Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

இன்று இலங்கையின் வடகிழக்கு மக்களின் ஒவ்வோர் அசைவிலும் ஒடுக்குமுறை இராணுவையும் தனது கோரக்கரங்களால் கட்டுப்படுத்துகிறது. சிவில் நிர்வாகம் இராணுவ தலைமையகத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றது. மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வின் ஒவ்வோர் நகர்வும் இராணுவத்திற்கும் அதன் துணைக் குழுக்களுக்கும் தெரியாமல் நடந்தேற முடியாது. ஒரு தேசிய இனத்தை, ஒரு மக்கள் கூட்டத்தை சிதைத்து, சீர்குலைத்து சிதறடிப்பதற்கு அப்பாவி மக்களின் மீது ஒவ்வொரு முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.

சிங்கள பௌத்த பேரினவாத அரசு தனது இனச் சுத்திகரிப்பு நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கருத்தியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும், பௌதீக இருப்பிலும் தனது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
இந்த மூன்று வேறுபட்ட தளங்களிலும் தனது தாக்குதலை நடத்துவதற்காக வன்னியில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்களை சில இரவுகளுக்குள் கொன்றொழித்துவிட்டு உலக அரங்கில் இறையாண்மையுடைய அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் பேரினவாத அரசு அதன் முகவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

முதலில் சுயநிர்ணய உரிமைக்காக மக்களின் போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் என்றும் இது புலிகளுக்கு மட்டுமே உரித்தான பயங்கரவாதப் போராட்டம் என்றும் இனவாதப் போராட்டம் என்றும் கருத்தியல் தளத்தில் இலங்கை அரச பயங்கரவாதிகள் உலகின் ஏகபோக அரசுகளின் துணையோடு நடத்ததுகின்ற தாக்குதல் ஆபத்தானது. அழித்துத் துவம்சம் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது, அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக சூறையாடப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகின்ற கருத்தியல் யுத்ததத்தின் தமிழ் முகவர்களின் வலைப்பின்னல் பரந்து விரிந்தது.

இரண்டாவதாக, வடக்கிலும் கிழக்கிலும் இனப்படுகொலைக்குப் பின்னான பொருளாதாரம், உற்பத்தி என்பன இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு சந்ததையைச் சார்ந்த உற்பத்திகளாகட்டும், உள்ளூர் உற்பத்தி நிலைகளாகட்டும் இராணுவத்தின் நேரடியான தரகுகள் ஊடாகவே நடத்தப்படுகின்றன.

மூன்றாவதாக, தமிழ்ப்பேசும் மக்களின் பௌத்தீக இருப்பைக் கேள்விகுள்ளாக்குவது. வட கிழக்கில் சந்திக்குச் சந்தி புத்தரின் சிலைகள் எழுகின்றன. இராணுவம் நிரந்தரமாக நிலைகொள்ள ஆரம்பித்துவிட்டது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திய அதே ஆக்கிரமிப்பைப் போன்று இராணுவத்தின் குடும்பங்கள் அவலத்தில் வாழும் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. பல் தேசிய நிறுவனங்கள் அகதிகளான மக்களின் நிலங்களைச் சூறையாடுகின்றன.

இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்; மக்களின் சிவில் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்பன போன்ற முழக்கங்களே தமிழர் அரசியலில் அக்கறை கொண்ட சாதாரண மனிதாபிமானி கூட முன்வைக்கக்கூடியவை. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இராணுவம் தமிழர் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதைத் தாம் விரும்பவில்லை எனக் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தார்.
தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்காக உருவான கூட்டமைப்பின் தலைவர், பழுத்த அரசியல்வாதி இந்தக் கருத்தை முன்வைத்தமை கண்மூடித் தனமாக அவரை நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது.

இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் சம்பந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய அதிர்வலைகளை எதிர்கொள்ள வழமையான இலங்கை அரசின் கருத்தியல் முகவர்கள் களத்தில் இறங்க ஆரம்பித்தனர். சம்பந்தரின் உரையின் உள்ளர்த்ததை மேலும் கீழும் ஆராய்ந்து புதிய விளக்கங்களை முன்வைத்தனர். சம்பந்தர் கூறியவற்றை அவர்கள் தங்களது மொழியில் வேறுவகையில் நியாயப்படுத்தினர்.

