மக்கள் போராட்டங்கள் தோன்றுவதற்கு மக்கள் மத்தியில் ஒருங்கிணைவும், ஐக்கியமும். தொடர்ச்சியான தொடர்பாடல்களும், ஒற்றுமையும் அவசியமானவை.
ஒன்று படுங்கள், பிளவுபடுத்தாதீர்கள், தமிழர்களாக இணையுங்கள் என்ற முழக்கங்களே இன்று எங்கும் ஒலிக்கின்றன. ஒன்று படுதல் மட்டும் சாத்தியமற்ற ஒன்றாக இன்றல்ல, கடந்த முப்பது வருட ஈழப் போராட்டத்திலும் கனவாகவே கடந்து போயுள்ளது. சில வேளைகளில் மக்களின் ஒருபகுதியைத் திருப்தி செய்யும் இந்த முழக்கம் மக்கள் போராட்டத்தைத் தோற்றுவிப்பதில் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. ஆனால் மக்கள் போராட்டம் மக்கள் மத்தியிலான ஒற்றுமையை மையமாகக் கொண்டே தோன்றும். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலான ஒற்றுமை என்பது வெறுமனே தனிநாடு அல்லது தமிழீழம் என்ற சுலோகங்களால் மட்டுமே தோன்றுவதில்லை. ஆக, ஒற்றுமை என்றால் என்ன? அதனைத்தான் மக்கள் மத்தியிலான ஐக்கிய முன்னணி என்று அழைக்கிறார்கள். ஐக்கிய முன்னணி என்பது வேறுபட்ட பொருளாதர, சமூக அடிப்படைகளைக் கொண்ட மக்கள்கூட்டங்கள் ஒரு பொதுவான பிரச்சனைக்காக ஒரு அணியில் செயற்படுதலாகும்.
ஒரு நாட்டின் உற்பத்தியோடும் வாழ்க்கையின் விழுமியங்களோடும் தொடர்புடைய மக்கள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாளாந்தக் கூலிவேலை செய்யும் கூலி விவசாயிக்கும் பெரும்தொகையாகப் பணம் உட்பட மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஒருவருக்கும் அடிப்படையான முரண்பாடு காணப்படுகிறதே. இந்த முரண்பாடுகள், ஏழை விவசாயிகளுக்கும், சிறிய நிலத்தை உடமையாக வைத்துள்ள விவசாயிக்கும், உள்ளூரில் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கும், தொழிலாளர்களுக்கும் இன்னோரன்ன மக்கள் குழுக்களுக்கும் இடையே காணப்படுகின்றன.
இவ்வாறான முரண்பட்ட குழுக்களை அந்த முரண்பாடுகளை அங்கீகரித்துக்கொண்டே ஒரு குறித்த காலத்திற்குரிய பொது எதிரியை முன்வைத்து ஐக்கியப்படுவதையே ஒற்றுமை எனலாம். தமிழன் என்ற அடிப்படையில் ஒற்றுமைப்படுங்கள் என்றால் ஒற்றுமை சாத்தியமற்றதாகிவிடும். அது பெரும்பாலானவர்களைப் பார்வையாளர்களாக்கிவிடும்.
புரட்சியாளர்களை அல்லது புரட்சியை ஒழுங்கமைக்கும் முன்னணிச் சக்திகளைப் பொறுத்தவரை சமூகத்தின் இயங்கும் விதியையும் அதற்குள் வாழும் மக்கள் கூட்டங்களின் மத்தியிலான முரண்பாடுகளையும் அறிந்துகொள்வது அவசியமானது.
மக்கள் மத்தியிலான முரண்பாடுகளைக் கையாள்வது குறித்து மா ஓ சேதுங் உட்படப் பலர் தெளிவான விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
வேறுபட்ட, நிராகரிக்காத முரண்பாடுகளைக் கொண்ட மக்கள் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளனர். உற்பத்தையைச் சார்ந்து அவர்கள் தமக்கிடையேயான உறவைப் பேணிக்கொள்கின்றனர்.
இவர்களை வர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகளாக மக்கள் அமைப்புக்களை உருவாக்குவதும் அவ்வாறான அமைப்புக்களிடையே பொது எதிரிக்கு எதிரான ஐக்கியத்தை உருவாக்குவதுமே மக்கள் மத்தியில் சந்தேகமற்ற ஒற்றுமையைத் தோற்றுவிகும். வடக்குக் கிழக்கில் அவ்வாறான வெகுசன அமைப்புக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. அந்த அமைப்புக்களைத் தோற்றுவிப்பதே வடக்கிலும் கிழக்கிலுமுள்ள புரட்சியாளர்களின் முதல் பணியாக அமையும்.
தேசுய விடுதலை இயக்கம் இந்த அமைப்புக்களை இணைத்து ஐக்கிய முன்னணி ஒன்றை சுய நிர்ணய உரிமை கோரும் போராட்டத்திற்காக இணைத்துக்கொள்வது சமாந்தரமான பணி. இலங்கை போன்ற சிறிய நாட்டில் இவ்வாறான மக்கள் அமைப்புக்களைத் தோற்றுவிப்பதற்கு நீண்டகாலம் தேவையற்றது. ஆனால் அந்த அமைப்புக்கள் தோன்றிவிடாமல் தடுப்பதற்காகவே அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ராஜபக்சவைத் தண்டித்து தமிழர்களுக்கு விடுதலை வாங்கித்தருவது போன்ற தோற்றப்பாட்டைப் பேணிவருகின்றன.
ஈழத்தில் புரட்சிக்கான தயாரிப்புக்களில் ஈடுபட வேண்டும் என்று எண்ணுகிற எவரும் அன்னிய சக்திகளின் சதிவலைக்குள் விழாமலிருப்பதும் மக்கள் போராட்ட தந்திரோபாயத்தைத் தோற்றுவிப்பதும் அவசியமானது.
கீழ்வரும் தலையங்கங்களில் தொடர்ச்சியான ஆக்கங்கள் இனிவரும் நாட்களில் இனியொருவில் வெளியாகும். கேள்விகள், விவாதங்களூடாக இவை விரிவாக்கப்படும்.-ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன-
-வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதலுக்கான நடைமுறைத்தந்திரம்
-தேசிய விடுதலைப் போராட்டத்தில் தலைமைச்சக்திகள்
-கட்சியை உருவாக்கல்
-தேசிய விடுதலைக்கான ஐக்கியமுன்னணித் தந்திரம்
-மக்கள் யுத்தம்
மேலதிக வாசிப்பிற்கு… :
நிலாந்தனும் ஜெனீவாவும் தமிழ்த் தேசிய அரசியலும் : சபா நாவலன்
– இலங்கையிலிருந்து டொமினிக், பிரிட்டனிலிருந்து சபா நாவலன்-