முதலில் ‘தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் – ஆற்றலும் ஆற்றலின்மையும்” தொடர்பாக மேலும் இரு விடயங்களைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
ஒன்று முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த குழுக்கள், தனிநபர்கள் பற்றி மேலும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
தமிழ்த் தேசிய முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த குழுக்களில் ‘புதிய பாதை” குழு பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அவர்களுடைய தோற்றம், வளர்ச்சி, தோல்வி குறித்து ஐயர் விரிவாக எழுதியிருக்கிறார்.
புதிய பாதைக்குழுவுக்கு முன்பாக ஈரோஸ் இயக்கம்
இதற்கப்பால் ஒரு அரசியல் சக்தியாக அமையாதபோதும், சனநாயக மறுப்பிற்கெதிராக காத்திரமான போரட்டங்களை நடத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவையினையும் பல்கலைக்கழக மாணவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசினதும், இயக்கங்களினதும், புலிகளினதும் அராஜகங்களை எதிர்த்து நின்ற ஒரு சனநாயக சக்தியாக விளங்கிய பாத்திரம் 1985களில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பேரவைக்குண்டு.
அத்துடன் பல்கலைக்கழகத்தினை மையமாகக் கொண்டு இயங்கிய கலாச்சாரக் குழுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. இயங்கங்களின் அராஜகச் செயற்பாடுகளினால் வெறுப்புற்று இருந்த இளைஞர்களின் கூட்டாக உருவாகிய கலாச்சாரக் குழு, இனவிடுதலை மற்றும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க அரசியல் பற்றிய விமர்சனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றியது. இயக்க மோதல் பற்றிய விமர்சனத்தினையும் முன்வைத்தது.
புலிகள் தமிழர்களின் தனியொரு சக்தியாக தங்களை மாற்றிக் கொண்ட பின்னாளில் மாற்றுக் கருத்துக்களுக்கான சுதந்திரம், துப்பாக்கி முனையில் மறுக்கப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்த செயற்பட்ட ‘சரிநிகர்” குழுவும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.
முற்போக்குவாதச் சிந்தனைகளை முன்வைத்த தனிநபர்களில், விசுவானந்ததேவா முக்கியமானதொரு இடத்தினை வகிக்க வேண்டியவராக இருந்தார். ஆனால் தீவிரமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க இருந்த வேளை அவரின் மறைவு ஏற்பட்டது.
இரண்டாவது விடயம் கட்டுரையில் 1985 களில் தழிம் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்குவாதம் ஒரு வலுவான இடத்தினைப் பெற்றிருந்தது எனக்குறிப்பிட்டிருந்தேன்.
இளைஞர் இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே முற்போக்குவாதச் சிந்தனைகள் அவ்வியங்கங்களில் வலுப்பெற்றிருந்ததனை அவதானிக்கலாம். அதே வேளை தொடர்ந்தும் முற்போக்குவாதச் சிந்தனைகளை வலியுறுத்திய செயற்பாடுகள் இடம்பெற்றன. இயக்கங்களிற்குள்ளும், இயங்கங்களிற்கு வெளியேயும் பிற்போக்கு வாதத்திற்கெதிராக முற்போக்குச் சிந்தனை தொடர்ச்சியாக ஒரு போராட்டத்தினை மேற்கொண்டது. முற்போக்குச் சிந்தனையை முன்னிலைப்படுத்துவதற்காக பல இழப்புக்களும், உயிர்த்தியாகங்களும் இடம்பெற்றது. புதிய பாதை சுந்தரம் முதல் இது தெடர்ந்து சென்றது.
இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிற முக்கியமான விடயம், தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் 1980 களிலிருந்து ஒரு வலுவான இடத்தினைப் பெற்றிருந்த போதிலும் ஒரு பெரும் முன்னணிச் சக்தியாக அணிதிரள வில்லை: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தலைமைத்துவப் பாத்திரத்தினையும் பெற்றிருக்கவில்லை என்பதே.
தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் பல்வேறு இயங்கங்களிலும் இருந்து தமது கருத்தியல் போராட்டத்தினை தீரத்துடன் மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் பல்வேறு இயக்கங்களிலிருந்த தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் தங்களை ஒரே அணியினராக காணத்தவறியதுடன், தங்களை இணைத்துக் கொண்டு ஒர் பலமான அணியாக மாற்றிக் கொள்ளவும் முற்படவில்லை.