இலங்கை அரசு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள கருத்தியல் யுத்ததம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல அடுக்குகளாக கடந்த நான்கு வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.

1.சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் தவறானதும் அழிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.

2. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான இனவாதம்.

3. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ‘அவர்கள் முன்வைக்கின்ற’ அபிவிருத்திக்கு எதிரானது.

4. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதீய ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகிறது.

5. சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ‘சர்வதேச அரசுகள்’ ஏற்றுக்கொள்ளாது.

இது போன்ற வெவ்வேறு அளவிலான பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சனைகளூடாக இலங்கை அரசின் கருத்தியல் யுத்தம் ஆரம்பிக்கும் அதே வேளை அதற்கான இடைவெளிகளையும் கடந்தகால போராட்டத்தின் தவறுகள் விட்டுச்சென்றிருந்தது.

இக்கருத்தியலை தமிழ்ப் பேசும் மக்கள் மீது உட்செலுத்தும் அதே வேளை அவர்களை அழித்து, சூறையாடு துவம்சம் செய்யும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது பேரினவாத அரசு.

இன்று இந்தக் கருத்தியலுக்கு அப்பால் இலங்கையின் எல்லைக்குள் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள யாரும் எஞ்சியிருக்கவில்லை. அதன் பிரதான முகவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய குறுந்தேசியவாத ஏகாதிபதிய சார்பு வாக்குப் பொறுக்கும் அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியாகக் கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய முழக்கத்தை தமது வாக்கு வங்கியை நிரப்பிக்கொள்வதற்காக மட்டுமே இன்றுவரை பயன்படுத்தி வந்துள்ளது.

இலங்கையின் மிகப் பயங்கரமான இனக்கொலையாளி சரத் பொன்சேகாவுடனும், பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் வாக்குப் பொறுக்கிய தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தமிழ்த் தேசிய அரசியல் வெறும் வாக்குப் பொறுக்கும் கருவி மட்டுமே.

முள்ளிவாய்க்காலில் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படும் வரைக்கும் தமிழ்த் தேசியயம் என்பது இந்திய அரசிற்கும் ஒரு வகையில் மேற்கு வல்லரசுகளுக்கும் தேவையானதாக அமைந்திருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையிலான உள்முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்கான இராணுவ அரசியல் தேவைகள் காணப்பட்டன. இந்த நிலையில் தமிழ்த் தேசிய அரசியலை தமது நலன்களின் அடிப்படையில் பாதுகாக்கும் தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது. அதன் மறுபக்கத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியிலான எழுச்சிகளை ஒடுக்குவதற்கு இலங்கை அரசிற்கும் அது பயன்பட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் ஆயுதப் போராட்டமாக எழுச்சி பெற்ற வேளையிலும் இதே அரசியல் தொடர்ந்தது. 90களின் இறுதிவரை நகர்ந்த இந்த அரசியல் சூழலில், ஒரு புறத்தில் தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், மறு புறத்தில் முழு இலங்கையுமே முடிவுகளற்று அழிந்துகொண்டிருந்தது. அதன் பின்னான காலப்பகுதியில், தமிழ்த் தேசிய அரசியலின் தேவை இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் அற்றுப் போக, புதிய அரசியல் சூழல் தோன்றுகிறது.

அதனோடு கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உருவாகின்றது. ஏற்கனவே அழிக்கப்படக்கூடிய அரசியல் கட்டமைப்புக்களைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான முன் நடவடிக்கைகளை அதன் தேவை அற்றுப்போன அனைத்து நாடுகளும் மேற்கொள்ள ஆரம்பித்தன. ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் புலிகள் தடைசெய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச தொடர்பாளரும் ஆயுத வழங்குனருமான கே.பி உள்வாங்கப்பட்டார். பல்வேறு நாடுகள் ஊடாக இலங்கை அரசு அழிவு ஆயுங்களைக் குவித்துக்கொள்வதற்கு அனுமதி கிடைத்திருந்தது. இரசாயன ஆயுதங்கள் தங்கு தடையின்றி இலங்கை இராணுவத்தின் கைகளில் கிடைத்தது.

