மாறாகச் சமூகத்தின் தன்மை , உற்பத்தி, உறவுகள், வர்க்க முரண்பாடுகள், அந்நிய ஆதிக்க உறவுகள் போன்றவை வரலாற்றுப் போக்கில் தேசிய இன உறவுகளை நிர்ணயிக்கின்றன.
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் கம்யூனிஸ் கட்சிப் பாரம்பரியத்திற்கும் சமசமாஜக்கட்சியின் ஸ்ரொட்ஸ்கியப் பாரம்பரியத்துக்கும் தேசிய இனப்பிரச்னை பற்றிய அணுகுமுறையில் முதலிலிருந்தே ஆழமான வேறுபாடு இருந்து வந்தது. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகவும் சுயநிர்ணய உரிமையுடையோராகவும் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக அறிவித்தாலும் சமசமாஜக்கட்சி தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கத் தவறியது. எனினும் தேர்தல் அரசியலின் பின்னணியில் இக்கட்சிகளின் பாராளுமன்ற அரசியற் பாதையைத் தெரிவு செய்தோர் தேசிய இனப்பிரச்னையை தேர்தல் அரசியற் கண்ணோட்டத்திலேயே அணுக முற்பட்டனர்.
பாராளுமன்ற இடதுசாரிகளைப் பொறுத்தவரை,1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை அதாவது பாராளுமன்றத்தில் அவர்கட்கு ஒரு ஆசனங்கூடக் கிடைக்காத நிலை வரும்வரை கூட பேரினவாத அரசியலுடன் சமரசம் செய்ய அவர்கள் தயங்கவில்லை. ஒவ்வொரு சமரசமும் இடதுசாரிகட்கு இழப்பாகியது. 1963 ஆம் ஆண்டு தொடங்கிய இச்சமரசப் போக்கின் விளைவாக இடதுசாரிக்கட்சிகளின் தொழிற்சங்கத் தளத்தின் பெரும்பகுதி முதலாளிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றின் பிடிக்குள் சென்றது. 1970 கள் வரை தொழிலாள வர்க்கத்தை நிராகரித்த இடதுசாரி பேரினவாத ஜேவிபி யினிடமும் இடதுசாரித் தொழி ற்சங்க வலிமை 1980 களில் இழக்கப்பட்டது.
பாராளுமன்ற இடதுசாரிகள் தம்மளவில் பேரினவாதிகளாக இல்லாமலிருந்திருக்கலாம்.ஆனால் அவர்களது அரசியல் சந்தர்ப்பவாதம் அவர்களைச் சரியான நிலைப்பாடுகளை உரிய நேரத்தில் செய்யாமல் தடுத்துள்ளன.பேரினவாதிகளின் இனஒடுக்குமுறைக்கு உடந்தையாகச் செயற்படவும் வழி செய்துள்ளது. பேரினவாத முதலாளியத்துடனான சமரசத்தால் இன்று தென்னிலங்கையில் பாராளுமன்ற இடதுசாரிகள் அடையாளம் இழந்து அழிவுபட்டுள்ளனர். ஒரு மாற்று இடதுசாரிச் சக்தியை உருவாக்கி வளர்ப்பதற்குத் தென்னிலங்கையின் இடதுசாரிப் பாரம்பரியம் தகுதியற்றதாகிவிட்டது. அதற்கான காரணங்களில், பாராளுமன்றச் சந்தர்ப்பவாதத்தின் அளவுக்கு முக்கியமானது தென்னிலங்கை இடதுசாரி இயக்கத்தில் ட்ரொட்ஸ்கியத்தின் ஆதிக்கம் என்பேன்.
கம்யூனிஸ்ட் கட்சி தமிழரைத் தேசிய இனமெனவும் சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சிக்கு உரித்துடையோரெனவும் 1950 அளவிலேய அறிவித்தபோதும்,சமசமாஜக்கட்சி என்றுமே தமிழரைத் தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை. சிறுபான்மையினரின் உரிமை என்ற அடிப்படையிலேயே தமிழ் மக்களின் மொழியுரிமை முதலானவை ஆதரிக்கப்பட்டன. சமசமாஜக்கட்சி உடைவுக்குட்பட்ட நிலையிலும் இவ்விடயத்தில் கருத்து முரண்பாடு இருந்ததாகக் கூறமுடியாது. 1977 ஆம் ஆண்டு சமசமாஜக்கட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட பின்பே உருவான நவசமசமாஜக்கட்சி, தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றி 1980 களில் பேசத்தலைப்பட்டாலும் அக்கட்சியோ அதிலிருந்து உடைந்த ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட்ட பிற பிரிவுகளோ, 1977 வரை பேரினவாதத்திற்கு பணிந்து நடந்த தமது நடத்தையை இதுவரை விளக்கியதில்லை.
