பெருந்தேசிய ஒடுக்கு முறை முன்னெப்போதும் இல்லாத அளவில் தனது கோரக்கரங்களால் மக்களின் குரல்வளையை நசித்துக்கொண்டிருக்கிறது. வரலாறு காணாத அழிப்பைச் சந்தித்த மக்கள் கூட்டட்த்தின் ஒரு பகுதி ஊனமாக்கப்பட்டுள்ளது, உளவியல் தாக்கங்களுக்கு இளம் குழந்தைகள் உட்படுத்தப்பாடுள்ளனர், பாலியல் வன்முறையைக் காட்டுமிராண்டி இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் எதிராக மக்கள் தமக்குத் தெரிந்த வழிகளில் எல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள்.
வடக்கும் கிழக்கும் சிங்கள இராணுவத்தினதும் சிறீ லங்கா அரச உளவுப் படைகளினதும் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் நிலையிலும் கூட, முகாம்களின் முன்னால், அரச அலுவலகங்களின் முன்னால் என்று மக்கள் அணி திரள்கிறார்கள். சிறுகச் சிறுக நடைபெறும் இவ்வாறான எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை வகிப்பதம் ஒழுங்கு படுத்துவதும் அடுத்த நிலையை நோக்கி வளர்ப்பதுமே அரசியல் தலைமை ஒன்றின் பிரதான கடமை.
நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் தமது போராட்டத்தின் நியாயத்தை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல தமது அரசியல் தலைமைகளுக்கும் கூடக் கூறியுள்ளார்கள். மறு வாழ்விற்கும், அபிவிருத்திக்கும் முன்னால் தன்னுரிமையே தமது பிரதான தேவை என்பதை எந்தத் தயக்கமும் இன்றிக் கூறியிருக்கின்றார்கள். மௌனமாக தன்னுமைக்காக அவர்கள் நடத்திய போராட்டம் இது.
ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போதெல்லாம் அத் தேசிய இனம் பிரிந்து சென்று தமக்க்கான அரசியல் அதிகாரத்தின் அடிப்படையில் தனியரசு அமைப்பதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளது. பிரதான முரண்பாடாக இலங்கையில் தேசிய இன முரண்பாடு பிரிந்து போவதற்கான உரிமையைக் கோரி நிற்கின்றது.
தேசிய இனம் எனபது வரலாற்று வழிவந்த மக்கள் கூட்டம். வரலாற்றின் ஒரு குறித்த காலப்பகுதிக்குரிய தேசிய இனம் என்ற மக்கள் பகுதியினர் தமது பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுதல் என்பதற்கான நியாயம் அங்கே காணப்படுகின்ற பிரதான முரண்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இலங்கையில் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது குறை நிலை வளர்ச்சியடைந்த தேசிய இனங்களின் வளர்ச்சியோடும் தொடர்புடையது.
தம்மீதான ஒடுக்கு முறையிலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது வாக்குகளைப் பெற்றுக்கொவதற்கான மேடைப்பேச்சுக்களிலிருந்து உருவாகாது.
தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்திற்கான நியாயங்களையும் ஒடுக்குமுறையின் அடிப்படைக் கூறுகளையும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதான பேருந்தேசிய வாத்தின் தாக்குதலையும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதும் அவர்களின் ஒடுக்கப்படும் பிரிவினருக்கு தமிழ்ப் பேசும் மக்களின் போராட்ட நியாயத்தை உணரச் செய்வதும் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தை பலப்படுத்துவதற்கான முன்நிபந்தனையாக அமையும்.
சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத உணர்வை வளர்த்து அவர்களின் அரசிற்கு எதிரான போராட்டங்களைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனமக்களிற்கு எதிரான போராட்டமாகத் திசை திருப்புவதைப் பேரினவாத அரசாங்கங்கள் 60 ஆண்டுகளாக தமது அரசியல் தந்திரோபயமாகக் கொண்டிருக்கிறது. தேசிய இன முரண்பாட்டை ஆழப்படுத்துவதும் இவர்களே.