புலிகளின் நம்பிக்கைக்கு உரிய ஜனநாயக முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பிக்கிறது. வாக்கு வங்கிகள் பலமடைகின்றன. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் மத்தியில் வயது முதிர்ந்த ‘தேசியத் தலைவராக’ சம்பந்தன் தரமுயர்கிறார்.

எண்பதுகளின் இறுதியில் புலி ஆதரவாளர்களை வெட்டிக் கொலைசெய்வது என்ற அடிப்படையில் தோன்றிய மண்டையன் குழு என்ற இந்திய இராணுவத் துணைக்குழுவை சுரேஷ் பிரேமச்சந்திரனே தலைமை தாங்கினார். யாழ்ப்பாண்த்தில் அசோக் ஹொட்டேலை தலைமையகமாகக் கொண்டியங்கிய இந்தக் குழுவினால் கொலைசெய்யப்பட்ட அப்பாவிகள் பலர். இந்த சுரேஷ் பிரேமச்சந்திரனே புலிகளின் அழிவின் பின்னர் இந்திய அமரிக்க நலன் சார்ந்த அரசியலை இலங்கையில் முன்னெடுப்பதற்காக தயார்படுத்தப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்.

அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட போது அவர் இன்று கூறுவது போன்றே வடகிழக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறிய சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவரானார். இலங்கை அரச சலுகைகளைப் பெறுவதில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளேயே சர்ச்சைக்கு உள்ளான சம்பந்தரை பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக விக்கிலீக்ஸ் கேபிளின் தகவல் ஒன்று கூறியது. அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்துவதற்காக தயார்செய்யப்பட்ட பிரதான மனிதனே சம்பந்தர்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவனும் சட்டத்தரணியும் மக்களுடன் குறைந்தபட்ச தொடர்புகளுமற்ற கொழும்புத் தமிழரான சுமந்திரன் அழிவின் பின்னர் தமிழ்த் தேசியத்தைக் கையகப்படுத்த தயார்செய்யப்பட்ட மூன்றாவது நபர்.

இந்த மூன்று பிரதான தேசிய அரசியல் கோமாளிகளதும் பின்னணியில் இந்திய – அமரிக்க அரசுகளே செயற்படுகின்றன. தமிழரசுக் கட்சியின் ஆரம்பத்திலிருந்தே அதன் அரசியலின் பின்னணியில் செயற்பட்ட அதே அரசுகள் இன்றும் செயற்படுகின்றன. இந்திய அமரிக்க ஆண்டவர்கள் சொல்வதை அடியார்கள் செய்கிறார்கள். அவ்வளவு தான். இதற்கு மேல் எதுவும் கிடையாது.

இவர்கள் அமரிக்கா சென்றுவிட்டு வரும் வழியில் கனடாவில் நடந்த கூட்டத்தில் பேசிய சம்பந்தர் வடக்குக் கிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானதில்லை என்றார். அது அவரது எஜமானர்கள் அவருக்குக் கொடுத்த உத்தரவு. கடந்தவருடம் இந்தியா சென்று திரும்பிய சுமந்திரன் நாம் ஒன்றும் செய்ய முடியாது, இந்தியா சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்றார்.

இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அரசுகளுக்கு மகிந்த அரசின் இருப்பும், இனச் சுத்திகரிப்பும் இன்றைய தேவை. அதன் கருத்தியல் முகவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அவர்களின் அச்சுக்களாக தோற்றம் பெற்ற சிறிய கீழ் நிலை முகவர்களே சம்பந்தனின் உரைக்கு பொழிப்பு எழுதும் எழுத்துலக ஜாம்பவான்கள். கொழும்பு சிங்களத் தரகு முதலாளிகளுக்கும் தமிழ் தரகு முதலாளிகளுக்கும் ஆண்டாண்டு காலமாக திரைமறைவில் நடைபெற்ற நாடகத்தை இப்போது பொது மேடையில் நடத்துகிறார்கள். சம்பந்தனையும் சுமந்திரனையும் அவர்களின் ஜால்ராக்களையும் அம்பலப்படுத்தும் அதே வேகத்தில் இதன் அடியில் படர்ந்திருக்கும் அரசியலையும் வெளிக்கொண்டுவரத் தவறினால் புதிய சம்பந்தர்கள் வேறு முகத்தோடு களத்தில் இறங்கிவிடுவார்கள்.

Exit mobile version