அதற்கான ஒரு பொது வேலைத்திட்டத்தினை குறைந்த பட்சம் பொதுக் கருத்துக்களில் உடன்பாடு கண்டுகொள்வதற்குக் கூட இணைந்து செயற்படவில்லை.
பல்வேறு இயக்கங்களிலும் இருந்து முற்போக்குச் சிந்தனைகளை முன்னிலைப்படுத்தி பிற்போக்குவாதிகளுடன் முரண்பட்டுக் கொண்டு செயற்பட்டு வந்த முற்போக்கு வாதிகள் தங்கள் சார்ந்த இயக்கத்திற்கு அப்பால் இருந்த முற்போக்குவாதிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான விரிவான சிந்தனையை வெளிக்காட்டவில்லை. முரண்பட்டுக் கொண்டு இயங்களிற்குள்ளேயே தங்கள் வாழ்வைக் கழித்தனர். சகிக்க முடியாத போது விரக்தியுற்று வெளியேறிச் சென்றனர்.
இன்றும் இத்தகையதொரு போக்கு நிலவவில்லை என உறுதியாக கூறமுடியாது.
இதற்கான காரணம் ஆராயந்தறியப்பட வேண்டும்.
1980 களில் இலங்கையில் மத்திய தரவர்க்கத்தின் பெரு வளர்ச்சி முக்கியமானதொரு விடயமாக அமைகிறது. தேசிய மொழிகளில் கல்வி கற்ற மத்திய தரவர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களால் தெற்கில் “அரசுக்கெதிரான சிங்கள இளைஞர் கிளர்ச்சி” மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக வட கிழக்கில் பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆயுதப் போராட்டம் மேற்கிளம்பியது.
மத்திய தரவர்க்கத்திலிருந்து வந்த இளைஞர்களே தமிழ்த் தேசிய முற்போக்குவாதத்தினை முன்வைத்துச் செயற்பட்டவர்கள்.
மாக்சிச – லெனினச அரசியல் கட்சிகளிலிருந்து அச் சிந்தனைகளின் வழிவந்து இனவிடுதலைப் போராட்டத்தினை முதன்மைப்படுத்தியவர்களாலும், இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆயுதப் போராட்டத்தில் இணைந்து பின் மாக்சிச – லெனினச சிந்தனையை அடையப்பெற்றோராலும் தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் முன்வைக்கப்பட்டது.
பிரதானமாக யாழ்ப்பாணப் பிரதேசத்தினை மையமாகக் கொண்ட மத்தியதர வர்க்க இளைஞர்களே பெரும் பங்காற்றியவர்கள். யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் விவசாயிகள், மீனவர்கள், உதிரித்தொழிலாளர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் குடும்பத்தினை – சமூகத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் இளைஞர் இயக்கத்திலும், தமிழ்த் தேசிய முற்போக்குவாத அணியிலும் பங்கு கொண்டிருந்தனர்.
இவர்களுடைய அரசியல் குணாம்சம்தான் ஐக்கியப்படாமை ! இவர்களுடைய அரசியல் குணாம்சம் பிற்போக்குவாதத்திற்கெதிராக ஐக்கியப் படுவதன் அவசர அவசியத் தேவையை உணர்ந்து கொள்ள முடியாமல் போன அரசியல் வரட்டுத்தனம்.
ஐக்கிய முன்னணி குறித்த அடிப்படைத் தந்திரோபாயங்கள் குறித்த குறைந்தபட்சத் தெளிவின்மை என்பது புலிகளிடம் மட்டுமல்ல ஏனைய அமைப்புக்களிடமும் காணப்படாமை என்பது இதன் காரணங்களில் முக்கியமான ஒன்றாகும்.
