Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசிய முற்போக்கு வாதம்(3) – உரையாடலின் தேவை : விஜய்

இந்த நாட்டில் நான் சமூகம் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்த நாளிலிருந்து எனது பேச்சுரிமை மறுக்கப்பட்டதாகவே உணர்கிறேன். தவறுகளின் ஊற்று மூலத்தைத் இன்னும் ஆழமாக அறிந்துகொள்வதற்கும், அது குறித்த உரையாடல் வெளியை உருவாக்குவதும் மக்கள் பற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை. 80 களின் இறுதியில் எமது சமூகத்தின் ஒவ்வொரு அசைவையும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். எமது இன்றைய அவலத்திற்கு தம்மைத் தவிர யாரும் போராட்டக் கூடாது என புலிகள் மற்றவர்களை அழித்துப் போட்டதும் ஒரு காரணம் என்பதை எப்படி மறுப்பது? சிறிதாக இருந்த மக்கள் இயக்கங்களைக் கூட அவற்றிற்கான கட்டமைப்பைக் கூட புலிகள் சிதைத்து தம்மைக் கடந்து தான் போராட்டம் என்ற நிலைக்கு மாற்றைவிட்டிருந்தனர். இன்று போராடவோ, குரலெழுப்பவோ யாருமில்லை. எல்லாமும் வெற்றிடமாகக் காட்சிதருகிறது.

புலிகள், அவர்களை எதிர்த்தவர்கள், ஆதரித்தவர்கள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள், தேசியவாதிகள் என்று அனைவரும் குழுவாத வேறுபாடுகளுக்கு அப்பாலான விமர்சன வெளியில் இணைந்துகொள்ள வேண்டும்.

விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வெளிவருகின்ற வேளைகளில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களே மேலோங்கியிருக்கின்றன. அரசியல் கட்டுரைகளுக்குக் கூட கனல்பறக்கும் விமர்சனங்கள் பின்னூட்டங்களாக வெளியாகின்றன.

ஆனால் அவை நாம் பேராசைப்படுகின்ற ஒரு ஆரோக்கியமான விமர்சனச் சூழலைத் தோற்றுவிக்கக் கூடியன அல்ல என்பது கவலைக்குரியதே. இவ்வழவு இழப்புகளின் பின்பும், அழிவிகளின் பின்பும் …. இன்ன பிறவற்றின் பின்பும் “ஆயிரம் பூக்கள் மலரக் கூடிய ” ஒரு சூழலை இனியொரு வாசகர்களால் கூடத் தோற்றுவிக்க முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியதொரு விடயமே. ஆயினும் நம்பிக்கையுடன் தொடர வேண்டியிருக்கிறது.

நம்பிக்கைகள் அற்றவர்களாக எப்படி வாழ்ந்தோம் (நான் மட்டுல்ல, நாம் மட்டுமல்ல – பலரும்) என்பதை பின்னூட்டமாக்க முயல்கிறேன்.

1985 களின் பின், இயக்கங்கள் அராஜகத் தன்மையுடன் செயற்படுவது வெளிப்படையான பின், அவற்றில் நம்பிக்கை இழந்தோம். ஈரோஸ் ஒரு மூடுண்ட அமைப்பாக செயற்பட்டு வந்தது. இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களுடன் அது நண்பர்களாயிருந்த போதும் நெருக்கமான தொடர்புகளை அவர்கள் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. விமர்சனங்களையும் அவர்கள் கேட்கவும் தயாராக இருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் அரசியல் தேடலில் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தீப்பொறி குழு அப்போது தீவிரமான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அவர்களுடைய அரசியல் மற்றும் செயற்பாடுகளில் அன்றி அவர்களுடைய நடத்தையில் நம்பிக்கை ஏற்படவில்லை. நிலைமைகள் தீவிரமாகிக் கொண்டிருந்தன. சிறிய குழுவாகிய தாங்கள் மட்டுமே புரட்சிகரச் சக்திகள் எனக்கருதிக் கொண்டு ஏனைய முற்போக்குச் சக்திகள் பற்றி கவனம் எடுத்துச் செயற்படவில்லை எனக்கருதினோம். பெரிய இயக்கங்கள் கொண்டிருந்த ‘நாம் மட்டுமே விடுதலைப் போராளிகள்” என்ற கருத்தியலுக்கு ஒப்பாக தாங்கள் மட்டுமே புரட்சிகரச் சக்திகள் எனக் கருதினார்கள். யாழ் அல்லது தமிழ் மத்தியதர வர்க்கச் சிந்தனையின் வெளிப்பாடு அது போலும்.