வலது கம்யூனிஸ்ட்டுக்கள் என்று கூறக்கூடிய பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய இனப்பிரச்னையில் தமது முன்னைய நிலைப்பாடுகட்குத் துரோகம் செய்தோராவர். அவர்களுடன் தமது சுய முன்னேற்றத்திற்காக அண்டிக்கிடந்து,1977 க்குப் பின்பு கண்விழித்த தமிழ்ப்பிரமுகர்கள், தமிழ்த்தேசியவாதத்திற்கும் திரிபுவாதிகள் எனவும் அழைக்கப்படும் வலது கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசத்துக்குமிடையே ஊசலாடு வேராகவே இருந்து வந்துள்ளனர்.
இன்று வரை தேசியஇனப்பிரச்னையில் தடுமாற்றமின்றி இருந்து வந்துள்ளது மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ற் பாரம்பரியமே. எனினும் அதிற் பிளவுகள் நிகழ்ந்துள்ளன. பிரிந்து சென்றவர்களில் சிலர் தனித்துவமான தமிழ்த்தேசிய அமைப்பொன்றை நிறுவ முற்பட்டனர். வேறு சிலர் வௌவேறு தமிழ்த்தேசிய அமைப்புகட்குள் தம் மார்க்சிய அடையாளங்களை கரைத்துக் கொண்டனர். மேலும் சீரழிவுக்குள்ளானவர்கள், இன்று பேரினவாத இலங்கை அரசாங்கத்தின் எடுபிடிகளாக உள்ளனர்.
இது ஏன் என்ற கேள்விக்கான மறுமொழியை அறிய, எவ்வாறு புதிய ஜனநாயக்கட்சியால் தமிழ்த்தேசியவாத அலையின் எழுச்சியின் நடுவிலும் தவறாமல் இருக்கவும் தமிழீழப் போராட்டத்தை நியாயமான முறையில் விமர்சிக்கவும் தேசிய இனப்பிரச்னை பற்றிய ஒரு முன்னோடியான பார்வையை விருத்தி செய்யவும் இயலுமானது என்று விசாரிப்பது பயனுள்ளது.
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகவே ஏற்க மறுத்த ட்ரொஸ்கிய அரசியல் மரபில் வந்த மூன்று கட்சிகள் இன்று தமிழ், சிங்கள தேசங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆனால் அவர்களிடம் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் பிரச்னைகள் பற்றிய தெளிவான பார்வையோ தீர்வு ஆலோசனைகளோ இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற ஆயுத எழுச்சியின் சாடைகள் தெரிந்த பின்பே ட்ரொஸ்கியவாதிகள் தமிழ்த்தேசிய இனம் என்ற ஒன்று இருப்பதாக எண்ணத் தலைப்பட்டனர். ஆனாலும் இன்று வரை முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் இருப்பைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை அவர்களிடம் இல்லை. அதன் விளைவாகவும் சந்தர்ப்பவாத நோக்கங்களாலுமே விடுதலைப் புலிகளை விமர்சனமின்றி ஆதரித்துப் பேசுகின்ற போக்கு ட்ரொஸ்கியவாதிகளிடம் காணப்பட்டது. அது இன்னமும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தப்படவில்லை.
விடுதலைப் போராளி இயக்கங்களில் பெரும்பாலானவை தமிழரசுக்கட்சி , தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அரசியலின் வாரிசுகளாகவே உருவாகின. இடதுசாரி முனைப்புடையனவாக சில தோன்றினாலும் அடிப்படையில் அவை குறுகிய தமிழ்த்தேசியவாதத்தால் வழி நடத்தப்பட்டதுடன் இந்திய அரசாங்கத்தின் குறுக்கீட்டுக்கு இடமளிப்பவையாகவும் அமைந்தன. மார்க்சிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய ஓரிருவர் உருவாக்கிய என்.எல்.எவ்.ரி.குறுகிய தேசியவாதிகளுடன் போட்டியிடுகிற விதமாகத் தமிழீழம் என்ற நிலைப்பாட்டிலிருந்தே தனது வேலைத்திட்டத்தை வகுத்தது. எனினும் அதனால் வலுவான சக்தியாக வளர இயலவில்லை. பொதுவாகச் சொன்னால் “தமிழீழம் தான் மறுமொழி! கேள்வி என்ன? “என்கிற விதமாகவே தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் அமைப்புக்களும் பிரச்னையை அணுகின எனலாம்.
1989 க்குப் பிறகு, குறுகிய தேசியவாத அணுகுமுறையின் தவறுகள் விடுதலை இயக்கங்கள் பலவற்றினுள்ளும் உணரப்பட்டாலும் அதைத் திருத்துகின்ற ஆற்றல் இயக்கங்களின் தலைமையில் இருந்தோரிடம் இருக்கவில்லை.
