கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது.
பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட மாபாதகர்களாக இருக்க வேண்டும்.
கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ்,முஸ்லிம் இனங்கள் தம்மை உணர்கின்றன என்பதொன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. எதிர்த்து நின்ற புலிகளை மூர்க்கத்துடன் தின்று தீர்த்த பிற்பாடும் அடங்கிடாத பசியுடன் தணிந்திடாத சினத்துடன் எஞ்சியிருக்கும் அப்பாவிகளை வேட்டையாடும் வெறித்தனம்தான் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியல்ல.
புலிகளை வைத்து அரசியற் செய்தோர் பலர்; புலிகளை வென்றதை வைத்தே தமது அரசியலை ஆயுட்காலமும் தக்க வைக்க நினைத்துக் கொண்டிருப்போர் சிலர்; அந்தச் சிலரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவரது சகோதரரான ஜனாதிபதியும் உச்சத்தில் இருக்கிறார்கள்.
மக்களை உணர்ச்சிகளுக்குள் மூழ்க வைத்து மேற்பரப்பில் தம் உல்லாசப் படகை ஓட்டுகின்ற சாமர்த்தியமும்-ஆட்சியின் அசிங்கங்களைக் கண்டு கொள்ளாத வகையில் பிரஜைகளைத் திசை திருப்பிவிட்டுத் தமது இராஜ வாழ்க்கையைத் தொடர்கின்ற தந்திரமும் கைவந்த கலையாகவுள்ள கபட அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியிருக்கிறது இலங்கை.
புலிகளுடன் அரசாங்கம் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த போது இலங்கையில் பரவலாக ஒரு கதை உலவியது. ‘புலிகளை அழித்தொழித்த பின்னர், முஸ்லிம் மக்களை அழித்தொழிக்கும் வேலையை அரசாங்கம் ஆரம்பிக்கும்’ என்பதுதான் அந்தக் கதை. ”இது வெறும் கற்பனைக் கதை..” என அன்று ஏளனம் செய்தவர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கிறார்கள்.
வறுமை தாண்டவமாடும் ஒரு நாட்டில் வேறு ஏதாவது உணர்ச்சிகரமான பிரச்சனைகள் இருக்க வேண்டும்; ஊழல்கள்
அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்தினாலும் பாதுகாப்பு அமைச்சின் முடி சூடா மன்னரினாலும் கூலிக்கு அமர்த்தப்பட்ட சில சிங்களக் குழுக்கள் இலங்கையின் அமைதியைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன. பிரகடனப்படுத்தாத யுத்தமொன்றைத் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கெதிராகத் தொடுத்திருக்கின்றன. குறிப்பாக, இரண்டாவது சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் மக்களுக்கெதிரான போராட்டதில் அந்தக் குழுக்கள் இன்று மும்முரமாகச் செயற்படுகின்றன.
பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் நடைபெறுகின்ற முஸ்லிம் மக்களுக்கெதிரான வஞ்சகப் போரைத் திரை மறைவிலிருந்து இயக்குவோர் யார் என்பதற்குத் தர்க்கரீதியான சான்றுகள் நிறையவே உள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியும் இந்த விடயத்தில் காட்டுகின்ற அலட்சியமும் வெளியிடும் கருத்துக்களும் அவர்கள்தான் இதன் சூத்திரதாரிகள் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
கிரீஸ் மனிதர்கள்-பேய் மனிதர்கள்-மறைந்திருந்து தாக்கும் மர்ம நபர்கள்-பெண்களை அச்சுறுத்தும் காமப் பிசாசுகள்-முகமூடிக் கொள்ளையர்கள் என்று மக்களின் கவனத்தைப் பாமரத்தனமாகத் திசை திருப்ப எத்தனித்துத் தோல்வி கண்டவர்களின் வெற்றிகரமான கண்டுபிடிப்புத்தான் முஸ்லிம்களுக்கெதிரான காவியுடை மனிதர்கள் என்பதை இலங்கையின் சின்னஞ் சிறு பிள்ளைகள் கூடத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
கடந்த பாராளுமன்ற, ஜனாதிபதித் தேர்தல்களில் தமக்கு எதிராக வாக்களித்த சிங்கள மக்களைத் தம் பக்கம் ஈர்த்தெடுப்பதற்கான குறுக்கு வழியாக முஸ்லிம்களை வதைக்கும் கொடுமைகளுக்கு அரசாங்கம் ஆசீர்வாதம் வழங்குகிறது என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறாயின், அது படிமுறையும் இறுதி விடையும் தப்பாகவே இருக்கும் கணக்கொன்றிற்கு ஒப்பானதாகும்.
ஒரு பிரதம அமைச்சரும் 54 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 சிரேஷ்ட அமைச்சர்களும் 40 பிரதியமைச்சர்களையும் கொண்ட இலங்கை அரசாங்கத்தில் குறைந்த பட்சம் பத்துப் பேர் கூட அரசாங்கம் ஆராதிக்கும் துவேஷக் கொள்கையை ஆதரிக்கவில்லை. அதேநேரம், பத்துக்கு மேற்பட்டோர் இந்த இனத் துவேஷ நடவடிக்கைகளைப் பொதுத் தளத்தில் பகிரங்கமாகக் கண்டிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல,புலிகளை ஒடுக்க வேண்டுமென்பதில் பெரும்பான்மையாக ஒன்றுபட்டிருந்த சிங்கள மக்கள், சாதாரண தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இன்று நிகழ்த்தப்படுகின்ற வன்கொடுமைகளைப் பகிரங்கமாக இல்லாவிட்டாலும் மனதளவில் வெறுக்கவே செய்கிறார்கள். மேலும் அரசாங்கத்தின் மலிவான, நேர்மையற்ற,முறைகேடான துவேஷச் சிந்தனைகளுக்கு அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் நம்பலாம்.
எனவே, சிறுபான்மையினங்களின் மொழி,மத,பண்பாடு மற்றும் கலாச்சார விழுமியங்களின் மீது நேரடியாகவோ அல்லது பொது பல சேனா,போன்ற இனவாத அமைப்புகளின் ஊடாகவோ நடாத்துகின்ற கேவலமான துவேஷப் போரினால் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவர்களது பிழையான ஆலோசகர்களும் பெரும் தோல்வியையே சந்திக்கப் போகின்றார்கள் என்பது தெளிவாகிறது.
எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று இந்த அரசாங்கத்தைக் கண்மூடித்தனமாக ஆதரித்த பல இலட்சம் மக்கள் இன்று தமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனைக்குட்படுத்தி வருகின்றனர். அவர்களோடு நாமும் இணைந்து கொள்வதைத் தவிர வேறு வழி நமக்குத் தெரியவில்லை