தொடர்ந்து பாதுகாப்புப் பேரவை, செவன் டெலா, (நீண்ட காலம் மற்றும் குறிப்புகள் எதனையும் பேண முடியாச் சூழலில் பெயர்களில் தவறுகள் ஏற்படலாம் ) போன்வற்றுடனான தொடர்புகளும் எற்பட்டன. சிறு இயக்கங்கள் வழியாக புலிகளின் அராஜகம் பற்றி அதிகம் தெரிய வந்ததது. அது வளர்ச்சி பெறும் எனக்கருதப்பட்டது. என்.எல்.எப்.டி. தொடர்புகளும் ஏற்பட்டன.

அக்காலத்தில் நெல்லியடியில் தாஸ் – பீற்றர் – கண்ணன் குழுவினருடன் கதைக்கவும் வாய்ப்பு எற்பட்டது. அக்குழு ரெலோவில் தனித்தன்மை கொண்டதாகவும் புலிகளிற்கு எதிராகச் செயற்பட்டும் வந்தது. சுத்த ஆயுதக் குழு அது. ஆனால் அவர்களுக்கு அப்பகுதி மாக்சிச வாதிகள் – முற்போக்கு நபர்கள், இயக்கங்கள் என்பவற்றுடன் தொடர்புகளும் காணப்பட்டன. அது அவர்கள் புலிகளை எதிர்க்கக் கூடிய குழு என்பதனால் ஏற்பட்டதாக இருக்கலாம்.

இதற்கு முன்பாக பனாகொடை மகேஸ்வரனின் குழுவினருடனும் தொடர்புகள் ஏற்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் சிலர் இணைந்து நடாத்திய அரசியல் விமர்சனக் கலந்துரையாடலிலும் பங்கு கொண்டோம். முடிவுகள் எதுவுமற்ற கலந்துரையாடலாக அது முடிவடைந்தது.

புளொட் அமைப்பில் இருந்து யாழ் நகரப் பாதுகப்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவும் மற்றும் நண்பர்களான சிலரும் நம்பிக்கை தருவார்கள் என உறவை ஏற்படுத்தினோம். அவர்களும் விரக்தியினால் செய்வதறியாது நிற்பதைனயே காணமுடிந்தது.

புலிகளிலிருந்து அதன் அராஜகச் செயற்பாடுகளுடன் உடன்பாடு கொள்ள முடியாது விலகி நின்றவர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டது.

இந்தக் காலத்தில் விசுவானந்த தேவாவினைச் சந்திக்கிறோம். அவர் இயக்கத்தில் முரண்பாடுகள் வலுவடைந்து பிழவும் ஏற்பட்ட நிலையில் அதனை சனநாயக வழியில் தீர்வு கண்டதாக அறிந்தோம். அக்காலத்தில் அது முக்கிய செய்தி. அவர் தொடர்ந்தும் விடுதலைப் போரட்டத்தில் முனைப்புடன் ஈடுபடும் வழிவகைகள் பற்றி ஆரோக்கியமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். விசு பற்றி பின்னூட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நான் அறிந்திருக்கவில்லை. விடயம் தெரிந்தவர்கள் சரியான விடயங்களை பதிவு செய்வதினூடாக அதனை அறிந்து கொள்ள முடியும்.

மெல்ல மெல்ல அராஜக வாதிகள் வலுவடைந்து வருவதனை காணமுடிந்தது. முக்கியமாக புலிகள் சிறு குழுக்களையும் தனி நபர்களையும் வலுவிழக்கச் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கான கோட்பாட்டு எற்புடமை ஒன்றும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.

ரெலோ இயக்கத்தின் மீதான தாக்குதல் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. எதனையும் செய்ய முடியவில்லை. எதிர்பதற்குப் பதிலாக மக்கள் ஆதரவும் புலிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலைமை ஆயுதப் போராட்டம் ஒரு அழிவு வழியில் செல்வதை உணர்த்தியது. அயினும் பலர் அதனை நியாயப்படுத்தினார்கள். பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் – அவர்களில் பலர் எல்லாவற்றையும் கைவிட்டு விடுதலைக்காக இணைந்து கொண்டவர்கள் – கொல்லப்பட்டார்கள்.

இயக்கமொன்றினால் இன்னொரு இயக்கத்தின் அரசியல் செயற்பாடு தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அதற்காக எந்த நியாயங்களையும் சொல்ல வேண்டிய அவசியமிருக்கவில்லை புலிகளுக்கு என்பதுவும் அதனை எவரும் எதிர்க்கமுடியாமல் போய்விட்டது என்பதுவும் பலரைக் கலக்கமடையச் செய்தது.