அதன் பயனாகவே, அவை காலப்போக்கில் தமிழரசுக்கட்சி ௲ தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணி மரபிலேயே தேசிய இனப்பிரச்னையை அணுகத் தலைப்பட்டன.இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு பேச்சுவார்த்தைகள், 13 வது சட்டத் திருத்தம், ஒஸ்லோ உடன்படிக்கை என்று தேசிய இனப்பிரச்னையில் குறிப்பான ஒரு தீர்வு அம்சம் சார்ந்த நிலைப்பாட்டுக்கு வெளியே பிரச்னையைக் காண இயலாதவையாகப் பல தமிழ்த்தேசிய விடுதலை அமைப்புக்களும் கட்சிகளும் உள்ளன. அவற்றைக் கூட, எவ்வாறு நடைமுறையில் முன்னெடுப்பது என்பதில் அவர்கட்குள் தெளிவில்லை. இன்னமும் இந்திய அல்லது அமெரிக்கத் தலைமையிலான ‘சர்வதேச” சமூகம் குறுக்கிட்டுப் பிரச்னையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்களிடையே வளர்க்க முற்படுகின்றனர்.
இன்னொரு சாரார், தமிழ்த்தேசியவாதத்தின் எழுச்சியை வர்க்கங் கடந்த, வர்க்க அடையாளமற்ற ஒரு நிகழ்வாகக் காண விரும்புகின்றனர். வரலாற்றை மிகவும் அகச் சார்பாகவும் தமிழ்த்தேசியத்தை நிரந்தரமானதும் புனிதமானதுமான ஒரு பொருளாகவும் நோக்குகின்ற காரணத்தினால், மேலும் அகச்சார்பான வரலாற்று விளக்கங்களும் தீர்வுக்கான பாதைகளும் வகுக்கப்படுகின்றன. இப்போக்குப் புலம்பெயர்ந்த குறுகிய தமிழ்த்தேசியவாதிகளிடையே வலுவாய் உள்ளது. சுதந்திர தமிழ் ஈழம் என்பது முடிந்த முடிவாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் மத்தியிலான விவாதங்கள், கடந்த கால ஆயுதப் போராட்டத்தின் தோல்வியைப் போராட்ட முறை சார்ந்த ஒன்றாகக் குறுக்கி விடுகின்றன. தேசிய இனப்பிரச்னைக்கான தீர்வொன்றை முடிந்த முடிவாகக் கொண்டு யதார்த்தத்தை விளங்கிக் கொள்வது கடினம்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்னையை வெறுமனே சிங்கள தமிழ்த் தேசங்களிடையிலான அல்லது சிங்களத் தேசிய இனத்திற்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்குமிடையேயான பிரச்னையாகவே பெருவாரியானோர் இன்னமும் நோக்குகின்றனர். தேசிய இனப்பிரச்னையின் விருத்தி போக்கில், எவ்வாறு தனித்துவமான இரண்டு தமிழ் பேசும் சமூகங்கள் தம்மைத் தேசிய இனங்களாக அடையாளங் கண்டுள்ளன என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த இடத்திலே தான், இலங்கையின் மார்க்சிய லெனினிய மரபும் அதன் அதி முக்கியமான பிரதிநிதியாகவுள்ள புதிய ஜனநாயகக் கட்சியும், தேசிய இனப்பிரச்னையை இயங்கியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கித் தங்களது நிலைப்பாட்டை வந்தடைந்ததுடன், அதை மேலும் விருத்தி செய்யவும் இயலுமானோராக உள்ளனர்.
அரசியல்வசதி கருதித் தேசங்களை வரையறுக்கும் போக்கைக் குறுகிய தமிழ்த்தேசியவாதிகள் மட்டுமன்றி குறுகிய முஸ்லிம் தேசியவாதிகளும் கடைப்பிடித்து வந்துள்ளனர். எவ்வாறு தமிழ் ஈழம் என்றால் என்று பிரதேச அடிப்படையிலும் இன அடையாள அடிப்படையிலும் யதார்த்தமான பொது முடிவு ஒன்றுக்கு வருவது தமிழ்த்தேசியவாதிகட்கு இயலாமல் இருந்து வந்துள்ளதோ, அவ்வாறே முஸ்லிம் தேசியவாதிகளிடையிலும் கிழக்கு முஸ்லிம்கள் வடக்கு முஸ்லிம்கள் வடக்கு கிழக்கின் முஸ்லிம்களாக அல்லது அனைத்து முஸ்லிம்களுமா முஸ்லிம் தேசம் என்ற விவாதம் முஸ்லிம் தேசிய இனத்தின் பிரச்னைகளை விளங்கிக் கொள்ளவும் அதன் தேசிய இன உரிமைக்கான போராட்டத்தை வழி நடத்தவும் பாதகமான முறையில் நடந்து வந்துள்ளது.
