உறைந்து கிடந்த இத்தாலியில் மாபெரும் மாணவர் போராட்டங்களை நாம் எதிர்பார்த்ததில்லை. பில்லியன்களைச் திருடிவைத்திருப்பவர்களின் சொர்க்கபுரியான வோல் ஸ்ரீட்டை அமரிக்க உழைக்கும் மக்கள் ஆக்கிரமிக்கும் போராட்டத்தை யாரும் எதிர்பார்த்ததில்லை. அதிகாரத்தைச் சர்வாதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்துவிட்டு மதத்திற்குள் புதைந்துகிடந்த அரேபிய மக்கள் தெருக்களில் உரிமைக்காகப் போராடுகிறார்கள்.
கார்ல் மார்க்சை கோமாளி என்ற அதிகார வர்க்கம் கூட இப்போது அவரை மேதை என்று புகழாரம் சூட்டுகிறது. இந்த மாற்றங்களின் ஒரு பகுதிதான் இலங்கையில் இடது சாரிக் கட்சி என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட ஜே.வி.பி இனுள் ஏற்பட்ட பிளவா அன்றி வெறும் அதிகாரப் போட்டியா என்ற தேடலில் இனியொரு தன்னை உட்படுதி கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நேர்காணல் வெளியாகிறது.
ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி)இன் மத்திய குழு உறுப்பினரும் ஜே.வி.பி யிலிருந்து பிளவுற்ற குழுவின் பிரதான உறுப்பினருமான , வருண ராஜபக்ச உடனான இனியொரு நீண்ட உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.
இனியொரு: ஜே.வி.பி யில் ஏற்பட்ட பிரிவின் அடிப்படைக் காரணம் என்ன?
வருண: உழைக்கும் மக்களின் சோசலிசப் பாதைக்கான போராட்டமாகவே ஜே.வி.பி உருவாக்கப்பட்டது. வழி முறைகளில் விமர்சனங்கள் சுய விமர்சனங்கள் என்பன இருந்தாலும், கடந்த சில வருடங்களாக ஏற்பட்ட பின்னடைவுகள் போன்று முன் எப்போதும் ஏற்பட்டதில்லை. இவ்வாறான வலதுசாரித் துவத்தை நோக்கிய மாற்றங்களுக்கு எதிராக கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஜே.வி.பி யில் உட்கட்சிப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக திருத்தல் வாத அரசியல் மற்றும் வலது சாரி சந்தர்பவாதப் போக்கு என்பவற்றிற்கு எதிராக முற்போக்கு சக்திகளின் இடைவிடாத உட்கட்சிப் போராட்டங்களில் எதிர் விளைவே இன்றைய பிளவாக வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக மகிந்த ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தமை,வன்னி யுத்ததை ஆதரித்தமை பின்னதாக இராணுவ அதிகாரியான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை என்பன ஏற்றுக்கொள்ல முடியாத தவறுகளாகும்.
இனியொரு: பாராளுமன்ற வாக்குக் கட்சிகளில் வழமையான அணிசேர்க்கைகளில் ஒன்று தானே இதுவும்?
வருண: நாம் குறிப்பாக உட்கட்சிப் போராட்டம் நடத்தும் பிரிவினர் , பாராளுமன்றத்தை மக்களை அணிதிரட்டுவதற்கான ஒரு இடை நிலைப் பாதையாகவே பன்படுத்திக்கொள வேண்டும் என்று நம்புகிறோம் அது இறுதியான தீர்வல்ல. மக்கள் போராடியே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
இனியொரு : தமிழ்ப் பேசும் மக்களுடையை அல்லது இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களது சுய நிர்ணய உரிமை குறித்து உங்களது நிலைப்பாடு என்ன?
வருண: சோசலிச அரசு ஒன்று உருவாகும் வேளையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் உரிமை பெற்றவர்களாக மாறுவார்கள். ஆக, சோசலிச அரசை உருவாக்குவதில் ஏனையவர்களோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்கள் போராடும் போதே அவர்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இனியொரு : சோசலிச அரசு உருவாவதற்கான முன் நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலை என்பதை நீங்கள் கருதவில்லையா?