பல்கலைக்கழகத்தில் ராஜினியின் படுகொலையும் மற்றொரு பேரிடியாக அமைந்தது. புலிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விமர்சனம் எதுவுமாக இருக்கலாம். ஆனால் புலிகள் எவரையும் எதற்காகவும் கொலை செய்யலாம் என்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுகிறதைக் கண்டோம். அதற்கான பரந்து பட்ட எதிர்ப்புத் தளம் ஒன்று மக்களிடமிருந்தும் புத்திசீவிகளிடமிருந்தும் உருவாகவில்லை. மாறாக ஆதரவுத் தளமொன்று அல்லது அதனை ஏற்கும் கருத்தியலொன்றும் வளர்ந்து வந்தது.

இதற்காக அதனை எவரும் எதிர்க்கவில்லை என்றோ அல்லது எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள் என்றோ பொருளல்ல. எதிர்ப்பும், ஏற்காமையும் முக்கியத்துமானதாக அமையில்லை.

இராணுவ அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. புலிகளின் அராஜகமும் – பாசிசமும் அதிகரிக்கத் தொடங்கின. நாங்கள் ஒரு சிறிய ஒளிக்கீற்றுத் தென்படுமா என அலைந்தோம்.
அக்காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். உம் டக்ளஸ் தேவானந்தாவும் முக்கியமான ஒருவராக கருதப்படும் நிலை தோன்றியது.

இதனை நீங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் யாழில் அதுதான் நிலைமை. அவர்கள் புலிகளுக்கு மாற்று இயக்கமாக இருந்தார்கள். அவ்வாறு சிந்திப்பதுதான எங்களுடைய அப்பேதைய ‘முற்போக்குத் தனம்” ஆகவும் இருந்தது.

நாயன்மார் கட்டுச் சந்தியில் டக்ளஸ் சென்ற வாகனத்தின் மீது கிட்டுக்குழுவினரின் தாக்குதல் நிகழ்கிறது. டக்ளஸ் குழு அத் தாக்குதலிற்குப் பதில் தாக்குதல் செய்து, பின்னர் பிரமுகர்களின் தலையீட்டால் சமரசம் காணப்பட்ட வேளையில் இறந்த புலிகளின் சடலத்தை “மரியாதையுடன்” ஒபப்டைத்ததார்கள். அதற்கு முன்பாக அல்லது பின்னர் யாழ். பாதுகாப்பு அரனில் புலிகளால் முக்கிய ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் நிகழ்நதது.

புலிகளின் அராஜகச் செயற்பாடுகளின் போது அல்லது ஏனைய இயக்கங்களின் அராஜகச் செயற்பாடுகளின் போது அதனை எதிர்த்தவர்களுக்கு வெளிப்படையான  ஆதரவினை டக்ளஸ் வழங்கினார். அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுப் புகலிடமாக அவர் விளங்கினார்.

தாஸ் குழுவினரின் படுகொலை அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களைக் கேட்கச் சென்ற உறவினர்கள் – நண்பர்கள் – ஆதரவாளர்கள் மீதான தாக்குதலின் போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு டக்ளஸ் பக்கபலமாக இருந்தார். சபாரெட்ணம் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டுவிட்டார் என்ற விபரத்தையும் புலிகளிடம் டக்ளஸே கேட்டுக் கூறியிருந்தார் என்றே அறிகிறேன்.

இதெல்லாம் டக்ளசின் இன்றைய அரசியலை நியாயப்படுத்துவதாக தவறாக அர்த்தப்படுத்திவிடக் கூடாது. 

ஈ.பி.ஆர்.எல்.எப். அன்பர்களுடன் பேசினோம். ஆனால் அங்கும் நிலைமைகள் கவலைக்கிடமானதே எனக்கூறப்பட்டது. உட்கட்சிப் பேராட்டம், ஆயுத பலமற்ற அராஜவாதிகளின் ஆதிக்கம் வலுவடைகிறது என்று சொலல்ப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப். அதிகாரக்குழு பல்லுப்பிடுங்கப்பட்ட பாம்பு என்றார்கள்.

பின்னால் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தலிருந்து டக்ளஸின் வெளியேற்றம் நிகழ்ந்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை சார்ந்து இயங்கிய நிவாரணக்குழு மற்றும் கலாசாரக்குழு கவனத்தை ஈர்;ப்பதாக அமைந்தது. கலாசாரக்குழு மக்கள் மத்தியிலான கலாசாரப் பணிகளை – அரசியலை முதன்மைப்படுத்தியவாறு மேற்கொண்டிருந்தது. யாழில் பலபகுதிகளினுடாக நடாத்தப்பட்ட பெரும் கலாசார பேரணி பெரும் மக்கள் ஆதரவுத் தளத்தினைப் பெற்றிருந்தது. இயக்கங்களின் அராஜகச் செயற்பாடுகளைப் பற்றிப் பேசக்கூடிய ஆற்றலும் சிறியளவில் கிடைத்தது.