இப்பின்னணியிலேயே புதிய ஜனநாயகக் கட்சி இலங்கையில் நான்கு தேசிய இனங்களையும் பிற தேசிய சிறுபான்மை இனங்களையும் அடையாளங் கண்டு சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை அதன் விரிவான பொருளின் பிரயோகிக்கும் அணுகுமுறையை முன் வைத்தது. தேசிய இனப்பிரச்னையை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் நிலைப்பாட்டினின்று நோக்குவதற்கு மாறாக, அதன் முழுமையைப் பல்வேறு கோணங்களிலும் அதன் விருத்திப் போக்கிலும் நோக்குவதே, புதிய ஜனநாயகக் கட்சியின் அணுகுமுறையை மற்ற இடதுசாரிகளதும் தேசியவாதிகளதும் அணுகுமுறைகளினின்று வேறுபடுத்துகின்றது.
மார்க்சியம் லெனினியம் தேசியக் கண்ணோட்டத்திலிருந்து உலகை நோக்கவில்லை. நோக்கவும் இயலாது. அதேவேளை, தேசியம், இனம், நிறம், மொழி, சாதி,மதம் போன்ற பல்வேறு முரண்பாடுகள் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அடிப்படையான முரண்பாடாகிய, சமூக உற்பத்தி உறவுகளின் தன்மையைக் குறிக்கின்ற வர்க்க முரண்பாட்டை மேவி விடலாம் என்பதை அது ஏற்கிறது. அவற்றை எவ்வாறு சரியாகக் கையாளுவது என்பது தான் மார்க்சிய லெனினியர்கள் முன்னால் உள்ள சவால். அவற்றின் தீர்வை, வர்க்கப் போராட்டத்தை அதன் சோசலிச இலக்கை நோக்கி முன்னெடுக்கும் பணியுடன் இணைப்பதிலேயே மார்க்சிய லெனினிஸ்டுக்களின் வெற்றி தங்கியுள்ளது. தேசியத்தை வரலாற்றில் வைத்து நோக்கினால் எந்த ஒரு தேசமும் நிலையான நிரந்தரமான ஒரு வரலாற்றுப் பொருளல்ல என விளங்கும். அதன் மூலம் தேசிய அடையாளங்கள் சமூக அரசியற் சூழல்களினாலும் வரலாற்று நிர்ப்பந்தங்களாலும் வடிவு பெறுவதை விளங்கிக் கொள்ள இயலும். அதை விடுத்துக் குறிப்பான ஒரு தீர்வையோ முன் கூட்டியே தீர்மானித்த தேசிய இன அடையாளங்களை நி;ரந்தரமானவையாகக் கொண்டோ தேசிய இன முரண்பாடுகளைத் தீர்க்க இயலாது. கொலனியத்திற்கு பிற்பட்ட மூன்றாமுலகில் கொலனியம் உருவாக்கிய சிக்கல்கள் ஒரு புறமும் நவகொலனிய உலக மயமாக்கற் சூழலில் உருவாகிள்ள “அடையாள அரசியல்“சிக்கல்கள் ஒரு புறமுமாக இழுக்கும்போது, தேசியத்தைப் புறநிலை யதார்த்தமாக நோக்குவது அவசியமாகின்றது. தேசிய விடுதலை என்கின்ற பேரிற் கூடத் தேசிய ஒடுக்கல் நிகழும் அபாயம் பற்றியும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்னையில் தேசிய அரசியலை அகச்சார்பாக நோக்கிப் பிற சமூக முரண்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கிற்கெதிரான பணியில் புதிய ஜனநாயக் கட்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது. சுயநிர்ணயக் கோட்பாட்டை ஆக்கபுர்வமாக விரிவுபடுத்தியதிலும் அதன் பங்கு முக்கியமானது. தேசிய இனப்பிரச்னையைச் சிங்களத்- தமிழ் பகையாகப் பார்க்கும் ஒரு பார்வையிலிருந்து விடுவிப்பதில் புதிய ஜனநாயகக் கட்சி ஆக்கமான பங்களித்துள்ளதற்குக் காரணம் அதன் மார்க்சிய லெனினிய அரசியற் பாரம்பரியமே என்று என்னால் உறுதியாகக் கூற இயலும்.
தமிழ்த்தேசியவாதிகள் எனப்படுவோர் கடந்த காலக் குறுகிய தேசியவாதத்தின் சிந்தனைச் சிறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும்போது மார்க்சிய லெனினியவாதிகளுடன் கூடிய நெருக்கங் காண இயலும் என்றும் என்னால் ஓரளவு உறுதியுடன் கூற இயலும்.