வருண: தொழிலாளர்களின் போராட்டம் என்பதே இங்கு பெரும்பாலானவர்கள் முன்வைக்கும் கருத்து. தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் போது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலை பெறும். சிங்கள தேசியத்தையோ அன்றி தமிழ்த் தேசியத்தையோ நம்மில் பெரும்பாலனவர்கள் ஆதரிக்கவில்லை. யுத்ததின் பின்னர் சிங்களத் தேசியம் மிக அதிகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை ஆபத்தான நிலையை நோக்கி இட்டுச் செல்கிறது. எவ்வாறு சிங்கள தேசியம் முதலாளித்துவக் கோசமோ அதே போன்றே தமிழ்த் தேசியமும் முதலாளித்துவக் கோசம் என்றே நாம் கருதுகிறோம்.
அதே நேரம் இந்திய அரசும் மேற்கத்தைய அரசுகளும் தமிழர் பிரச்சனையை இலங்கையைச் சுரண்டுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதாகச் சொல்வார்கள், போர்க்குற்ற வழக்குப் போடுவதாகச் சொல்வார்கள் , இவ்வாறு இலங்கை அரசை மிரட்டிவிட்டு பின்னர் இலங்கை அரசிடமிருந்து அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்வதற்காகப் பேச்சு நடத்துவார்கள். இலங்கை அரசு அவர்கள் விரும்பியதைக் கொடுத்ததும் தமிழர்களைக் கைவிட்டு விடுவார்கள். இது தான் முப்பது வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இங்கு தமிழர்கள் வெறும் பகடைக் காய்களாகவே பாவிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் பாவவனைக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் தமது உண்மையான நண்பர்களைக் கூட இழந்துவிடுவிகிறார்கள்.
இனியொரு : தேசியம் என்பது முதலாளித்துவக் கோசம் என்பதிலும் உள்ளகச் சந்தைக்கான போட்டியிலிருந்தே தேசிய இன முரண்பாடு உருவாகிறது என்பதிலும் நாமும் தெளிவாக இருக்கிறோம். இங்கு தேசிய இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்கின்றது. ஒடுக்கப்படும் தேசிய இனம் தமது ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவது தவறானதா? அந்த ஒடுக்கு முறை தேசிய இன ஒடுக்குமுறையாக இருக்கும் போது அதற்கு எதிராகப் பிரிந்துபோகும் உரிமைக்காகப் போராடுவது தவறானதா?
வருண : தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் என்பது இலங்கை தழுவிய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமாக முன்னெடுக்கப்படும் போது மட்டுமே வெற்றி பெறும். தனியாக தேசிய இனப் போராட்டமாக முன்னெடுத்தால் வெற்றிபெற முடியாது. தமிழர்கள் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களோடு இணைந்து சோசலிச அரசை அமைப்பதற்காகப் போராடினால் அவர்கள் தேசிய இன ஒடுக்கு முறையிலிருந்தும் விடுதலை பெறுவார்கள்.