ஆனால் அதனையும் விடவில்லை. மாறாக ஒரு ‘மாற்று அரசியல் சக்தியாக” வளரும் எதிர்பார்ப்பும் – செயற்பாடும் குழுவினரிடம் இருக்கவில்லை.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டம் ஒரு பெரும் எதிர்பர்ப்பினை ஏற்படுத்துவதாக ஆரம்பித்தது. புலிகளின் அராஜக – பாசிசச் செயல்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமைகளை அதனூடாக வென்றெடுக்கலாமா என்ற யோசிக்க முற்பட்டோம். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம் பாரிய ஆதரவினை வழங்கி நின்றது பலமும் பலவீனமுமாக அமைந்து. எல்லா ‘வல்லமைகளையும்” இழந்து விட்ட புளொட்டும் அதற்காதரவாக நின்றது. ஆனால் புலிகள் – அப்போது கிட்டு எல்லாவற்றையும் அழித்து துடைத்து முடித்தார்.

பின்னர் பல்லாண்டுகளாக புலிகளின் ஏக தலைமைத்துவத்தின் கீழ் நாமிருந்தோம்.

அன்றிலிருந்து இன்று வரை நாமறிந்த விடயம் அரசியல் கதைப்பதற்கான ஒரு சுதந்திரமான களம், மக்கள் உரிமைகளுக்காகப் போரடுவதற்கான நிலைமை இருக்கவில்லை என்பதுதான்.

புலிகள் ஈழத்தினைப் பெறுவதற்காகப் போராடினார்கள் என்பதற்காக ஏனைய இயக்கங்களைப் பாசிச வழியில் அழித்தனை – மாற்றுக் கருத்துடையோரை அழித்ததனை, ஏனைய மக்கள் விரோத மற்றும் அழிவு வேலைகளை ஏன் சகித்துக் கொண்டிருந்தோம்.

அந்த சக்தியற்ற நிலைமைதான் அல்லது புலிகளின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் விமர்சனமற்ற வகையில் வழங்கப்பட்ட ஆதரவுதான் பின்னாளில் புலிகள் பெரும் பலவீனமுறுவதற்குக் காரணமாக இருந்த பல அழிவுகைள செய்ய இடம் தந்தது. இறுதியாக பெரும் உட்படுகொலைகளையும் மக்கள் விரோதச் செயல்களையும் புரியும் நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றது.

தமிழர்களின் சனநாயக விடுதலைக்காகப் பேராடிக் கொண்டு சனநாயகத்தன்மையற்ற வகையில் கொடுர சித்திரவதை முகாம்களை புலிகள்தான் நடாத்தினார்கள். பெருமளவான தமிழர்களைக் கொன்றிருக்கிறார்கள். இறுதியில் நியாயமற்ற, கொடுரமான உட்படுகொலைகளையும் புலிகள் செய்திருக்கிறார்கள். இந்த பெரும் தவறுகள் நடந்தமைக்கான காரணத்தினை நாம் அறிய வேண்டும். அரசியல் உரிமைகளை புலிகளிடம் அடகு வைத்து விட்டு இருந்தமைதான் காரணம்.

இன்று அரசுதான் மீள்குடியேற்றத்தினையும் அபிவிருத்தினையும் செய்ய வேண்டுமென்பதற்காக, அரசுதான் வலுவுடைய சக்தியாக இருக்கிறது என்பதற்காக அதன் ஒடுக்குமுறைகளைச் சகித்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தப்படுவதில் என்ன சமூக நியாயாம் இருக்கிறது. அபிவிருத்திக்காக அநியாயங்களை ஏற்கவேண்டும் எனக்கூறுவதில் என்ன நியாhயம் இருக்கிறது.

மாறாக எல்லா உரிமைகளையும் மக்கள் போராடித்ததான் பெறவேண்டியிருக்கிறது. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களிடமிருந்து மட்டுமன்றி தமிழ் தேசிய போராட்டச் சக்திகளிடமிருந்தும் உரிமைகள் மறுக்கப்படுகிற போது போராடித்தான் அவற்றைப் பெறவேண்டியிருக்கிறது. முற்போகக்குச் சக்திகள் மக்கள் விரோதச் செயற்பாடுகளில் அல்லது தவறுகளில் ஈடுபடும் போதெல்லாம் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது,  போராவேண்டியிருக்கிறது.

முதலில் அதற்கான அரசியல் உரையாடலில் ஈடுபடுவோம். அதற்கான அரசியல் உரிமையை நாம் பெறுவோம்.

நிலைமைகள் தூய்மையற்றவை ; புனிதமற்றவை. ஏனெனில் நாம் எதிர்கொள்ளும் சமூக நிகழ்வுகள் அத்கயைன !

Exit mobile version