Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்ப் பேசும் மக்களின் இன்றைய அவல நிலை 2005 இலேயே திட்டமிடப்பட்டது : கோசலன்

Published on: Aug 24, 2013 @ 3:34

இன்று இலங்கையில் ராஜபக்ச பயங்கரவாதம் சர்வதேசப் பயங்கரவாதத்தின் தெற்காசிய முன்முகமாகத் தொழிற்படுகிறது. இன்று வரைக்கும் இலங்கையில் அரச பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகளை தயக்கமின்றி கட்டவிழ்த்துவிடுவதும் அதன் பின் சுயாதீன விசாரணை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பதும் வழமையாகிவிட்டது. வன்னிப் படுகொலை நடந்த நாட்களிலேயே விசாரணை நடத்தப்படும் என்று உலகின் ஏகாதிபத்தியங்களும் உள்ளூர் மனித உரிமைக் ‘காவலர்களும்’ உலக மக்கள் குரல்களைத் தடுத்து இன்று ஐந்தாவது வருடத்தை நோக்கி நாட்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இதே முறைமை மீண்டும் மீண்டும் பிரயோகிக்கப்படுகின்றது. படுகொலையின் பின்னர் முள்வேலிக்குள் மனித குலத்தின் ஒரு பகுதியையே அடைத்துவைத்திருக்கும் போது ஐ.நா உம் இந்தியாவும் ஐரோப்பாவும் அமரிக்காவும் மீண்டும் கொக்கரித்து அடங்கிவிட்டன.

தமிழகம் கொந்தளிக்கவில்லை. இந்தியாவில் போராடும் மக்கள் ஐ.நாவை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இன்றுவரைக்கும் அமரிக்க சார்பு மனித உரிமை அமைப்புக்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பேசிப் பேசியே காலத்தைக் கடத்திவிட்டார்கள்.

இப்போது எல்லாம் அடங்கிப் போய்விட்டன. ஐ.நா யுனோஸ்கோ விருதை 2006 ஆம் ஆண்டு சமாதானத்திற்காக ஆனந்த சங்கரிக்கு வழங்கியது. அந்த நாட்களில் புல்லிகளுக்கு அஞ்சி இலங்கை அரசின் இராணுவப் பாதுகாப்பில் வாழ்ந்த சங்கரி இப்போது ‘தமிழ் உணர்வு’ பீறிட்டதால் தேசியக் கூட்டமைப்பில் வாக்குக் கேட்கிறார்.

இப்படி ஐ.நாவையும் அமரிக்காவையும் சுட்டிக்காட்டி உலகம் முழுவதும் இலங்கை அரசிற்கெதிராக குருவியை கூடக் கூவவிடாமல் தடுத்ததில் புலம் பெயர் ஐந்தாம் படைகளுக்கும் பங்குண்டு.

எதிர்கால சந்ததி ஒன்றையே போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் ஏமாற்று வேலையை நடத்திமுடித்த புலம் பெயர் ஐந்தாம் படைத் ‘தேசியவாதிகள்’ இன்னும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்படும் என்றும் அமரிக்காவிற்கு நாங்கள் வால்பிடித்தாலே போதுமானது என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றுகிறார்கள்.

இவர்களின் காட்டிக்கொடுப்பு இன்னும் நீண்டகாலத்திற்குத் தொடரும் வகையில் எல்லா வழிமுறைகளும் ஏற்கனவே வன்னி அழிப்பிற்கு முன்னமே திட்டமிட்டு வகுக்கப்பட்டிருந்தன.

ஈழப் போராட்டம் அடியோடு துடைத்தெறியப்பட்டது போன்று அண்மைக் காலத்தில் எங்கும் நடைபெற்றதில்லை. நிராயுத பாணியான மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள யுத்தம் அதிகார வர்க்கத்திற்கு தெற்காசியாவில் கிடைத்த மாபெரும் வெற்றி. மாபெரும் அழிவின் பின்னர் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த வரலாறுகள் தான் எம்முன் உள்ளன.ஈழத்தில் மட்டும் அது  பொய்யாகிவிட்டது.  ஈழப் போராட்டத்தை இலங்கை அரசோடு இணைந்து அழித்த அமரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஏதோ இறைச்சித் துண்டுபோல தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்கின்றன.