இனியொரு: நாம் கோருவது மிகத் தெளிவானது. இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு உள்ளது. தமிழ்ப் பேசும் மக்கள் சாரி சாரியாகக் கொல்லப்படுகிறார்கள். இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள். இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தேசிய இன முரண்பாடு அந்த அளவிற்குக் கூர்மையடைந்திருக்கிறது என்பதை இலங்கையில் வாழும் உங்களுக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இலங்கையில் உள்ள இடதுசாரி அமைப்புக்கள் என்று கூறிக்கொள்கின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமிழ்ப் பேசும் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை – பிரிந்து செல்லும் உரிமையை – ஏற்றுக்கொண்டுபோராடத நிலையென்பதே பெருந்தேசிய வாததை வலுவூட்டுகிறது…
வருண : ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மத்தியிலிருந்து இடதுசாரி இயக்கம் உருவாகுமானால் நாம் ஆதரிப்பதற்கும் அவர்களோடு ஐக்கிய முன்னணி அடிப்படையில் வேலை செய்வதற்கும் தயாரான நிலையிலுள்ளோம். தேசியத்தையும் பிரிவினையையும் ஆதரிப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே எமது கருத்து. இன்றைய முதலாளித்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஒன்றிணைந்த போராட்டம் என்பதே அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இனியொரு: 1905 ஆம் ஆண்டு நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்து சென்ற போது லெனின் அதனை ஆதரித்தது மட்டுமன்றி, சுவீடிஷ் தொழிலாலர்களை நோர்வேயின் பிரிவினையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுவீடிஷ் தொழிலாளர்களின் போராட்டமே நோர்வேயின் பிரிவினையை விரைவுபடுத்தியது. அவ்வாறு இடதுசாரிகள் என்று கூறும் நீங்கள் சிங்களத் தொழிலாளர்களை இணைத்து தமிழ்ப் பேசும் சிறுபான்மை இனங்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடத் தயாரா?
வருண: இது புறச் சூழல் சார்ந்த பிரச்சனை. அன்றை நிலை, ஐரோப்பியப் பொருளாதாரம், உலக நிலை என்பன எல்லாம் வேறுபட்டது….
இனியொரு: புறச் சூழல் என்பதைக் கூட லெனின் தெளிவாகக் கூறுகிறார். தேசிய இன முரண்பாடு கூர்மையடைந்து அது பிரதான முரண்பாடாக உருவான சூழல் குறித்தே நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய இனம் குறித்த கருத்தை முதலில் உருவாக்கியவரான லெனின் இதற்கு முன்னுதாரணமாகவே நாம் கருதுகிறோம். தேசிய இனங்கள் ஒடுக்கப்படும் சூழலில் பிரிந்து செல்லலையும், பிரிவினையையும், அதற்கான உரிமையையும் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்று லெனின் ஓட்டோபவர், ரோசா லக்ஸம்பேர்க் போன்றவர்களுடன் நடந்த விவாதங்களில் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறார். நீங்கள் லெனினை நிராகரிக்கிறீர்களா?
வருண : நீங்கள் சொல்வதில் சில நியாயங்கள் இருக்கின்றன என்பது உண்மையே. கட்சிக்குள் இது குறித்த பிரச்சனை முக்கிய விவாதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த விவாதத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.
இனியொரு : இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து இடதுசாரிக் கட்சி தொழிலாளர்களின் பிரதினிதிகளாக பிரிந்து செல்லும் உரிமைக்காகக் குரல் கொடுப்பார்களானால் தமிழ் மக்கள் இணைந்து வாழ விரும்பும் நிலை உருவாகும். சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநிதிகள் குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இலங்கையில் அவ்வாறான ஒரு இடதுசாரிக் கட்சி உருவாகி பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் இலாது போகும் அதே வேளை தமிழ்ப் பேசும் மக்களும் பிரிவினை குறித்துச் சிந்திக்க மாட்டார்கள். அவ்வாறு பிரிவினையை ஆதரிக்கும் போராட்டத்தை முன்னெடுக்க நீங்கள் தயாரா?
வருண: இன்னும் பலமான உட்கட்சி வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டிருக்கும் இப் பிரச்சனையில் உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியமானது.இதுவரையில் முழுமையாக முடிவற்ற பிரச்சனைகளை நாம் அதிகமாக விவாதிக்க முடியாது.
இனியொரு: யார் இந்த பிரமகுமார் குணரத்தினம்? தமிழர் என்று சொல்கிறார்களே? உங்கள் பிரிவுற்ற குழுவின் தலைவரா? இந்திய உளவாளியா? ராஜபக்சவின் ஆளா? புலிகளோடு தொடர்பானவரா? இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?
நேர்காணலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும்…