வருகிறார். இவர்கள் அனைவரும் தமிழ் மக்கள் பட்ட துயரங்கள் அழிவுகள் இழப்புகள் பற்றி மனம் உருகப் பேசி வருகிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக வன்னி மக்கள் பட்ட பேரவலங்களை எல்லாம் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் காட்டி வருகிறார்கள். சிறை இருப்போர் காணாமல் போனோர் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளனர். பொத்தம் பொதுவாகவும் உணர்ச்சி தரும் வகையிலான தமிழ் உணர்வுடனும் கூடிய அவர்களுக்கே உரிய மொழியில் பேசியவற்றைத் தமிழ் ஊடகங்களில் காண முடிந்தது.

இவ்வாறெல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பேசிய கூட்டமைப்பினர் விடுத்த வேண்டுகோள் யாதெனில் தங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் மீள் கட்டமைப்புச் செய்ய புலம் பெயர்ந்தோர் உதவ வேண்டும் என்பதாகும். அவர்களது பேச்சின் தொனி தாமே தமிழர்களின் ஏகப் பிரதிநிகளாக அரசியல் அரங்கில் நிலைத்து நீடிக்க வேண்டும் என்பதேயாகும்.

தங்களை விட்டால் தமிழர்களுக்கு எதிர்காலமே இல்லை என்பது போல அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இளைஞர் கட்டமைப்பு தமது தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என வித்தியாதரன் வேண்டுகோள் விடுத்தார். அதுவும் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து அதனைச் செய்ய வேண்டும் என்று கோரியதுடன் தான் அரசியலில் தீவிர பங்காற்றவே தனது பத்திரிகை ஆசிரியர் தொழிலைக் கைவிட்டதாகவும் கூறியுள்ளார். அவர் இன்றைய பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவது அதிக கஷ்டம் நிறைந்த ஒன்றல்ல. ஏனெனில் அவரின் மைத்துனரான சரவணபவன் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர். ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்து வந்த சரவணபவன் (உதயன், சுடர்ஒளிப் பத்திரிகையின் சொந்தக்காரர்). தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து வெற்றி பெற்றார். அந்த வழியில் வித்தியாதரனும் மாகாண சபைத் தேர்தலிலோ அன்றி அடுத்த பாராளுமன்றத்திலோ வெற்றி பெறுவது பெரும் பிரச்சினை அல்ல. அதனாலேயே தமிழ்க் கூட்டமைப்பைக் கிராம மட்டத்தில் பலப்படுத்த வேண்டியும் இளைஞர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் எனக் கோரி நிற்கிறார்.

இன்று தமிழ் மக்கள் அரசியல் விரக்தியில் ஆழ்ந்து போய் உள்ளனர். அதனாலேயே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதினைந்து சத வீத வாக்குகளைப் பெற்றே பதின்நான்கு உறுப்பினர்களைப் பெற்றனர். இது போதாதென்ற வகையில் தாமே மீண்டும் ஏகப் பிரதிநிதிகளாக வேண்டி நிற்கிறார்கள்.

கடந்த முப்பத்திமூன்று வருடங்களாக இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெவ்வேறு பெயர்களில் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கி எதனைச் சாதித்தனர்? முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களில் நாற்பதினாயிரம் பேரைப் பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை பலிகொண்டதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு எத்தகையது? அங்கு தமிழ் மக்களுக்குக் கொள்ளி வைக்க நீங்களும் காரணம் அல்லவா? நெஞ்சில் கைவைத்து இல்லை எனக் கூறுவீர்களா? உங்களது விசுவாசத்துக்குரிய இந்திய ஆளும் வர்க்கம் எமது மக்களைக் கொன்று குவிக்க பின்னால் நின்று யுத்தத்தை நடாத்தவில்லையா? ஒட்டுமொத்த முப்பத்திமூன்று வருடங்களில் தமிழீழக் கோரிக்கையால் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப் பட்டமைக்கு இதுவரை என்ன பதில் கூறினீர்கள்? எந்தவித வெட்கமும் ரோசமும் இன்றியே யுத்தம் முடிந்த கையோடு வந்த ஜனாதிபதித் தேர்தலில் யுத்தத்தை நடாத்திய ராணுவத் தளபதிக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பீர்கள். அதன் மூலம் மகிந்தவின் வெற்றிக்கு எதிர்மறை உதவி செய்வீர்கள். அதன் பின் உங்கள் ஆதிக்க அரசியலை முன்னெடுக்க பாராளுமன்றத் தேர்தலில் நின்றீர்கள்.

இன்று இணக்க அரசியல் செய்ய முடியாமலும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க இயலாமலும் ஒருவகைப் பம்மாத்து அரசியல் நடாத்த வாய் வீச்சு நடாத்தி வருவது தான் உங்களது பரிதாபத்திற்கு உரிய நிலையாக உள்ளது.

நீங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எதைக் கேட்கிறீர்கள்?

உங்களது அரசியல் வேலைத் திட்டம் யாது? அதற்கான கொள்கை என்ன?

இந்தியா அமெரிக்கா பற்றிய நிலைப்பாடு பழையது தானா?

நாட்டையும் மக்களையும் குறிப்பாக இப்போது வடக்கு கிழக்கையும் விழுங்கி வரும் உலகமயமாதலின் கீழான தாராள பொருளாதாரக் கொள்கையைப் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

சிங்கள மக்கள் பற்றிய பார்வையில் மாற்றம் உண்டா?

சாதியம் பற்றியும், பெண் ஒடுக்குமுறை பற்றியும் உங்களது பார்வையும், கொள்கையும் யாவை?

தொழிலாளர்கள் விவசாயிகளின் நலன்கள் பற்றி திட்டவட்டமாகக் கூறாது பொத்தம் பொதுவாகத் தமிழர், தமிழ் இனம் என்று கூறும் இன உணர்ச்சிதான் கொள்கையா?

இளைஞர் கட்டமைப்பு என்பதன் நோக்கம் என்ன?

முன்பு தமிழர் இளைஞர் பேரவையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிந்த இளைஞர் கட்டமைப்பு மீண்டும் தேவையா?

இவற்றுக்குப் பதில் கூறாது கடந்த காலத்தைச் சுய விமர்சனம் செய்யாது பட்டறிவால் தவறான கொள்கைகளை நிராகரிக்காது எவ்வாறு உங்களால் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க முடியும்?

புதிய கொள்கைகளைக் கொண்ட வேலைத்திட்டம் எதாவது உண்டா?

பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தை பழைமைவாதத்தின் ஊடாக முன்னெடுக்க நிற்கிறீர்களா அல்லது குறுந்தேசியவாதக் கொள்கையுடைய முறைகளை நிராகரித்து முற்போக்குத் தழிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முன்நிற்கிறீர்களா?

இவற்றுக்கு நேர்மையான பதில் முன் வைக்காது, தமிழர்கள் களத்திலும் புலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் எனக் கோருவது எதற்காக? உங்களது மேட்டுக்குடி ஆதிக்க அரசியலைப் பாராளுமன்ற வழிகளில் முன்னெடுக்கவே அன்றி வேறு எதற்காகவும் இல்லை என்பதே உண்மை. இவற்றைத் தமிழ் மக்கள், குறிப்பாக இளந் தலைமுறையினர், உணர்ந்து கொள்வதும் புதிய மார்க்கம் தேடுவதும் அவசியமாகும்.

புதிய பூமி (செப்டெம்பர்-ஒக்டோபர் 2010)

Exit mobile version