‘கோபம் கொண்ட இளம் மனிதன்’ என்ற அமைப்பை உருவாக்கிக்கொண்ட ஹம்சா இஸ்லாமிய ஊடகங்களில் கதாநாயகனானார். லண்டனில் ஒலிபரப்ப்பான இஸ்லாமிய வானொலியில் ஒசாமா பின்லாடன் போன்ற அடிப்படைவாதிகளது வெறிகொண்ட பற்றாளானாக தன்னை வெளிப்படுத்தினார். இஸ்லாமிய கொடி, குரான், ஒழுக்கம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்ற அனைத்தையும் தனது முழக்கமாகக் கொண்டார். மேற்கின் மீதான வெறுப்பு அதிகார வர்க்கத்தின் மீதானதாக இல்லாமல் அப்பாவி வெள்ளையின மக்கள் மீதானதாக திசைதிருப்புவதில் அபு ஹம்சா திட்டமிட்டுச் செயற்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் அல்-கயிதா பயிற்சி முகம்களுக்கு எல்லாம் சென்று லண்டன் திரும்பிய அபு ஹம்சா லண்டனில் தனது உணர்ச்சிப் பேச்சுக்கள் ஊடாக ஒரு இளைஞர் கூட்டத்தை தன்னை நோக்கி இணைத்துக்கொண்டார். வெறிகொண்டிருந்த இந்த இளைஞர் கூட்டம் இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பவர்களை கொன்று தின்பதற்கும் தயாராகவிருந்தது.
பிரித்தானிய அரசாங்கம், அதன் போலிஸ் மற்றும் உளவுப் படைகள் போன்றன அபு ஹம்சாவைக் கண்காணிப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. குரூரமான பயங்கரவாதி ஹம்சாவைக் கைது செய்ய ஆதரங்களைத் தேடிக்கொண்டிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்தது. பிரித்தானிய அரசைத் திட்டித் தொலைக்கும் இப்படியான பயங்கரவாதியைக் கைது செய்வதற்குக் கூட தகுந்த ஆதாரத்தை எதிர்பார்க்கும் பிரித்தானிய அரசின் ஜனநாயகத்தை மக்கள் வியந்து பாராட்டினர்.
காலம் சுழன்றது. அபு ஹம்சா ஒவ்வொரு நாடகக் கடத்தப்பட்டு அமெரிக்காவில் சிறைப்பிடிக்கப்பட்டார். பிரித்தானியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சந்தடியின்றி நடைபெற்ற வழக்கில் அபு ஹம்சா பிரிதானிய அரசின் உளவாளி என்ற தகவல் மே மாத ஆரம்பத்தில் வெளியாகியது.
பிரித்தானிய அரச உளவு நிறுவனம் ஹம்சாவை வளர்த்து உளவாளியாகப் பயன்படுத்தி அமெரிக்காவில் கைதானபின்னர் கைவிட்ட வழக்காக இது தொடர்கிறது.
அபு ஹம்சா, மோடி போன்ற மதவெறியர்கள், லூ பென் ஹிடலர் போன்ற நிற வெறியர்கள், UKIP, BNP போன்ற தேசிய அமைப்புக்கள் -அதிகார வர்க்கங்களால் தீனிபோடப்பட்டு அவற்றின் நலன்களுக்காக வளர்க்கப்பட்டவர்கள்.
பிரித்தானிய அரசு தனக்கு எதிரான பயங்கரவாதியைத் தானே வளர்த்தமை ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. உலகம் முழுவதுமுள்ள அரசுகள் இவ்வாறு பல்வேறு துறைசார் கொலைஞர்களை வளர்த்து அதிகாரிகளாக்கியிருக்கின்றன. சிலரை கொன்றுபோட்டிருக்கின்றன. தலைமை தவிர்ந்த ஏனையோரில் பெரும்பாலானவர்கள் வெட்டப்படுவதற்காக வளர்க்கப்படும் ஆடுகள்!
இவ்வாறு அழிக்கும் அரசுகளதும் அதிகார வர்க்கங்களதும் நலன்களுக்கா வளர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் விடப்படுகின்ற இந்தப் பயங்கரவாதிகளிடையேயான பொதுவான இயல்பு:
1. தாம் மேலானவர்கள், தமது கலாச்சாரம் மேலானது என்று பிராச்சாரம் மேற்கொள்வார்கள்.
2. ஒரு குறித்த இனம் அல்லது இனக்குழுவின் மேலான வெறுப்பை மக்கள் மத்தியிக் விதைப்பார்கள்.
3. கோட்பாடுகளற்ற வெற்று முழக்கங்களான இவற்றிற்காக கொடிகள், வரலாற்றுச் சின்னங்கள், தனிமனிதர்கள் போன்றோரைப் புனிதமானவர்களாக்கிக் கொள்வார்கள்.
4. இதன் பின்னர் தம்மைச் சுற்றி வெறிபிடித்த இளைஞர் கூட்டம் ஒன்றை உருவாக்கிக் கொள்வார்கள்.
5. இவை அனைத்திற்கும் தத்துவார்த்த விளக்க்ம் கூறும் தனி மனிதர்களையும் உள்வாங்கிக் கொள்வார்கள்.
இந்த ஐந்து அடிப்படைகளும் திருப்திப்படுத்தப்படும் நிலையில் வியாபாரம் தயாராகிவிடும். இதன் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் உளவு நிறுவனங்களாகவோ அழிக்கும் அரசுகளாக்வோ தான் காணப்படும். சில வேளைகளில் தனி மனிதர்களால் தயாரிக்கப்படும் இவ்வாறான குழுக்களை அரசுகள் விலைகொடுத்து வாங்கிக்கொள்ளும். அபு ஹம்சா முதலாம் வகை; தலிபான்கள் இரண்டாம் வகை.