இன்று  நாம் காணும் அவலங்களும் அரசியலும்  2005 ஆம் ஆண்டு முதல் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்த குழு என்பதால் அதனைத் தோற்கடிக்க ஆயுத பலம் மட்டுமே போதுமானதாகவிருந்தது. இங்கு சிக்கல் புலிகளை அழிப்பது அல்ல. புலிகள் அழிக்கப்பட்ட அதன் பின்னர் தோன்றக்கூடிய போராட்டங்களையும் தலைமைகளையும் அழிப்பது தான். அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கான திட்டங்கள் 2205ம்  ஆண்டிலிருந்து வரையப்பட்டன. படிப்படியாக நிறைவேற்றப்பட்டன. அழிப்பின் முன் கீழ்வரும் 8 பிரதான செயற்பாடுகள் திட்டமிட்டு  நிறைவேற்றப்பட்டன.

அழிப்பிற்கு முன்னர்..

1. அமரிக்க இந்திய மற்றும் அனைத்து ஏகபோக ஆதரவு ஐந்தாம் படைகள் ‘தேசியவாதிகள்’ என்ற பெயரில் நேர்த்தியாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்டனர்மிகக் குறுகிய  காலத்தில் அமரிக்கா உடப்ட ஏனைய  ஏகபோக  நாடுகளின்  தமிழ்  உளவாளிகள் திடீர் வளர்ச்சி பெற்றனர். இந்தத் திடீர் வளர்ச்சிக்கு 2005 ஆண்டின் பின்னர் மூன்று வருட வரலறே உண்டு. கடைந்தெடுத்த மனித நேயமற்ற வியாபாரிகளைத் தலைமையில் இருத்தி புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் என்ற பெயரில் இந்த ஐந்தாம் படைகள் களமிறக்கப்பட்டன.

2. இவர்களை வளர்த்ததில் புலியெதிர்ப்புக் கும்பல்களின் பங்களிப்பை மறுக்கமுடியாது. புலிகளின் ஜனநாயக மறுப்பிற்கு எதிராகப் போராடுகிறோம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்ட இவர்கள் இலங்கை அரச துணைக்குழுக்களோடும் இலங்கை அரசோடும் தமது உறவைப் பலப்படுத்திக்கொண்டனர்.2005 இன் பின்னரேயே பெரும் பணவசதிகளோடு வளர்ச்சியைந்த இந்தக் கும்பல் புலிகளுக்கு மாற்றான கருத்தைக் கொண்டவர்கள் அனைவரும் அரச ஆதரவாளர்கள் என்ற விம்பத்தை உருவாக்கும் வேலையைச் செய்து முடித்தனர்.

3. அடையாள அரசியல் என்ற சாபக்கேட்டை தமிழ் நாட்டிலிருந்து மிகத் தந்திரமாக இறக்குமதி செய்து கிழக்கு அடையாளம், சாதி அடையாளம் என்று மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு கும்பல் தயார் செய்யப்பட்டது. இந்தக் கும்பல்கள் பலவற்றிற்கு அமரிக்க அரச உதவி நிறுவனமும், உலகவங்கியின் ஆசியக் கிளையும் பணக் கொடுப்பனவுகளை இன்றும் வழங்கி வருகின்றது. 2005 ஆம் ஆண்டின் பின்பே இவர்களின் வளர்ச்சி முனைப்புப் பெற்றது.

4. அதுவரை புலிகளைத் துரோகிகள் என்றும் இலங்கை அரசோடு நெருக்கமான உறவைப் பேணிவந்தவர்களுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆர்.சம்பந்தன் ஆகியோரது தலைமையில் அமரிக்க – இந்திய சார்பு அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு குழு தயார் செய்யப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புலிகளின் துணையுடனேயே பாராளுமன்ற அரசியல் வழிமுறையைத் தயார் செய்தது.

5. 2005 தேர்தலில் அமரிக்காவினதும் இந்தியாவினதும் நேரடிக் கைக்கூலிகளாகத் தொழிற்படத்தக்க லும்பன்களான ராஜபக்ச குடும்பம் புலிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வருகிறது. புலிகளை அழிப்பதற்கான ஆரம்பத்தை இங்கு அவர்களே ஏற்படுத்துகிறார்கள்.

6. போருக்குப் பின்னர் முளைவிடக் கூடிய மக்கள் போராட்டங்களை அழிக்கும் நோக்கோடு இலங்கை அரசு ஆட்சி செய்த பிரதேசங்களில் எல்லாம் போராட்ட சக்திகளும் மக்கள் அமைப்புக்களும் அழிக்கப்படுகின்றன. புலிகள் ஆட்சி செய்த இடங்களில் இதே நடவடிக்கை புலிகளால் மேற்கொள்ளப்படுகிறது.