புலிகள் ரெலோ இயக்கத்தினை அழித்த பின்பு, ஏனைய இயக்கங்களையும் அழிப்பார்கள் என உறுதியாக தெரிந்து கொண்ட பின்பு, எஞ்சி நின்ற இயக்கங்கள் அதற்கெதிராக ஒன்றுபட்டுச் செயற்பட முடியாமல் போன அரசியல் வரட்டுத்தனத்தினைக் கண்டிருக்கிறோம். அவ்வியக்கங்களிலிருந்த முற்போக்கு வாதிகள் கூட இதற்கு விதிவிலக்காகவில்லை.
கருணா – பிரபா முறிவிற்கும் கருணா கூறியதும் பிரபாகரனின் அரசியல் வரட்டுத்தனத்தினைத்தான். பிரபாகரன் மற்றம் பாலசிங்கம் இருவரினதும் போக்குகள் இத்தகையனவாகவே இருந்தது என்பதை அடேல் பாலசிங்கமும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தப் போக்கினை தமிழ் மத்தியதர வர்க்க இளைஞர்களின் அரசியல் வரட்டுத்தனம் என நான் குறிப்பிட்ட முனைந்தாலும் அது முழுமையான விஞ்ஞான பூர்வமான கருத்தல்ல என்பதை உணர்கிறேன்.
ஒவ்வொரு வர்க்கங்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைப்புக்களின் பொதுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க தத்துவார்த்தத் தெளிவின்மையை காரணமாகக் கூறும் அதே வேளை பொதுவான அரசியல் தளத்தில் ஒன்றிணைவதற்கான அனைத்து அடிப்படைகளையும் நிராகரிகும் போக்கை நிலப்பிரபுத்துவத் தூய்மைவாதத்துடன் தொடர்பு படுத்தலாம். புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் அழிக்கப்பட்ட பின்னாலும் அரசியலை நோக்கிய ஒன்றிணைவிற்குப் பதிலாக குழு சார்ந்ததும், நபர்கள் சார்ந்ததுமான ஒன்றிணைவே பிரதானப்படுத்தப்பட்டது.
தமிழ் மத்தியதர வர்க்க இளைஞர்கள் மத்தியிலிருந்து தோற்றம் பெற்ற தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை பற்றியெல்லாம் பேசினாலும், மாக்சிச – லெனினிய சிந்தனைகளைப் பேசினாலும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து செயற்படத் தயங்கினர். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனிநாடு பெற்றுக்கொள்வதனால் சமூகப் பிரச்சினைகைளத் தீர்க்கலாம் என்ற கருத்தின் ஆழமான செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர். பேரினவாத அரசினதும் மற்றும் இராணுவத்தினதும் ஒடுக்குமுறைகளுக் கெதிராக மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க முயலவில்லை. சாதி மற்றும் சமூக ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த போதெல்லாம், “அனைத்து தமிழர்களையும் இணைத்து போரட்டத்தினை முன்னெடுக்கிறோம்” என்ற வாதத்தினை முன்வைத்து இப்போராட்டங்களுடன் இணைந்து கொள்ள முயலவில்லை.
இதே சமயம் சர்வதேச ரீதியிலும் ஒடுக்குமுறைக்கெதிராக நடைபெற்ற மக்கள் போரட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும் முயலவில்லை. அத்தகைய போரட்டங்களின் பால் அக்கறை செலுத்தி, அவர்களுடன் இணைந்து செயற்பட முயலவில்லை. பாலஸ்தீனத்தவர்களின் போராட்டத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது அவர்களிடமிருந்து ஆயுதப்பயிற்சிகளை மட்டும் பெற்றுக்கொண்டமை கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்தியப் புரட்சிகர சக்திகளுடன் – மக்கள் விடுதலைப் பேராளிகளுடன் இணைவை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு சிலர் முயற்சித்தாலும் அது ஒரு கனதியானதல்ல.
இந்த நிலைமைகளால், தமிழ்த் தேசிய முற்போக்குவாதிகள் ஒரு பெரும் போராட்டச் சக்தியாக முன்னெழ முடியாமல் போனது. தமிழ்த் தேசிய முற்போக்குவாதம் ஒரு போரட்டக் கருத்தியலாக வளராமல் மழங்கடிக்கப்பட்டது.
இன்னும் வரும்..
முன்னயவை:
முற்போக்குத் தமிழ்த் தேசியம் – ஆற்றலும் ஆற்றலின்மையும் : விஜய்