இவ்வாறான அடிப்படைவாத அமைப்புக்களின் எல்லா இயல்புகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் காணப்படுகின்றன.
வெறிகொண்டவர்கள் போல நடிக்கும் தலைவர்கள், அவர்களால் தூண்டிவிடப்படும் அப்பாவிகளான இளைஞர்கள். மாயைக்குள் கட்டிவைக்கப்பட்டுள்ள மக்கள் போன்ற அனைத்து அடிப்படைவாத இயல்புகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் காணப்படுகின்றன.
90 களின் ஆரம்பத்தில் ஜீ.ஐ.ஏ என்ற அல்ஜீரிய இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு பிரஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக பிரஞ்சு அரசாங்கத்தாலேயே உருவாக்கப்பட்டது. அது அழிக்கப்பட்ட சில வருடங்களின் பின்னரும் ஜீ,ஐ,ஏ இன் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் அதன் கொள்கைகளை வழி நடத்தினர். ஜீ,ஐ,ஏ பிரஞ்சு அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியது. போராடும் வழிமுறை தவறு என்று விமர்சித்து போராட்டத்திற்கு உறுதியான அரசியல் வழிமுறை ஒன்றை முன்வைக்க விழைந்த பலர் கொன்றொழிக்கப்பட்டனர்.
புலிக்கொடி, பிரபாகரன் போன்றவர்கள் மீது இந்த அமைப்புக்கள் கட்டியெழுப்பும் போலிப் புனிதத்துவம் தலிபான்களின் செயற்பாட்டை விஞ்சியதாகப் பலதடவைகள் காணப்படுகின்றன. ஆண்ட தமிழர்கள் என்று யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு இவர்கள் கட்டமைக்கும் தற்பெருமைப் புனைவுகள் ஏனைய அடிப்படைவாத அமைப்புக்களுக்கு எந்தவகையிலும் குறைந்தவையல்ல.
இக்குழுக்கள் தம்மைச் சுற்றி இளையோர் கூட்டம் ஒன்றை வளர்த்துள்ளார்கள். தமக்கு ஏற்ற ஊதுகுழல் ஊடகங்களை பெரும் பணச்செலவில் அமைத்துள்ளார்கள். மக்களுக்கு ஒரு பக்க உண்மையை மட்டுமே கூறி வெறித்தனத்தையும் கண்மூடித்தனமான பற்றையும் வெறியையும் அடிப்படை ஜனநாயக விழுமியங்களைக் கூட மத்திக்காமல் வளர்த்துள்ளார்கள்.
இக் கூட்டங்கள் தேசியம் என்று கூறும் தலிபானிசம் தேசியமல்ல. உளவு நிறுவனங்களிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயன்பாட்டுப் போகும் இவ்வமைப்புக்களின் தலிபானிசம் அழிக்கப்பட்டு புதிய புரட்சிகரமான அமைப்புக்கள் கடந்த காலம் குறித்த விமர்சனம் சுய-விமர்சனங்களோடு உருவாக்கப்பட வேண்டும்.
இங்கு தமிழ்த் தலிபான்கள் எந்த உளவுப்படையுடன், எந்த அரசுடன் எப்படி வேலைசெய்கிறார்கள் என்பதற்கு அப்பால் அடிப்படையில் இனக்கொலையாளி ராஜபக்சவிற்குத் துணை போகிறார்கள் என்பதே பிரதானமானது.
இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு இரண்டு முக்கிய தேவைகள் உண்டு:
1. தான் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு எதிராகப்போராடுகிறேன் என்று சிங்கள மக்களுக்களை சிங்கள பௌத்த மாயைக்குள் வைத்திருக்க வேண்டும்.
2. தடையின்றி நிலப்பறிப்பையும் இனச்சுத்திகரிப்பையும் தொடர வேண்டும்.
இந்த இரண்டிற்கும் ஏதுவான அமைப்புக்களைப் புலம்பெயர் நாடுகளில் காணலாம். உணர்ச்சி வியாபாரம் நடத்தும் இந்த அமைப்புக்கள் ராஜபக்சவின் இன்றைய தேவைகளைப் பூர்த்திசெய்கின்றன.
ஒரு போராட்டம் தோல்வியடையும் போது அதன் தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்வதும், அவற்றை விமர்சித்து புதிய வழிமுறைகளை முன்வைப்பதும் மனித இயல்பு. தலிபான்கள் அப்படியல்ல. பழம் பெருமை பேசுவதையே அவர்கள் தமது வியாபாரத் தந்திரமாகக் கொள்வர். தமிழ்த் தலிபான்களிடமும் இதனைக் காணலாம். அதிகார வர்க்கம் தலிபான்களைத் தேவையான போது பயன்படுத்திவிட்டு அழித்துவிடும். புலம்பெயர் தமிழ்த் தலிபான்களின் வாழ்வுக்காலம் இன்னும் சில வருடங்களே நீடிக்கும்.அவர்களின் அழிவோடு போராட விழையும் அனைவரும் அழிக்கப்படுவர். அதனால்தான் தமிழ்த் தலிபான்களின் தலைமை ஜனநாயக முற்போக்கு சக்திகளால் பிரதியிடப்பட்டு உறுதியான அரசியல் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.