7. தமிழ் நாட்டில் உருவாகும் எழுச்சிகளைத் தடுப்பதற்காக வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. சீமான் போன்ற இரக்கமற்ற வியாபாரிகள் களமிறக்கப்படுகின்றனர். இவர்களோடு கூடவே பல குழுக்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அவ்வப்போது உணர்ச்சியூட்டும் உரைகளையும் போராட்டங்களையும் நடத்தும் இக்கும்பல்களால் இந்திய அரசிற்கு அல்லது இந்திய அரசியலுக்கோ பாதிப்பில்லாத வகையில் இவை திட்டமிடப்படுகின்றன.

8. கடந்த பத்துவருடங்களில் வன்னிப் படுகொலைக்கு நிகரான மாதிரியில் அழிக்கப்பட்ட போராட்டங்களிலிருந்து தம்மைச் சுதாகரித்து மீண்டெழுந்த பிலிப்பைன்ஸ் போராட்டங்கள் போன்றவற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட பங்களிப்பு அளப்பரியது. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளோ அன்றி இடதுசாரி இயக்கங்களோ இல்லாத நிலையில் புதிய இடதுசாரி அரசியல் சிந்தனைகளையும் போராட்டங்களையும் தடுக்கும் நோக்கில் நோர்வே போன்ற நாடுகளின் பணக்கொடுப்பனவில் போலி இடதுசாரிகள் களமிறக்கப்பட்டனர். இவர்களது செயற்பாடுகள் அறியப்படாதவை ஆயினும் சிறிய அளவில் போருக்குப் பின் துளிர்விடக்கூடிய முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைவை அழிப்பதில் இவர்கள் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு இனப்படுகொலைக்கு முன்பதாகவே அழிப்பதற்கான சூழல் திட்டமிட்டு ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்டது. இவை அனைத்தினதும் பிரதான நோக்கம் போர் நடத்தி மக்களை அழித்த பின்பு புதிய போராட்டங்கள் உருவாகாமல் தடுப்பதே. இத் திட்டமிடல்கள் மிக நேர்த்தியாக நகர்த்தபட்டன. ஒவ்வொரு திரும்பல் புள்ளிகளிலும் எதிரியின் ஆட்கள் நிறுத்தப்பட்டனர்.

இதன் பின்னரே மக்கள் மீதான அழிப்பு யுத்தம் புலிகளை அழிக்கிறோம் என்ற தலையங்கத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

போரின் பின்னான புறச் சூழலலை பேரினவாத இனச்சுத்திகரிப்பிற்கு ஏற்புடையதாக மாற்றுவதற்கான தயாரிப்பு ஒரு பக்கத்தில் நடந்துகொண்டிருந்த அதேவேளை இராணுவத் தயாரிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

அமரிக்காவிலிருந்து கோத்தாபய பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இலங்கை வருகிறார். சரத் பொன்சேகா யுத்தப் பொறுப்பை ஏற்கிறார். இந்திய சீன அரசுகள் யுத்த ஆலோசனை வழங்குகின்றன. அமரிக்க அதிபர் குறித்த காலப்பகுதிக்குள் அழித்துவிடுங்கள் என்று ராஜபக்சவிற்கு அறிவுரை வழங்கியதான விக்கிலீக்ஸ் கேபிள் பல தகவல்களை உறுதிப்படுத்துகிறது. அமரிக்க அரசும் இந்திய அரசும் தாராளமான பணவசதியை இலங்கை அரசுக்கு வழங்குகிறது. பிரித்தானியா, சீனா, ரஷ்யா, ஜேர்மனி, இந்தியா போன்ற நாடுகள் ஆயுதங்களை விற்பனை செய்கின்றன.பிரித்தானியாவின் பொட்டிங்டர் போன்ற நிறுவனங்கள் மில்லியன்களை வாங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குகின்றன.

கருணா, கேபி உட்பட பல உளவாளிகள் தயார் செய்யப்படுகின்றனர். மக்கள் மீதான யுத்தம் ஆரம்பிக்கிறது.
புலம் பெயர் ஐந்தாம் படைகள் அமரிக்காவும் ‘சர்வதேசமும்’ காப்பற்றும் என்று ஏமாற்று ஆலோசனைகளை வழங்கி நந்திக் கடலை அண்மித்த பகுதிவரை புலிகளை நகர்த்தி வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் உயிர்த் தியாகங்களோடும் 30 வருடப் போராட்டம் ஒருசில மாதங்களோடு சாம்பலாகிவிடுகிறது.