எந்தப் போராட்டமும் பெரும்பான்மைப் பலமின்றி வெற்றிபெற முடியாது. அது வெறும் கற்பனை மட்டும் தான். சில வேளைகளில் இன்னொரு எதிரிக்கு அடிமையாக எம்ம்மை விலை பேசிக் கொள்வதிலிருந்து போராட்டத்தின் பலத்தை அதிகரிக்கலாம். 80 களில் இந்தியாவிற்கு போராட்ட இயக்கங்கள் தம்மை விலைபேசிக் கொண்டதன் பலனை முள்ளிவாய்க்காலில் அறுவடை செய்திருக்கிறோம்.
சிங்கள மக்களை பேரினவாத சகதிக்குள் அமிழ்த்துவதற்கான அனைத்து அழிவுகளுக்கும் தேசிய விடுதலை இயக்கங்கள் துணை போயிருக்கின்றன. இனவதிகளின் இன்றைய தொடர்ச்சிகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இலங்கை அரசாங்கம் அதன் துணைப்படைகளின் துணையோடு இவரைக் கொலைசெய்வதற்கான ஒரே காரணமாக அமைந்தது சிங்கள மக்கள் மத்தியில் ரவிராஜின் பிரச்சாரங்கள் மட்டும் தான்.
தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமத்திரன் என்பவர் கூட சிங்கள மக்களின் ஒருபகுதியினரின் இணக்கத்துடனேயே தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்று பிரித்தானியாவில் நடைபெற்ற ஒன்று கூடல் ஒன்றில் பேசியிருக்கிறார்.
சுமத்தின் திருப்திப் படுத்த அவாக் கொள்வது அதிகாரத்திலுள்ள, தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள, இலங்கையிலுள்ள மக்களை சுரண்டி வாழ்கின்ற சமூக விரோதிகளையே என்பதை அவரது தொடர்ச்சியான பேச்சுக்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அழிப்பவர்களுடன் இணக்கத்திற்கு வருவதே சுமத்திரனின் அரசியல் வழிமுறை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிமுறையும் கூட இதுவே.
ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒடுக்கு முறையிலிருந்து விடுதலையடைவதற்கு, ஒடுக்கும் பாசிஸ்டுக்களோடு இணக்கத்திற்கு வர முடியாது. அவ்வாறான இணக்கம் அவர்களை மேலும் ஒடுக்குவதற்கே வழி வகுக்கும்.
ஒடுக்கும் பாசிஸ்டுக்களைத் திருப்திப்படுத்துவது அவர்களைப் பலப்படுத்துவதற்கான இன்னொரு வழிமுறை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமானல் தமக்கு வழங்கப்ப்ட்ட அங்கீகாரத்தைப் பயன்படுத்தி சில குறைந்த பட்ச நடவடிக்கைகளையாவது மேற்கொள்ளலாம்.
1. மக்களின் தன்னிச்சையான போராட்டங்களையாவது ஆதரவு வழங்கி ஊக்கப்படுத்தலாம்.
2. சிங்கள மக்கள் மத்தியில் உரிமைப் போராட்டத்தைப் பிரச்சாரப்படுத்த ரவிராஜை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்றலாம்.
3. உலக மக்கள் மத்தியில் இலங்கை அரசிற்கு அழுத்தம் வழங்குவதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம்.
4. இவற்றுனூடாக மக்கள் சார்ந்த அரசியல் தலைமை உருவாவதற்கான ஜனநாயக சூழலை ஏற்படுத்த முனையலாம்.
சுமத்திரனின் அரசியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது வரைக்கும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை மேற்கொண்டதில்லை. அவர்கள் சார்ந்த ஒடுக்கும் சிங்கள மக்களின் பகுதியினரோடு அவர்கள் இணக்கத்திற்கு வர முனைகிறார்கள். இவையெல்லாம் புதியதல்ல.
ஆயினும் இன்றைய உலக ஒழுங்கின் சாராம்சம் புதிய அரசியல் சக்திகளை உருவாக்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப் புதிய எதிர்ப்பியக்கங்களுக்கான அரசியலை முன்வைக்கத் தவறுமானால், மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியல் தலைமை இவை அனைத்தையும் மீறி உருவாகுதல் தவிர்க்க முடியாத நிபந்தனையாக அமையும்.