போரின்போது…

கிரேக்கத்திலும் பிலிப்பைன்சிலும் மேற்கொண்ட யுக்திகள் பல போரின்போது மேற்கொள்ளப்படுகின்றன. மக்களை ஒரு சிறிய இடத்தில் முடக்கி அவர்கள் மீதும் திட்டமிட அழிப்பு நடத்தப்படுகிறது. மிக நீண்டகாலத்திற்கு மக்களைப் போராட்டத்தின் மீது அச்சமும் வெறுப்பும் கொள்வதற்கான யுக்திகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1. மக்களை நீண்டகாலத்திற்கு அவலத்திற்கு உட்படுத்தல் : போர் நடக்கும் போது மக்களை வறுமைக்கும், தாக்குதல்களூடான் அச்சத்திற்கும் அழிவிற்கும் உட்படுத்தல். உணவு, நீர், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளைத் தடைசெய்தல் -இவை நீண்டகால அழிவிற்குத் தயார் செய்யும் வழமையான யுத்த தந்திரங்கள் . யாருடைய எதிர்ப்புமின்றி வன்னிப்படுகொலைகளின் போது இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

2. அழிப்பு நடைபெறும் போது அழிவுகளின் எல்லைக்குள்ளேயே மக்களை வைத்திருத்தல். வன்னிப் படுகொலைகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு நடைபெற்றது. பல அப்பாவிகள் விட்டில் பூச்சிகள் போன்று அழிந்து போனார்கள்.

இந்த இரண்டு பிரதான நடவடிக்களின் பின்னர் போராடித் தியாகிகளாக தம்மை அர்ப்பணித்த அப்பாவிப் போராளிகள் கோரமான அவல்த்திற்கு இலங்கை அரச பாசிஸ்டுக்களால் உள்ளாக்கப்படுகின்றனர்.

செயற்பாட்டுத் தளத்தில் உந்தப்பட்ட இந்த இரண்டும் இனிமேல் ஆயுதம் தாங்கிய போராட்டம் வேண்டாம் என்றளவிற்கு மக்களை விரக்திக்கு உள்ளாக்கின்ற யுக்திகளாகின்றன.

இனவழிப்பின் முன்னர் தயாரிக்கப்பட்ட சூழலில் தான் இன்றைய இலங்கை அரசியலும் புலம் பெயர் ஐந்தாம் படைகளும், இந்திய சந்தர்ப்பவாதிகளும் நகர்த்தப்படுகின்றனர்.

இன்று இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலியெதிர்ப்புக் கும்பல்கள், அரச துணைப்படைகள் ஆகியன அரசியலைக் கையகப்படுத்திக்கொள்ள, புலம் பெயர் நாடுகளில் இலங்கை இந்திய அமரிக்க ஐந்தாம் படைகள் அதனைக் கையகப்படுத்தியுள்ளன. ஆக. எதிர்ப்புகளை மட்டுமே விளைபலனாக வைத்திருக்கும் ராஜபக்ச பாசிசத்திற்கு எதிராக எழுச்சி பெறக்கூடிய போராட்டம் மிக நீண்டகாலத்திற்குப் பிந்தள்ளப்பட்டுள்ளது. இந்த நீண்டகாலம் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த எதிர்ப்பும் இன்றி தேசியத் தன்மை சீர்குலைக்கப்படுவதற்குப் போதுமான அவகாசமுடைய காலப்பகுதி.

இன்னும் இந்த ஆய்வு விரிவாக்க்ப்ப வேண்டும். தன்னார்வ நிறுவனங்களின் பங்கு, அழிப்பில் அவர்களின் பங்கு என்பவை ஆராயப்படவேண்டும். இவை அனைத்திலுமிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணய உரிமைக்கான புரட்சிகரப் போராட்டம் மக்கள் யுத்தமாகத் தயார்செய்யப்பட வேண்டும். அதனை இன்று தவறவிட்டால் விளைவுகள் ஆபத்தானதாகும். இன்றைய எதிரியின் நிலைகளில் நிறுத்தப்பட்டுள்ள அரசியல் தலைமைய அம்பலப்படுத்துவதும், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதும் புதிய புரட்சிகரத் தலைமைகள் தோன்றுவதற்கான வழிகளைத் திறப்பதுவுமே இதன் ஆரம்பமாக அமையும்.

Exit mobile version